என் மலர்tooltip icon

    தரவரிசை

    மகேஷ் ராவ் இயக்கத்தில் யஷ், ராதிகா பண்டிட் நடிப்பில் வெளியாகி இருக்கும் சூர்யவம்சி படத்தின் விமர்சனம்.
    தப்புனா தட்டி கேட்கும் குணமுடைய நாயகன் யஷ், அப்பா, அம்மா, தங்கையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். மறுபுறம் வில்லன் ஷ்யாம், தாதாவான அவர், தன்னை யார் பகைத்துக் கொண்டாலும் அவர்களை கொல்லாமல் விடமாட்டார். 

    நாயகன் யஷுக்கு நாயகி உடனான முதல் சந்திப்பே மோதலில் தான் ஆரம்பிக்கிறது. பின்னர் போகப்போக அது காதலாக மாறுகிறது. நாயகி ராதிகா பண்டிட்டை யஷ் காதலிக்க ஆரம்பிக்கிறார். அந்த சமயத்தில் தான், நாயகி ராதிகா, வில்லன் ஷியாமின் முறைப்பெண் என்பதும், அவர்கள் இருவருக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதும் யஷுக்கு தெரிய வருகிறது. 

    சூர்யவம்சி விமர்சனம்

    பின்னர் நாயகியின் மனதை மாற்ற முயற்சிக்கிறார் யஷ். இறுதியில் யஷ், ராதிகாவின் மனதை மாற்றினாரா? ராதிகாவுக்கு யாருடன் திருமணம் நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

    கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படத்தை தற்போது தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். கே.ஜி.எப் படம் வருவதற்கு முன்னர் யஷ் நடித்த படம் என்பதால், ஆளே வித்தியாசமாக தெரிகிறார். காதலியை திருமணம் செய்ய அவர் செய்யும் முயற்சிகள் ரசிக்க வைக்கின்றன. ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார்.

    சூர்யவம்சி விமர்சனம்

    நாயகியாக வரும் ராதிகா பண்டிட், இவர் நாயகன் யஷின் மனைவி, இப்படத்திற்கு பின்னர் தான் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். படத்திலும் அவர்களின் கெமிஸ்ட்ரி நன்கு ஒர்க் அவுட் ஆகி உள்ளது. ஷ்யாம், கோர்ட் சூட் என ஸ்டைலிஷ் வில்லனாக வந்து மிரட்டுகிறார். 

    யஷுக்கு டப்பிங் குரல் சுத்தமாக எடுபடாதது படத்திற்கு பின்னடைவு. இயக்குனர் மகேஷ் ராவ், திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். இரண்டாம் பாதியில் இருந்த திரைக்கதை வேகம், முதல் பாதியில் இல்லாதது படத்திற்கு மைனஸ்.

    சூர்யவம்சி விமர்சனம்

    பெண் இசையமைப்பாளர் வாணி ஹரிகிருஷ்ணா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பின்னணி இசை ஓகே. பாடல்கள் சுமார் ரகம் தான். ஆண்ட்ரூவின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு விறுவிறுப்பை கூட்டி உள்ளது.

    மொத்தத்தில் ‘சூர்யவம்சி’ வேகம் குறைவு.
    தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் ஹாலிவுட் படமான மான்ஸ்டர் ஹன்டர் திரைப்படத்தின் விமர்சனம்.
    அமெரிக்கா ராணுவ கேப்டனான இருக்கும் நாயகி மிலா ஜோவோவிச், காணாமல்போன சில வீரர்களைத் தேடி ஒரு பாலைவனப் பகுதியில் ரோந்து செல்கிறாள். அப்போது ஏற்படும் ஒரு மணல் புயலில் சிக்கி, வேறு ஒரு உலகத்திற்குள் சென்று விடுகிறாள்.

    விமர்சனம்

    அங்கே இருக்கும் விசித்திரமான சில ராட்சச ஜந்துகள்தான் வீரர்கள் காணாமல் போனதற்குக் காரணம் என்பதை தெரிந்துக் கொள்கிறார். அந்த உலகில் நாயகன் டோனி ஜாவும் ஏற்கனவே சிக்கி இருக்கிறார். இவர்கள் இருவரும் ராட்சச ஜந்துகளை சமாளித்து அந்த உலகத்தில் இருந்து வெளியேறினார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.

