என் மலர்tooltip icon

    தரவரிசை

    மீரான், மேக்னா நடிப்பில் ராம்தேவ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் பழகிய நாட்கள் படத்தின் விமர்சனம்.
    நாயகன் மீரானும், நாயகி மேக்னாவும் ஒரே பள்ளியில் படித்து வருகிறார்கள். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வருகிறார்கள். இவர்களின் காதல் இருவரது பெற்றோர்களுக்கும் தெரியவருகிறது. இவர்களை கண்டித்து இருவரையும் பிரிக்கவும் முயல்கின்றனர்.

    ஆனால் அது முடியாமல் போகிறது. பின்னர் இருவரும் நன்றாக படித்து பெரியாளாக மாறுங்கள் நாங்களே திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறுகிறார்கள். இதை மனதில் வைத்து நாயகி மேக்னா படிப்பில் கவனம் செலுத்தி டாக்டராக மாறுகிறார். ஆனால், மீரான் படிப்பில் கவனம் செலுத்தாமல் குடிகாரனாக மாறுகிறார்.

    விமர்சனம்

    இறுதியில் மீரானின் காதலை மேக்னா ஏற்றுக் கொண்டாரா? அல்லது மீரானை திருத்தினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகன் மீரான் பள்ளி மாணவன் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். இரண்டாம் பாதியில் வித்தியாசமான நடிப்பை கொடுத்து கவர்ந்திருக்கிறார். நாயகி மேக்னா பல சின்ன பட்ஜெட் படங்களில் நாயகியாக நடித்தவர். பல படங்களில் நடித்த அனுபவம் இங்கே அவருக்கு கைக்கொடுத்திருக்கிறது. பள்ளியில் காதல்வயப்பட்டு பேசுவதும்.. காதலரைத் திருத்த முயற்சித்து தோல்வியடைந்து.. விரக்தியின் உச்சத்தில் நின்று பேசுவதும் என சில காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார். மேலும் நாயகன் மற்றும் நாயகியின் பெற்றோர்களாக நடித்தவர்கள் தங்களது பதை, பதைப்பை உணர்ந்து காட்டியிருக்கிறார்கள்.

    விமர்சனம்

    இளம் வயதில் ஏற்படும் காதல் அவர்களின் வாழ்வில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்..? என்பதை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ராம்தேவ். பள்ளிப் பருவக் காதலால் வரும் ஈர்ப்பைவிட பக்குவப்பட்ட வயதில் ஏற்படும் காதல்தான் சிறந்தது என்பதை புரியும்படியாக செல்லியிருக்கிறார். சில காட்சிகளை குறிப்பால் உணர்த்தியிருக்கிறார் இயக்குனர் ராம்தேவ். நாயகியின் குடும்பத்தினர் திட்டமிட்டு செய்யும் செயலை ரசிக்க வைத்திருக்கிறார். முதலில் மெதுவாக செல்லும் திரைக்கதை, பின்னர் படத்துடன் பார்ப்பவர்களை ஒன்ற வைக்கிறது.

    விமர்சனம்

    பிலிப் விஜயக்குமாரின் ஒளிப்பதிவை வித்தியாசம் பார்க்க முடியாமல் ரசிக்க முடிந்திருக்கிறது. ஜான் ஏ. அலெக்ஸிஸ் - ஷேக் மீரா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக செந்தில் கணேஷ் பாடியிருக்கும் பாடல் இதமாக இருக்கிறது.

    மொத்தத்தில் ‘பழகிய நாட்கள்’ பார்க்கலாம்.
    டிம் ஸ்டோரி இயக்கத்தில் க்லோய் கிரேஸ், மைக்கேல் பெனா நடிப்பில் வெளியாகி இருக்கும் டாம் அண்ட் ஜெர்ரி படத்தின் விமர்சனம்.
    ஒரு மிகப்பெரிய நட்சத்திர ஓட்டலில் ஆடம்பர திருமணம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த தருணத்தில் படத்தின் நாயகி க்லோய் கிரேஸ், அந்த நட்சத்திர ஓட்டலில் பொய் சொல்லி வேலைக்கு சேர்கிறார். அந்த சமயத்தில் ஓட்டலில் ஒரு எலி புகுந்து ஆட்டம் காட்டுகிறது, அதை எப்படியாவது வெளியே துரத்த வேண்டும் என்கிற பொறுப்பு நாயகிக்கு கொடுக்கப்படுகிறது.

    அந்த எலியை துரத்த நாயகி, டாம் என்கிற பூனையின் உதவியை நாடுகிறார். இதையடுத்து இருவரும் சேர்ந்து அந்த எலியை துரத்தினார்களா? இல்லையா? திட்டமிட்டபடி அந்த ஆடம்பர திருமணம் நடந்து முடிந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    டாம் அண்ட் ஜெர்ரி

    படத்தின் மிகப்பெரிய பலம் அனிமேஷன் தான். நிஜ கதாபாத்திரங்களும், அனிமேஷன் கதாபாத்திரங்களும் ஒரே காட்சியில் கொண்டுவந்துள்ள விதம் அழகாக உள்ளது. கதாபாத்திரங்களை பொருத்த வரை நாயகி க்லோய் மற்றும் மைக்கேல் பெனா மீது தான் கதைக்களம் அதிகளவில் உள்ளது. இருவரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்கள்.

    அனிமேஷன் காட்சிகளை திறம்பட கையாண்டுள்ள இயக்குனர் டிம் ஸ்டோரி, திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். ஏனெனில் இதில் டாம் மற்றும் ஜெர்ரி வரும் காட்சிகளை இன்னும் வைத்திருக்கலாமோ என தோன்ற வைக்கிறது. அந்த இரண்டு கார்ட்டூன் கதாபாத்திரங்களின் காட்சிகளை அதிகளவில் வைத்திருந்தால் படம் இன்னும் ரசிக்கும் படி இருந்திருக்கும்.  

