என் மலர்tooltip icon

    தரவரிசை

    கவர்ச்சி நடிகையாக வலம் வந்த நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று கதையாக வெளியாகி இருக்கும் ‘ஷகிலா’ படத்தின் விமர்சனம்.
    கிராமத்தில் தந்தை, தாய் ஐந்து தங்கைகளுடன் ஏழ்மையாக வாழ்ந்து வருகிறார் ஷகிலா. இந்நிலையில், ஷகிலாவின் தந்தை திடீரென இறந்து விடுகிறார். குடும்ப கஷ்டம் காரணமாக சினிமாவில் ஜூனியர் நடிகையாக சேரும் ஷகிலா விரைவில் முன்னணி நடிகையாக ஆகிறார். ஷகிலா படங்களின் வரவால் முன்னணி நடிகரின் திரைப்படங்கள் பாதிக்கப்படுகிறது.

    இதேசமயம் ஊரில் கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கிறது. இதற்கு காரணம் ஷகிலாவின் படங்கள் தான் என்று முன்னணி நடிகர் பங்கஜ் திரிபாதி, வதந்தியை கிளப்பி விடுகிறார். இதனால் மக்கள் போராட்டத்தில் இறங்க, ஷகிலாவின் திரைப்படங்களுக்கு தடை ஏற்படுகிறது. படம் தயாரிக்கவும் தயாரிப்பாளர்கள் மறுக்கிறார்கள்.

    விமர்சனம்

    பணம் மற்றும் சினிமா வாழ்க்கையை இழக்கும் ஷகிலா, இறுதியில் மீண்டும் சினிமா பயணத்தை தொடங்கினாரா? எப்படி வாழ்க்கையை சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    மலையாளத்தில் கவர்ச்சி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு கதையாக இப்படம் உருவாகியுள்ளது. ஷகிலா எழுதிய புக்கை மையமாக வைத்து, திரைப்படத்திற்காக சில மாறுதல்களை செய்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ். விறுவிறுப்பாக ஆரம்பிக்கும் திரைக்கதை இறுதியில் மெதுவாக செல்கிறது. பிற்பாதியின் நீளத்தை குறைத்திருக்கலாம். பங்கஜ் திரிபாதிக்கான காட்சிகளை ரசிக்கும்படியாக உருவாக்கி இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் சிந்திக்க வைக்கிறார்.

    விமர்சனம்

    ஷகிலா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரிச்சா சத்தாவின் நடிப்பு அதிகம் எடுபடவில்லை. கிளைமாக்ஸ் காட்சியில் நடிப்பையும், ஒரு சில காட்சிகளில் மட்டும் அழகையும் ரசிக்க முடிகிறது. முன்னணி நடிகராக சலீம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பங்கஜ் திரிபாதியின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். அளவான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார். கதாபாத்திரத்திற்கு சிறந்த தேர்வு. மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

    விமர்சனம்

    வீர சம்ர்த் மற்றும் மீட் ப்ரோஸ் ஆகியோரின் பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. சந்தோஷ் ராய் பதாஜேயின் ஒளிப்பதிவு அருமை.

    மொத்தத்தில் ‘ஷகிலா’ சுவாரஸ்யம் குறைவு.
    வைகறை பாலன் இயக்கத்தில் கரிகாலன், ரிஷா ஹரிதாஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சியான்கள்’ படத்தின் விமர்சனம்.
    தேனி அருகே பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், துரை சுந்தரம், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயணசாமி. ஏழ்மையான குடும்பங்களை சேர்ந்த இவர்கள் 7 பேரும் அறுபது வயதை தாண்டியும் இளம் வயது நண்பர்களைப் போல் பழகி வருகிறார்கள். 

    7 பேருக்கும் தனித்தனி ஆசைகள் இருக்கின்றன. அதில் நளினிகாந்துக்கு விமானத்தில் பறக்க வேண்டும் என்று ஆசை. அவருடைய ஆசை என்றாவது ஒருநாள் நிறைவேறும் என்று மற்ற நண்பர்கள் நம்பிக்கையூட்டுகிறார்கள்.

    சியான்கள்

    இந்த நிலையில், மருமகள் கையினால் அடி வாங்கிய அவலம் காரணமாக 7 சியான்களில் ஒருவரான நாராயணசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்கிறார். சொத்துக்கு ஆசைப்பட்டு மகனே வி‌‌ஷ ஊசி போட ஏற்பாடு செய்ததில், துரை சுந்தரம் என்பவர் இறந்து போகிறார்.

    இரண்டு நண்பர்களும் தங்கள் கண் முன்னே கொல்லப்படுவதாலும் தற்கொலைக்கு தூண்டப்படுவதாலும் மற்றவர்கள் எடுக்கும் முடிவு என்ன? இந்த சமூகத்துக்கு முதியவர்களின் அவசியத்தை அவர்கள் உணர்த்தினார்களா என்பதை உணர்வுபூர்வமாக சொல்லி இருக்கிறது படம்.

