என் மலர்tooltip icon

    தரவரிசை

    திலீப் குமார் இயக்கத்தில் மாதவன், ஷ்ரத்த ஸ்ரீநாத் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மாறா’ படத்தின் விமர்சனம்.
    நாயகி ஷ்ரத்தாவிற்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்கின்றனர். அது புடிக்காமல், தனக்கு வேலை இருப்பாதாக கூறிவிட்டு கேரளாவிற்கு செல்கிறார். செல்லும் இடத்தில், தங்க இடம் தேடி அலைகிறார். அப்போது சிறுவயதில் ஒருவர் தனக்கு சொன்ன கதை, அங்கு ஓவியமாக வரையப்பட்டுள்ளதை பார்த்து வியப்படைகிறார். 

    இறுதியாக நாயகன் மாதவன் உபயோகித்து வந்த வீட்டில் தங்குகிறார் ஷ்ரத்தா. அந்த வீட்டில் இருந்த ஒரு நோட்டு புத்தகத்தில் உண்மை கதை ஒன்று சித்திரமாக வரையப்பட்டிருக்கிறது. அதை ஷ்ரத்தா ஆவலுடன் படித்து வருகிறார். ஆனால் அந்த உண்மைக்கதை சித்திரம் ஓரிடத்தில் சஸ்பென்சாக நிற்க, அதன்பின் என்ன நடந்திருக்கும் என்கிற ஆவலில் மாதவனை கண்டுபிடிக்க கிளம்புகிறார் ஷ்ரத்தா. 

    மாறா

    மாதவன் தொடர்புடைய நபர்களை ஒவ்வொருவராக சந்திக்கும் ஷ்ரத்தா, அவர்கள் மூலம் கேள்விப்பட்ட விஷயங்களை வைத்து மாதவனின் மீது காதல் வயப்பட்டு இன்னும் தீவிரமாக தேடுகிறார். இறுதியில் ஷ்ரத்தா மாதவனை சந்தித்தாரா, அவரின் காதல் கைகூடியதா என்பதே படத்தின் மீதிக்கதை.

    மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சார்லி படத்தின் கதைக்கருவை கொண்டு மாறா படம் உருவாக்கப்பட்டுள்ளது. மாறாவாக நாயகன் மாதவன், தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பலரின் வாழ்வில் சந்தோஷத்தை ஏற்படுத்தும் மாறா கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.  

    மாறா

    நாயகி ஷ்ரத்தா அழகு, பதுமையுடன் நடிப்பில் மிளிர்கிறார். மாறாவின் சித்திரங்களை பார்க்கும்போது அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் அருமை. மற்றொரு கதாநாயகியான ஷிவதாவின் நடிப்பும் அற்புதம்.

    அலெக்ஸாண்டரின் காமெடி ஒர்க் அவுட் ஆகி இருப்பது படத்திற்கு பிளஸ். எம்.எஸ்.பாஸ்கர், கிஷோர், அப்புக்குட்டி, மவுலி, அபிராமி என படத்தில் ஏராளமான அனுபவ நடிகர்கள் நடித்திருக்கிறார். அவர்களின் பங்களிப்பு கதையின் நகர்வுக்கு பெரிதும் உதவி இருக்கிறது. நேர்த்தியாக நடித்துள்ளனர்.

    மாறா

    இயக்குனர் திலீப் குமார், சார்லி படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல் சில மாற்றங்களை செய்திருப்பதும் ரசிக்கும்படி உள்ளது. சார்லியை பார்த்து அசந்து போனவர்கள் கூட மாறாவை விரும்பி பார்க்கும் வகையில் படம் எடுத்திருக்கிறார். கதாபாத்திரங்களின் தேர்வு திறம்பட செய்திருக்கிறார். இரண்டாம் பாதியில் திரைக்கதையின் வேகத்தை கூட்டி இருக்கலாம். 

    கலை இயக்குனர் அஜயனின் பங்களிப்பு ஒவ்வொரு காட்சியிலும் பிரதீபலிக்கிறது. இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு உயிரோட்டமாக அமைந்துள்ளது. தினேஷ் கிருஷ்ணன் மற்றும் கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. 