    டாம் அண்ட் ஜெர்ரி

    கிறிஸ்டோபரின் இசை படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறது. ஆலன் ஸ்டேவார்ட்டின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சிகளும் கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கின்றன.

    மொத்தத்தில் ‘டாம் அண்ட் ஜெர்ரி’ சேட்டை.
    ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியாகி இருக்கும் திரிஷ்யம் 2 படத்தின் விமர்சனம்.
    தன் மகள் செய்த ஒரு கொலையை மறைத்து, தன் குடும்பத்தைக் காக்க உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டராக இருக்கும் மோகன்லால், போலீசிடம் இருந்து தப்பிப்பதே ‘திரிஷ்யம்’ படத்தின் கதை. முதல் பாகம் முடிந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ‘திரிஷ்யம் 2’ கதை தொடங்குகிறது. சாதாரண கேபிள் ஆபரேட்டராக இருந்த மோகன்லால், இப்போது ஒரு தியேட்டர் உரிமையாளராக இருக்கிறார். தான் எழுதி வைத்திருக்கும் ஒரு கதையைப் படமாகத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    ஆறு ஆண்டுகளில் மோகன்லாலிடம் ஏற்பட்ட மாற்றங்களை மீனா விரும்பாமல் இருக்கிறார். இவர்களின் மூத்த மகள் அன்ஸிபா, முன்பு நடந்த கொலை சம்பவத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறார். 

    விமர்சனம்

    ஆறு ஆண்டுகளாக எந்தப் பிரச்சினைகளும் இல்லாமல் நிம்மதியாகப் போய்க் கொண்டிருந்தாலும், மொத்தக் குடும்பமும் சிறிய பயத்துடனே இருந்து வருகிறார்கள். மோகன்லாலின் வளர்ச்சியால் பொறாமையில் இருக்கும் சிலர் கொலையை அவர்தான் செய்ததாகவே நம்புகின்றனர். இந்நிலையில், மோகன்லாலை மீண்டும் சிக்கவைக்க காத்திருக்கும் போலீஸுக்கு ஒரு துப்பு கிடைக்கிறது. இதனால் மீண்டும் சிக்கலில் மாட்டுகிறார் மோகன்லால். 

    இறுதியில் போலீசிடம் மோகன்லால் சிக்கினாரா? போலீஸ் விசாரணையை மோகன்லால் எப்படி எதிர்கொண்டனர்? இறுதியில் வென்றது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    ஜார்ஜ்குட்டியாக தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் நடித்து அசத்தி இருக்கிறார் மோகன்லால். பல காட்சிகளில் தன்னுடைய ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பால் அதிகம் கவர்கிறார்.  மோகன்லாலின் மனைவி ராணியாக வரும் மீனா, கணவனிடம் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு விரும்பாமல் இருப்பது, பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் குற்ற உணர்வில் அழுது புலம்புவது, என நடிப்பில் பளிச்சிடுகிறார். மகள்களாக அன்ஸிபா, எஸ்தர் அனில், அதிகாரியாக வரும் முரளி கோபி என அனைவரும் கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். முதல் பாகத்தில் நடித்த ஆஷா சரத் இதிலும் வந்து நடித்து மனதில் நிற்கிறார்.

    விமர்சனம்

    முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சியிலிருந்து ஒரே நூல் பிடித்து ஒரு முழுக் கதையை வடிவமைத்துள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப். படம் தொடங்கிய பத்தாவது நிமிடம் நம்மைத் தொற்றிக் கொள்ளும் பரபரப்பு படம் முடியும் வரை நம்மை விட்டு நீங்காமல் பார்த்துக் கொள்கிறார் இயக்குனர். படத்தில் மோகன்லால் கொலை மறைக்க போராடுவது போல், இயக்குனர் ஜீத்து ஜோசப் இந்த கதைக்காக மிகவும் போராடி இருக்கிறார். இந்த போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம். திரைக்கதையில் மாயாஜாலம் புகுத்தி ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். பொதுவாக முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றி இரண்டாம் பாகத்திற்கு அதிகம் கிடைப்பதில்லை. ஆனால், இந்த பாகத்தை திறம்பட இயக்கிய ஜீத்து ஜோசப்புக்கு பாராட்டுகள்.

    அனில் ஜான்ஸனின் இசை படத்திற்கு பெரிய பலம். இவரது பின்னணி இசை மற்றொரு ஹீரோ. கதைக்குத் தேவையானதை அழகாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சதீஷ் குருப்.

    மொத்தத்தில் ‘திரிஷ்யம் 2’ திகைப்பு.
    நந்தா கிஷோர் இயக்கத்தில் துருவா சார்ஜா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘செம திமிரு’ படத்தின் விமர்சனம்.
    தந்தை மீது பாசமாக இருக்கும் நாயகன் துருவா சார்ஜா சிறுவயதில் இருக்கும் போது தந்தையை இழக்கிறார். இவரது தாய் துருவா சார்ஜாவின் நன்மைக்காக இரண்டாவது திருமணம் செய்துக் கொள்கிறார். இதை புரிந்துக் கொள்ளாமல் தாயிடம் சண்டைப் போடுகிறார். மேலும் இரண்டாவது தந்தையை விட்டு பிரிந்து தன்னுடன் வருமாறு அழைக்கிறார். இதற்கு அவரது தாய் மறுப்பு தெரிவிப்பதால், விரக்தி அடைந்து வீட்டை விட்டு வெளியேறி திமிரு பிடித்தவனாக மாறுகிறார்.

