என் மலர்tooltip icon

    தரவரிசை

    முத்துக்குமரன் இயக்கத்தில் விமல், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் கன்னி ராசி படத்தின் விமர்சனம்.
    கன்னி ராசிக்காரரான பாண்டியராஜன் தென்காசியில் வசித்து வருகிறார். இவர் காதலித்து திருமணம் செய்கிறார். இவருக்கு நான்கு ஆண்குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பிறக்கின்றன. இவர்கள் அனைவருக்கும் காதல் திருமணம் தான் செய்துவைக்க வேண்டும் என்கிற முனைப்போடு இருக்கிறார் பாண்டியராஜன்.

    தந்தையின் ஆசைப்படி அவருடைய மூன்று பசங்களும், அவருடைய பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். கடைக்குட்டியான விமலுக்கு காதல்னாலே பிடிக்காது. இதனால் கல்யாணமே பண்ணாமல் இருக்கிறார். விமலுக்கு எப்படி கல்யாணம் நடக்கிறது? அது காதல் திருமணமா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.

    கன்னி ராசி விமர்சனம்

    நாயகன் விமல் நேர்த்தியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஜெமினி கணேசன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொதுவாக ஜெமினி கணேசன் என்றால் காதல் மன்னன் என்பார்கள். ஆனால் இந்த படத்தில் நாயகனோ காதலே வேண்டாம் என்று அடம்பிடிக்கிறார். நாயகி வரலட்சுமி, போலீஸ் அதிகாரியின் மகளாக நடித்துள்ளார். கொடுத்த வேடத்தை கச்சிதமாக செய்துள்ளார்.

    மேலும் இப்படத்தில் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகிபாபு, காளி வெங்கட் என மிகப்பெரிய காமெடி பட்டாளமே உள்ளது. இத்தனை பேர் இருந்தும் ஒன்றிரண்டு இடங்களில் தான் காமெடி ஒர்க் அவுட் ஆகியுள்ளது. பல இடங்களில் காமெடி கைகொடுக்காதது படத்திற்கு பின்னடைவு.

    கன்னி ராசி விமர்சனம்

    கதை, திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள இயக்குனர் முத்துக்குமரன், குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படங்களை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல திறமையான நடிகர்களை படத்தில் நடிக்க வைத்துள்ளார். ஆனால் அவர்களது திறமைக்கு ஏற்ற வேடம் படத்தில் இல்லை என்பது கவலை அளிக்கிறது. 

    விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். செல்வக்குமாரின் நேர்த்தியான ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகின்றன.

    மொத்தத்தில் ‘கன்னி ராசி’ கலகலப்பில்லை. 
    கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன், எலிசெபத் டெபிகி நடிப்பில் வெளியாகி இருக்கும் டெனெட் படத்தின் விமர்சனம்.
    நாயகன் ஜான் டேவிட் வாஷிங்டன் போலீஸ் ஏஜெண்டாக இருக்கிறார். இவரை டெனெட் என்ற ரகசிய அமைப்பு தங்கள் குழுவில் சேர்த்துக் கொள்கிறது. அதில் அவருக்கு ஒரு பணி கொடுக்கப்படுகிறது. 

    அது என்னவென்றால், பின்னோக்கிப் பயணம் செய்யக்கூடிய துப்பாக்கி தோட்டாக்கள் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும், அது கடந்த காலத்தையே அழிக்கக் கூடியவை என்பதால், அவற்றை அழித்து உலகை காக்க வேண்டும் என்பது தான். இதனை நாயகன் செய்து முடித்தாரா? இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.

    டெனெட் விமர்சனம்

    கிறிஸ்டோபர் நோலனின் படங்கள், மற்ற ஹாலிவுட் படங்களைப் போன்றவை அல்ல. இவருடைய படங்களை ஒரு முறை பார்த்தால் புரியாது, இரண்டு, மூன்று முறை பார்த்தால்தான் முழுமையாக புரிந்துகொள்ள முடியும். அதற்கு இவரின் முந்தைய படங்களான இண்டர்ஸ்டெல்லார், இன்செப்சன் ஆகிய படங்கள் உதாரணமாக சொல்லலாம். 

    ஆனால் இந்தப் படத்தை இரண்டு, மூன்று முறை பார்த்தாலும் புரிந்து கொள்வது சிரமம் தான். கிறிஸ்டோபர் நோலனின் முந்தைய படங்களில் செண்டிமெண்ட் காட்சிகளுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அது மிஸ்ஸிங்.