    சியான்கள்

    படத்தின் நாயகனான கரிகாலன் டாக்டராக வந்து முதியவர்களுக்கு உதவும் பாத்திரத்தில் நடித்துள்ளார். ரிஷா ஹரிதாஸ் கிராமத்து அழகியாக அம்சமாக தெரிகிறார். முதியவர்கள் தொடர்பான வறுமை காட்சிகளுக்கு இடையே கரிகாலன், ரிஷா ஹரிதாஸ் ஜோடியின் யதார்த்தமான காதல், ரசிக்க வைக்கிறது. 

    நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயணசாமி, துரை சுந்தரம் ஆகிய 7 முதியவர்களும் போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள். அவர்களில் நளினிகாந்தின் கதையும், நடிப்பும் கலங்க வைக்கிறது. குறிப்பாக கவலைக்கிடமான நிலையில், படுத்த படுக்கையாக கிடக்கும் மனைவிக்கு இவர், ‘தண்டட்டி’ போட்டு விடும் காட்சி, உருக்கம்.

    சியான்கள்

    வித்தியாசமான கதை. பேய்களையும், தாதாக்களையும் காட்டி பயமுறுத்திக் கொண்டிருந்த தமிழ் சினிமாவில், மாற்றுப்பாதையில் போய் ஏழை முதியவர்களின் கதையை சொல்லி நெகிழவைத்து இருக்கிறார், இயக்குனர் வைகறை பாலன். முதல் பாதி கலகலப்பாகவும் இரண்டாம் உணர்வுபூர்வமாகவும் செல்கிறது. இறுதிக்காட்சி கண்களை குளமாக்குகிறது. திரைக்கதையில் வேகம் கூட்டியிருக்கலாம்.

    முத்தமிழ் இசையில் பாடல்களிலும், பின்னணி இசையிலும் கிராமிய மணம் கமழ்கிறது. கிராமத்து யதார்த்தங்களை அப்படியே பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாபு குமார். 

    மொத்தத்தில் ‘சியான்கள்’ மிளிர்கிறார்கள்.
    டிசி சூப்பர் ஹீரோக்கள் வரிசையில் வெளியாகியிருக்கும் வொண்டர் உமன் 1984 படத்தின் விமர்சனம்.
    நாயகி கிறிஸ் பைன் மியூசியத்தில் வேலை பார்த்து வருகிறார். மேலும் ஆங்காங்கே நடக்கும் தவறுகளை சண்டைபோட்டு சரி செய்து வருகிறார். இந்நிலையில் எஸ்பிஐ, ஒரு கல்லை பற்றி தகவல் கொடுக்கிறார்கள். மேலும் இந்த கல்லை அபகரிக்க ஒரு கூட்டம் செயல் படுகிறது என்றும் கூறுகிறார்கள்.

    கல்லை பற்றி ஆராய்ச்சி செய்யும் போது விவரம் இல்லாத ஒரு பெண்ணும் வேலைக்கு சேர்கிறார். ஆராய்ச்சியில் இந்த கல்லை வைத்துக் கொண்டு மனதில் நினைத்தால் அது நிஜத்தில் நடக்கும் என்பதை அறிகிறார்கள்.

    விமர்சனம்

    இந்நிலையில், ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் விவரம் இல்லாத பெண், கிறிஸ் பைன் போல் சக்தி வாய்ந்த பெண்ணாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். கிறிஸ் பைன் இடம் உள்ள சக்தி எல்லாம் விவரம் இல்லாத பெண்ணுக்கு செல்கிறது.

    இதே சமயம் வில்லனும் கல்லை அபகரித்து விடுகிறார். இறுதியில் கிறிஸ் பைன், இழந்த சக்தியை பெற்றாரா? வில்லனிடம் இருந்து சக்தி வாய்ந்த கல்லை மீட்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    டிசி சூப்பர் ஹீரோக்கள் வரிசையில் வொண்டர் உமன் 1984 என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. 1984 ஆம் ஆண்டு பின்னணியில் நடக்கும் கதையை உருவாக்கி இருக்கிறார்கள். டிசி படங்களில் எப்போதும் முதல் பாதி மெதுவாகவும் இரண்டாம் பாதி விறுவிறுப்பாகவும் இருக்கும். அதேபோல் இந்த படத்தையும் உருவாக்கி இருக்கிறார்கள். ரசிகர்களுக்கு ஏற்றவாறு விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் திரைப்படம் நகர்கிறது.

    கதாபாத்திரங்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பின்னணி இசையும், ஒளிப்பதிவும், கிராபிக்ஸ் காட்சிகளும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. 

    மொத்தத்தில் 'வொண்டர் உமன் 1984' வொண்டர்ஃபுள்.
    தி இம்மார்டல் வார்ஸ் ரீசர்ஜென்ஸ் என்ற பெயரில் தமிழ் வெளியாகி இருக்கும் ஹாலிவுட் படத்தின் விமர்சனம்.
    ஹாலிவுட்டில் வெளியான தி இம்மார்டல் வார்ஸ் ரீசர்ஜென்ஸ் என்ற திரைப்படம் தற்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது.