    வளர்ந்து பெரியவனாக மாறும் துருவா சார்ஜா, ஊரில் இருப்பவர்களை மிரட்டி பணத்திற்காக எதுவும் செய்பவராக மாறுகிறார். இந்நிலையில், நிலத்தை அபகரிக்கும் சம்பத், துருவா சார்ஜா இருக்கும் ஏரியாவை அபகரித்து அங்கிருக்கும் மக்களை வெளியேற்ற நினைக்கிறார். இதற்கு துருவா சார்ஜாவும் துணை நிற்கிறார்.

    விமர்சனம்

    இறுதியில் துருவா சார்ஜா, தனது தாயுடன் இணைந்தாரா? ஏரியா மக்களை சம்பத்துடன் இணைந்து விரட்டினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக வரும் துருவா சார்ஜா, இளம் வயது நடிகராகவும், வாலிபனாகவும் நடித்து அசத்தி இருக்கிறார். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் கவனிக்க வைத்திருக்கிறார். திமிரு பிடித்தவன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். நடனத்தில் அப்லாஸ் வாங்குகிறார்.

    விமர்சனம்

    நாயகியாக வரும் ராஷ்மிகா மந்தனா அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். துருவா சார்ஜா லவ் டார்ச்சர் பண்ணும் போது பார்ப்பவர்களை பரிதாபப்பட வைக்கிறார் ராஷ்மிகா. துருவா சார்ஜாவின் தாயாக வருபவரும், தந்தையாக வரும் ரவி சங்கரும் அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். தனக்கே உரிய பாணியில் வில்லத்தனத்தில் அசத்தி இருக்கிறார் சம்பத்.

    ஆக்‌ஷன், சென்டிமென்ட், காதல் என கமர்சியல் படத்திற்கு தேவையான அனைத்தையும் வைத்து படமாக்கி இருக்கிறார் இயக்குனர் நந்தா கிஷோர். கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். படம் நீளமாக இருப்பதாலும், டப்பிங் படம் என்பதாலும் முழுமையாக ரசிக்க முடியவில்லை. தேவை இல்லாத காட்சிகளை இயக்குனர் தவிர்த்திருக்கலாம். மேலும் ஹீரோ கடைசியாக மாறும் காட்சியை இன்னும் அழுத்தமாக சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    விமர்சனம்

    சந்தன் ஷெட்டி இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். விஜய் மில்டனின் ஒளிப்பதிவோடு பாடல் காட்சிகளை பார்க்கும் போது சிறப்பாக இருக்கிறது. சண்டைக் காட்சிகளிலும் விஜய் மில்டன் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘செம திமிரு’ திமிரு கொஞ்சம் குறைவு.
    எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா நடிப்பில் வெளியாகி இருக்கும் சக்ரா படத்தின் விமர்சனம்.
    சென்னையில் சுதந்திர தினத்தன்று இரண்டு கொள்ளையர்கள் வரிசையாக 50 வீடுகளில் கொள்ளையடிக்கின்றனர். இது தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. சுதந்திர தினம் என்பதால் போலீசார் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்ததால், அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் கொள்ளையர்கள் தப்பித்து விடுகின்றனர். 

    கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய 50 வீடுகளில் விஷாலின் வீடும் ஒன்று. கொள்ளையர்கள் தாக்கியதில் விஷாலின் பாட்டி மயக்கமடைந்து விடுகிறார். ராணுவத்தில் பணியாற்றி வரும் விஷால், இச்சம்பவம் குறித்து தெரிந்ததும் ஊருக்கு விரைகிறார். தனது தந்தை வாங்கிய சக்ரா மெடலும் திருடு போனதை அறியும் விஷால் கொள்ளையர்களை பிடிக்க முனைப்பு காட்டுகிறார். 

    சக்ரா விமர்சனம்

    தனது காதலியும், போலீஸ் உயர் அதிகாரியுமான நாயகி ஷ்ரத்தா தான், இந்த கொள்ளை வழக்கை விசாரிக்கிறார் என்பதை அறியும் விஷால், அவருக்கு உறுதுணையாக இருக்கிறார். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வருகின்றன. இறுதியில் அவர்கள் இந்த கொள்ளைக்கு பின்னால் உள்ள முக்கிய புள்ளியை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகன் விஷால், ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். மிடுக்கான உடற்கட்டுடன் திறம்பட நடித்திருக்கிறார். அதிரடி ஆக்‌ஷன், காதல், செண்டிமெண்ட் என அனைத்திலும் கலக்கி இருக்கிறார். கொள்ளையர்களை களையெடுக்க அவர் கையாளும் யுக்திகள்  அனைத்தும் ரசிக்கும் படியாக உள்ளது. 

    சக்ரா விமர்சனம்

    நாயகி ஷ்ரத்தா, வழக்கமான நாயகி போல் இல்லாமல், போலீஸ் அதிகாரியாக வந்து நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெறுகிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளிலும் நடித்து அசத்தி இருக்கிறார். நாயகன் விஷாலுக்கு இணையாக போட்டி போட்டு நடித்துள்ளார். 

    படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரம் என்றால் அது ரெஜினா தான், இத்தனை நாளா இந்த நடிப்பு திறமையை எங்க ஒளிச்சு வச்சிருந்தீங்க என கேட்கும் அளவுக்கு மெர்சல் காட்டி உள்ளார். அவருடைய கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. கே.ஆர்.விஜயா, மனோபாலா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்கள்.