    டெனெட் விமர்சனம்

    நாயகன் ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பேட்டின்சன், டிம்பிள் கபாடியா, எலிசெபத் டெபிகி என அனைவருமே தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களில் நிறைவாக நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு மற்றும் இசை தான் படத்தின் மிகப்பெரிய பலம். லுட்விக்கின் பின்னணி இசை படம் தொய்வடையும் இடங்களை தூக்கி நிறுத்துகிறது. அதே போல ஒளிப்பதிவு. ஒரே நேரத்தில் திரையின் ஒரு பகுதி முன்னோக்கி செல்வது போலவும் மற்றொரு பகுதி பின்னோக்கி செல்வது போலவும் அமைக்கப்பட்டுள்ள காட்சிகள் அற்புதம். 

    குறிப்பாக கார் சேஸிங் காட்சிகள், விமானம் வெடிக்கும் காட்சி, கிளைமாக்ஸ் என படம் முழுக்க பிரம்மிப்பூட்டுகிறார் ஒளிப்பதிவாளர் ஹோய்டே வேன் ஹோய்டெமா.

    மொத்தத்தில் ‘டெனெட்’ பிரம்மிப்பு.
    கெவின், ரேணு சவுந்தர், ருக்மணி பாபு, பாபு ரபீக் நடிப்பில் எஸ்.குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் கடத்தல் காரன் படத்தின் விமர்சனம்.
    நாயகி ரேணு சவுந்தர் கல்லூரி விட்டு வரும் வழியில் செயினை திருடுகிறார்கள். இதை நாயகன் கெவின் சண்டை போட்டு மீட்டு கொடுக்க இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. இவர்களின் காதல் ரேணுவின் அப்பாவிற்கு தெரிய வர, வேணுவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய நினைக்கிறார். 

    இதையறிந்த கெவின், ரேணுவை அழைத்துக் கொண்டு ஊரை விட்டு சென்று திருமணம் செய்யலாம் என்று முடிவுக்கு வருகிறார்.

    இந்நிலையில், திருடுவதை முக்கிய தொழிலாக கொண்டிருக்கும் கிராமத்தை சேர்ந்த 4 இளைஞர்கள், திருமண வீட்டில் பொருட்களோடு மணப்பெண் ரேணு சவுந்தரையும் தெரியாமல் கடத்திவிடுகிறார்கள். 

    விமர்சனம்

    இறுதியில் கடத்தல் கும்பலிடமிருந்து ரேணு சௌந்தர் தப்பித்தாரா? காதலன் கெவினுடன் இணைந்தாரா என்பதே படத்தின் மீதி கதை.

    நாயகனாக கெவின் நல்ல முகம். ஆனால் நடிப்புதான் வரவில்லை. பெண் வேடத்தில் அழகாக இருக்கிறார். முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் ஓரளவிற்கு நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    நாயகி ரேணு சவுந்தர் கிராமத்துப் பெண் வேடத்தில் கச்சிதம். நடனத்திலும் ஈர்க்கிறார்.
    மற்ற நடிகர் நடிகர்கள் புதுமுகங்கள் என்பதால் மன்னித்து விடலாம்.  

    விமர்சனம்

    சுகமாய் வருடும் காதல் பாட்டு, குத்துப் பாட்டு என ரகத்துக்கு இரண்டு கொடுத்து ரகளை செய்திருக்கிறது எல்.வி.கணேஷ் & ஜுபின் கூட்டணி. மலைக்கிராமத்தின் பச்சைப் பசேல் அழகை சுழன்று சுருட்டியிருக்கிறது எஸ்.ஸ்ரீராமின் கேமரா.

    வித்தியாசமான கதையை கலகலப்பாக சொல்ல முயற்சி செய்து இருக்கிறார் இயக்குனர் எஸ்.குமார். கதாபாத்திரங்களிடையே வேலை வாங்கி இருக்கலாம்.

    மொத்தத்தில் கடத்தல்காரன் சுமாரானவன்.
    மது ஜி கமலம் இயக்கத்தில் அஞ்சிதா ஸ்ரீ, ஜெமிஜேகப், ராஜேஷ்ராஜ், சூரஜ்சன்னி, கர்னல் மோகன்தாஸ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் இது என் காதல் புத்தகம் படத்தின் விமர்சனம்.
    சுந்தரகாண்டம் என்னும் ஊரில் தலைவராக இருப்பவர், மக்கள் யாரும் படிக்கக்கூடாது என்று உறுதியாக இருக்கிறார். படுத்துவிட்டால் அனைவரும் பெரிய ஆள் ஆகி விடுவார்கள் என்று பள்ளிக்கூடம் கூட கட்டாமல் இருக்கிறார்.