    மனித இனமும், மனித இனத்தில் சக்தி வாய்ந்தவர்கள் என இரண்டு பிரிவுகளாக இருக்கிறார்கள். மனிதர்கள், சக்தி வாய்ந்தவர்களுக்கு இடையே சண்டை ஏற்படுத்தி அதை டி.வி.யில் ஒளிபரப்பு செய்கிறார்கள். 

    விமர்சனம்

    இதில் புரட்சி ஏற்பட்டு சக்தி வாய்ந்தவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். இறுதியில் சக்தி வாய்ந்தவர்கள் தங்களுக்குள் நடைபெற்று வந்த சண்டையை முடித்துக் கொண்டார்களா? இவர்களுக்குள் சண்டை ஏற்பட காரணமாக இருந்தவர்கள் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    ஹாலிவுட் படங்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சூப்பர் ஹீரோக்கள் கதை அம்சம் கொண்ட படங்கள் வரிசையில் தி இம்மார்டல் வார்ஸ் ரீசர்ஜென்ஸ் என்ற திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ஆனால், மற்ற படங்களுக்கு நிகராக இந்த படம் அமையாதது வருத்தம்.

    விமர்சனம்

    தமிழ் சினிமாவில் வெளியாகும் சிறிய பட்ஜெட் படங்கள் போல், இந்த படம் அமைந்துள்ளது. கிராபிக்ஸ் காட்சிகள் ஓரளவிற்கு ரசிக்க வைத்தாலும், சுவாரஸ்யம், விறுவிறுப்பு இல்லாமல் படம் நகர்கிறது. கதாபாத்திரங்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

    பின்னணி இசையும், சண்டைக் காட்சிகளையும் ஆங்காங்கே ரசிக்க முடிகிறது. மற்ற ஹாலிவுட் படங்கள் போல் இப்படம் இருக்கும் என்று நம்பி சென்றால் ஏமாற்றமே...

    மொத்தத்தில் 'தி இம்மார்டல் வார்ஸ் ரீசர்ஜென்ஸ்' சுவாரஸ்யம் இல்லை.
    யுகன், நஜீனா நடிப்பில் விசி தண்டபாணி இயக்கத்தில் வெளியாக இருக்கும் கள்ளத்தனம் படத்தின் விமர்சனம்.
    நாயகன் யுகன், அக்ரிகல்ச்சர் படித்துவிட்டு ஊரில் மண்ணை ஆராய்ச்சி செய்து வருகிறார். இவர் சிறுவயதில் இருக்கும்போது, இவரது பெற்றோர்களை ஊரில் தாதாவாக இருப்பவர் ஓலைச்சுவடிக்காக கொன்றுவிடுகிறார்.

    அதுபோல் நாயகி நஜீனாவின் பெற்றோர்களையும் தாதா கொன்றுவிடுகிறார். வளர்ந்து பெரிய பெண்ணாக இருக்கும் நஜீனா, நாயகன் யுகனுடன் சேர்ந்து தாதாவை பழிவாங்க திட்டம் போடுகிறார். இதை அறிந்த தாதா இவர்களை கொல்ல நினைக்கிறார்.

    விமர்சனம்

    இறுதியில் நாயகன் யுகன் நாயகி நஜீனா இருவரும் தாதாவை பழி வாங்கினார்களா? நாயகன் நாயகியை தாதா கொன்றாரா? ஓலைச் சுவடியின் மரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் யுகனுக்கு கொஞ்சம் கூட நடிப்பு வரவில்லை. இவரின் முகபாவனைகள் வசனம் பேசுவதும் படத்திற்கு எடுபடவில்லை. நாயகி நஜீனாவின் நடிப்பை மன்னித்து விடலாம். தாதாவாக நடித்திருப்பவர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.

    விமர்சனம்

    கிராமத்து பின்னணியில் கதையை உருவாக்கிய இயக்குனர் விசி தண்டபாணி, எடுத்த விதத்திலும் திரைக்கதையிலும் தடுமாறியிருக்கிறார். தேவையற்ற காட்சிகள் படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது. அதுபோல் காமெடி என்னும் பெயரில் பார்ப்பவர்களை கடுப்பாகி இருக்கிறார்கள்.

    ரவிக்கிரணின் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. பின்னணியில் கவனம் செலுத்தி இருக்கலாம். அமர்நாத்தின் ஒளிப்பதிவில் தெளிவு இல்லை.

    மொத்தத்தில் 'கள்ளத்தனம்' கவரவில்லை.
    சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கெளதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள ‘பாவக் கதைகள்’ எனும் ஆந்தாலஜி படத்தின் விமர்சனம்.
    திரையுலகில் தற்போது ஆந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது. அந்தவகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக வலம் வரும் சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கெளதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் ‘பாவக் கதைகள்’. ஆணவக்கொலையை கதைக்கருவாக வைத்து இந்த நான்கு குறும்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளது.