    சக்ரா விமர்சனம்

    இயக்குனர் எம்.எஸ்.ஆனந்த், அவருக்கு இது அறிமுக படமாக இருந்தாலும், திரைக்கதையை திறம்பட கையாண்டுள்ளார். கதாபாத்திரங்கள் தேர்வும் கச்சிதமாக அமைந்தது படத்திற்கு கூடுதல் பலம். எதிர்பார்க்க முடியாத பல்வேறு டுவிஸ்டுகளை கொடுத்து படத்திற்கு விறுவிறுப்பை கூட்டி உள்ளார். 

    படத்தின் ஹைலைட் என்றால் அது யுவனின் இசை தான். குறிப்பாக பின்னணி இசை ஒவ்வொரு காட்சிக்கும் வலு சேர்த்திருக்கிறது. பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் கண்களுக்கு விருந்தாக அமைகிறது. குறிப்பாக ஸ்டண்ட் காட்சிகளில் இவரின் ஒளிப்பதிவு அட்டகாசம். 

    மொத்தத்தில் ‘சக்ரா’ அதிரடி.
    ராஜசேகர் துரைசாமி இயக்கத்தில் கயல் ஆனந்தி, ரோகித், பிரதாப் போத்தன் நடிப்பில் வெளியாகி இருக்கும் கமலி பிரம் நடுக்காவேரி படத்தின் விமர்சனம்.
    நடுக்காவேரி என்னும் கிராமத்தில் 11ஆம் வகுப்பு படித்து வரும் ஆனந்தி, குறும்புத்தனம் நிறைந்த புத்திசாலி மாணவியாக இருக்கிறார். ஆனந்தியின் தந்தை அழகம்பெருமாள் மகனை மேற்படிப்பு படிக்க வைக்கவும் மகளை விரைவில் திருமணம் செய்துகொடுக்கவும் திட்டமிடுகிறார். 

    இந்நிலையில் +2 தேர்வு முடிவு வருகிறது. அதில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற ரோகித்தின் பேட்டி வருகிறது. ரோகித்தை காதலிக்க தொடங்கும் ஆனந்தி அவரை சந்திப்பதற்காக சென்னை ஐஐடியில் படிக்க ஆசைப்படுகிறார். 

    இறுதியில் இந்திய அளவில் கடினமான ஐஐடி நுழைவுத்தேர்வுக்கு ஆனந்தி எப்படி தயாராகிறார்? ஐஐடியில் ரோகித்திடம் அவரது காதலை சொல்ல முடிந்ததா? கிராமத்து பெண்ணான அவர் எப்படி சாதனை படைக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    கமலி பிரம் நடுக்காவேரி விமர்சனம்

    பெண் கல்வி என்பதை மையமாக கொண்டு கதை அமைத்த ராஜசேகர் துரைசாமிக்கும், தயாரித்த துரைசாமிக்கும் படத்தை வெளியிடும் மாஸ்டர்பீஸ் நிறுவனத்துக்கும் பாராட்டுகள்.

    ஆனந்திக்கு படத்தை தாங்கி பிடிக்கும் கதாபாத்திரம். படத்தின் எந்த காட்சியிலும் ஆனந்தியே தெரியவில்லை. கமலி மட்டுமே தெரிகிறார். இதுவே அவர் இந்த கதாபாத்திரத்துக்கு எத்தனை பொருத்தமானவர் என்பதை நிரூபிக்கிறது. குறும்புக்கார மாணவி, தான் கொண்ட லட்சியத்துக்காக எந்த கடின உழைப்பையும் கொடுக்கக்கூடிய பொறுப்புள்ள பெண், தன்னை முடக்கி போடும்போதும் கேலி, கிண்டல் செய்யும்போதும் எல்லா துன்பங்களையும் சிரித்துக்கொண்டே கடந்து அதில் இருந்து மீண்டு வந்து சாதிக்கும் கல்லூரி மாணவி என தனது நடிப்பால் அசத்துகிறார்.

    கமலி பிரம் நடுக்காவேரி விமர்சனம்

    ஆனந்திக்கு பக்கபலமாக இருந்து உதவும் பாத்திரத்தில் பிரதாப் போத்தன். ஆனந்திக்கு சொல்லி கொடுக்க மறுப்பது, ஐஐடி நுழைவுத்தேர்வுக்கு ஆனந்தியை அணுஅணுவாக தயார் செய்வது, ஆனந்தியின் வெற்றியை தன் வெற்றியாக உணர்வது என மனிதர் தனது அனுபவ நடிப்பால் நெகிழ வைக்கிறார்.

    அழகம்பெருமாளும், ரேகா சுரேஷும்  நம் பெற்றோரை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். நாயகனாக வரும் ரோகித்தும் சரியான தேர்வு. இமான் அண்ணாச்சி கலகலப்பாக படத்தை நகர்த்துகிறார்.

    கமலி பிரம் நடுக்காவேரி விமர்சனம்

    ஆனந்தியின் பள்ளி தோழியாக வரும் ஸ்ரீஜா நாயகியாக நடிக்கலாம். அழகாகவும் இருக்கிறார். சிறப்பாகவும் நடிக்கிறார். அறைத்தோழியாக வரும் அபிதா வெங்கட்டும்  கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

    பெண் குழந்தைகளின் முன்னேற்றம், பெண் கல்வியின் அவசியம் என அவர்களை ஊக்கப்படுத்தும் படமாக கமலி பிரம் நடுக்காவேரி அமைந்துள்ளது. சமூகத்துக்கு மிக அவசியமான கருத்தை காமெடி, காதல், குடும்பம் என அனைத்தையும் கலந்து விறுவிறுப்பான திரைக்கதையுடன் கமர்சியலாக சொன்ன விதத்தில் முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் ராஜசேகர் துரைசாமி சேர்கிறார்.