    ஆனால் தலைவரின் மகளான நாயகி அஞ்சிதா ஸ்ரீ படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். வளர்ந்தவுடன் நண்பர் ஒருவர் மூலமாக கதை புத்தகங்களை வாங்கி படிக்கிறார். கதாசிரியர் ஜெமிஜேகப் எழுதிய கதைகளை படித்து அவருக்கு ரசிகை ஆகிறார் அஞ்சிதா ஸ்ரீ. 

     படிப்பின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு தந்தையிடம் கூற, அதற்கு அவர் படிப்பு வேண்டாம் என்று கூறி திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார். திருமணத்திற்கு பயந்து கதாசிரியர் ஜெமிஜேகப் தேடி ஊரை விட்டு செல்கிறார்.

    விமர்சனம்

    இறுதியில் கதாசிரியரை தேடிச்சென்ற அஞ்சிதா ஸ்ரீ வாழ்க்கை என்ன ஆனது? படிக்கும் ஆர்வம் நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகியாக நடித்திருக்கும் அஞ்சிதா ஸ்ரீ, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கதாநாயகி அதிகம் முக்கியத்துவம் உள்ள படம் என்பதை உணர்ந்து ஓரளவிற்கு நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களான ஜெமிஜேகப், ராஜேஷ்ராஜ், சூரஜ்சன்னி, கர்னல் மோகன்தாஸ், கொலப்புள்ளி லீலா ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

    விமர்சனம்

    பெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் மது ஜி கமலம். நல்ல கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் திரைக்கதையில் தடுமாறியிருக்கிறார். திரைக்கதை எதை நோக்கிச் செல்வது என்று தெரியாமல் செல்கிறது. அடுத்தடுத்து காட்சிகள் சம்பந்தமில்லாமல் இருப்பது தேவையில்லாத கதாபாத்திரங்கள் படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது.

    ஸ்ரீ மாதவ் இசையில் வைக்கம் விஜயலட்சுமி பாடிய பாடல் மட்டும் கேட்கும் ரகம். அருண் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    மொத்தத்தில் 'இது என் காதல் புத்தகம்' படிக்க முடியவில்லை.
    சஞ்சய் சிவன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி நடித்திருக்கும் தௌலத் படத்தின் விமர்சனம்.
    ஆதரவற்றவரான நாயகன் சஞ்சய் சிவன் பெங்களூரில் தாதாவாக இருக்கும் ஆடுகளம் ஜெயபாலனுடன் அடியாளாக வேலைபார்த்து வருகிறார். நாயகன் தன் குழுவினருடன் ஒரு எம்எல்ஏவை கொல்வதற்காக திட்டம் போடுகிறார். 

    இதேசமயம் தமிழ்நாட்டில் தாதாவாக இருக்கும் யோக் ஜாபி, போதைப் பொருள் ஒன்றை கைப்பற்றுவதற்காக பெங்களூர் செல்கிறார். அப்போது சஞ்சய் சிவன் தன் குழுவினருடன் எம்எல்ஏவை கொல்வதற்கு பதிலாக யோக் ஜாபியைக் கொண்டு விடுகிறார்கள். இதனால் கோபம் அடையும் யோக் ஜாபியின் கும்பல், சஞ்சய் சிவன் மற்றும் அவரது கும்பலை கொல்ல முயற்சி செய்கிறார்கள்.

    விமர்சனம்

    இறுதியில் நாயகன் சஞ்சய் சிவன், யோக் ஜாபியின் கும்பலிடம் இருந்து தப்பித்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சஞ்சய் சிவன் ஓரளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரே இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருக்கிறார். நல்ல கதையை எடுத்துக் கொண்ட சக்தி சிவன் திரைக்கதையில் தடுமாறி இருக்கிறார். போதைப்பொருள், தாதா கும்பல் இவற்றை சுற்றிய படத்தை உருவாக்கியிருக்கிறார். சொல்லவந்த விஷயத்தை தெளிவாகச் சொல்லியிருக்கலாம். தேவையில்லாத காட்சிகள் படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது.

