என் மலர்
தரவரிசை
அமுதவணன் இயக்கத்தில் ஆதில், செல்லா, பவாஸ், நிகாரிகா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் கோட்டா படத்தின் விமர்சனம்.
மலை கிராமத்தில் மனைவி சஜி சுபர்ணா, மகன் பவாஸ், மகள் நிகாரிகா ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார் செல்லா. வறுமையில் குடும்பத்தை நடத்தி வரும் செல்லா தன் பிள்ளைகள் இந்த சமுதாயத்தில் சிறந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.



ஆனால், வறுமையும் கடன் பிரச்சினையும் ஆதிலை வாட்டுகிறது. இந்நிலையில் ஒரு விபத்தில் செல்லா உயிரிழக்கிறார். இதன்பின் செல்லாவை நம்பியிருந்த குடும்பம், கடன் பிரச்சினையை எப்படி தீர்த்தார்கள்? செல்லாவின் ஆசை நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் செல்லா சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நேர்மையாகவும், சமுதாயத்தில் ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற இவரது எண்ணம் ரசிக்க வைக்கிறது. மனைவியாக நடித்திருக்கும் சஜி சுபர்ணா எதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
மகனாக வரும் பவாசின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். தந்தை இறந்தவுடன் கடன் சுமையை அடைக்க போராடுவதும், திறமையை வெளிக்காட்ட போராடுவதுமாக நடித்து கைதட்டல் பெறுகிறார். உண்மையாக திறமை வைத்திருக்கும் பவாஸ், நடிப்பில் நல்ல இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

மகளாக நடித்திருக்கும் நிகாரிகா, அலட்டல் இல்லாமல் அழகாக நடித்திருக்கிறார். தந்தையிடம் ஷூ கேட்கும்போதும், பள்ளியில் ஆசிரியையிடம் பயப்படும் போதும் பரிதவிப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
சிறிய பட்ஜெட்டில் தரமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் அமுதவாணன். இப்படம் வெளியாகும் முன்பே சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்றுள்ளது. திறமை இருந்தால் எங்கும் ஜெயிக்கலாம் என்று கதைக்கு ஏற்றாற்போல் இயக்குனரும் ஜெயிப்பார் என்று நம்பலாம். ஒரு சில இடங்களில் நடிகர்களிடம் செயற்கையான நடிப்பு தெரிந்தது. அதை சரி செய்திருக்கலாம். குழந்தைகளிடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார்.

ஆலன் செபஸ்டியன் இசையில் பாடல்கள் அனைத்தும் கதையோடு ஒன்றி பயணித்திருக்கிறது. அமுதவாணன் மற்றும் கவாஸ்கர் ராஜு ஆகியோரின் ஒளிப்பதிவு ரசிக்கும்படி உள்ளது.
மொத்தத்தில் 'கோட்டா' தனித்திறமை.
அருள் இயக்கத்தில் டிஜே, பௌசி, காளி வெங்கட், சீனு மோகன் நடிப்பில் வெளியாகியிருக்கும் தட்றோம் தூக்றோம் படத்தின் விமர்சனம்.
ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து வருகிறார் நாயகன் டிஜே. இவருக்கு இரண்டு நெருங்கிய நண்பர்கள். இவர்களுடன் சேர்ந்து ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து தப்பிக்கும் டிஜே, காளி வெங்கட் வேலை பார்த்து வரும் ஒயின்ஷாப்பில் இருக்கும் பாட்டிலை விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.


அதிக பணம் சம்பாதித்து வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார் டிஜே. போதிய பணம் இல்லாததால் அதற்காக முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் பாண்டிச்சேரியில் சரக்கு எடுத்து வர நண்பர்கள் மூன்று பேரும் செல்கிறார்கள். அங்கு இவர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது.

இறுதியில் டிஜேக்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன? அதிலிருந்து மீண்டாரா? வெளிநாட்டிற்கு சென்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
அசுரன் படத்தில் தனுசுக்கு மூத்த மகனாக நடித்த டிஜே இப்படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கிறார். காதல், நடனம், பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது என நடிப்பில் பளிச்சிடுகிறார். நண்பர்களாக வருபவர்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
நாயகியாக நடித்திருக்கும் பௌசி, டப்ஸ்மாஷ் செய்வது, டிஜேவை காதலிப்பது, சண்டை போடுவது என கதாபாத்திரத்துடன் ஒன்றி பயணித்திருக்கிறார். அரசியல்வாதியாக வரும் சீனு மோகன், அனுபவ நடிப்பால் கவர்ந்திருக்கிறார். காளி வெங்கட், சம்பத் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியாக அமைந்து இருக்கிறார்கள்.