    தங்கம்

    நாயகன் சாந்தனு இந்து மதத்தை சார்ந்தவர். இவரை முஸ்லிம் மதத்தை சார்ந்த திருநங்கையாக இருக்கும் காளிதாஸ் திருமணம் செய்ய நினைக்கிறார். ஆனால் சாந்தனு காளிதாசனை நண்பராக நினைத்து வருகிறார். மேலும் காளிதாசன் சகோதரி பவானி ஶ்ரீயை சாந்தனு காதலிக்கிறார். சாந்தனு - பவானி ஶ்ரீ இருவரின் காதலுக்கு காளிதாஸ் உதவ மறுக்கிறார். இறுதியில் சாந்தனுவின் காதல் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.

    பாவக் கதைகள்

    காளிதாஸ் நடிப்பு இப்படத்திற்கு பெரிய பலம். திருநங்கை கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். தமிழ் சினிமாவிற்கு கிடைத்த சிறந்த நடிகர் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு சிறப்பாக நடித்துள்ளார் காளிதாஸ். சாந்தனு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பவானி ஸ்ரீ குறைவான காட்சிகளே வந்தாலும் திறம்பட நடித்திருக்கிறார். 

    சிறிய காதல் கதையை திருநங்கை மூலமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா. சமூகத்தில் திருநங்கைகள் படும் அவலத்தை ஒளிவுமறைவின்றி காட்டியிருக்கிறார். நான் யாரையாச்சு இப்படி தொட்டா ஒண்ணு தப்பா நினைப்பாங்க... இல்லைன்னா தள்ளிப்போவாங்க... யாரும் என்னை இப்படி அன்பா கட்டிப்பிடிச்சது இல்ல தங்கம்" என்று காளிதாஸ் சொல்லும் காட்சி கண் கலங்க வைக்கிறது. 

    இந்தக்கதை 1980களில் நடப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜோமன் டி ஜானின் ஒளிப்பதிவு நம்மை அந்த காலகட்டத்திற்கே கொண்டு செல்கிறது. ஜஸ்டின் பிரபாகரின் பின்னணி இசை அற்புதம். தங்கமே தங்கம் பாடல் மனதை வருடிச் செல்கிறது

    லவ் பண்ண விட்டுடணும்

    கலப்புத் திருமணம் செய்துவைத்து அவர்களை ஆணவக்கொலை செய்து வருகிறார் பதம் குமார். ஜாதி வெறி பிடித்த இவருக்கு இரண்டு மகள்கள். இவர்கள் 2 பேரும் வெவ்வேறு ஜாதி உள்ளவர்களை காதலிக்கிறார்கள். ஆணவக்கொலை செய்து வரும் பதம் குமார் தன் மகளின் காதலை ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்பதே படத்தின் கதை.

    படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் அஞ்சலி. சந்தோஷம், மகிழ்ச்சி, கவர்ச்சி என நடிப்பில் கவர்ந்து இருக்கிறார் அஞ்சலி. தந்தையாக வரும் பதம் குமார், முதன்முதலில் நடித்தாலும் அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இவருக்கு அடியாளாக வரும் ஜாபர் சாதிக் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி கவனிக்க வைத்திருக்கிறார். கல்கி கோச்சலின் அட்டகாசமான நடிப்பு ரசிக்கும்படி உள்ளது.

    பாவக் கதைகள்

    விக்னேஷ் சிவன் இந்த கதையை இயக்கி இருக்கிறார். மகளையே கொல்லத் துணியும் தந்தை இறுதியில் அமைதியாக இருப்பது ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. கதாபாத்திரங்களை சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.

    தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைகிறது. அனிருத்தின் பின்னணி இசையும், இறுதியில் மகளுக்காக தந்தை எழுதும் மன்னிப்பு கடிதத்தை பாட்டாக பாடியுள்ள விதமும் சிறப்பு.

    வான் மகள்

    மனைவி சிம்ரன், ஒரு மகன், இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார் கௌதம் மேனன். வயதுக்கு வராத இவரது இரண்டாவது மகளை சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குகின்றனர். போலீசிடம் சென்றால் குடும்ப மானம் போய்விடும் எனத் தவிக்கும் அந்தக்குடும்பம், மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது யார் என்பதை எப்படி கண்டுபிடித்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

    தந்தையான கெளதம் மேனன் மதுரையிலும், ஒரு சென்னைக்காரராகவே வாழ்ந்திருக்கிறார். எந்தப் பதற்றமும் இல்லாத நடிப்பு. சிம்ரனின் கதாபாத்திரம் படத்திற்கு பெரிய பலம். அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

    பாவக் கதைகள்

    மகனாக வரும் ஆதித்யா பாஸ்கர் துணிச்சலாக நடித்துள்ளார், மகள்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். கௌதம் மேனன் இயக்கியிருக்கும் இப்படம், தன்னுடைய பாணியில் இருந்து முற்றிலும் வேறுவிதமாக இயக்கி இருக்கிறார்.