    விமர்சனம்

    நாயகியாக நடித்திருக்கும் ரேஷ்மி கவுதம் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். தமிழ்நாட்டில் தாதாவாக வரும் யோக் ஜாபி, பெங்களூரு தாதாவாக வரும் ஆடுகளம் ஜெயபாலன் ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். காமெடி கதாபாத்திரத்தில் வரும் யோகிபாபு பத்து நிமிடம் மட்டுமே வருகிறார். இன்னும் அதிக காட்சிகள் நடித்திருந்தால் ரசித்திருக்கலாம்.

    இமாலயன் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். மெய்யப்பனின் ஒளிப்பதிவு அதிகம் ஜொலிக்கவில்லை.

    மொத்தத்தில் 'தௌலத்' ஈர்ப்பு இல்லை.
    எம்.ஜே.ஹுசைன் இயக்கத்தில் அன்பு மயில்சாமி, மனிஷா ஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் அல்டி படத்தின் விமர்சனம்.
    அன்பு, சென்ராயன், யாசி ஆகிய மூன்று பேரும் நண்பர்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் செல்போன் திருட்டில் ஈடுபடுகிறார்கள். பிறகு அதையே தங்களது வேலையாக செய்கிறார்கள். அப்போது, கொலை செய்யப்பட்ட எம்.எல்.ஏ மகனின் செல்போன் இவர்களுக்கு கிடைக்க, அந்த போனில் இருக்கும் வீடியோ ஒன்றுக்காக போலீஸ் இவர்களை தேடுகிறது.  

    இன்னொரு பக்கம், மகனை கொலை செய்தவர்களை பழிவாங்க துடிக்கும் எம்.எல்.ஏ-வும் இவர்களை துரத்த, அவர்களிடம் இருந்து இந்த மூன்று இளைஞர்களும் தப்பித்தார்களா? இல்லையா?, எம்.எல்.ஏ-வின் மகனை கொலை செய்தது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    அல்டி

    நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். முதல் படம் என்றாலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த பெரிதும் மெனக்கெட்டிருப்பது பல காட்சிகளில் தெரிகிறது. நாயகி மனிஷா ஜித்துக்கு படத்தில் குறைவான காட்சிகளே உள்ளன. பாடல் காட்சிகளுக்கு மட்டும் வந்து ஏமாற்றம் அளிக்கிறார். 

    அல்டி

    நாயகனின் நண்பர்களாக வரும் சென்ராயன் மற்றும் யாசிப் ஆகிய இருவரும் கவனிக்க வைக்கிறார்கள். போலீஸ் கதாப்பாத்திரத்தில் வரும் நடன இயக்குநர் ராபர்ட், வில்லத்தனத்தால் மிரட்டி இருக்கிறார். சட்டமன்ற உறுப்பினராக நடித்திருக்கும் மாரிமுத்து, தலைமைக்காவலராக வரும் பசங்க சிவக்குமார், ஏ.வெங்கடேஷ் ஆகியோர் தங்களது அனுபவ நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்கள். 

    அல்டி

    அறிமுக இயக்குனர் எம்.ஜே.ஹுசைன் திரைக்கதையை சிறப்பாக கையாண்டுள்ளார். முதல்பாதியில் செல்போன் திருட்டுகள் எப்படி நடக்கின்றன? திருடப்பட்ட செல்போன்கள் எங்குபோய் எப்படி உருமாற்றம் பெறுகின்றன என்பதை விளக்கமாகக் காட்டியிருக்கிறார். இரண்டாம் பாதியில் ஒரு கொலையின் பின்னணியை வைத்து திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்தி இருக்கிறார். 

    ஸ்ரீகாந்த் தேவாவின் துள்ளல் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன. ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு விறுவிறுப்பாக நகரும் திரைக்கதைக்கு வலுசேர்த்திருக்கிறது. 

    மொத்தத்தில் ‘அல்டி’ விறுவிறுப்பு.
    விக்னராஜன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அந்தகாரம்’ படத்தின் விமர்சனம்.
    சிறுவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் அர்ஜுன் தாசின் தொலைபேசியில் அடிக்கடி ஒரு மர்மமான அழைப்பு வந்து அவரை பயமுறுத்துவதும், உடலில் இருந்து ஆத்மாவை பிரிக்கப்போவதாக மிரட்டுவதுமாய் தொல்லை கொடுக்கிறது. வீட்டிலும் அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன. இதனால் நடுங்குகிறார். 