ஆதரவற்ற இளைஞர்கள், பணமதிப்பிழப்பு ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் அருள். கதாபாத்திரங்களிடையே அருமையாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர். பொழுதுபோக்காகவும் விறுவிறுப்பான திரைக்கதையும் படத்திற்கு பிளஸாக அமைந்து இருக்கிறது.
பாலமுரளி பாலு இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக சிம்பு பாடிய பாடல் தாளம் போட வைக்கிறது. சதீஷ் முருகாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் 'தட்றோம் தூக்றோம்' சுவாரசியம்.
சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் டேனி, கரிஷ்மா கவுல் ஆகியோர் நடிப்பில் வெளியாகி உள்ள ‘இரண்டாம் குத்து’ படத்தின் விமர்சனம்.
ஹீரோ சந்தோஷும், டேனியும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக பழகி வருகின்றனர். இருவரும் ஒன்றாகவே சுற்றுவதால், பார்ப்பவர்கள் அவர்களை ஓரினச் சேர்க்கையாளர்கள் எனக்கூறி கிண்டல் செய்கின்றனர். தாங்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க இருவரும் அழகான இரு பெண்களை திருமணம் செய்கின்றனர்.
திருமணமான கையோடு ஹனிமூனுக்காக தாய்லாந்து செல்கின்றனர். அங்கே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்குகிறார்கள். அந்த வீட்டில் பேய் இருக்கிறது. நினைத்ததை அடைய முடியாமல் செத்துப்போன அந்தப் பேய், இருவரும் தன்னுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்கிறது. அவ்வாறு உறவு வைத்துக்கொள்பவர்கள் செத்து விடுவார்கள் என்பதையும் சொல்கிறது. இதனால் செய்வதறியாது இருக்கும் இருவரும், அந்த பிரச்னையிலிருந்து எப்படி தப்புகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

ஹீரோ சந்தோஷ், சிக்ஸ்பேக்ஸ் உடற்கட்டுடன் ஸ்டைலிஸாக இருந்தாலும் நடிப்பில் கோட்டை விட்டுள்ளார். முகபாவனைகள் எதுவும் அவருக்கு செட்டாகவே இல்லை. இரண்டு ஹீரோயின்களையும், பேயையும் கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார்கள். டேனியையும் இரண்டாவது ஹீரோ ரேஞ்சுக்கு காட்டி இருக்கிறார்கள். இருவரும் சேர்ந்து ஜோக் அடிக்கிறேன் என்கிற பெயரில் ஏதோ செய்து வைத்திருக்கிறார்கள்.
அனுபவ நடிகர்களான ரவி மரியா, சாம்ஸ், மொட்டை ராஜேந்திரன் ஆகியோரின் காமெடிகள் சுத்தமாக எடுபடவில்லை. முழுக்க முழுக்க கிளாமரையும், இரட்டை அர்த்த வசனங்களை நம்பியே படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் சந்தோஷ். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கொஞ்சம் இலைமறை காயாக பேசிய வசனங்கள் இந்த படத்தில் நேரடியாகவே பேசப்பட்டுள்ளன.

பாடல்கள் சுமார் ரகம் தான். பேய் படம் என்று சொல்கின்றனர். ஆனால் ஒரு காட்சியில் தான் பயப்பட வைத்துள்ளார்கள். அது என்னவெனில், 3-ம் பாகம் வரப்போகுது என இறுதியில் காட்டுவது தான்.
மொத்தத்தில் ‘இரண்டாம் குத்து’ தேவையில்லை.
கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியாகி இருக்கும் பிஸ்கோத் படத்தின் விமர்சனம்.
சிறிய அளவில் பிஸ்கட் கம்பெனி நடத்தி வருகிறார் ஆடுகளம் நரேன். சிறுவயதிலேயே புத்திசாலித்தனமாக இருக்கும் இவரது மகன் சந்தானத்தை, பெரிய பிஸ்கட் கம்பெனி உருவாக்கி அதில் அவரை நிர்வாக தலைவராக அமைக்க வேண்டும் என்று ஆடுகளம் நரேன் ஆசைப்படுகிறார்.



இந்நிலையில் திடீரென்று ஆடுகளம் நரேன் இறந்து போகிறார். இவரது பிஸ்கட் கம்பெனியை ஆடுகளம் நரேன் நண்பரான ஆனந்தராஜ் எடுத்து நடத்துகிறார். இதில் வேலையாளாக இருக்கிறார் சந்தானம்.
பிஸ்கட் கம்பெனியில் வரும் வருமானத்தை வைத்து ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்து வருகிறார் சந்தானம். முதியோர் இல்லத்திற்கு புதியதாக வரும் சௌகார் ஜானகி சந்தானத்திற்கு ஒரு கதை சொல்கிறார்.

அந்த கதை சந்தானத்தின் வாழ்க்கையில் நிஜமாகிறது. மேலும் சௌகார் ஜானகி சொல்லும் அடுத்தடுத்த கதைகள் சந்தானத்தின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. இறுதியில் சந்தானத்திற்கு ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? தந்தையின் ஆசை போல் பிஸ்கட் கம்பெனியின் நிறுவன தலைவராக சந்தானம் மாறினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
இப்படத்தின் நாயகனாக நடித்திருக்கும் சந்தானம், தன்னுடைய வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். புதிய கெட்டப் அதற்கேற்ற உடல் மொழி, டைமிங் காமெடி என அனைத்திலும் ஸ்கோர் செய்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இவரது நடிப்புக்கும் திரைக்கதை ஓட்டத்திற்கும் பெரிய பலமாக மொட்டை ராஜேந்திரனும் லொள்ளு சபா மனோகரனும் அமைந்திருக்கிறார்கள். இவர்களின் கெட்டப்பும் பேசும் வசனமும் சிறப்பு.