    மொத்தத்தில் ‘மாறா’ மனதில் நிற்கிறார்.
    ராம்கோபால் வர்மா இயக்கத்தில் நாகார்ஜுனா நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் சிம்டாங்காரன் படத்தின் விமர்சனம்.
    மும்பையில் தொடர்ந்து என்கவுண்டர்கள் செய்து வருகிறார் போலீஸ் அதிகாரி அன்வர். இவர் செய்த என்கவுண்டர்கள் போலியானது என்று கருதி மும்பை உயர்நீதிமன்றம் விசாரணை கமிஷன் அமைகிறது.

    அவ்வழக்கை விசாரிக்க சென்னையை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான நாகார்ஜுனா நியமிக்கிறார்கள். நாகார்ஜுனாவின் விசாரணையில் அன்வர் பற்றிய பல உண்மைகள் தெரிய வருகிறது. அன்வரும் நாகார்ஜுனாவை விசாரிக்க விடாமல் தடுக்கிறார்.

    விமர்சனம்

    இறுதியில் அன்வர் பற்றிய விவரத்தை நாகார்ஜுனா கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    ஆக்ஷன் திரில்லர் படமாக 2018 ஆம் ஆண்டு ‘ஆபிசர்’ என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தற்போது ‘சிம்டாங்காரன்’ என்ற பெயரில் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியாகி உள்ளது.

    நாயகனாக நடித்திருக்கும் நாகார்ஜுனா, தனக்கே உரிய பாணியில் ஆக்சன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார். அவருக்கு மகளாக பேபி காவியா அறிமுகமாகி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மயிரா சரீன் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

    விமர்சனம்

     சுவாரசியமான திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் ராம் கோபால் வர்மா. அரசியல், சென்டிமெண்ட், ஆக்சன் கலந்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் அளவிற்கு இயக்கியிருக்கிறார்.

    ரவிசங்கர் இசையில் பாடல் அனைத்தும் ரசிக்கும் விதம். பரத் வியாஸ் மற்றும் ராகுல் ஆகியோரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

    மொத்தத்தில் சிம்டாங்காரன் சிறப்பானவன்.
    கார்த்தீஸ்வரன் இயக்கத்தில் அவரே நாயகனாகவும், காயத்ரி ரமா நாயகியாகவும் நடித்து வெளியாகியிருக்கும் பேய் இருக்க பயமேன் படத்தின் விமர்சனம்.
    நாயகன் கார்த்தீஸ்வரன் திரைப்பட இயக்குனர் ஆக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். ஆனால், இவரது தாய் திருமணம் செய்து வைக்கிறார். விருப்பம் இல்லாமல் நாயகி காயத்ரி ரமாவை திருமணம் செய்து கொள்கிறார் கார்த்தீஸ்வரன்.

    திருமணத்திற்கு பின்பு, பேய் இருக்கும் வீடு என்று தெரிந்து கார்த்தீஸ்வரன்- காயத்ரி ரமா இருவரும் ஹனிமூன் செல்கிறார்கள். அங்கு இருக்கும் பேய்கள் கார்த்தீஸ்வரன்- காயத்ரி ரமா இருவருக்கும் பல தொந்தரவு செய்கிறது.

    இறுதியில் அந்த வீட்டில் பேயாக இருப்பது யார்? எதற்காக பேயாக மாறினார்கள்? கார்த்தீஸ்வரன்- காயத்ரி ரமா இருவரும் பேயை எப்படி சமாளித்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    நாயகனாக நடித்திருக்கும் கார்த்தீஸ்வரனும், நாயகியாக நடித்திருக்கும் காயத்ரி ரமாவும் ஓரளவிற்கு நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். விருப்பம் இல்லாத திருமணத்தால், எலியும், பூனையுமாக சண்டை போட்டுக்கொள்ளும் காட்சி சில இடங்களில் ரசிக்க வைக்கிறது. கார்த்தீஸ்வரனின் காமெடி கலந்த நடிப்பு பெரியதாக எடுபடவில்லை.

    போலி சாமியார் கோதை சந்தானம், ஆவி ஆராய்ச்சியாளர் முத்துக்காளை, நிஜ சாமியார் நெல்லை சிவா, பேய்களாக நடித்திருக்கும் அர்ஜுன், நியதி ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். 