    மிலா ஜோவோவிச்சின் ஆக்ஷன் அவ்வப்போது படத்தை ரசிக்க வைக்கிறது. இது தவிர, ஆக்ஷன் காட்சி ரசிகர்களுக்கென டோனி ஜாவும் இருக்கிறார். இவர்களின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

    விமர்சனம்

    இயக்குனர் பவுல் ஆண்டர்சன் புதிய உலகம், அதில் நடக்கும் சண்டை, என கதையை அமைத்திருக்கிறார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. மெதுவாக செல்லும் திரைக்கதை படத்திற்கு பலவீனம். சில இடங்களில் காட்சிகள் நீளமாகவும், இன்னும் ஏதோ ஒன்று குறைகிறது என்னும் எதிர்பார்ப்பும் ஏற்படுகிறது.

    விமர்சனம்

    கிராபிக்ஸ் காட்சிகளுக்கு ஏற்ப கிளென் மேக்பெர்சன் ஒளிப்பதிவும் பவுல் ஹஸ்லிங்கர் பின்னணி இசையும் அற்புதமாகவே அமைக்கப்பட்டுள்ளன. 

    மொத்தத்தில் 'மான்ஸ்டர் ஹன்டர்' ஆறுதல்.
    ரவி தேஜா ஸ்ருதிஹாசன் சமுத்திரகனி வரலட்சுமி நடிப்பில் வெளியாகியிருக்கும் க்ராக் படத்தின் விமர்சனம்.
    போலீஸ் அதிகாரியாக இருக்கும் நாயகன் ரவி தேஜா நாயகி ஸ்ருதிஹாசனை காதலித்து திருமணம் செய்துகொண்டு குழந்தையுடன் வாழ்ந்துவருகிறார். இதே ஊரில் பெரிய தாதாவாக இருக்கிறார் சமுத்திரகனி. இவர் தனது ஒரே மகளை கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் தனது மகளை போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காதலிப்பதை அறிந்த சமுத்திரக்கனி அவரை கொலை செய்து விடுகிறார். போலீசை கொலை செய்த சமுத்திரக்கனிக்கு எதிராக களம் இறங்குகிறார் ரவி தேஜா.

    விமர்சனம்

    இறுதியில் சமுத்திரக்கனிக்கு ரவிதேஜா தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ரவிதேஜா, போலீஸ் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஆக்ஷன் ரொமான்ஸ் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஸ்ருதிஹாசன் வழக்கமான கதாநாயகி போல் இல்லாமல் ஆக்ஷனில் கலக்கி இருக்கிறார். இவருக்கான திருப்பம் ரசிக்கும்படி உள்ளது.

    தாதாவாக வரும் சமுத்திரகனி தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். இவருக்கு வலது கையாக வரும் வரலட்சுமி சரத்குமார் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி, வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.

    விமர்சனம்

    தாதா - போலீஸ் இடையேயான ஆக்சனை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கோபிசந்த் மலினேனி. தெலுங்கில் உருவான இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. கிளைக்கதைகள் திருப்பங்கள் என திரைக்கதையில் சுவாரஸ்யத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். 

    ஜிகே விஷ்ணுவின் ஒளிப்பதிவும் தமனின் இசையும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது. 

    மொத்தத்தில் 'க்ராக்' ஆக்ஷன் விருந்து.
    அனு மற்றும் சக்தி சிவன் நடித்து இயக்கி இருக்கும் ஆட்கள் தேவை படத்தின் விமர்சனம்.
    புகைப்பட கலைஞராக இருக்கும் நாயகன் சக்தி சிவன், நாயகி அனுவை காதலித்து வருகிறார். இவர்கள் வசிக்கும் ஊரில் முக்கிய பிரமுகர்களாக இருக்கும் 4 பேர், பெண்களை கடத்தி, போதை மருந்தை கொடுத்து பாலியல் கொடுமைகள் செய்கிறார்கள். தொலைந்து போகும் பெண்களை பற்றி போலீசில் புகாரும் வருகிறது. பெண்கள் வீடு திரும்பிய பிறகு அவமானம் என்று கருதி புகாரை திரும்ப பெற்றுக் கொள்கிறார்கள்.

    இந்நிலையில், நாயகி அனுவை கடத்து கிறார்கள். இதையறிந்த சக்தி சிவன் போலீசாக இருக்கும் லொள்ளுசபா ஜீவாவிடம் சொல்லுகிறார். அவர் இது போன்று புகார்கள் நிறைய வந்து வாபஸ் பெற்றிருக்கிறது என்று கூறுகிறார். இதை கேட்ட சக்தி சிவனிடம் ஜீவாவிடம் அந்த கேஸ் பற்றிய விவரங்களை பெற்றுக் கொண்டு அனுவை காப்பாற்ற முயற்சி செய்கிறார்.