    இன்னொரு புறம் பார்வை இழந்த வினோத் கிஷன் சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகி மாற்று சிறுநீரகம் பொருத்த பணத்துக்கு அலைகிறார். பேய் ஓட்டும் மாந்திரீகம் அவருக்கு தெரியும். தொழில் அதிபர் வாங்கிய பங்களாவில் உள்ள ஆவியை விரட்டினால் பெரிய தொகை தருவதாக கூறுகிறார்கள். அதை ஏற்று பேய் பங்களாவுக்குள் செல்கிறார். அங்கே அவர் கடுமையாக தாக்கப்படுகிறார். 

    அந்தகாரம்

    மற்றொரு பக்கம் மனநல மருத்துவரான குமார் நடராஜனை ஒரு மனநோயாளி சுடுகிறான். இதனால் பேசும் திறன் இழக்கும் மருத்துவர் வேறொரு முடிவை எடுக்கிறார். இப்படி மூன்று பேரின் கதைகளை வித்தியாசமான கோணத்தில் நகர்த்தி ஒரே புள்ளியில் கொண்டு வருவதும் அர்ஜுன் தாஸை பயமுறுத்துவது யார்? வினோத் கிஷன் என்ன ஆகிறார்? மருத்துவரின் இன்னொரு முகம் என்ன? போன்ற மர்மங்களுக்கு விடை கொடுப்பதே படத்தின் மீதிக்கதை.

    அந்தகாரம்

    அர்ஜுன் தாஸ் நடிப்பில் மெருகேறி இருக்கிறார். வீட்டில் நடக்கும் அமானுஷ்ய விஷயங்களை பார்த்து பதறுவது, பேய்க்கு பயந்து குளியல் அறையில் ஒளிந்து நடுங்குவது, மர்மத்தை கண்டுபிடிக்க அலைவது என்று தேர்ந்த நடிப்பால் கதாபாத்திரத்தோடு ஒன்றி இருக்கிறார். இனி அவருக்கு அதிக வாய்ப்புகள் வரலாம். 

    வினோத் கிஷன் மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் பொருந்தி இருக்கிறார். தேர்வு எழுதும்போது நேர்மையாக நடப்பது, கஷ்டத்திலும் தந்தை வாழ்ந்த வீட்டை விற்க மறுப்பது என்று யதார்த்தம் மீறாத நடிப்பை கொடுத்துள்ளார். முடிவு, பரிதாபம். மன நல மருத்துவராக வரும் குமார் நடராஜனின் வில்லத்தனம் அதிர வைக்கிறது. பூஜா, மிஷா ஆகிய இருவரும் வசீகரிக்கிறார்கள். 

    அந்தகாரம்

    ஆரம்பத்தில் கதையை உள்வாங்குவதில் குழப்பம் இருக்கிறது. போகப்போக பயம் திகிலுடன் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி கவனம் பெறுகிறார் அறிமுக இயக்குனர் விக்னராஜன். பிரதீப்குமாரின் பின்னணி இசையும், எட்வின் சகாய் ஒளிப்பதிவும் திகிலுக்கு உதவி இருக்கிறது.

    மொத்தத்தில் ‘அந்தகாரம்’ மிரட்டல்.
    சந்தோஷ் பிரதாப், அதுல்யா ரவி நடிப்பில் வெளியாகி இருக்கும் என் பெயர் ஆனந்தன் படத்தின் விமர்சனம்.
    நாயகன் சந்தோஷ் பிரதாப், நான்கு குறும்படங்களை இயக்கி வெற்றி கண்டவர். ரூபாய் 50 கோடி பட்ஜெட்டில் புதிய பெரிய திரை படம் ஒன்றை இயக்க தயாராகிறார். படப்பிடிப்பிற்கு செல்லும் முதல் நாளில் மர்மநபர்களால் கடத்தப்படுகிறார். 

    இதனால் படப்பிடிப்பு நின்று போய்விடுகிறது. மனைவி அதுல்லா ரவியும் சந்தோஷ் பிரதாப் காணவில்லை என்று வருத்தப்படுகிறார். இறுதியில் சந்தோஷ் பிரதாப்பை கடத்தியவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? சந்தோஷ் பிரதாப் மீண்டு வந்தாரா? என்பதே மீதிக்கதை.

    விமர்சனம்

    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப், கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். பிற்பாதியில் அவரை முழுவதும் கட்டி வைத்து விடுகிறார்கள். நடிப்பையும் கட்டி வைத்தது போல் இருந்தது. 