    விமர்சனம்

    ஹீரோவாக நடித்திருக்கும் கார்த்தீஸ்வரனே இப்படத்தை இயக்கி இருக்கிறார். பேய் படங்கள் என்றாலே, பழிவாங்குதல், பெரிய பிளாஷ்பேக் என்று வழக்கமான படங்கள் போல் இல்லாமல் வித்தியாசமான முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் கார்த்தீஸ்வரன். படத்தின் நீளத்தையும், தேவையற்ற காட்சிகளையும் குறைத்திருந்தால் ரசித்திருக்கலாம். 

    அபிமன்யுவின் ஒளிப்பதிவு சுமார் ரகம். ஜோஸ் பிராங்கிளின் இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    மொத்தத்தில் 'பேய் இருக்க பயமேன்' திகில் குறைவு.
    மம்முட்டி, ஆர்யா, சினேகா நடிப்பில் வெளியாகி இருக்கும் தி கிரேட் ஃபாதர் படத்தின் விமர்சனம்.
    மம்முட்டி, ஆர்யா நடிப்பில் மலையாளத்தில் வெளியான தி கிரேட் ஃபாதர் திரைப்படம் தற்போது தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது.

    நாயகன் மம்முட்டி பில்டராக இருக்கிறார். இவர் மனைவி சினேகா, மகள் அனிகா ஆகியோருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சைக்கோ மனிதன் ஒருவன் ஊரில் உள்ள சிறுமிகளை கற்பழித்து கொலை செய்து வருகிறான். இதை போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஆர்யா, விசாரித்து வருகிறார்.

    இந்நிலையில், மம்முட்டியின் மகளான அனிகாவை சைக்கோ மனிதன் கற்பழித்து விடுகிறான். இதை அறிந்த மம்முட்டி சைக்கோ மனிதனை கண்டுபிடித்து கொலை செய்ய நினைக்கிறார். அதே சமயம் ஆர்யாவும் சைக்கோ மனிதனை தேடுகிறார்.

    விமர்சனம்

    இறுதியில், சைக்கோ மனிதனை மம்முட்டி கண்டுபிடித்து கொலை செய்தாரா? ஆர்யா கைது செய்தாரா? சைக்கோ மனிதன் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகனாக நடித்திருக்கும் மம்முட்டி, முதல் பாதி பில்டராகவும், இரண்டாம் பாதி தாதாவாகவும் நடித்து அசத்தி இருக்கிறார். டாக்டராகவும் தாயாகவும் நடிப்பில் பளிச்சிடுகிறார் சினேகா. போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார் ஆர்யா. அனிகாவின் அலட்டல் இல்லாத நடிப்பு அருமை.

    விமர்சனம்

    கிரைம் திரில்லர் பாணியில் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஹனீப் அடேனி. அடுத்து என்ன நடக்கும், யார் குற்றத்தை செய்திருப்பார்கள் என்று திரைக்கதையில் சுவாரஸ்யத்தை கொடுத்திருக்கிறார். ஸ்லோ மோசன் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஸ்லோ மோசன் காட்சிகளை வைத்திருப்பது படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது. மலையாளத்தில் வெளியான இப்படத்தை தமிழில் டப் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள்.

    கோபி சுந்தர் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ரோபி வர்கீஸ் ராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

    மொத்தத்தில் தி கிரேட் ஃபாதர் விறுவிறுப்பு.
    விஜயேந்திர பிரசாத் இயக்கத்தில் நாகார்ஜுனா, சினேகா நடிப்பில் வெளியாகி இருக்கும் ராஜசிங்கம் படத்தின் விமர்சனம்.
    நாயகி சினேகா, உயிர் போகும் நிலையில் தன் குழந்தையை ஆற்றில் விடுகிறார். அந்தக் குழந்தையை எடுத்து வளர்க்கிறார் நாசர். குழந்தை 10 வயதான நிலையில், தனது தந்தை யார் என்ற விவரத்தை அறிய முயற்சி செய்கிறார். இதற்கிடையில் அந்த குழந்தையை கொல்ல ஒரு கும்பல் முயற்சி செய்கிறது.

    இறுதியில் அந்த குழந்தை தனது தந்தை யார் என்ற விவரத்தை அறிந்தாரா? குழந்தையை கொள்ள நினைப்பது யார்? காரணம் என்ன? என்பதே படத்தின் மீதி கதை.