    விமர்சனம்

    இறுதியில் நாயகியை அனுவை நாயகன் சக்தி சிவன் காப்பாற்றினாரா? ஊரில் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சக்தி சிவன், பெரிய குறை சொல்லாத அளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரே இப்படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். பெண்களை கடத்தி பாலியல் கொடுமை செய்யும் படங்கள் இதற்கு முன் வெளியாகி இருந்தாலும் இப்படம் கொஞ்சம் வேறுபட்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை திரைக்கதையில் கொடுத்திருக்கிறார். ஆனால், லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம்.

    விமர்சனம்

    நாயகியாக வரும் அனு கொடுத்த வேலையை அழகாக செய்திருக்கிறார். போலீசாக வரும் ஜீவாவிற்கு அதிகம் வேலையில்லை. தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார் மைம் கோபி.

    கார்த்திக் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையும் கவனிக்க வைக்கிறது. சுரேஷ் குமார் சுந்தரத்தின் ஒளிப்பதிவு ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    மொத்தத்தில் ‘ஆட்கள் தேவை’ சுவாரஸ்யம் குறைவு.
    ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகி இருக்கும் களத்தில் சந்திப்போம் படத்தின் விமர்சனம்.
    ஜீவாவும் அருள்நிதியும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் ராதாரவி நடத்தி வரும் பைனாஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள். ஜீவாவுக்கு திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை. அருள்நிதி திருமணத்தை வெறுப்பவர்.

    ஒரு கட்டத்தில் அருள்நிதியை கட்டாயப்படுத்தி மாமா மகள் மஞ்சிமா மோகனை திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்கிறார்கள். ஆனால், ஜீவா விளையாட்டிற்கு ஒரு இடத்தில் சொன்ன பொய்யால் அருள்நிதி திருமணம் நடக்காமல் போகிறது. திருமணம் நின்றதற்கு நான்தான் காரணம் என்று வருந்தி, மஞ்சிமாவை ஏமாற்றி அருள்நிதிக்கு திருமணம் செய்ய முயற்சி செய்கிறார்.

    விமர்சனம்

    ஆனால், அருள்நிதி திருமணம் செய்ய மறுக்கிறார். இதனால் ஜீவா - அருள்நிதி இருவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் அருள்நிதி திருமணம் செய்ய மறுக்க காரணம் என்ன? மஞ்சிமாவின் வாழ்க்கை என்ன ஆனது? ஜீவா - அருள்நிதி இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நண்பர்களாக இருக்கும் ஜீவா, அருள்நிதி இருவருமே கதாபாத்திரத்திற்கு பொருந்தி இருக்கிறார்கள். குறும்பு, கிண்டல், நக்கல் என நடிப்பில் அசத்தி இருக்கிறார் ஜீவா. சண்டை, அடக்கம், அப்பாவி முகம் என அருள்நிதி அதகளப்படுத்தி இருக்கிறார். கபடி போட்டிகளில் இருவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

    விமர்சனம்

    அருள்நிதியின் மாமா மகளாக வரும் மஞ்சிமா மோகன், ஆர்ப்பாட்டம் இல்லாத அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார். சின்ன சின்ன முகபாவனைகளில் கூட கவனிக்க வைத்திருக்கிறார். மற்றொரு நாயகி பிரியா பவானி சங்கர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். திரையில் குறைவாக வந்தாலும் நிறைவான நடிப்பு. 

    பைனான்ஸ் கம்பெனி நடத்தும் ராதாரவி, வழக்கம் போல் அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். காமெடியிலும் கலக்கி இருக்கிறார். இருவருக்கு மட்டுமில்லாமல் படத்திற்கும் பெரிய பலமாக ரோபோ சங்கர், பால சரவணன் நடிப்பு அமைந்திருக்கிறது. ஆடுகளம் நரேன், இளவரசு, ரேணுகா அகியோரின் நடிப்பு கச்சிதம்.

    விமர்சனம்

    யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இரண்டு பாடல்கள் மீண்டும் கேட்க வைக்கிறது. பின்னணி இசையில் ஓரளவிற்கு ஸ்கோர் செய்திருக்கிறார். அபினந்தன் ராமானுஜம் காரைக்குடியின் அழகை குறைவில்லாமல் காட்டியிருக்கிறார். 

    நண்பர்கள், அவர்களின் காதல், திருமணம், கலாட்டா என குடும்பங்கள் ரசிக்கும் விதமாக படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜசேகர். இரண்டு நாயகர்களுக்கும் சமமான வேடம், காட்சிகள் கொடுத்து சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். எதிர்பார்க்காத இடங்களில் கூட காமெடி வைத்து திரைக்கதையை சிறப்பாக நகர்த்தியதற்கு பாராட்டுகள்.