    தீனதயாளனின் இசையில் பாடல்கள் கதையோட்டத்துக்கு உதவி இருக்கின்றன. பின்னணி இசையும் படத்துடன் நம்மை ஒன்ற வைக்கிறது. ஜெகதீஷ் இளங்கோவனின் ஒளிப்பதிவு நடுக்காவேரியின் பசுமைக்குள்ளும், ஐஐடி வளாகத்தின் சூழலுக்குள்ளும் நம்மை கூட்டி செல்கிறது. 

    மொத்தத்தில் ‘கமலி பிரம் நடுக்காவேரி’ கவர்கிறாள்.
    தென்னவன், சசி, அனு கிருஷ்ணா, டிட்டோ ஷார்மின் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் இது விபத்து பகுதி படத்தின் விமர்சனம்.
    மூன்று ஆண்கள், ஒரு பெண் ஆகிய நான்கு பேரும் ஒரு வீட்டில் இருந்து கொண்டு ஜாலியாக கதைகளை பேசுகிறார்கள். ஒவ்வொரு கதைகளிலும் ஒருவர் இறக்கிறார். கதைகளில் இறந்தவர்கள் யார்? எப்படி இறந்தார்கள்? இறந்தவர்களுக்கு கதை சொல்லும் நான்கு பேருக்கு என்ன தொடர்பு? என்பதே படத்தின் மீதிக்கதை.

    ஆந்தாலஜி பாணியில் நான்கு கதைகளை உருவாக்கி இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய் திருமூலம். நான்கு கதைகள், நான்கு கதைகளில் சொல்ல வந்த விஷயத்தை சுருக்கமாக சொல்லி இருக்கலாம். பல காட்சிகள் வேண்டுமென்றே திணித்தது போல் இருந்தது. இவரே ஒளிப்பதிவையும் செய்து இருக்கிறார்.

    விமர்சனம்

    கதாப்பாத்திரங்கள் இடையே இன்னும் அதிகமாக வேலை வாங்கியிருக்கலாம். விபத்து ஏற்படுவதும், அதற்கான காட்சியமைப்பையும் விறுவிறுப்பாக இல்லை.

    தென்னவன், சசி, அனு கிருஷ்ணா, டிட்டோ ஷார்மின் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். ஆதிஷ் உத்ரியன், சாய்தர்ஷன் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    மொத்தத்தில் 'இது விபத்து பகுதி' தடுமாற்றம்.
    சந்தானம், அனைகா நடிப்பில் ஜான்சன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் விமர்சனம்.
    பாரிஸ் பகுதியில் கானா பாடகராக இருக்கிறார் சந்தானம். இவருடைய முதல் காதல் தோல்வியில் முடிந்துவிட, அடுத்ததாக அனைகாவை காதலிக்க ஆரம்பிக்கிறார். முதலில் இந்தக் காதலுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஜெயராஜின் தந்தை பிருத்விராஜ், பிறகு கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கிறார். திவ்யாவின் தந்தையும் இந்தக் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார். ஜெயராஜின் காதலை முதலில் ஆதரித்த தந்தை, பிறகு எதிர்ப்பது ஏன்?, தந்தையின் எதிர்ப்புகளை மீறி சந்தானம் அனைகாவை கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    நாயகனாக நடித்திருக்கும் சந்தானம் கானா பாடகராக துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும், காதலி பின்னால் சுற்றும் வழக்கமான சந்தானத்தையே பார்க்க முடிகிறது. கிளைமாக்ஸில் இவருடைய உடல் மொழி ரசிக்க வைக்கிறது. சண்டைக்காட்சிகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். நாயகியாக வரும் அனைகா, அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். சில இடங்களில் இவர் பேசும் வசனம் படத்தோடு ஒட்டாமல் இருக்கிறது.

    சந்தானத்திற்கு அப்பாவாக வரும் பிருத்வி ராஜின் நடிப்பு சிறப்பு. சந்தானத்திற்கு நிகராக இவருடைய கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. மாறன், சேது, சேஷு, 'நான் கடவுள்' ராஜேந்திரன், கலக்கப்போவது யாரு வினோத், மற்றும் தங்கதுரை ஆகியோர் டைமிங் காமெடியில் பேசி அசத்தி இருக்கிறார்கள். ஆனால், ஒரு சில இடங்களில் நமக்கு பேட் டைமிங்காகவும் மாறுகிறது. 

    விமர்சனம்

    சந்தானம் நடித்து ஜான்சன் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிந்த ஏ 1 படம் வெற்றி பெற்றதையடுத்து, அதே குழு மீண்டும் இணைந்து இந்த படத்தை கொடுத்திருக்கிறார்கள். படத்தின் முதற்பாதியில் காமெடி பெரியதாக எடுபடவில்லை. ஆனால், இரண்டாம் பாதியில் கூடுதலாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். டைமிங் காமெடியை ஒரு சில இடங்களில் தவிர்த்திருக்கலாம். அதுபோல் அனைத்து கதாபாத்திரமும் டைமிங் காமெடியில் பேசுவது நெருடலாக இருக்கிறது. 