    விமர்சனம்

    தெலுங்கில் கடந்த 2011ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ராஜன்னா திரைப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ராஜசிங்கம் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. சரித்திர படங்களுக்கு எப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் ராஜசிங்கம் திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

    பிரபல கதாசிரியரும், இயக்குநருமான விஜயேந்திர பிரசாத் ரசிகர்கள் கவரும் வகையில் இயக்கி இருக்கிறார். நாகார்ஜுனா நடிப்பில் மிரட்டி இருக்கிறார். சினேகாவின் அலட்டல் இல்லாத நடிப்பு ரசிக்க வைக்கிறது. சிறுமி ஆனியின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். இப்படத்திற்காக பல விருதுகளை இவர் பெற்றிருக்கிறார்.

    விமர்சனம்

     கீரவாணியின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. பின்னணி இசையிலும் கவர்ந்திருக்கிறார். ஷ்யாம் கே நாயுடு, அனில் பந்தாரி, கன்று பூர்ணா ஆகியோரின் ஒளிப்பதிவை பாராட்டலாம்.

     மொத்தத்தில் ராஜசிங்கம் பிரம்மாண்டம்.
    மனு பார்த்திபன் இயக்கத்தில் மொட்டை ராஜேந்திரன், மோனிகா கொட்லா நடிப்பில் வெளியாகி இருக்கும் டைம் அப் படத்தின் விமர்சனம்.
    நாயகன் மனு பார்த்திபன், ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது தாயின் கட்டாயத்தின் பெயரில் சொம்பு சாமியாராக இருக்கும் லொள்ளு சபா மனோகரை சந்திக்க செல்கிறார். அங்கு வருபவர்கள் அனைவரும் சொம்பை நக்கி விட்டு செல்கிறார்கள். ஆனால், மனு பார்த்திபன் சொம்பை நக்காமல் செல்கிறார்.

    ஒரு நாள் மொட்டை ராஜேந்திரன், மனு பார்த்திபனின் கனவில் வந்து, நீ முப்பது நாட்களில் இறக்க போகிறாய் என்று கூறுகிறார். இதைக் கேட்டு பயப்படும் மனு பார்த்திபன், பரிகாரம் சொல்லுங்கள் செய்கிறேன் என்று கேட்கிறார். அதற்கு மொட்டை ராஜேந்திரனும் மூன்று பரிகாரங்கள் செய்ய சொல்கிறார்.

    விமர்சனம்

    இறுதியில் மொட்டை ராஜேந்திரன் செய்ய சொன்ன பரிகாரங்கள் என்ன? பரிகாரம் செய்து முப்பது நாட்களை மனு பார்த்திபன் கடந்தாரா? இல்லை இறந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    பேண்டஸி காமெடி ஜானர்ல படத்தை இயக்கி நடித்திருக்கிறார் மனு பார்த்திபன். ஓரளவிற்கு ரசிகர்கள் ரசிக்கும்படி படத்தை இயக்கி இருக்கிறார். நடிப்பிலும் கவனம் பெற்றிருக்கிறார் மனு பார்த்திபன். முதல் படம் என்று தெரியாதளவிற்கு இயக்கி நடித்திருக்கிறார். சிறிய கதையை, பெரிய திரைப்படமாக எடுத்திருக்கிறார்.

    விமர்சனம்

    நாயகியாக மோனிகா கொட்லா கொடுத்த வேலையை செய்திருக்கிறார். மாடர்ன் எமனாக வந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் மொட்டை ராஜேந்திரன். இவரது நடிப்பும் கெட்டப்பும் படத்திற்கு பலம். பல இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார்.

    எல்.ஜி.பாலாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். தீபன் சக்ரவர்த்தியின் பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்கலாம். கனிராஜனின் ஒளிப்பதிவு சிறப்பு.

    மொத்தத்தில் ‘டைம் அப்’ குட் டைம்.
    நேசமானவன் இயக்கத்தில் ஜிஜி, கமலி நடிப்பில் வெளியாகி இருக்கும் வாங்க படம் பார்க்கலாம் படத்தின் விமர்சனம்.
    நாயகன் ஜிஜி, தனது அண்ணன், அண்ணியுடன் வாழ்ந்து வருகிறார். ஹீரோவாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார் ஜிஜி. ஒரு கோடி ரூபாய் கொடுங்க நான் படத்தில் நடிச்சு ஹீரோ ஆயிடுறேன் என்று அவர் தனது அண்ணனிடம் கூறுகிறார். ஆனால் இவரது அண்ணனுக்கு அதில் உடன்பாடு இல்லாததால், ஜிஜியை வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்துகிறார். 