    மொத்தத்தில் ‘களத்தில் சந்திப்போம்’ காமெடி களம்.
    பிரவீன், சுனைனா நடிப்பில் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ட்ரிப் படத்தின் விமர்சனம்.
    ஒரு ஜோடி காரில் காட்டுப்பகுதிக்குள் செல்லும் போது மர்ம மனிதர்கள் வழிமறித்து கொலை செய்கிறார்கள். அதே காட்டுப்பகுதிக்கு நாயகன் பிரவீன், நாயகி சுனைனா மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் சுற்றுலா செல்கிறார்கள். அப்போது வழியில் இரத்தக்கரையில் இருக்கும் யோகிபாபு, கருணாகரனை பார்த்து பயப்படுகிறார்கள்.

    அன்று இரவு யோகி பாபு, கருணாகரனிடம் சுனைனா சிக்க, அவரை காட்டு பங்களாவிற்குள் தூக்கி சென்றுவிடுகிறார்கள். சுனைனாவை தேடி வரும் நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படுகிறார்கள்.

    விமர்சனம்

    இறுதியில் சுனைனாவை நண்பர்கள் அனைவரும் காப்பாற்றினார்களா? நண்பர்களை கொலை செய்தது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகனாக நடித்திருக்கும் பிரவீன் புதுமுகம் என்று தெரியாதளவிற்கு நடித்திருக்கிறார். சுனைனாவை காப்பாற்ற நினைக்கும் போதும், நண்பர்களை இழக்கும் போதும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக லிடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுனைனா, துறுதுறு பெண்ணாக நடித்து கவர்ந்திருக்கிறார். நண்பர்களாக வரும் கல்லூரி வினோத், விஜே சித்து, ராகேஷ், லக்‌ஷ்மி பிரியா, ஜெனிபர் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    விமர்சனம்

    படத்திற்கு பெரிய பலம் யோகி பாபு. இவரது டைமிங் காமெடி பல இடங்களில் ரசிக்க வைத்திருக்கிறது. சீரியசான நேரங்களில் கூட கலகலப்பை கொடுத்திருக்கிறார். இவருடன் பயணிக்கும் கருணாகரன் தனக்கே உரிய பாணியில் காமெடிக்கு கைக்கொடுத்து இருக்கிறார். போலீசாக 2 காட்சிகளில் மட்டும் வந்து சென்றிருக்கிறார் மொட்டை ராஜேந்திரன்.

    சுற்றுலா செல்லும் நண்பர்கள் காட்டுக்குள் சிக்கும் பல படங்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால், இந்த படம் முற்றிலும் வேறு மாதிரியான படத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத். முதல் பாதி கலகலப்பாகவும், இரண்டாம் பாதி திரில்லருடன் கலகலப்பையும் கொடுத்து இருக்கிறார். குறிப்பாக கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். இறுதியில் வரும் மனிதர்களின் நடிப்பை கொஞ்சம் ஏற்கும்படி கொடுத்திருக்கலாம்.

    விமர்சனம்

    சித்துகுமாரின் இசையையும், உதயஷங்கரின் ஒளிப்பதிவும் படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. பின்னணியில் இசையும் கவனிக்க வைக்கிறது.

    மொத்தத்தில் ‘ட்ரிப்’ சிறந்த பயணம்.
    பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயப்பிரகாஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கபடதாரி படத்தின் விமர்சனம்.
    போக்குவரத்துக் காவல்துறை அதிகாரியாக இருக்கிறார் நாயகன் சிபிராஜ். இவர் பணி செய்யும் எல்லைக்குட்பட்ட பகுதியில் மெட்ரோ பாலத்துக்கு அடியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட 3 பேரின் மண்டை ஓடுகளும், எலும்புகளும் கண்டெடுக்கப்படுகின்றன. தன் கட்டுப்பாட்டுப் பகுதியில் இது நடந்திருப்பதால் கிரைம் பிரிவு ஆய்வாளரிடம் தன்னையும் இந்த வழக்கை விசாரிக்கும் குழுவில் சேர்த்துக்கொள்ள கேட்கிறார். ஆய்வாளர் மறுக்க, தன்னுடைய ஆர்வத்தில் ரிஸ்க் எடுத்து கொலை பற்றிய தகவல்களைச் சேகரிக்கிறார்.

    இந்த கேஸ் விஷயத்தில் குழப்பம் அடையும் சிபிராஜுக்கு ஒரு கட்டத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. இறுதியில் இறந்த 3 பேர் யார்? அவர்கள் எப்படி இறந்தார்கள் என்ற உண்மையை சிபிராஜ் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    நாயகனாக நடித்திருக்கும் சிபிராஜ் கம்பீரமான காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். கிரைம் வழக்கு மீதான ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் காட்டுவது என கதாபாத்திரத்துக்கு வலு சேர்த்திருக்கிறார். ஆனால், இவரது நடிப்பில் ஏதோ ஒன்று குறைவது போல் படம் முழுக்க தோன்றுகிறது. நாயகியாக நடித்திருக்கும் நந்திதா ஸ்வேதாவுக்கு டூயட், காதல் காட்சிகள் இல்லை. கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்.