    நாயகியாக நடித்திருக்கும் அதுல்யா ரவி, ஒரு காட்சியில் சிரித்துவிட்டு 2 காட்சியில் அழுதுவிட்டு செல்கிறார். அரவிந்த் ராஜகோபால், தீபக் பரமேஷ், அருண் ஆகியோர் திரைக்கதைக்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.

    விமர்சனம்

    கூத்து, நாடக கலையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன். முதல் பாதி கதை எதை நோக்கி செல்கிறது என்று தெரியாமல் இருக்கிறது. இரண்டாம் பாதியில் சொல்லவந்ததை கொஞ்சம் தெளிவாகச் சொல்லியிருக்கலாம். நவீன உலகத்தால் கூத்து நாடகம் ஆகியவை அழிந்து விட்டதாகவும் அவர்களுக்குள்ளும் நல்ல கதைகள் இருக்கிறது என்பதை சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர். சிறந்த கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் திரைக்கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    ஜோஸ் பிராங்கிளின் இசையில் கூத்து பாடல் ரசிக்க வைக்கிறது. மனோ ராஜாவின் ஒளிப்பதிவு ஆங்காங்கே பளிச்சிடுகிறது.

    மொத்தத்தில் 'என் பெயர் ஆனந்தன்' தெளிவு இல்லை.
    ஆர்.டி.எம். இயக்கத்தில் சுரேஷ் ரவி, ரவீனா நடிப்பில் வெளியாகி இருக்கும் காவல்துறை உங்கள் நண்பன் படத்தின் விமர்சனம்.
    நாயகன் சுரேஷ் ரவி சென்னையில் உணவு டெலிவரி செய்து வருகிறார். இவரது மனைவி ரவினா ரவி தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். காதல் திருமணம் செய்து கொண்ட இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் ஒரு நாள் ரவினா இரவில் நடந்து வரும் போது, மூன்று இளைஞர்கள் வழிப்பறி செய்து ஒருவர் கட்டிப்பிடித்து விட்டு செல்கிறார். இதனால் கவலைப்படும் ரவினா, நடந்ததை சுரேஷிடம் கூற, இருவரும் மூன்று இளைஞர்களை தேடி செல்கிறார்கள். 

    அப்போது இரவு ரோந்து பணியில் இருக்கும் போலீஸ், சுரேஷ், ரவினாவை மறித்து விசாரிக்கிறார்கள். இதில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் மைம் கோபிக்கும் சுரேஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. போலீசை எதிர்த்து பேசுவதால் கோபமடையும் மைம் கோபி, சுரேஷை அடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் பல சித்திரவதைகளை அனுபவிக்கும் சுரேஷ், இதிலிருந்து மீண்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    காவல்துறை உங்கள் நண்பன்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சுரேஷ் ரவி, நிறைய கஷ்டப்பட்டு உழைத்து இருக்கிறார். போலீஸிடம் அடி வாங்குவதை பார்க்கும்போது மிகவும் பாவமாக இருக்கிறது. பயப்படுவதற்கு ஏற்ற முகம், ஆனால், கோபம் செட்டாக வில்லை. 

    நாயகியாக நடித்திருக்கும் ரவினா யதார்த்தமான நடிப்பு. கணவர் மீது பாசம், கோபம், அக்கறை, பரிதாபம், ஏக்கம் என நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். சுரேஷ், ரவினா இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. பல இடங்களில் பரிதாபப் பட வைத்திருக்கிறார் ரவினா.

    காவல்துறை உங்கள் நண்பன்

    போலீஸ் அதிகாரியாக வரும் மைம் கோபி, நடிப்பில் மிரட்டி இருக்கிறார். அலட்டல் இல்லாத இவரது நடிப்பு படத்திற்கு பெரிய பலம். கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    போலீசை ஒருவர் எதிர்த்து பேசினால், என்ன நடக்கும் என்பதை கதையாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஆர்.டி.எம். கதாபாத்திரங்கள் தேர்வு, மற்றும் அவர்களிடம் வேலை வாங்கிய விதம் அருமை. படம் பார்க்கும் போது சமீபத்தில் நடந்த சாத்தான்குளம் சம்பவம் நினைவுக்கு வருகிறது. 