    அண்ணன் ஒத்துழைக்காததால், அவர் ஒரு குழுவுடன் இணைந்து படம் எடுக்க முடிவு செய்கிறார். அதற்காக ஹீரோயின் தேர்வு செய்யும்போது நாயகி கமலியை சந்திக்கும் நாயகன், அவர் மீது காதல் வயப்படுகிறார்.

     நாயகன் ஜீஜியின் காதலை கமலி ஏற்றாரா? இல்லையா? இதையடுத்து இவர்கள் படம் எடுத்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. 

    ஜிஜி

    நாயகன் ஜிஜிக்கு இது அறிமுக படம். முதல் படத்திலேயே நடனம், ஆக்ஷன், ரொமான்ஸ் என அனைத்தையும் முயற்சித்திருக்கிறார். இதில் எதுவுமே அவருக்கு கைகொடுக்கவில்லை. நாயகி கமலி கொடுத்த வேலையை கசித்தமாக செய்திருக்கிறார். லிவிங்ஸ்டன் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.  

    இயக்குனர் நேசமானவன் சின்ன கதையை 2 மணிநேரம் படமாக்க  வேண்டுமே என்று இடையிடையே காமெடி டிராக், குத்து பாடல் என எங்கெங்கோ கொண்டுபோய் இருக்கிறார். காமெடி எதுவும் ஒர்க்அவுட் ஆகாதது படத்தின் மைனஸ். கதாபாத்திரங்களின் தேர்வில் கவனம் செலுத்தி இருக்கலாம். 

    வினோத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம் தான். ரா ஆனந்தின் ஒளிப்பதிவில் தெளிவில்லை. 

    மொத்தத்தில் ‛வாங்க படம் பார்க்கலாம்’ சுமார்.
    ஆர்.சம்பத் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில் வெளியாகி இருக்கும் மந்திர பலகை படத்தின் விமர்சனம்.
    7 பேர் நட்புடன் ஜாலியாக பழகி வருகின்றனர். அவரிகளில் ஒரு பெண் புதிதாக ஒரு வீட்டுக்கு குடிபெயர்கிறார். உதவிக்காக ஒரு தோழியையும் அழைத்து செல்கிறார். புதிதாக செல்லும் வீட்டில் ஒரு மந்திர பலகை இருக்கிறது. அதனை எடுப்பவர்கள் அதில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றினால் தான் எந்தவிதமான வில்லங்கத்திலும் சிக்காமல் இருப்பர்.

    அதை பெரிதாக பொருட்படுத்திக் கொள்ளாத அந்த பெண், விளையாட்டுத்தனமாக அந்தப் பலகையை திறந்ததால் இறந்துவிடுகிறார். இந்தப்பலகையை பற்றி அறிந்த மற்றோரு பெண் ஒருவர் தனது தோழிகளுடன் சேர்ந்து அந்த பலகையை திறக்கின்றார். 

    அதில் கொடுக்கப்பட்ட விதிமுறைகளை சரியாக பின்பற்றும் அவர்கள் இறுதியில் பலகையை மூடும் போது மந்திரத்தை சொல்லாமல் மூடி விடுகின்றனர். இதனால் அவர்களுக்கு என்ன ஆனது? அந்த மாய பலகையின் பிடியில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    மந்திர பலகை

    படத்தில் நடித்தவர்கள் புதுமுகங்கள் என்பது அவர்களது நடிப்பிலேயே தெரிகிறது. பேய் படம் என சொல்கிறார்கள் ஆனால் ஒரு இடத்தில் கூட பயம் வராதது படத்தின் மைனஸ். 