    கணேஷ் ராஜவேலுவின் நேர்த்தியான ஒளிப்பதிவு காட்சிக்கும் பலம் சேர்த்திருக்கிறது. கார்த்திக்கின் பின்னணி இசை திரைக்கதையோடு ஒன்றி பயணிக்க வைக்கிறது.

    ஓர் இரவு

    வேற்று ஜாதி இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொள்ளும் சாய்பல்லவி கணவருடன் பெங்களூருவுக்கு சென்றுவிடுகிறார். மகளின் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரகாஷ் ராஜ், மகள் கர்ப்பமாக இருப்பதை அறிந்ததும் மனம்மாறி பெங்களூருக்கு பார்க்க செல்கிறார். 

    மகளுக்கு வளைகாப்பு நடத்தப்போவதாக கூறி சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார். குடும்பத்தினரை நீண்ட நாட்களுக்கு பின் பார்த்ததும் பாச மழை பொழிகிறார் சாய் பல்லவி. இவ்வாறு மகிழ்ச்சியாக செல்லும் கதையில் சாதி வெறி பிடித்த பிரகாஷ் ராஜ் ஒரு அதிர்ச்சி கொடுக்கிறார். அது என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.

    பாவக் கதைகள்

    வெற்றிமாறன் இயக்கி இருக்கும் இப்படத்தில் ஆணவக்கொலையை வெளிப்படையாக காண்பித்திருக்கிறார்கள். காணும்போது பதற்றத்தை ஏற்படுத்துகிறது. தந்தையாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ், சாய் பல்லவியின் தந்தை - மகள் பாசம் பார்ப்போரை நெகிழ வைக்கின்றது. இறுதியில் பிரகாஷ் ராஜ் செய்யும் வேலைகளை பார்க்க மனதில் தைரியம் வேண்டும். கர்ப்பிணிப் பெண்ணாக வரும் சாய் பல்லவியின் நடிப்பு வேற லெவல். 

    சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவும், சிவாத்மிகாவின் பின்னணி இசையும்  படத்துக்கு பலம் சேர்த்துள்ளது. 

    ஆணவக் கொலைகளை மையமாக வைத்து 4 இயக்குனர்களும் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஆணவக்கொலையின் பயங்கரத்தை சொன்ன இயக்குனர்கள் அதற்கான தீர்வை சொல்லாதது வருத்தம்.

    மொத்தத்தில் ‘பாவக் கதைகள்’ பயங்கரம்.
    ஸ்ரீராம் ஆதித்யா இயக்கத்தில், நாகார்ஜூனா, நானி, சரத்குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் தேவதாஸ் படத்தின் விமர்சனம்.
    மருத்துவ படிப்பில் கோல்டு மெடல் வாங்கிய நானி, மருத்துவமனையில் வேலை பார்க்கிறார். அங்கு இருக்கும் டீனுக்கும் நானிக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால், அங்கிருந்து வெளியே வந்து சின்னதாக கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார்.

    மறுபக்கம், தாதாவாக இருக்கும் சரத்குமார் சிறுவயதில் நாகார்ஜூனாவை எடுத்து வளர்க்கிறார். இவர் சில காரணங்களால், ஊருக்கு வெளியே வளர்ந்து பெரிய ஆளாக மாறி டானாக இருக்கிறார். இந்நிலையில், உள்ளூர் தாதாக்கள் சரத்குமாரை கொன்று விடுகிறார்கள். இதனால் கோபமடையும் நாகார்ஜூனா, உள்ளூர் தாதாக்களை கொல்ல ஊருக்குள் வருகிறார்.

    விமர்சனம்

    அப்போது எதிர்பாராதவிதமாக காயங்கள் ஏற்பட, நானியின் மருத்துவமனையில் சிகிச்சைக்கு செல்கிறார். நாகார்ஜூனாவை பற்றி தெரிந்துக் கொள்ளும் நானி, அவரை மாற்ற முயற்சி செய்கிறார். இறுதியில் நாகார்ஜூனா, தனது தந்தை சரத்குமாரை கொன்றவர்களை கண்டுபிடுத்து கொன்றாரா? நாகார்ஜூனாவின் மனதை நானி மாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் டானாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் நாகார்ஜூனா. இவருடைய அலட்டல் இல்லாத நடிப்பு ரசிக்க வைக்கிறது. டாக்டராக வரும் நானி ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடித்திருக்கிறார். சரத்குமார் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகிகளாக வரும் அகன்ஷா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

    விமர்சனம்

    தெலுங்கில் வெளியான தேவதாஸ் திரைப்படம் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. டானும் டாக்டரும் இணைந்தால் எப்படி இருக்கும் என்பதை ரசிகர்கள் ரசிக்கும் விதமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீராம் ஆதித்யா. தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு டப் செய்திருக்கிறார்கள். மணி சர்மா இசையில் பாடல்கள் கேட்கும் தாளம் போட வைக்கிறது. சம்டத்தின் ஒளிப்பதிவு சிறப்பு.