    காவல்துறை உங்கள் நண்பன்

    ஆனால், இப்படம் அதற்கு முன்னதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. நாம் பார்த்த, கேட்ட சம்பவங்கள் திரைக்கதையில் அமைத்திருக்கிறார் இயக்குனர். அனைத்து போலீசும் கெட்டவர்கள் இல்லை, நல்ல மனசாட்சி உள்ளவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் சொல்லி இருக்கிறார். வசனங்கள் படத்திற்கு பிளஸ். முதல் பாதியின் நீளம் மைனஸ்.

    ஆதித்யா, சூர்யா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.  விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு சிறப்பு.

    மொத்தத்தில் ‘காவல் துறை உங்கள் நண்பன்’ கவர்கிறான்.
    மகேஷ் பாபு, ராஷ்மிகா மந்தனா, விஜயசாந்தி, பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் இவனுக்கு சரியான ஆள் இல்லை படத்தின் விமர்சனம்.
    மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் விஜயசாந்தி. இவருடைய மூத்த மகன் ராணுவத்தில் பணிபுரிந்து இறந்துவிடுகிறார். இரண்டாவது மகன் இராணுவத்தில் நாயகன் மகேஷ் பாபு குழுவில் பணிபுரிந்து வருகிறார். மகள் திருமணத்திற்காக இரண்டாவது மகனை அழைக்கிறார் விஜயசாந்தி.

    இந்நிலையில் எதிர்பாராத விதமாக இரண்டாவது மகனும் இறந்து விடுகிறார். மகன் இறந்த செய்தி அறிந்தால் திருமணம் நின்று விடும் என்பதால், திருமணம் நடந்து முடிந்த பிறகு விஜயசாந்தியிடம் சொல்லலாம் என்று அந்த ஊருக்கு செல்கிறார் மகேஷ் பாபு. 

    விமர்சனம்

     சென்ற இடத்தில் விஜய சாந்திக்கும் அந்த ஊரில் இருக்கும் பிரகாஷ்ராஜுக்கும் பிரச்சனை இருப்பதை மகேஷ்பாபு அறிகிறார்.

    இறுதியில் விஜய சாந்திக்கும் பிரகாஷ்ராஜுக்கும் இடையேயான பிரச்சனையை மகேஷ்பாபு தீர்த்து வைத்தாரா? மகன் இறந்த செய்தியை விஜயசாந்திடம் சொன்னாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
     
    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் மகேஷ் பாபு தனக்கே உரிய பாணியில் நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். 

    விமர்சனம்

    கதாநாயகியாக நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா துறுதுறு நடிப்பால் கவர்ந்திருக்கிறார். பேராசிரியராக வரும் விஜயசாந்தி கம்பீரத்துடன் நடித்திருக்கிறார். பிரகாஷ்ராஜ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். 

    ஆக்ஷன் கலந்து குடும்பபாங்கான படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அனில் ரவிபுடி. பரபரப்பாக தொடங்கும் திரைக்கதை போகப்போக அடங்கிவிடுகிறது. மகேஷ் பாபு ரயிலில் ஊருக்கு வரும் காட்சியின் நீளத்தை குறைத்திருக்கலாம். காமெடி என்ற பெயரில் ரசிகர்களை கடுப்பேத்துகிறார் இயக்குனர். 

    விமர்சனம்

    தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கிறது. ரத்னவேலுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

    மொத்தத்தில் 'இவனுக்கு சரியான ஆள் இல்லை' சுவாரசியம் குறைவு.
    ஜிம்னாஸ்டிக் வீரர் கமல் கோவின்ராஜ் தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள புறநகர் படத்தின் விமர்சனம்.
    ‘சாதிப் பிரச்சனையால் சமுதாயத்தில் வாழமுடியாத நாயகன் சொந்த ஊரில் இருந்து வெளியேறி புறநகரில் தஞ்சமடைகிறார். அந்த இடத்திலும் சமூகம் அவரை வாழவிடமால் செய்கிறது. தன்னைப் பாதுகாத்துக் கொள்ள நாயகன் எத்தகைய முயற்சிகளை எடுக்கிறார் என்பதை கமர்ஷியலாக சொல்லியுள்ள படம்தான் ‘புறநகர்’.

    நாயகன் கமல் கோவின்ராஜ், ஜிம்னாஸ்டிக் வீரரான இவர் இப்படத்தின் மூலம் அறிமுகமாகி உள்ளார். ஆக்‌ஷன், சென்டிமெண்ட், காதல் காட்சி என அனைத்திலும் நடிப்பு திறனை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். நாயகிகளாக வரும் அஸ்வினி சந்திரசேகர், சுகன்யா ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.
     