    திகில் படத்தை கொடுக்க முயன்றுள்ள இயக்குனர், திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். கதாபாத்திரங்கள் தேர்வில் கவனம் செலுத்தி இருக்கலாம். பின்னணி இசை சுத்தமாக எடுபடவில்லை. மகிபாலனின் ஒளிப்பதிவு குறைந்த பட்ஜெட் படம் என்பதை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

    மொத்தத்தில் ‘மந்திர பலகை’ பயமில்லை.
    ஸ்டான்லி டாங் இயக்கத்தில் ஜாக்கி சான், மியா முகி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வேன்கார்ட்’ படத்தின் விமர்சனம்.
    ஜாக்கிசான் ‘வேன்கார்ட்’ என்கிற செக்யூரிட்டி கம்பெனியை நடத்தி வருகிறார். விஐபி-களுக்கு பாதுகாப்பு அளிப்பதே இந்த செக்யூரிட்டி கம்பெனியின் முக்கியமான பணி. அந்த வகையில் தொழில்முனை போட்டி காரணமாக தொழிலதிபர் ஒருவரின் மகளை வில்லன் கடத்தி விடுகிறார். அந்த தொழிலதிபர், வேன்கார்ட் செக்யூரிட்டி கம்பெனியின் உதவியை நாடுகிறார்.

    தொழிலதிபரின் மகளை காப்பாற்ற தனது குழுவினருடன் ஜாக்கிசான் களத்தில் இறங்குகிறார். இறுதியில் வில்லனிடம் இருந்து தொழிலதிபரின் மகளை பத்திரமாக ஜாக்கிசான் மீட்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    வேன்கார்ட்

    வழக்கமாக பறந்து பறந்து எதிரிகளை துவம்சம் செய்து ஒவ்வொரு காட்சியிலும் அதகளப்படுத்தும் ஜாக்கிசானை பார்த்து பழக்கப்பட்ட நமக்கு இந்த படத்தில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அவருக்கு படத்தில் ஸ்டண்ட் காட்சிகள் மிகவும் குறைவாகவே வைத்துள்ளனர். 

    ஜாக்கிசானுக்கு வயதான காரணத்தால் பெரியளவில் அனல்பறக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் இல்லை. இருப்பினும் ஸ்டைலிஷான வேடத்தில் வந்து நம்மை கவர்கிறார். ஜாக்கிசானுடன் நடித்துள்ள மியா முகி, யாங் யாங் ஆகியோர் திறம்பட நடித்திருக்கிறார்கள். 

    வேன்கார்ட்

    இயக்குனர் ஸ்டான்லி டாங் இப்படத்தை இயக்கியுள்ளார். கிராபிக்ஸ் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய மைனசாக அமைந்துள்ளது. கிராபிக்ஸ் காட்சிகளில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் என்றே தோனுகிறது. 

    படத்தின் மிகப்பெரிய பலம் லீ-யின் ஒளிப்பதிவு. ஒவ்வொரு காட்சியையும் கலர்புல்லாக காட்சிபடுத்தி உள்ளார். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் இவரின் ஒளிப்பதிவு வேற லெவல். பின்னணி இசையும் கதையின் விறுவிறுப்புக்கு வலுசேர்த்திருக்கிறது.  

    மொத்தத்தில் ‘வேன்கார்ட்’ ஜாக்கிசான் ரசிகர்களுக்கு ஏமாற்றமே.
    கவுரிசங்கர் இயக்கத்தில் கூல் சுரேஷ், கோபிகா நாயர் நடிப்பில் வெளியாகி இருக்கும் சித்திரமே சொல்லடி படத்தின் விமர்சனம்.
    மகாநதி சங்கர் டிராவல் ஏஜென்ஸி நடத்தி வருகிறார். இவரின் மகளான நாயகி கோபிகா, தங்கள் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணின் மகளுடன் நட்பாக பழகி வருகிறார். நாளடைவில் மகாநதி சங்கர் அந்தப் பெண்ணை தத்தெடுத்து வளர்க்கிறார். நாயகி கோபிகாவை, போலீஸ் அதிகாரியாக வரும் கூல் சுரேஷ் காதலிக்கிறார்.

    இது ஒருபுறம் இருக்க, தனது டிராவல் ஏஜென்சிக்கும் வரும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருகிறார் மகாநதி சங்கர். அப்படி ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றபோது, அந்தப்பெண் இறந்துவிடுகிறது. அதை யாருக்கும் தெரியாமல் மறைக்க முயற்சிக்கிறார் சங்கர்.