    மொத்தத்தில் ‘தேவதாஸ்’ மாஸ்.
    ராஜ் கோகுல் தாஸ் இயக்கத்தில் ஜுபிலி ராஜன், சவந்திகா நடிப்பில் வெளியாகி இருக்கும் பியா படத்தின் விமர்சனம்.
    கல்லூரி நண்பர்கள் 5 பேர் காட்டுக்குள் சென்று டாக்குமெண்டரி எடுக்க திட்டமிடுகின்றனர். அவர்களில் ஒரு பெண்ணின் ஊர் கேரளா, தமிழ்நாடு எல்லையில் உள்ள வனப்பகுதி அருகே அமைந்துள்ளது. அங்கு சென்று டாக்குமெண்டரி எடுக்க திட்டமிட்டு, அங்குள்ள மர்மக்காட்டுக்கு செல்கின்றனர். 

    காட்டுக்குள் சென்றவர்கள் ஐந்து நாட்கள் ஆகியும் வெளியே வராததால், அவர்களை தேடி கண்டுபிடிக்க போலீசை அணுகுகின்றனர். அந்த மர்மக் காட்டில் பேய் இருப்பதாகவும், காட்டுக்குள் செல்பவர்கள் உயிரோடு வெளியே வரமாட்டார்கள் என்றும் சொல்லப்படுவதால், போலீசும் அங்கு செல்ல பயப்படுகின்றனர். 

    பியா விமர்சனம்

    இதனால் இந்த காட்டுக்குள் ஏற்கனவே சென்றுவந்த ஒருவனிடம் உதவி கேட்கின்றனர். அவனும் காட்டுக்குள் செல்ல சம்மதிக்கிறான். காட்டுக்குள் செல்லும் அவன் அவர்கள் ஐந்து பேரையும் கண்டுபிடித்தானா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் இயக்குனர் ராஜ் கோகுல் தாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். நாயகியாக சவந்திகா, மற்றொரு ஹீரோவான ஜுபிலி ராஜன் ஆகியோர் புதுமுகமாக இருந்தாலும், திறம்பட நடித்திருக்கிறார்கள். நண்பர்களாக வருபவர்கள் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.

    பியா விமர்சனம்

    படத்தின் இயக்குனர் ராஜ் கோகுல் தாஸ், படத்தின் திரைக்கதையை விறுவிறுப்பாக அமைத்துள்ளார். வில்லனை சஸ்பென்சாக வைத்திருந்து கிளைமாஸில் காட்டியுள்ள விதம் சிறப்பு. பேய் படம் என சொல்கிறார்கள், ஆனால் அவ்வளவாக பயம் வராதது படத்தின் மைனஸ். படத்தில் நிறைய இடங்களில் மலையாளத்தில் பேசியுள்ளதால் டப்பிங் படம் பார்ப்பதை போன்ற உணர்வு ஏற்படுகின்றது.

    சஜித் சங்கர் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசை மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். திருப்பதி ஆர். சுவாமியின் ஒளிப்பதிவை பாராட்டலாம். இரவு நேர காட்சிகள் அதிகம் உள்ள போதிலும் திறம்பட கையாண்டுள்ளார். 

    மொத்தத்தில் ‘பியா’ பயமில்லை.
    மலர்விழி நடேசன் இயக்கத்தில் ஆனந்த் நாக், காதல் சுகுமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘திருவாளர் பஞ்சாங்கம்’ படத்தின் விமர்சனம்.
    நாயகன் ஆனந்த் நாக், ஜோசியம், ஜாதகம், நல்ல நேரம் இவைகளின் மீது அதிகப்படியான நம்பிக்கை வைத்திருக்கிறான். தனக்கோ அல்லது தன் நண்பர்களுக்குக்கோ எதாவது பிரச்சினை என்றால், அதனை ஜோதிடம் மற்றும் நல்ல நேரம் போன்றவற்றை பார்த்து பயன்படுத்தி தீர்த்து கொள்கிறான்.

    ஒரு கட்டத்தில் நாயகனும், அவனது நண்பனும் எதிர்பாராத விதமாக ஒரு கொலை வழக்கில் சிக்குகிறார்கள். அதிலிருந்து அவன் எப்படி வெளியே வந்தான்?, அவன் கண்மூடித்தனமாக நம்பும் ஜோசியம் அவனுக்கு கை கொடுத்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    திருவாளர் பஞ்சாங்கம்

    நாயகன் ஆனந்த் நாக், இந்தக் காலத்துல இப்படி ஒரு பையனா என கேட்கும் அளவுக்கு சாமி பக்தி, ஜோசியம், நல்ல நேரம் கெட்ட நேரம் பாக்குறது என முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரேமம், நேரம், வெற்றிவேல் போன்ற படங்களில் சைடு ரோலில் நடித்துள்ள இவர், இப்படத்தில் நடனம், சண்டை என ஹீரோ கேரக்டருக்கு தன்னால் முடிந்தவரை உழைத்துள்ளார். இந்த படத்தில் ஹீரோவுக்கு ஜோடி யாரும் இல்லை.