    வில்லனாக வரும் அனல் அண்ணாமலை கவனிக்க வைக்கிறார். தேனி முருகன், கதிரவகண்ணன், செல்வம், தயாளன், ரகு, கணேஷ், தாம்பரம் சிங்கம் ஆகியோர் நேர்த்தியாக நடித்துள்ளனர். 

    புறநகர்

    இலங்கை தமிழர்களின் துயரத்தை சொல்லும் எல்லாளன் படத்தை இயக்கிய மின்னல் முருகன் இப்படத்தை இயக்கி உள்ளார். சாதிக் கொடுமைகள் பற்றி சொல்ல முயற்சித்திருக்கும் அவர், திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். பல இடங்களில் லாஜிக் மீறல்கள் அப்பட்டமாக தெரிவது படத்திற்கு பின்னடைவு. 

    இந்திரஜித் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் பதியவில்லை. பின்னணி இசையும் சுமார் தான். விஜய் திருமூலத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். 

    மொத்தத்தில் ‘புறநகர்’ சுவாரஸ்யம் குறைவு.
    டி.ரமேஷ் செல்வன் இயக்கத்தில் ஹைரா, மனோ, அஜ்மல் நடிப்பில் வெளியாகி இருக்கும் நுங்கம்பாக்கம் படத்தின் விமர்சனம்.
    நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் அஜ்மல். அந்த சமயத்தில் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நாயகி ஹைரா வெட்டி கொலை செய்யப்படுகிறார். இது குறித்த தகவல் முதலில் ரெயில்வே காவல்துறைக்கு தெரிவிக்கப்படுகிறது. கொலை நடந்து 3 மணி நேரம் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், இந்த வழக்கு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு மாற்றப்படுகிறது. அஜ்மல் இந்த வழக்கை விசாரித்து வருகிறார். 

    நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லாததால் கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார் அஜ்மல். ஒருகட்டத்தில் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தின் சுற்றியுள்ள பகுதியில் உள்ள 
    சிசிடிவியை ஆராய்ந்து பார்த்ததில் கொலை நடந்த சிறிது நேரத்தில் வாலிபர் ஒருவர் ஓடுவதை காணும் அஜ்மலுக்கு அவர் மீது சந்தேகம் எழுகிறது.

    நுங்கம்பாக்கம் விமர்சனம்

    இதையடுத்து அந்த நபரை தேடிப்பிடித்து விசாரணையை தொடங்குகிறார் அஜ்மல். சந்தேகத்தின் பேரில் ஹீரோ மனோவிடம் விசாரணை மேற்கொள்கிறார் அஜ்மல். இதையடுத்து விசாரணையில் பல்வேறு திருப்பங்கள் ஏற்படுகின்றன. இறுதியில் நாயகி ஹைராவை கொலை செய்தது யார் என அஜ்மல் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது தான் மீதிக்கதை.

    விஜயகாந்த் நடித்த ‘உளவுத்துறை’, சத்யராஜ் நடித்த ‘கலவரம்’, அருண் விஜய் நடித்த ‘ஜனனம்’ உள்பட பல படங்களை இயக்கியவர் டி.ரமேஷ் செல்வன், இவர் தற்போது தமிழ்நாட்டையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுத்துள்ள படம் தான் நுங்கம்பாக்கம். 

    நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட கொடூரத்தை தான் இயக்குனர் படமாக்கியுள்ளார். நிஜ சம்பவங்களை படமாகியுள்ள இயக்குனர் போலீஸ் விசாரணையை மையப்படுத்தி திரைக்கதையை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    நுங்கம்பாக்கம் விமர்சனம்

    படத்தின் நாயகனாக நடித்துள்ள மனோ எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாயகி ஹைரா படத்தில் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், படம் முழுக்க அவரை சுற்றியே நடக்கிறது. போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள அஜ்மல் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

    அனைவருக்கும் தெரிந்த கதை என்றாலும், இந்த வழக்கின் விசாரணையின் போது நடந்தது என்ன என்பதை கற்பனை கலந்து விறுவிறுப்பு குறையாமல் காட்டியிருக்கிறார் இயக்குனர். சாம் டி ராஜின் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஜோன்ஸ் ஆனந்தின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    மொத்தத்தில் ‘நுங்கம்பாக்கம்’ வரவேற்கலாம்.
    ×