    சித்திரமே சொல்லடி

    அந்தப் பெண் மரணமடைந்தது போலீசுக்கு தெரியவர, போலீஸ் அதிகாரியாக வரும் நாயகன் கூல் சுரேஷ் யார் இந்த கொலையை செய்தது என்பதை கண்டுபிடிக்க தீவிர விசாரணையில் இறங்குகிறார். இறுதியில் மகாநதி சங்கர் போலீசிடம் பிடிபட்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    இந்தப் படத்தில் நாயகனாக கூல் சுரேஷ் நடித்துள்ளார். ஏராளமான படங்களில் அவரை காமெடி வேடங்களில் பார்த்ததால், இப்படத்தில் அவர் சீரியஸான வசனம் பேசினாலும் காமெடியாகவே தெரிகிறது. போலீஸ் வேடம் அவருக்கு சுத்தமாக எடுபடவில்லை. ஹீரோயினாக வரும் கோபிகா நாயர் அழகு பதுமையுடன், துணிச்சலான பெண்ணாக நடித்து கவனிக்க வைக்கிறார்.

    சித்திரமே சொல்லடி

    வில்லனாக நடித்துள்ள மகாநதி சங்கர் தன் பங்கிற்கு மிரட்டியுள்ளார். தெனாலி, தேனி முருகன், விஜய் கணேசன், சங்கர், புளோரண்ட் பெரேரா, சுமதி, அஞ்சலி ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர். 

    பொது இடங்களில் பெண்கள் சந்திக்கும் இன்னல்களை காட்ட முயற்சித்துள்ள இயக்குனர், திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். கதாபாத்திரங்கள் தேர்விலும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    சித்திரமே சொல்லடி

    அதிஷ் உத்ரியன் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். மகிபாலனின் ஒளிப்பதிவு, சிறு பட்ஜெட் படம் என்பதை அப்பட்டமாக காட்டுகிறது.

    மொத்தத்தில் ‘சித்திரமே சொல்லடி’ சோபிக்கவில்லை.
    சுந்தரபாண்டிய ராஜா, ஜோதிஷா நடிப்பில் சுல்தான் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் தப்பா யோசிக்காதீங்க படத்தின் விமர்சனம்.
    நாயகன் சுந்தரபாண்டிய ராஜா, செய்யாத தவறுக்காக வேலையை இழக்கிறார். சுமார் ஆறு மாத காலமாக வீட்டிலேயே இருக்கும் சுந்தரபாண்டிய ராஜா, வீட்டில் மதிப்பை இழக்கிறார். இவரது மனைவியான ஜோதிஷா வேலைக்குச் செல்வதால், வீட்டு வேலைகளை சுந்தரபாண்டிய ராஜாவை செய்ய சொல்கிறார்.

    குடும்பப் பெண்கள் வீட்டில் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்யும் சுந்தரபாண்டிய ராஜாவின் வாழ்க்கை என்ன ஆனது? மீண்டும் வேலைக்குச் சென்றாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சுந்தரபாண்டிய ராஜா, பெண்கள் வீட்டில் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்து காண்பித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஜோதிஷா, கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

    வேலைக்குச் செல்லும் மனைவி, வீட்டில் இருக்கும் கணவன் இவற்றை மையமாக வைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சுல்தான். படத்தின் தலைப்புக்கும் கதைக்கும் சம்மந்தம் இல்லாமல் இருக்கிறது. மனைவி வேலைக்குச் சென்றவுடன் வீட்டில் இருக்கும் கணவன் துணி துவைப்பது, சமைப்பது, பாத்திரம் கழுவுவது அன்றாட நபர்களை சந்திப்பது என்று ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களை திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறார். ஆனால் சுவாரசியமில்லாமல் திரைக்கதை நகர்வது படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது. தேவையில்லாத காட்சிகளால் திரைக்கதையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 

    விமர்சனம்

     பெண் இசையமைப்பாளர் ஸ்டெர்லின் நித்யா இப்படத்தில் அறிமுகமாகியிருக்கிறார். இவரது இசை அதிக கவனம் ஏற்படுத்தவில்லை. எஸ்ஆர் வெற்றியின் ஒளிப்பதிவு தெளிவு இல்லை.