    ஹீரோவின் நண்பராக நடித்துள்ள காதல் சுகுமார், அவ்வப்போது காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார். ஹீரோவுக்கு ஜோடி கொடுக்காத இயக்குனர், இவருக்கு ஹீரோயின் ரேஞ்சில் இருக்கும் ஒரு பெண்ணை ஜோடி சேர்த்துவிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

    திருவாளர் பஞ்சாங்கம்

    ஊர்வசி, சுதா, போலீஸ் அதிகாரியாக வரும் ஆடுகளம் நரேன் ஆகியோர் தங்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர். வில்லனாக நடித்துள்ள கவுதம், கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். 

    அறிமுக இயக்குனர் மலர்விழி நடேசன், முதல் படத்திலேயே வித்தியாசமான கதைகளத்தை கையாண்டுள்ளார். திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம். காட்சிகளின் நீளம் படத்திற்கு பின்னடைவாக அமைந்துள்ளது. காமெடி ஒர்க் அவுட் ஆகாதது படத்தின் மைனஸ். 

    திருவாளர் பஞ்சாங்கம்

    ஜேவி இசையமைத்துள்ளார். படத்தில் இரண்டே பாடல்கள் தான். அதுவும் சுமார் ரகம் தான். பின்னணி இசை ஓகே. காசி விஸ்வாவின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

    மொத்தத்தில் ‘திருவாளர் பஞ்சாங்கம்’ நல்ல முயற்சி.
    எபினேஷர் தேவராஜ், நீலிமா நடிப்பில் செல்வேந்திரன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் கருப்பங்காட்டு வலசு படத்தின் விமர்சனம்.
    கருப்பங்காட்டு வலசு கிராமம் வளர்ச்சியடையாமல் இருக்கிறது. சுமார் 200, 300 பேர் கொண்ட இந்த கிராமத்தை ஸ்மார்ட் வில்லேஜாக மாற்ற முயற்சி செய்கிறார் ஊர் தலைவரின் மகள் நீலிமா. சிசிடிவி கேமரா, கழிப்பறைகள் ஆகிய வசதிகளை செய்கிறார். இவர் செய்யும் இந்த முயற்சிக்கு ஊர் மக்கள் சிலரின் எதிர்ப்பும் கிளம்புகிறது.

    ஊர் மக்களின் மொத்த ஆதரவு கிடைத்தவுடன் திருவிழா நடத்துகிறார்கள். திருவிழா முடிந்த அன்று இரவு நான்கு பேர் மர்மான முறையில் இறக்கிறார்கள். நான்கு பேர் எப்படி இறந்தார்கள்? இதற்கு யார் காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    படத்தில் ஊர் தலைவரின் மகளாக வரும் நீலிமா, விவகாரத்து பெற்றதால் தன்னுடைய மனநிலையை சரிசெய்ய கிராமத்தை ஸ்மார்ட் வில்லேஜாக மாற்ற முயற்சி செய்யும் கதாபாத்திரம். அளவான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். கிராமத்தில் கூத்துகட்டும் எபினேஷர் தேவராஜ் நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    விமர்சனம்

     இவருடன் வரும் அரியா கொடுத்த வேலையை செய்திருக்கிறார். மாரி செல்லதுறையின் அனுபவ நடிப்பையும், ஜார்ஜ் விஜய் நெல்சன் அலட்டல் இல்லாத நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். மற்ற கதாபாத்திரங்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

    கிராமத்தில் நடக்கும் கொலை, அந்த கொலைக்கான காரணம், ஆணவ கொலை என பல விஷயங்களை சொல்லி இருக்கிறார் இயக்குனர் செல்வேந்திரன். ஆனால், திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாதது வருத்தம். பிற்பாதியில் வரும் நீண்ட காட்சிகள் படத்தின் வேகத்திற்கு தடையாக அமைந்துள்ளது. கிராமத்து கதையை திரில்லர் பாணியில் கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள்.

    விமர்சனம்

    ஆதித்யா-சூர்யாவின் இசை பல இடங்களில் ரசிப்பும், சில இடங்களில் இரைச்சலுமாக உள்ளது. ஷ்ரவன் சரவணனின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    மொத்தத்தில் ‘கருப்பங்காட்டு வலசு’ சுவாரஸ்யம் குறைவு.
    லொள்ளு சபா ஜீவா, திஷா பாண்டே, பாண்டியராஜன், சுவாமிநாதன் நடிப்பில் ஈ.இப்ராகிம் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் கொம்பு படத்தின் விமர்சனம்.
    நாயகன் ஜீவா, படம் இயக்கும் முயற்சியில் இருக்கிறார். பேய்களை பற்றி ஆராய்ச்சி செய்யும் திஷா பாண்டேவின் அறிமுகம் சித்தப்பா பாண்டியராஜன் மூலம் கிடைக்கிறது. திஷா செய்யும் ஆராய்ச்சி தன் கதைக்கு பயன்படுமே என்று அவருடன் பயணப்படுகிறார் ஜீவா. 