நாயகிகளாக வரும் தாரா அலிஷா,
ஸ்வாதி முப்பாலா ஆகிய இருவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு சௌகார் ஜானகியை திரைப்படத்தில் பார்ப்பது மகிழ்ச்சி. தன்னுடைய அனுபவ நடிப்பால் கதைசொல்லி ரசிக்க வைத்திருக்கிறார்.
பல படங்களின் சாயல்களை வைத்து காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கி இருக்கிறார் கண்ணன். படம் முழுக்க சந்தானம் மட்டுமே அதிக காட்சிகளில் வருகிறார். மற்ற கதாபாத்திரங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.

சண்முகசுந்தரத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். பல்வேறு கட்டங்களில் அதற்கேற்றாற்போல் காட்சிகளை அழகாக படம் பிடித்திருக்கிறார். ரதன் இசையில் பாடல்களை ஒருமுறை கேட்கலாம்.
மொத்தத்தில் 'பிஸ்கோத்' நல்ல சுவை.
எம்.டி.ஆனந்த் இயக்கத்தில் ரிஷி ரித்விக், ஆஷா பாத்தலோம் நடிப்பில் உருவாகி வரும் ’மரிஜுவானா’ படத்தின் விமர்சனம்.
ஒரு தியேட்டரில் மர்மமான முறையில் அமைச்சர் மகனும் தியேட்டரில் வேலை செய்பவரும் கொள்ளப்படுகிறார்கள். இந்த கொலையாளியை கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரியாக இருக்கும் ரிஷி களம் இறங்குகிறார். தீவிரமாக விசாரிக்கும் நிலையில் அடுத்தடுத்து கொலைகள் நடந்து வருகிறது.


எந்தத் துப்பும் கிடைக்காத நிலையில் எல்லா கொலைகள் நடக்கும் இடத்தில் கஞ்சா இருப்பதை ரிஷி கண்டுபிடிக்கிறார். மேலும் இந்தக் கொலைகளை செய்தவர் ஒருவர்தான் என்பதையரியும் ரிஷி, அவன் யார்? எதற்காக கொலைகளை செய்கிறான்? என்பதை கண்டு பிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ரிஷி இதற்கு முன் அட்டு என்ற படத்தில் நடித்திருந்தார். முந்தைய படத்தை விட இந்த படத்தில் நடிப்பில் முதிர்ச்சி அடைந்து இருக்கிறார். போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். பல இடங்களில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஆஷா பாத்தலோம், நாயகன் ரிஷியுடன் போலீசில் பணியாற்றுகிறார். கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். வில்லனாக நடித்திருப்பவர், கதாபாத்திரத்தை உணர்ந்து நடிப்பில் பளிச்சிடுகிறார்.
மரிஜுவானா என்றால் கஞ்சா என்று அர்த்தம். ஒரு மனிதன் உச்சக்கட்ட போதைக்கு ஆளானால் என்ன நடக்கும் என்பதை கதையாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் எம்டி ஆனந்த். நல்ல கதையை சிறந்த திரைக்கதையாக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர். முதல்பாதியில் ஹீரோ வில்லனை தேடி அலைகிறார். இரண்டாம்பாதியில் வில்லனை பிளாஷ்பேக் பேச வைத்திருக்கிறார். பவர் ஸ்டார் காமெடியை வேண்டுமென்றே திணித்தது போலிருந்தது. கொஞ்சம் சுவாரஸ்யத்தை கூட்டி இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

கார்த்திக் குரு இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். குறிப்பாக தேவா பாடிய பாடல் ரிப்பீட் மோட். பாலா ரோசைய்யாவின் ஒளிப்பதிவு ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் 'மரிஜுவானா' விறுவிறுப்பு குறைவு.
நயன்தாரா, ஆர்ஜே.பாலாஜி, ஊர்வசி நடிப்பில் உருவாகி இருக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் விமர்சனம்.
நாகர்கோவிலில் உள்ளூர் தொலைக்காட்சி நிருபராக இருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, தாத்தா, அம்மா, 3 தங்கைகளுடன் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார். இதே சமயம் 11 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்கும் செய்தியை சேகரித்து வருகிறார்.


ஆர்.ஜே.பாலாஜியின் அம்மா ஊர்வசி திருப்பதி கோவிலுக்கு செல்ல பல ஆண்டுகளாக முயற்சி செய்கிறார். ஆனால் போக முடியவில்லை. இதனால் குல தெய்வம் மூக்குத்தி அம்மன் கோவிலுக்கு சென்றால் கஷ்டங்கள் போகும் என்று ஒருவர் சொல்ல அங்கு குடும்பத்துடன் தங்குகிறார் ஆர்.ஜே.பாலாஜி.
அங்கு தனது கஷ்டத்தைச் சொல்லிவிட்டு ஆர்.ஜே.பாலாஜி தூங்கும் போது இரவில் மூக்குத்தி அம்மனாக தோன்றுகிறார் நயன்தாரா. அதன்பின் ஆர்.ஜே. பாலாஜியுடன் பயணிக்கும் நயன்தாரா, அவரின் கஷ்டங்களை போக்கினாரா? 11 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்கும் செய்தி என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் அம்மனாக வரும் நயன்தாரா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி அழகு சேர்த்திருக்கிறார். பல விஷயங்களை சாதாரணமாக வசனம் மூலம் சொல்லிவிட்டு செல்கிறார். காமெடி காட்சிகளிலும் கலக்கி இருக்கிறார்.
நாயகனாக நடித்திருக்கும் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் கைத்தட்டல் பெறுகிறார். அம்மனை பார்த்தவுடன் நம்பாமல் சோதிப்பது, பணம் கிடைத்தவுடன் சந்தோஷப்படுவது என பல காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.
அம்மாவாக வரும் ஊர்வசியின் நடிப்பு அற்புதம். பொய் சொல்வது, சமாளிப்பது, கணவருக்காக எங்குவது என நடிப்பில் பளிச்சிடுகிறார். தாத்தா மௌலி, தங்கை ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள். போலிச் சாமியாராக வரும் அஜய் கோஷ் சிறந்த தேர்வு. ஆனால் பல இடங்களில் இவரது நடிப்பு செயற்கை தனமாக அமைந்துள்ளது.

கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி இருக்கிறார். முதல்பாதி கலகலப்பாகவும், இரண்டாம் பாதி சுவாரஸ்யமாகவும் கொடுத்திருக்கிறார்கள். படத்திற்கு பெரிய பலம் வசனங்கள். அதுபோல் கதாபாத்திரங்களிடம் அருமையாக வேலை வாங்கியிருக்கிறார்கள்.
தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு நாகர்கோவிலின் அழகை அப்படியே கடத்தியுள்ளது. நிறைய காட்சிகள் குளிர்ச்சியாக உள்ளது. கிரிஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் படத்திற்கு தடையாக இருக்கிறது.
மொத்தத்தில் 'மூக்குத்தி அம்மன்' கலகலப்பான தரிசனம்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ் காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் சூரரைப்போற்று படத்தின் விமர்சனம்.
மதுரை சோழவந்தான் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் சூர்யா. வாத்தியாராக இருக்கும் இவரது அப்பா பூ ராமு, சோழவந்தானில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்த வேண்டி மனு எழுதிய அகிம்சை வழியில் போராடி வருகிறார். இது பலன் அளிக்காததால் போராட்டத்தில் இறங்குகிறார் சூர்யா. இதனால் தந்தை பூ ராமுக்கும் சூர்யாவுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. வீட்டை விட்டு செல்லும் சூர்யா, ஏர்போர்ஸ் சர்வீசில் சேருகிறார்.



ஒரு கட்டத்தில் சூர்யா தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அதிக பணம் இல்லாததால் விமானத்தில் வர முடியாமல் போகிறது. குறிப்பிட்ட நேரத்தில் வர முடியாததால் அவரது தந்தை இறுதிச் சடங்கில் கூட அவரால் கலந்து கொள்ள முடிய வில்லை.
இதனால் விரக்தி அடையும் சூர்யா, பணக்காரர்கள் மட்டும் பறக்கும் விமானத்தில் தன்னைப் போன்று இருக்கும் ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள், விமானத்தில் பறப்பதை பெருங்கனவாகக் கொண்டிருக்கும் கிராமத்து மக்களின் கனவை நிறைவேற்ற குறைந்த விலையில் விமான சேவை தொடங்க முயற்சி செய்கிறார்.

இதில் பல இன்னல்கள், கஷ்டங்கள், துன்பங்கள், பலரின் சூழ்ச்சி, நிறுவனங்களின் தலையீடு என சூர்யாவிற்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதிலிருந்து மீண்டு இறுதியில் குறைந்த விலையில் விமான சேவையை சூர்யா தொடங்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் சூர்யாவை முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தில் பார்க்க முடிகிறது. நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம். கோபம், விரக்தி, வெறுப்பு, இயலாமை, வலி என நடிப்பில் தடம் பதித்திருக்கிறார். தந்தையை பார்க்க வர வேண்டும் என்பதற்காக விமான நிலையத்தில் பணம் கேட்கும் காட்சியில் இவரின் நடிப்பு அபாரம். ஊருக்கு வந்தவுடன் தாயை சந்திக்கும் காட்சியில் கண்கலங்க வைக்கிறார். ஏர்போர்ஸ் ஆபிசராக இருக்கும் போது கம்பீரமாகவும், காதல் மனைவியுடன் இருக்கும்போது புத்துணர்ச்சியாகும் நடித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அபர்ணா பாலமுரளி, இளம் நடிகை என்று தெரியாத அளவிற்கு முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். சூர்யாவுக்கு போடும் கண்டிஷன், அவருடன் சண்டை போடும் காட்சி, நடனம், முகபாவம் என ரசிக்க வைத்திருக்கிறார்.
தந்தையாக வரும் பூ ராமு கவனிக்க வைத்திருக்கிறார். தாயாக வரும் ஊர்வசி, சூர்யா ஊருக்கு வந்தவுடன் நடக்கும் காட்சியில் நெகிழ வைக்கிறார். மேலும் ஊர் மக்கள் உனக்கு துணையாக இருக்கிறார்கள் எப்படியாவது ஜெயித்து விடுடா மகனே சொல்லும்போது கைத்தட்டல் பெறுகிறார். கருணாஸ், காளி வெங்கட் ஆகியோர் ஒரு சில காட்சிகளில் வந்தாலும் கவனிக்க வைத்திருக்கிறார்கள்.