    மொத்தத்தில் 'தப்பா யோசிக்காதீங்க' தேவையற்றது.
    பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ஒரு பக்க கதை படத்தின் விமர்சனம்.
    நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படம் மூலம் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் அசாதாரண சூழ்நிலை ஏற்படும் போது, சுற்றியுள்ள உலகம் அதை எவ்வாறு உணர்கிறது என்பதையும் அதன் மூலம் ஏற்படும் சவால்களையும் சுவாரசியமாக சொல்லி கவனம் ஈர்த்தவர் பாலாஜி தரணிதரன். ஒரு பக்க கதை படத்திலும் அதேபோன்ற களத்தை ஆனால் வித்தியாசமான கதையுடன் கொடுத்து அசத்தி இருக்கிறார்.

    படம் தொடங்கும்போதே ஸ்ரீமத் பாகவத புராண கதையுடன் தொடங்குகிறது. அதிலேயே படத்தின் மையக்கருவை விளக்கிவிடுகிறார்.
    நடுத்தர வர்க்க குடும்பங்களை சேர்ந்த இளைஞர்கள் காளிதாஸ் ஜெயராமும் மேகா ஆகாசும். இருவரும் பள்ளிக்காலத்தில் இருந்தே நண்பர்கள். காதலர்களாகவும் மாறுகிறார்கள். இருவரது காதலையும் அவர்களது குடும்பங்கள் ஏற்றுக்கொள்கின்றன. காளிதாஸ் அரியர்களை முடித்துவிட்டு வேலைக்கு சேர்ந்ததும் திருமணம் செய்துவைப்பதாக உறுதி கூறுகிறார்கள். 

    விமர்சனம்

    இந்நிலையில் மேகா ஆகாஷ் கர்ப்பமாகிறார். காளிதாசுடன் இணையாமலேயே மேகா ஆகாஷ் கர்ப்பமானது எப்படி? இது அறிவியலா? ஆன்மீகமா? மூட நம்பிக்கையா? இன்னும் பல கேள்விகளுக்கு சுவாரசியமாக பதில் தருகிறது படம்.

    சற்று பிசகினாலும் ஆபாசமாகி விடும் ஒரு கதைக்களத்தை கையில் எடுத்து அதில் சிறிதுகூட ஆபாசம் இல்லாமல் குடும்பத்துடன் பார்த்து சிரித்து ரசிக்கும் படமாக இயக்குனர் பாலாஜி தரணிதரன் கொடுத்து இருக்கிறார். படம் தொடங்கியது முதல் இறுதிக்காட்சி வரை நம்மை படத்துடன் பின்னி பிணைத்து ரசிக்க வைக்கிறார். முக்கிய காட்சிகளை வசனங்கள் இல்லாமல் காட்சிமொழி மூலம் உணர்த்தும்போது பாலாஜியின் திறமை பளிச்சிடுகிறது. 

    விமர்சனம்

    மேகா ஆகாஷ் கர்ப்பமானதை வீட்டில் சொல்லும் காட்சி அதற்கு உதாரணம்.
    காளிதாஸ் ஜெயராமும் மேகா ஆகாசும் பாலாஜி தரணிதரனின் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர். எந்த காட்சியிலும் நடிகர்களாக தெரியவே இல்லை. இரு தரப்பு பெற்றோர்களும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு பொருந்துகிறார்கள். கடவுளாக மாறும் அந்த குழந்தையும் சிறப்பான நடிப்பு.

    கோவிந்த் வசந்தாவின் இசை படத்துக்கு விறுவிறுப்பை கூட்டி இருக்கிறது. பிரேம்குமாரின் ஒளிப்பதிவும் படத்துக்கு வண்ணம் கூட்டியுள்ளது. பாலாஜி தரணிதரனுடன் இணைந்து திரைக்கதை, வசனம் எழுதிய மரியாவும் பாராட்டப்பட வேண்டியவர்.

    விமர்சனம்

    நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் எப்போது பார்த்தாலும் சிரித்து ரசிக்க வைக்கும் படம். அதே போன்ற ஒரு அற்புத படைப்பை ஒரு பக்க கதை மூலம் கொடுத்து மீண்டும் தன்னை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் பாலாஜி தரணிதரன்.

    மொத்தத்தில் 'ஒரு பக்க கதை' சுவாரஸ்யம்.
    ×