    ஜீவா, அவரது நண்பர் யோகேஸ்வரன், பாண்டியராஜன், திஷா பாண்டே, அவரது தோழி ஐவரும் கிராமத்துக்கு வருகின்றனர். அங்கு ஒரு வீட்டில் பேய் இருப்பதாக எல்லோரும் பயமுறுத்துகிறார்கள். அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. ஆவிகளை அடக்கி வைத்திருக்கும் கொம்பு பற்றியும் அதை எடுத்தவர்கள் மர்மமாக கொல்லப்பட்டதும் தெரிய வருகிறது. கொம்பின் பின்னணி என்ன? ஜீவா, திஷா பாண்டே உள்பட அனைவரும் ஆவிகளிடம் இருந்து தப்பித்தார்களா? என்பதே கதை.

    விமர்சனம்

    கொம்புக்குள் ஆவிகள் என்ற சுவாரசியமான கதையை காமெடி, காதல், கவர்ச்சி கலந்து இயக்குனர் இப்ராகிம் கொடுத்துள்ளார். குடும்பத்தோடு பார்த்து பயந்து, சிரித்து ரசித்து மகிழ ஏற்ற கமர்சியல் படமாக கொடுத்துள்ளார்.

    ஜீவாவுக்கு இது முக்கியமான படம். காமெடி கலந்து நடிப்பை கொடுத்து இருக்கிறார். இறுதி காட்சியில் கமர்சியல் நாயகனாக அவதாரம் எடுத்திருக்கிறார். நடனம், நடிப்பு, சண்டை என நாயகனுக்கான அனைத்து தகுதிகளும் இருக்கின்றன. திஷா பாண்டே வழக்கமான நாயகியாக அல்லாமல் கதையை நகர்த்துகிறார்.

    விமர்சனம்

    பாண்டியராஜன், கஞ்சா கருப்பு, சுவாமிநாதன், அம்பானி சங்கர், யோகேஸ்வரன் என காமெடி நடிகர்கள் தங்களால் முடிந்த வரை படத்தை சுவாரசியமாக்கி உள்ளார்கள். வில்லனாக வரும் எம்.பன்னீர்செல்வமும் தனது பங்களிப்பை கொடுத்துள்ளார்.

    தேவ்குருவின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. சுதீப்பின் ஒளிப்பதிவும் வண்ணமயம். கிரீசனின் படத்தொகுப்பு கச்சிதம்.

    மொத்தத்தில் 'கொம்பு' கூர்மை.
    ஆறுமுகசாமி இயக்கத்தில், பாண்டியன் சாசனா நடிப்பில் வெளியாகியிருக்கும் சூடு படத்தின் விமர்சனம்.
    நாயகன் பாண்டியன் திண்டுக்கல்லில் உள்ள கிராமத்தில் தாய், மனைவி, மகனுடன் வாழ்ந்து வருகிறார். விவசாயம் செய்து நல்ல முறையில் பணம் சம்பாதித்து குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறார். இந்நிலையில் ஒருவர் இவருடைய குடும்பத்தை அழிக்க முயற்சி செய்கிறார்.

    அவர் மூலம் மது போதைக்கு அடிமையாகும் பாண்டியன், மனைவி மற்றும் தொழிலை இழக்கிறார். இறுதியில் பாண்டியன் மது போதையில் இருந்து விடுபட்டு இழந்த சந்தோஷத்தை மீட்டு எடுத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

    விமர்சனம்

    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் பாண்டியன், நாயகியாக நடித்திருக்கும் சாசனா ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். புதுமுகங்கள் என்பதால் நடிப்பை அவர்களிடம் எதிர்பார்க்க முடியவில்லை.

    மதுபோதைக்கு அடிமையானால் அவர்களின் குடும்பம் எப்படி செல்லும் என்பதை படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஆறுமுகசாமி. அடுத்தடுத்த காட்சிகள் சம்பந்தம் இல்லாமலும், திரைக்கதை எதை நோக்கி செல்கிறது என்று தெரியாமலும் இருக்கிறது. இது போன்ற கதைகள் பல வந்திருந்தாலும், இப்படம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.

    விமர்சனம்

    ஆறுமுகசாமியின் இசையும் ரமேஷின் ஒளிப்பதிவும் படத்திற்கு வலு சேர்க்கவில்லை.

    மொத்தத்தில் 'சூடு' தாங்க முடியவில்லை.
    ×