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையைத் தழுவியும், அவர் எழுதிய 'சிம்பிள் ஃப்ளை' நூலை அடிப்படையாகக் கொண்டும் 'சூரரைப் போற்று' படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா. 'இறுதிச்சுற்று' படத்துக்குப் பிறகு வேறொரு தளத்தில் படத்தை கொடுத்து இருக்கிறார். கதாப்பாத்திரங்கள் தேர்வு, அவர்களிடம் வேலை வாங்கிய விதம் அருமை. அதுபோல் ''ரத்தன் டாடாவாலேயே இங்கே ஒரு ஏர்லைன் ஆரம்பிக்க முடியலை''. ''நீங்க யார் மாறன், உனக்குல்லாம் எதுக்குய்யா பெரிய மனுஷங்க பண்ற பிசினஸ் என்ற வசனமும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பு.
படத்தில் நிறைய ப்ளஸ் பாயிண்டுகள் இருந்தாலும், ராணுவப் பயிற்சி மையத்தில் விமானத்தை அத்துமீறித் தரையிறக்க முடியுமா. குடியரசு தலைவரை அவ்வளவு எளிதாக பார்க்க முடியுமா.. என்ற கேள்விகள் எழுந்தாலும் பெரியதாக தோன்றவில்லை.
ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு பெரிய பிளஸ். பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியாக அமைந்திருக்கிறது. பாடல்கள் தனியாக இல்லாமல் கதையோடு பயணித்து இருப்பது ரசிக்க வைத்திருக்கிறது. நிகேத் பொம்மியின் கேமரா மேஜிக் நிகழ்த்தியுள்ளது.
மொத்தத்தில் 'சூரரைப்போற்று' சூர்யாவை போற்று.
கீர்த்தி சுரேஷ், ஜகபதி பாபு, நவீன் சந்திரா நடிப்பில் நரேந்திரநாத் இயக்கத்தில் ஓடிடியில் வெளியாகி இருக்கும் மிஸ் இந்தியா படத்தின் விமர்சனம்.
சிறு வயதில் இருந்தே சொந்த தொழில் தொடங்க வெற்றி பெறுவதையே லட்சியமாக கொண்டவர் கீர்த்தி சுரேஷ். அவரது லட்சியத்துக்கு வீட்டில் தடை போடப்படுகிறது. படித்து முடித்த பின்னர் தடைகளை கடந்து சொந்தமாக தொழில் தொடங்குகிறார். அதிலும் போட்டியாளரான ஜகபதிபாபு மூலம் பல்வேறு பிரச்சினைகள் வருகின்றன. அவற்றை எல்லாம் சமாளித்து எப்படி வென்றார் என்பதே கதை.


நடிகையர் திலகம் படத்துக்கு பின் தனக்கு முக்கியத்துவம் தரும் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்துவரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பெண்குயின் படத்துக்கு பின் வெளியாகும் படம். இந்த படத்தில் உடல் மெலிந்து பொலிவான தோற்றத்தில் வருகிறார். கனவுகளை அடைய போராடும் கதாபாத்திரத்தை திறம்பட செய்துள்ளார்.

கீர்த்தி சுரேஷுக்கு போட்டியாளராக வரும் ஜகபதிபாபுவுக்கு பொருத்தமான கதாபாத்திரம். சில இடங்களில் விஸ்வாசம் படத்தை நினைவுபடுத்துகிறார். ராஜேந்திர பிரசாத், நரேஷ், நதியா என கீர்த்தி சுரேசின் குடும்பத்தினராக நடித்தவர்களும் சிறப்பான நடிப்பு. கீர்த்தி சுரேசுக்கு உதவும் கதாபாத்திரங்களான சுமந்த், நவீன் சந்திரா இருவரும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர்.
தமனின் பின்னணி இசையும் சுஜித் வாசுதேவின் ஒளிப்பதிவும் படத்தை கமர்சியல் படமாக மாற்ற உதவுகின்றன. படம் முழுக்கவே வெற்றி பெற்ற ஒரு பெண்ணின் பிளாஷ்பேக்காக அமைத்ததால் சுவாரசியம் குறைகிறது. யூகிக்க முடிந்த காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.

இரண்டாம் பாதியில் வரும் மில்லியன் டாலர் போட்டி ரசிக்க வைக்கிறது. வசனங்களும் அருமை. நல்ல கதையை கையில் எடுத்த இயக்குனர் அதற்கான திரைக்கதை சுவாரசியமாக அமைக்க தவறிவிட்டார். கீர்த்தி சுரேஷ் தான் படத்தை தாங்கி இருக்கிறார். அவருக்காக மட்டுமே பார்க்கலாம்.
மொத்தத்தில் 'மிஸ் இந்தியா' திரைக்கதை மிஸ்ஸிங்.
5 வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கியுள்ள ‘புத்தம் புது காலை’ எனப்படும் ஆந்தாலஜி படத்தின் விமர்சனம்.
திரையுலகில் தற்போது ஆந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது. அந்தவகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக வலம் வரும் கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் உடன் சுஹாசினி மணிரத்னமும் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் ‘புத்தம் புது காலை’. கொரோனா ஊரடங்கின் போது நடைபெறும் உணர்ச்சி கதைகளாக இந்த குறும்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இளமை இதோ இதோ
முதுமையும் இளமையும் கலந்த காதல் கதை. சுதா கொங்கரா இயக்கி உள்ளார். மனைவியை இழந்த ஒரு ஆணுக்கும், கணவனை இழந்த பெண்ணுக்கும் இடையிலான காதலே இந்தப் படத்தின் கதை. ஜெயராம், ஊர்வசி இருவரும் அனுபவ நடிப்பும், காளிதாஸ் ஜெயராம், கல்யாணி பிரியதர்ஷன் இருவரும் துள்ளலான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். காளிதாஸ் ஜெயராமின் நடனமும், கல்யாணியின் கியுட் எக்ஸ் பிரசனும் ரசிக்க வைக்கிறது. காதலை மிகைப்படுத்தாமல் அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா.