    சந்தானம் கானா பாடகர் என்பதால் எல்லாப் பாடல்களுமே அதே பாணியில் இடம்பெற்றிருக்கிறது. சந்தோஷ் நாராயணின் இசையில் முதல் மூன்று பாடல்களும் தேவையில்லாத இடங்களில் வந்ததுபோல் இருக்கிறது. ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு படத்துக்கு வலு சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘பாரிஸ் ஜெயராஜ்’ பார்க்கலாம்.
    தினேஷ், தீப்தி சதி, மொட்ட ராஜேந்திரன், மனோபாலா நடிப்பில் ஆர்.கோபி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் நானும் சிங்கிள் தான் படத்தின் விமர்சனம்.
    தினேஷ் பெண்களிடம் பேச தயங்கும் 90களில் பிறந்த ஒரு பையன். டாட்டூ போடும் கடை நடத்தி வருகிறார். 29 வயதாகும் அவருக்கு 30 வயதுக்குள் திருமணம் முடிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் சொல்லிவிட அவரின் நண்பர்களான கதிர், ஆதித்யா, செல்வா மூவரும் தீவிரமாக பெண் தேடுகிறார்கள். ஒரு ஆபத்தில் இருந்து தீப்தியை காப்பாற்றும் தினேஷ் அவர்மீது காதலாகிறார்.

    தீப்தியின் தோழிகள் வைக்கும் சோதனைகளில் தினேஷ் வெற்றி பெற்றாலும் காதலே பிடிக்காத தீப்தி, தினேஷ் காதலை ஏற்காமல் லண்டன் சென்றுவிடுகிறார். அங்கும் சென்று தினேஷ் தன் காதலை தெரிவிக்கிறார். தினேஷின் காதலை நிராகரிக்க தீப்தி ஒரு அதிர்ச்சியான முடிவை எடுக்கிறார். அது என்ன முடிவு? தினேஷ் தீப்தியை எப்படி கரம் பிடித்தார்? என்பதே நானும் சிங்கிள் தான் கதை.

    விமர்சனம்

    தினேஷ் நவநாகரீக இளைஞராக நடித்திருக்கிறார். பெண்களை பற்றி பேசுவது ஆனால் பெண்களிடம் பேச தயங்குவது என்று 90’ஸ் கிட்ஸ் இளைஞனை பிரதிபலிக்கிறார். அவரது இயல்பான உடல்மொழி கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறது.

    நாயகியாக நடித்திருக்கும் தீப்தி தன்னை சுற்றித்தான் படம் நகர்கிறது என்பதை உணர்ந்து நடித்துள்ளார். அவர் காதலை வெறுக்க வலுவான காரணம் வைத்திருக்கலாம். தினேஷின் நண்பர்களாக வரும் கதிர், ஆதித்யா, செல்வா மூவரும் படத்தை கலகலப்பாக நகர்த்துகிறார்கள். மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, ரமா ஆகியோரும் திரைக்கதை ஓட்டத்திற்கு உதவுகிறார்கள்.

    விமர்சனம்

    ஹித்தேஷ் மஞ்சுநாத் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ஆனந்த்ராஜின் ஒளிப்பதிவில் லண்டன் காட்சிகள் அழகாக இருக்கின்றன. ஆண்டனியின் படத்தொகுப்பில் 2ஆம் பாதியில் சில நிமிட காட்சிகள் மட்டும் சற்று நீளமாக தெரிகிறது.

    ஆண்கள் மேல் நம்பிக்கையே இல்லாமல் தன்னால் சிங்கிளாவே வாழ்க்கை முழுவதும் வாழமுடியும் என நினைக்கும் பெண்ணுக்கும், கனவிலும் காதல் கைகூடாமல் சிங்கிளாவே இருக்கும் இளைஞனுக்கும் இடையே நடக்கும் காதல், மோதல் என சுவாரசியமான கதையை பிடித்துள்ளார் இயக்குனர் ஆர்.கோபி. இளைஞர்களை கவரும் வகையில் காட்சிகளை வைத்து கிளைமாக்சில் அழுத்தமான கருத்தையும் முன்வைத்துள்ளார். இன்றைய இளைஞர்களுக்கான படமாக அமைந்துள்ளது.

    மொத்தத்தில் ‘நானும் சிங்கிள் தான்’ இளமை துள்ளல்.
    வெற்றி, தீபன், கார்த்திக் ரத்தினம், சோனியா கிரி, மும்தாஜ் சார்கர், அயிரா நடிப்பில் ஹேமம்பர் ஜஸ்தி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் கேர் ஆப் காதல் படத்தின் விமர்சனம்.
    வெற்றி மதுக்கடையில் பணிபுரிபவர். அங்கு வழக்கமாக மது வாங்க வரும் மும்தாஜ் சார்கர் மீது வெற்றிக்கு தீவிர காதல். மும்தாஜின் பின்னணி தெரிய வரும்போது அவர் அதிர்ச்சி ஆகிறார். ஆனாலும் தனது காதலை அதிகப்படுத்தி அவரை மகிழ்ச்சியான பெண்ணாக வைத்துக்கொள்கிறார். இருவரும் திருமணத்துக்கு தயாராகும்போது ஒரு அதிர்ச்சி நடக்கிறது. 

    கார்த்திக் ரத்தினம் ஒரு தாதாவிடம் அடியாளாக இருக்கிறார். கல்லூரியில் படிக்கும் அயிராவும் அவரும் முதலில் மோதிக்கொள்கிறார்கள். அந்த மோதலே காதலாகிறது. இந்த காதலுக்கு மதம் குறுக்கே நிற்கிறது. 

    விமர்சனம்

    பள்ளியில் படிக்கும் நிஷேஷுக்கு சக மாணவி ஸ்வேதா மீது காதல். ஸ்வேதாவின் பாட்டு போட்டி ஆசையை நிறைவேற்ற நிஷேஷ் பாடுபடுகிறான். ஆனால் அது நிறைவேறும்போது இருவரும் பிரிய நேரிடுகிறது. 