    படத்திற்கு மற்றொரு கதாநாயகனாக வருகிறார் நாசர். தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அதுபோல் ஜெயப்பிரகாஷின் நடிப்பும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. வில்லனாக சம்பத் மைத்ரேயா நடித்துள்ளார். இவரது நடிப்பும் படத்துடன் ஒட்டாதது போல் இருக்கிறது. நடிகை ரம்யாவாக வரும் சுமன் ரங்கநாதன், சாய் தீனா, ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், தனஞ்ஜெயன் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

    விமர்சனம்

    கன்னடத்தில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கவலுதாரி’என்ற கிரைம் திரில்லர் படத்தை தமிழில் ‘கபடதாரி’ எனும் பெயரில் ரீமேக் செய்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. ‘சைத்தான்’,‘சத்யா’படங்களுக்குப் பிறகு அவர் இயக்கியுள்ள மூன்றாவது படம் இது. கொலை அதன் பின்னணியில் இருக்கும் மர்மம் என திரைக்கதையை அழகாக நகர்த்தி இருக்கிறார். ஆனால், ஒரு கட்டத்தில் திரைக்கதையின் சுவாரஸ்யம் குறைகிறது. ஒரு சில இடங்களில் லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம்.

    கிரைம் திரில்லர் படத்துக்கு தேவையான இசையை கொடுத்து இருக்கிறார் இசையமைப்பாளர் சைமன் கே.கிங். இவரது பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. ஒளிப்பதிவில் வித்தியாசம் காண்பித்து கவனிக்க வைத்திருக்கிறார் ராசாமதி.

    மொத்தத்தில் ‘கபடதாரி’ கவனம் குறைவு.
    லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன் நடிப்பில் வெளியாகி இருக்கும் பூமி படத்தின் விமர்சனம்.
    நாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று மனிதர்கள் வாழ முடியுமா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேறு கிரகத்துக்கு சென்று வர மூன்று வருடங்கள் ஆகும் என்பதால், அதற்கு முன்பாக சொந்த ஊருக்கு செல்கிறார்.

    அங்கு விவசாய நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரித்து வருவதை அறிந்து அதற்காக குரல் கொடுக்கிறார். மேலும் நாசாவில் பயன்படுத்தபடும் யுக்தியை சொந்த ஊரில் செயல்படுத்த முயற்சி செய்கிறார். இதையறிந்த நாசா, ஊரைவிட்டு வருமாறு அழைப்பு கொடுக்கிறார்கள். 

    பூமி விமர்சனம்

    நாசாவின் அழைப்பை ஏற்காத ஜெயம் ரவி, உள்ளூரிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இடையே பகையை ஏற்படுத்திக் கொள்கிறார். இறுதியில் ஜெயம் ரவி, மீண்டும் நாசா சென்றாரா? கார்ப்பரேட் நிறுவனங்கள் இடையே சண்டை போட்டு விவசாய நிலங்களை மீட்டுக் கொடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    கதாநாயகனாக நடித்திருக்கும் ஜெயம் ரவி, படம் முழுவதும் உணர்ச்சிகரமாக வருகிறார். இவர் பேசும் வசனங்களும் உடல்மொழியும் ரசிக்க வைக்கிறது. இவரின் கோபம் பார்ப்பவர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கிறது. ஜெயம் ரவியின் முக்கியமான படங்களில் இதுவும் ஒன்று என்றே சொல்லலாம்.

    நாயகியாக நடித்திருக்கும் நிதி அகர்வால் வழக்கமான கதாநாயகி போல் பாடல் மற்றும் ஒரு சில காட்சிகளில் வந்து செல்கிறார். ஜெயம் ரவியின் அம்மாவாக வரும் சரண்யா பொன்வண்ணன் நடிப்பு யதார்த்தம். கலெக்டர் ஜான் விஜய், விவசாயி தம்பி ராமையா, அரசியல்வாதி ராதாரவி ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

    பூமி விமர்சனம்

    படத்தின் வில்லனாக ரோனித் ராய். பல தமிழ்ப் படங்களில் இதற்கு முன்பு பார்த்த அதே கார்ப்பரேட் அதிபர்தான். ஆனால், நடிப்பில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார். 

    விவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் என்று கதையை உருவாக்கி இயக்குனர் லட்சுமண். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயி கடனால் துன்பத்திற்குள்ளாகும் நிஜமான ஒரு பிரச்சனையை இப்படம் பேசுகிறது. விவசாயத்தின் சிறப்பு, அதற்கு எதிரான சதி என்று பேசும் வசனங்கள் சிறப்பு.   

    இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பு. குறிப்பாக தமிழன் என்று சொல்லடா பாடல் அதை உருவாக்கிய விதமும் சிறப்பு. பின்னணியில் கவனிக்க வைத்திருக்கிறார். டுட்லியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

    மொத்தத்தில் பூமி செழிப்பு. 
    சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா நடிப்பில் வெளியாகி இருக்கும் ஈஸ்வரன் படத்தின் விமர்சனம்.
    கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் பாரதிராஜா. இவரது பராமரிப்பாளர் சிம்பு. பாரதிராஜாவின் பிள்ளைகள் சென்னையில் வசித்து வருகிறார்கள். இவர்கள் சில வருடங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு வருகிறார்கள்.

    அப்போது ஜோசியர் காளி வெங்கட், இன்னும் சில நாட்களில் பாரதிராஜா குடும்பத்தில் ஒரு உயிர் பிரிய போகிறது என்று கூறுகிறார். அதே சமயம் வில்லன், பாரதிராஜா குடும்பத்தை அழிக்க முயற்சி செய்து வருகிறார்.

    விமர்சனம்

    இறுதியில் நாயகன் சிம்பு, வில்லனிடம் இருந்து பாரதிராஜா குடும்பத்தை காப்பாற்றினாரா? பாரதிராஜா குடும்பத்தை வில்லன் அழிக்க காரணம் என்ன? ஜோசியர் சொன்னது போல் பாரதிராஜா குடும்பத்தில் உயிர் பலி ஏற்பட்டதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகனாக ஈஸ்வரன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் சிம்பு. இவரது நடிப்பை பல படங்களில் நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் இந்த படத்தில் முழுமையான சிம்பு நடிப்பை பார்க்க முடியவில்லை. ஓரளவிற்கு மட்டுமே ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்து இருக்கிறார்.

    விமர்சனம்

    நாயகியாக வரும் நிதி அகர்வாலின் நடிப்பு செயற்கை தனமாக இருக்கிறது. மற்றொரு நாயகியாக வரும் நந்திதா, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பெரியசாமி கதாபாத்திரத்தில் நடித்து பளிச்சிடுகிறார் பாரதிராஜா. இவருடைய அனுபவ நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. பால சரவணனின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். காமெடியில் கலக்கி இருக்கிறார். 

    கிராமத்து பின்னணியில் குறுகிய நாட்களில் படத்தை இயக்கி இருக்கிறார் சுசீந்திரன். புதுமையான யோசனைகள், ஆனால் பயனற்ற திருப்பங்கள் படத்தின் ஓட்டத்தை பாதிக்கிறது. சிம்புக்கு காட்சிகள் குறைவாகவே உள்ளது. அதிக நேரம் பாரதிராஜாதான் திரையில் தோன்றுகிறார். சிம்புவின் நடிப்பு திறனை இயக்குனர் சுசீந்திரன் முழுமையாக உபயோகப் படுத்தவில்லை என்று தோன்றுகிறது. சண்டைக் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    விமர்சனம்

    தமன் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. பின்னணி இசை படத்திற்கு பலம். திருவின் ஒளிப்பதிவு கச்சிதம். கிராமத்து அழகை அழகாக காண்பித்து இருக்கிறார்.

    மொத்தத்தில் ஈஸ்வரன் சாதாரணமானவன்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் விமர்சனம்.
    மதுவுக்கு அடிமையாக இருக்கும் இளம் பேராசிரியரான விஜய், ஒரு கல்லூரியில் பணியாற்றுகிறார். அங்கு ஏற்படும் ஒரு பிரச்சனையால் அவர் கல்லூரியில் இருந்து வெளியேறுகிறார். பின்னர் சிறுவர் சீர்திருத்த பள்ளி ஒன்றில் வாத்தியாராக நியமிக்கப்படுகிறார். 

    அந்தப் பள்ளியை  விஜய்சேதுபதி தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அங்கு இருக்கும் சிறுவர்களை, நடிகர் விஜய் சேதுபதி தனது சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார். இதனால் விஜய்க்கும், விஜய்சேதுபதிக்கு இடையே மோதல் ஏற்படுகிறது. அத்துமீறும் விஜய் சேதுபதியை விஜய் எப்படி அடக்குகிறார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

    மாஸ்டர்

    நடிகர் விஜய் ஜே.டி. எனும் வாத்தியாராக நடித்திருக்கிறார். மாஸான வாத்தியாக வந்து ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்கிறார். மற்ற படத்தில் பார்த்த விஜய் போல் இல்லாமல் இதில் புதுவிதமாக தெரிகிறார். வாத்தி கம்மிங் பாடலில் விஜய்யின் நடனம் வேற லெவல். 