அவரும் நானும்/ அவளும் நானும்
தனது தாயை 30 வருடமாக சந்திக்காமல் இருக்கும் தாத்தா வீட்டிற்கு விருப்பம் இல்லாமல் செல்லும் பேத்தியின் கதை. கவுதம் மேனன் இயக்கத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ரீது வர்மா நடிப்பில் உருவாகி இருக்கிறது. தனக்கே உரிய பாணியில் படத்தை உருவாகி இருக்கிறார் கவுதம் மேனன். ஹீரோக்களை இங்கிலீஷ் பேச வைக்கும் கவுதம் இந்த படத்தில் தாத்தாவை இங்கிலீஷ் பேச வைத்திருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர் பேசும் ஸ்டைலும் அருமை. தாத்தா பேத்தி மற்றும் இல்லாமல் தந்தை மகள் பாசத்தையும் சொல்லியிருக்கிறார். ஆனால் கொஞ்சம் சுவாரஸ்யமாக தந்திருக்கலாம். எம்.எஸ்.பாஸ்கர், ரீ து வர்மா இருவரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். இறுதியாக வரும் பாடல் அருமை.

காஃபி எனி ஒன்
கோமாவில் இருக்கும் தாயை சந்திக்க வரும் மகள்கள், 75 வது பிறந்தநாளை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை கதையாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சுஹாசினி மணிரத்னம். மனைவியை ஐசியு-வில் வைத்து பார்க்க முடியாது. கடைசி காலத்தில் நான் பார்த்துக் கொள்வேன் என்று சொல்லும் கணவனின் அரவணைப்பு ரசிக்க வைக்கிறது. சிறிய நேரத்தில் கணவன் மனைவி பாசம், தாய் மகள் பாசத்தை கச்சிதமாக சொல்லி இருக்கிறார்கள். சுஹாசினி, அனுஹாசன், ஸ்ருதி ஹாசன் ஆகியோரின் நடிப்பு யதார்த்தம்.

ரீயூனியன்
பாரில் வேலை செய்யும் போதை பொருளுக்கு அடிமையான பெண், லாக்டவுனில் மருத்துவ நண்பர் வீட்டில் தங்கும் கதை. மாடர்ன் பெண் தோற்றத்திற்கு ஆண்ட்ரியா சிறப்பான தேர்வு. லீலா சாம்சன், குருச்சரண் ஆகியோர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கிறார் ராஜீவ் மேனன். படம் ரசிக்கும் படி இருந்தாலும் காட்சிகள் யதார்த்த மீறல் போல் உள்ளது.

மிராக்கிள்
லாக்டவுன்ல் திருடி பிழைப்பு நடத்த நினைக்கும் இரண்டு திருடர்கள் கதை. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பாபி சிம்ஹா நடிப்பில் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. சிறப்பான கூட்டணியாக இருந்தாலும் இவர்கள் வைத்திருக்கும் டுவிஸ்ட் யூகிக்கும் படி அமைந்துள்ளது. சூது கவ்வும் பகலவனை பார்த்த அனுபவத்தை கொடுத்து இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். பாபிசிம்ஹாவின் உடல்மொழி ரசிக்கும்படி உள்ளது. இறுதியில் வரும் திருப்பம் சுவாரசியத்தை கொடுக்கிறது.

ஒளிப்பதிவும், பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு படத்திற்கும் வெவ்வேறு ஒளிப்பதிவாளர்கள் எனினும் அனைவருமே அழகாக படமாக்கியிருக்கிறார்கள்.
மொத்தத்தில் ‘புத்தம் புது காலை’ புத்துணர்ச்சி.
விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் க.பெ.ரணசிங்கம் படத்தின் விமர்சனம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் விஜய் சேதுபதி. இவர் ஊரில் நடக்கும் பிரச்சனைக்கு குரல் கொடுத்து வருகிறார். குறிப்பாக தண்ணீர் பிரச்சனைக்காக மக்களை திரட்டி போராட்டங்களை நடத்துகிறார்.
இந்நிலையில் பக்கத்து ஊர் பெண்ணான ஐஸ்வர்யா ராஜேஷை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார் விஜய் சேதுபதி. ஊர் பிரச்சனைக்கு போராடினது போதும், வீட்டு பிரச்சனையை பார் என்று விஜய் சேதுபதியிடம் ஐஸ்வர்யா ராஜேஷ் கூற, விஜய் சேதுபதி துபாய்க்கு வேலைக்கு செல்கிறார்.

வேலைக்கு சென்ற இடத்தில் விஜய் சேதுபதி இறந்து விடுகிறார். இவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர பல சிக்கல்கள் ஏற்படுகிறது. எப்படியாவது விஜய் சேதுபதி உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஐஸ்வர்யா ராஜேஷ் போராடுகிறார். இறுதியில் போராட்டங்களை வென்று விஜய் சேதுபதியின் உடலை சொந்த ஊருக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் கொண்டுவந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் கதை.
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தனக்கே உரிய ஸ்டைலில் அசத்தும் விஜய் சேதுபதி, இந்த படத்தில் நீரோட்டம் பார்ப்பது, தண்ணீர் பிரச்சனைக்கு போராடுவது என்று கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். டயலாக் டெலிவரியில் அப்லாஸ் அள்ளுகிறார். மனைவி ஐஸ்வர்யா ராஜேஷுடன் இருக்கும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.