    தீபன் ஒரு அரசு அலுவலகத்தில் பியூனாக பணிபுரிகிறார். 49 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் அவருடன் நட்பு பாராட்டுகிறார் அவருக்கு அதிகாரியாக வரும் சோனியா கிரி. ஒரு கட்டத்தில் சோனியாவுக்கு தீபன் மீது காதல் வர அவரும் சம்மதிக்க இந்த வயதான ஜோடியின் காதலை சமூகம் ஏற்றுக்கொண்டதா? என்பது படத்தின் முடிவு.

    தாடியாக வரும் வெற்றி சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். சின்ன உடலசைவுகள் மற்றும் வசனங்கள் மூலம் நம்பகத்தன்மை கொடுக்கிறார். அவருக்கு ஜோடியாக வரும் மும்தாஜ் சார்கரும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்துள்ளார்.

    விமர்சனம்

    முதல் மரியாதை படத்துக்கு பின்னர் நடிப்பில் இருந்து ஒதுங்கி மீண்டும் வந்துள்ள தீபனை இனி சினிமாவில் அடிக்கடி பார்க்கலாம். தீபன் - சோனியா ஜோடி நடுத்தர வயது நேசத்தை கண்முன்னே கொண்டு வந்துள்ளது. கார்த்திக் ரத்தினம் - அயிரா ஜோடியின் காதலில் இளமை துள்ளல்.

    4 வெவ்வேறு வயதினருடைய கதை. 4 கதைகளையும் இணைக்கும் புள்ளி காதல் மட்டுமே. 4 காதல்களில் வெற்றியில் முடிந்த காதல் எது? தோல்வியில் முடிந்த காதல்கள் எவை? அவற்றுக்கான காரணம் என்ன? என சுவாரசியமான கேள்விகளை எழுப்பி கடைசியில் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது படம். 

    தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற கேர் ஆப் கச்சரபள்ளம் என்ற படத்தை தமிழ்நாட்டு மண்ணுக்கு தகுந்தாற்போல் மாற்றி கொடுத்துள்ளார் ஹேமன்பர் ஜஸ்தி.

    விமர்சனம்

    சுவீகர் அகஸ்தியின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு இனிமை கூட்டுகிறது. கே.குணசேகரின் ஒளிப்பதிவும் அழகு. ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு படத்திற்கு தன் தேவையை உணர்ந்து சிறப்பாக செய்துள்ளார்.

    நடிகர்களின் வசன உச்சரிப்பு, உடல் மொழியில் தெரியும் வித்தியாசம் மட்டுமே சின்ன பலவீனம். வெற்றியை போல பிற கதாபாத்திரங்களும் தெரிந்த முகங்களாக இருந்து இருக்கலாம்.

    சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் 4 காதல்களுமே அழகான கவிதைகளாக அமைந்துள்ளது. 4 கதைகளையும் இணைக்கும் கிளைமாக்சும் நெகிழ வைக்கிறது. 

    மொத்தத்தில் 'கேர் ஆப் காதல்' ரசிக்கலாம்.
    கெளதம் மேனன், ஏ.எல்.விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள ‘குட்டி ஸ்டோரி’ என்கிற ஆந்தாலஜி படத்தின் விமர்சனம்.
    திரையுலகில் தற்போது ஆந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது. அந்தவகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக வலம் வரும் கெளதம் மேனன், ஏ.எல்.விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் ‘குட்டி ஸ்டோரி’. காதலை கதைக்கருவாக வைத்து இந்த நான்கு குறும்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளது.

    எதிர்பாரா முத்தம்

    கெளதம் மேனன் தனது கல்லூரி பருவ நண்பர்களை நீண்ட நாட்களுக்கு பின் சந்திக்கிறார். அப்போது அவருடைய கல்லூரி கால நினைவுகளை பற்றி பேசுகிறார் கெளதம் மேனன். அப்போது காதலை பற்றி பேசும் கெளதம் மேனன், அமலா பால் உடனான தன்னுடைய நட்பை பற்றி சொல்கிறார். அந்த நிகழ்வுக்கு பின் அமலா பாலும், கெளதம் மேனும் நண்பர்களாக இருந்தார்களா? இல்லையா என்பதே மீதிக்கதை.

    குட்டி ஸ்டோரி விமர்சனம்

    கெளதம் மேனனின் கல்லூரி பருவ கதாபாத்திரமாக நடித்துள்ள வினோத் கிஷன் திறம்பட நடித்துள்ளார். அமலா பாலின் நடிப்பும், ரோபோ சங்கரின் கவுன்ட்டர்களும் ரசிக்கும்படி உள்ளன. கெளதம் மேனனும் தன் பங்கிற்கு ஸ்டைலிஷாக நடித்துள்ளார். மனோஜ் பரம ஹம்சாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைகின்றன. தனது திரைப்படங்களைப் போல் இந்த குறும்படத்திலும் தன் காதல் முத்திரையை பதிக்கத் தவராத கெளதம் மேனன், காதல் காட்சிகளின் நீளத்தை குறைத்திருந்தால், எதிர்பாரா முத்தம் நினைவில் இருந்திருக்கும்.

    அவனும் நானும்

    ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள படம் அவனும் நானும். அமிதாஷ், மேகா ஆகாஷ் இருவரும் காதலித்து வருகிறார்கள். இருவரின் எல்லைமீறிய காதலால் மேகா ஆகாஷ் கர்ப்பமாகிறார். இதை தனது காதலன் அமிதாஷிடம் போனில் தெரிவிக்கிறார். இந்த விஷயம் தெரிந்ததில் இருந்தே அமிதாஷின் போன் ஸ்விட்ச் ஆப்பில் இருக்கிறது. இதையடுத்து அமிதாஷ் என்ன ஆனார்? மேகா ஆகாஷ் என்ன முடிவெடுத்தார் என்பதே மீதிக்கதை.