    கடந்த சில ஆண்டுகளாகவே மது அருந்தும் காட்சிகளையும் புகைபிடிக்கும் காட்சிகளையும் தவிர்த்து வந்த விஜய் இந்த படத்தில் மதுவுக்கு அடிமையானவராக வருகிறார். ஆனால் சில காட்சிகளிலேயே அதன் ஆபத்துகளை உணர்த்துவதுடன் மதுவுக்கு அடிமையானவர்கள் மீண்டு வந்தால் சமூகத்துக்கு எப்படி பங்காற்ற முடியும் என்பதையும் விளக்கி இருப்பது அருமையான கருத்து.

    விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட படம். அது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. தன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உணர்ந்து முழு படத்தையும் தன் தோள்களில் தாங்கி இருக்கிறார். படம் முழுக்க விஜய்யின் ராஜ்ஜியம் தான்.

    நாயகி மாளவிகா மோகனன், அழகு, பதுமையுடன் அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வழக்கமான நாயகியாக அல்லாமல் விஜய்யின் மாற்றத்துக்கு காரணமானவராக வந்து நடிப்பிலும் அசத்துகிறார்.

    மாஸ்டர்

    பவானியாக வரும் விஜய் சேதுபதி. கொடூர வில்லனாக வந்து மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தில் விஜய்க்கு இணையாக இவருக்கும் காட்சிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அதிகம் பேசாமல் அவர் செய்யும் வில்லத்தனம் ரசிக்க வைக்கிறது. விஜய்யுடன் மோதும் காட்சிகளில் தானும் ஒரு மாஸ் ஹீரோ என்பதை உணர்த்துகிறார். 

    இவருக்கு பக்கபலமாக இருக்கும் அர்ஜுன் தாஸின் நடிப்பும் அற்புதம். இளம் வயது விஜய் சேதுபதியாக வரும் மாஸ்டர் மகேந்திரன், தோற்றத்திலும் நடிப்பிலும் வித்தியாசம் காட்டி இருக்கிறார்.

    மாஸ்டர்

    மேலும் சாந்தனு, கவுரி கிஷான், தீனா, ஆண்ட்ரியா, விஜே ரம்யா ஆகியோர் சிறிது நேரமே வந்தாலும், அவர்கள் வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளன. படம் 3 மணி நேரம் ஓடினாலும் எந்த காட்சியிலுமே போரடிக்காமல் விறுவிறுப்பாக நகர்கிறது. ஆங்காங்கே வரும் ஒரு வரி காமெடி பன்ச் வசனங்கள் கைதட்டி ரசிக்க வைக்கின்றன. பூவையாரின் கதாபாத்திரத்தை சிறப்பாக வடிவமைத்துள்ளனர்.

    இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய், விஜய் சேதுபதி என இரண்டு மாஸ் ஹீரோக்களை வைத்து படத்தை திறம்பட கையாண்டுள்ளார். விஜய்க்கு இணையாக விஜய் சேதுபதிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ள விதம் சிறப்பு. விஜய் ரசிகர்களுக்கான சில காட்சிகளை அமைத்திருந்தாலும், பெரும்பாலும் தனது ஸ்டைலில் தான் படத்தை நகர்த்தி இருக்கிறார் லோகேஷ். 

    மாஸ்டர்

    இசை மற்றும் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. அனிருத் இசையில் ஏற்கனவே பாடல்கள் வெளியாகி ஹிட்டான நிலையில், அதை காட்சிப்படுத்தியுள்ள விதம் பிரமாதம். அனிருத்தின் பின்னணி இசை படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.

    அதேபோல் சத்யன் சூரியனின் ஒளிப்பதிவில், ஒவ்வொரு காட்சியும் கண்களுக்கு விருந்தாக அமைகிறது. குறிப்பாக ஸ்டண்ட் காட்சிகளில் இவரின் ஒளிப்பதிவு அட்டகாசம். படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் அனைத்தும் மாஸாக எடுத்துள்ளனர். மெட்ரோ சீன் ஆகட்டும், விஜய், விஜய் சேதுபதி மோதும் காட்சி ஆகட்டும் விறுவிறுப்பாக காட்சிப்படுத்தி உள்ளவிதம் சிறப்பு.