அரியநாச்சி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு அபாரம். முதல் பாதியில் கலகலப்பாகவும், இரண்டாம்பாதியில் கணவருக்காக போராட்டும் பெண்ணாவும் மனதில் பதிகிறார். கொடுத்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி இருக்கிறார் என்றே சொல்லலாம். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் நெகிழ வைத்திருக்கிறார். படத்திற்கு படம் நடிப்பை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வாழ்த்துகள்.
விஜய் சேதுபதிக்கு தங்கையாக வரும் பவானி ஸ்ரீ நடிப்பால் கவனிக்க வைக்கிறார். குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷுடன் சண்டை போடுவது, விஜய் சேதுபதி ஊருக்கு செல்லும் காட்சி, அண்ணன் இறந்தவுடன் கலங்குவது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
வேலராமமூர்த்தி குணச்சித்ர நடிப்பால் மனதில் நிறைகிறார். அருண்ராஜா காமராஜ், சுப்பிரமணிய சிவா, முனீஸ்காந்த், அபிஷேக், டி.சிவா, இயக்குநர் மனோஜ்குமார், பந்தா எம்எல்ஏவாக நமோ நாராயணா ஆகியோர் பொருத்தமான கதாபாத்திரத்தில் மிளிர்கிறார்கள்.

பல படங்களில் குணச்சித்ர நடிகராக முத்திரை பதித்த நடிகர் பெரிய கருப்பத் தேவரின் மகன் விருமாண்டி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார். முதல் படத்திலேயே மக்கள் பிரச்சினை, தண்ணீர்ப் பிரச்சினை, வெளிநாடு சென்று வேலை செய்பவர்கள் அங்கு இறந்துவிட்டால் ஏற்படும் பிரச்சனை என துணிச்சலாக பதிவு செய்திருக்கிறார். இறந்தவர்களின் உடலை கொண்டு வர இங்கு இருக்கும் அரசியல், சட்ட சிக்கல்கள் என அனைத்திலும் அலசி இருக்கிறார். முதல் படம் என்று நம்பமுடியாத அளவுக்கு அபாரத் திறமையால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். கதாபாத்திரங்களிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். போகிற போக்கில் பல விஷயங்களை சொல்லி இருக்கும் இயக்குனர் படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம். சின்ன குறைகள் இருந்தாலும் பெரியதாக தெரியவில்லை. படத்திற்கு பெரிய பலம் சண்முகம் முத்துசாமியின் வசனங்கள். பல வசனங்கள் நச் என்று இருக்கிறது.
கிராமத்தின் வறட்சியையும், மண்ணின் சூழலையும் கண்களுக்குள் பதிய வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம். ஜிப்ரான் இசையில் பாடல்கள் கதையோடு பார்ப்பவர்களை உட்கார வைக்கிறது. பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘க.பெ.ரணசிங்கம்’ சிங்கம்.
ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சைலன்ஸ்’ படத்தின் விமர்சனம்.
அமெரிக்காவில் இருக்கும் ஒரு பங்களாவில் மர்மமான முறையில் இரண்டு பேர் இறந்து போகின்றனர். அந்த வீட்டில் உள்ள ஒரு ஓவியத்தைத் தேடி மாதவனும் அவரது காதலியான அனுஷ்காவும் செல்கிறார்கள். அங்கு மாதவன் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். காயங்களுடன் தப்பிக்கும் அனுஷ்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
இந்த கொலையை துப்பறிய அஞ்சலி மற்றும் மைக்கல் மேட்சன் களமிறங்குகிறார்கள். இதற்கிடையில் பல இளம் பெண்கள் காணாமல் போகிறார்கள். காணாமல் போன பெண்களுக்கும் மாதவன் கொலைக்கும் தொடர்பு இருப்பதாக விசாரிக்கிறார்கள். இறுதியில் மாதவன் எப்படி கொல்லப்பட்டார்? காணாமல் போன பெண்கள் என்ன ஆனார்கள்? இதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

இசைக்கலைஞராக நடித்திருக்கும் மாதவன் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வித்தியாசமான வேடம் என்று திறம்பட செய்திருக்கிறார். காது கேட்காமல், வாய் பேச முடியாமல் இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அனுஷ்கா. ஓவியராக வரும் அனுஷ்கா படத்தில் நிறைய காட்சிகளில் வருகிறார். ஆனால், நடிப்பு திறனை வெளிப்படுத்து அளவிற்கு காட்சிகள் அமையாதது வருத்தம். மாதவனும் அனுஷ்காவும் வரும் காட்சிகள் ரசிக்கலாம்.

போலீஸ் அதிகாரியாக வரும் அஞ்சலி, கதாபாத்திரத்திற்கு பொருந்தினாலும், நடிப்பில் மிளிரவில்லை. குறிப்பாக இவர் பேசும் ஆங்கிலம் செட்டாகவில்லை. மற்றொரு போலீஸ் அதிகாரியான மைக்கல் மேட்சன் மற்றும் சுப்பராஜு ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். மற்றொரு கதாநாயகியாக வரும் ஷாலினியின் நடிப்பு செயற்கை தனமாக இருக்கிறது.