    3 மணி நேர படம் எந்த இடத்திலும் சலிப்பே இல்லாமல் செல்ல பிலோமின் ராஜின் படத்தொகுப்பு முக்கிய காரணம்.ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார். சரியாக எங்கே தொடங்கி எங்கே முடிக்க வேண்டும் என்று கச்சிதமாக வெட்டி இருக்கிறார். 

    மொத்தத்தில் ‘மாஸ்டர்’ மாஸ்.
    ஸ்ரீ சாய் எம்.கே.செல்வம் இயக்கத்தில், ஜிப்ஸி குமார், ஹேமா நடிப்பில் வெளியாகியிருக்கும் பச்சைக்கிளி படத்தின் விமர்சனம்.
    கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் ஜிப்ஸி குமார், முறைப்பெண்ணாக இருக்கும் நாயகி ஹேமாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசையுடன் இருக்கிறார். ஆனால் ஹேமா ஒருவரை காதலித்து வருகிறார். காதலர் வெளியூர் சென்ற நேரம் பார்த்து ஹேமாவை ஜிப்ஸி குமாருக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.

    ஊர் திரும்பிய காதலர் ஹேமாவை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார். இறுதியில் ஹேமா, கணவரை விட்டு காதலனுடன் சென்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜிப்ஸி குமார் இதற்கு முன் இயக்குனராக இருந்தவர். தற்போது இப்படத்தின் மூலம் நாயகனாக மாறி இருக்கிறார். தன்னால் முடிந்த அளவிற்கு நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். பச்சைக்கிளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹேமாவிற்கு நடிப்பு சுத்தமாக வரவில்லை. 

    கிராமத்து பின்னணியில் காதலா உறவா என்ற கோணத்தில் திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீ சாய் எம்.கே.செல்வம். ஆனால் திரைக்கதையில் தெளிவு இல்லாததால் திரைப்படம் பலவீனமாக அமைந்துள்ளது. கதாப்பாத்திரங்களிடையே வேலை வாங்க மறந்து இருக்கிறார். 

    விமர்சனம்

    செல்வாநம்பி இசையில் பாடல்கள் சுமார் ரகம். ஏ.எஸ்.உதயசங்கரின் ஒளிப்பதிவு அதிகம் எடுபடவில்லை.

    மொத்தத்தில் 'பச்சைக்கிளி' பழைய கிளி.
    டாவின்சி சரவணன் இயக்கத்தில் ராகவ், லூதியா நடிப்பில் வெளியாகியிருக்கும் வி படத்தின் விமர்சனம்.
    வசதியான ஐந்து நண்பர்கள் தனது காதலிகளுடன் பைக்கில் சுற்றுலா செல்கிறார்கள். இதில் நாயகன் ராகவ்வின் காதலி லூதியா, ஒரு புதிய ஆப் இருப்பதாகவும் அதில் பிறந்த தேதியை பதிவு செய்தால் இறப்பு தேதியை தெரிவிக்கும் என்றும் கூறுகிறார்.

    இதை நம்ப மறுக்கும் நண்பர்கள் ஒரு கட்டத்தில் அனைவருடைய பிறந்த தேதியும் பதிவு செய்கிறார்கள். அப்போது அனைவரும் ஒரே நாளில் இறக்க இருப்பதாக அதில் காண்பிக்கிறது. இதைக் கண்டு அதிர்ச்சி அடையும் நண்பர்களுக்கு சில அமானுஷ்ய சம்பவங்களும், நண்பர்களின் இறப்புகளும் ஏற்படுகிறது.

    விமர்சனம்

    இறுதியில் அந்த ஆப் - பில் இருப்பது போல் அனைவரும் இருந்தார்களா? இல்லையா? எதனால் அவர்களுக்கு இப்படி நடக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    சின்னத்திரையில் நடித்து வந்த ராகவ் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து பளிச்சிடுகிறார். நாயகியாக நடித்திருக்கும் லூதியா மற்றும் நண்பர்கள் அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    விமர்சனம்

    சஸ்பென்ஸ் திரில்லர் கதையை இயக்கியிருக்கிறார் இயக்குனர் டாவின்சி சரவணன். அடுத்தடுத்து என்ன நடக்கும், எப்படி நடக்கும், எதனால் நடக்கும் என்று விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார் இயக்குனர். முதல்பாதியில் பைக் ஓட்டும் காட்சியே அதிகம் இருப்பதால் படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது. முதல் பாதியில் உள்ள பலவீனம் இரண்டாம்பாதியில் பலமாக அமைந்துள்ளது.

    இளங்கோ கலைவாணன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணியில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்கள். அனில் கே சாமியின் ஒளிப்பதிவு ரசிக்கும்படி உள்ளது.

    மொத்தத்தில் 'வி' வித்தியாசம்.
    ×