திகில் கலந்த திரில்லர் படத்தை இயக்கி இருக்கிறார் ஹேமந்த் மதுக்கூர். படம் ஆரம்பத்தில் இருக்கும் விறுவிறுப்பு போகபோக குறைந்து விடுகிறது. அமெரிக்காவை சுற்றியே படமாக்கி இருக்கிறார். ஹாலிவுட் தரத்தில் உருவாக்க நினைத்த இயக்குனர் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். பல படங்களில் பார்த்த அதே திருப்பங்கள் சோர்வை ஏற்படுத்துகிறது. அடுத்தடுத்து வரும் காட்சிகளை யூகிக்க முடியும் அளவிற்கு வைத்திருக்கிறார். கதாபாத்திரங்களிடம் இன்னும் வேலை வாங்கி இருந்தால் இந்த சைலன்ஸ் இன்னும் சத்தமாக இருந்திருக்கும்.
கோபி சுந்தர் இசையில் பாடல்கள் கவனம் பெறவில்லை. ஷெனியல் டியோ ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். அமெரிக்கா என்பதால் பிரம்மாண்டம் என்று இல்லாமல் கதைக்கு எது தேவையோ அதை அழகாக படம் பிடித்து கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘சைலன்ஸ்’ சத்தம் தேவை.
மோகன் கிருஷ்ணா இந்திராகாந்தி இயக்கத்தில் நானி, நிவேதா தாமஸ், அதிதி ராவ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வி’ படத்தின் விமர்சனம்.
நகரில் முக்கிய புள்ளிகள் வரிசையாக கொலை செய்யப்படுகிறார்கள். அத்தனை கொலைகளும் ஒரே மாதிரியாக கழுத்து அறுபட்டு சாகடிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு கொலை செய்யும்போதும் கொலையாளி வேண்டும் என்றே சில தடயங்களை விட்டு செல்கிறான். அதில், ஒரு துண்டு சீட்டும் இருக்கிறது.
அந்த துண்டு சீட்டில் கொலை செய்யப்படுபவரின் குற்றங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. அடுத்து கொலை செய்யப்படும் குற்றவாளி யார்? என்ற யூகமும் அந்த துண்டு சீட்டில் குறிப்பிடப்படுகின்றன. முடிந்தால் பிடித்துப்பார் என்ற சவாலை கொலையாளி விட்டு செல்கிறான். அவன் ஏன் இப்படி கொலை செய்கிறான்? அதற்கான காரணம் என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

படம் பார்ப்பவர்களுக்கு கொலைகாரன் யார்? என்ற உண்மை தெரிகிறது. அவனை பிடிக்க முயற்சிக்கும் போலீஸ் அதிகாரிக்கு அது மர்மமாக இருக்கிறது. கொலையாளியை பிடிப்பதில் அவர் தீவிரம் காட்டுகிறார். இருப்பினும் ஒவ்வொரு முயற்சியிலும் அவர் தோல்வி அடைகிறார். இதுவே, மற்ற ‘கிரைம்’ படங்களுக்கும், ‘வி’ படத்துக்கும் உள்ள வித்தியாசம்.
கொலைகாரராக நானி வருகிறார். ‘நான் ஈ’ படத்தில் பரிதாபத்துக்குரிய காதலராக வந்த அவருக்கு இதில் முற்றிலும் மாறுபட்ட வேடம். சண்டை காட்சிகளில் பறந்து பறந்து அடிக்கிறார். வித்தியாசமான தோற்றம், மிரட்டலான குரல் என நானி வித்தியாசம் காட்ட முயற்சித்திருக்கிறார். மற்றொரு நாயகனாக போலீஸ் அதிகாரி வேடத்தில், சுதிர்பாபு. ஒவ்வொரு கொலையின்போதும் கொலையாளியை கோட்டை விடும் கையாளாகாத கதாநாயகன்.

நிவேதா தாமஸ் கதாபாத்திரம் நிறைய எதிர்பார்க்க வைத்து ஏமாற்றி இருக்கிறது. இதேபோல் அதிதி ராவும் ஒரு சில காட்சிகளில் மட்டும் வந்து போகிறார். ரோகிணி, ‘தலைவாசல்’ விஜய், ஜெயப்பிரகாஷ், ஹரீஷ் உத்தமன் என்று தெரிந்த முகங்களை வைத்து நேரடி தமிழ் படம் போல் முலாம் பூசியிருக்கிறார்கள்.

இயக்குனர் மோகன் கிருஷ்ணா இந்திராகாந்தி வித்தியாசமான திரில்லர் படத்தை கொடுக்க முயற்சித்து இருக்கிறார். கதை, சுஜாதா எழுதிய ‘நிர்வாண நகரம்’ நாவலை நினைவூட்டுகிறது. இதுபோன்ற குற்றப்பின்னணி கதைகளுக்கு பாடல்கள் வேகத்தடைகளாக அமைந்து விடும். ‘வி’ படத்தில் அது அமைந்து இருக்கிறது. தமனின் பின்னணி இசை, கதையோட்டத்துக்கு உதவியிருக்கிறது. பி.ஜி.விண்டாவின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
மொத்தத்தில் ‘வி’ வேட்டை.