    குட்டி ஸ்டோரி விமர்சனம்

    படத்தில் அமிதாஷுக்கு குறைந்தளவு காட்சிகளே உள்ளன. ஆனால் மேகா ஆகாஷ் தான் படம் முழுக்க பயணிக்கிறார். நடிப்பிலும் ஸ்கோர் செய்துள்ளார். மதுவின் இசை, அரவிந்த் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, ஆண்டனியின் எடிட்டிங் ஆகியவை படத்துக்கு பலமாக அமைந்துள்ளன. படத்தில் ஒருசில டுவிஸ்ட் கொடுத்து விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய்.

    லோகம்

    அனிமேஷன் கேமை மையமாகக் கொண்டு ஒரு காதலைச் சொல்ல முயன்றுள்ளார் வெங்கட் பிரபு. லோகம் என்ற கேமை நாயகன் வருண் விளையாடி வருகிறார். அந்த விளையாட்டில் ஒரு பெண்ணும் இணைகிறார். அவர் மீது நாயகன் வருண் காதல் வயப்படுகிறார். அந்தப் பெண்ணிடம் வருண் வாட்ஸ் அப் நம்பர் கேட்க, கேமில் குறிப்பிட்ட லெவலை முடித்துவிட்டால் நம்பர் தருகிறேன் என்கிறார் அந்தப் பெண். இறுதியில் அந்தப் பெண் அந்த லெவலை முடித்தாரா? வருணின் காதல் கைகூடியதா? என்பதே படத்தின் மீதிக் கதை.

    குட்டி ஸ்டோரி விமர்சனம்

    இந்தக் கதையில் பெரும்பாலும் அனிமேஷன் கேம் தான் வருகிறது. அந்த கேமை தரமாக உருவாக்கி உள்ளார்கள். வருண், சாக்‌ஷி, சங்கீதா ஆகியோர் நேர்த்தியாக நடித்துள்ளனர். பிரேம்ஜியின் பின்னணி இசை கதையோடு ஒன்றி பயணிக்க வைக்கிறது. கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டி இருந்தால் லோகம் ரசிக்கும்படியாக இருந்திருக்கும். வெங்கட் பிரபுவின் மேஜிக் இதில் மிஸ்ஸிங்.

    ஆடல் பாடல்

    விஜய்சேதுபதியும், அதிதி பாலனும் கணவன் மனைவி, இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. ஆனால் விஜய் சேதுபதி வேறு ஒரு பெண்ணுடன் அடிக்கடி போனில் பேசி வருகிறார். ஒருகட்டத்தில் விஜய் சேதுபதியின் கள்ளக்காதல் அவரது மனைவி அதிதி பாலனுக்கு தெரிந்து விடுகிறது. அதன்பின் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.

    திரைக்கதையை திறம்பட கையாண்டுள்ளார் இயக்குனர் நலன் குமாரசாமி. நாயகன் விஜய் சேதுபதியின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பிளஸ். குறிப்பாக தன்னுடைய கள்ளக்காதல் மனைவிக்கு தெரிந்த போது என்ன செய்வதென்று திகைத்துப்போகும் காட்சியில் விஜய் சேதுபதியின் நடிப்பு அற்புதம். அதிதி பாலனும் போட்டிபோட்டு நடித்துள்ளார். 

    குட்டி ஸ்டோரி விமர்சனம்

    எட்வின் லூயிஸ் விஸ்வநாத் பின்னணி இசை பிரமாதம். ஒரே வீட்டில் நடக்கும் கதை என்றாலும் காட்சிகளில் கைவண்ணத்தை காட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரம். மேற்கண்ட நான்கு குறும்படங்களில் தனியாக ஜொலிக்கிறது ஆடல் பாடல்.

    மொத்தத்தில் ‘குட்டி ஸ்டோரி’ காதலுக்காக.
    மாஸ்டர் மகேந்திரன், அன்பு மயில்சாமி, நீரஜா, காயத்ரி நடிப்பில், சிவபாலன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் சிதம்பரம் ரயில்வே கேட் படத்தின் விமர்சனம்.
    மாஸ்டர் மகேந்திரனும், அன்பு மயில்சாமியும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். மகேந்திரன் ஆட்டோ ஓட்டி அன்பு மயில்சாமியை படிக்க வைக்கிறார். இதே ஊரில் பெரிய தாதாவாக இருக்கும் சூப்பர் சுப்புராயன் சிலைகளை கடத்தி விற்பனை செய்கிறார்.

    இதை மகேந்திரன் போலீசிடம் சொல்லி சூப்பர் சுப்புராயனை சிக்க வைத்து விடுகிறார். இதனால் கோபமடையும் சுப்பர் சுப்புராயன், மகேந்திரனை கொலை செய்ய நினைக்கிறார். இந்நிலையில் அன்பு மயில்சாமி, சூப்பர் சுப்புராயன் மகள் நீரஜாவை காதலிக்கிறார்.

    விமர்சனம்

    சூப்பர் சுப்புராயனுக்கும், மகேந்திரனுக்கும் பிரச்சனை இருப்பதை அறிந்து நீரஜாவை காதலிக்க மறுக்கிறார் அன்பு மயில்சாமி. ஆனால், மகேந்திரன் நண்பனின் காதலை சேர்த்து வைக்க முடிவு செய்கிறார். இறுதியில், தன்னை கொல்ல நினைக்கும் தாதா சூப்பர் சுப்புராயனை எதிர்த்தாரா? அல்லது சமரசமாகி நண்பன் காதலுக்கு உதவினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    படத்தில் நாயகன்களாக நடித்திருக்கும் மகேந்திரன் மற்றும் அன்பு மயில்சாமி இருவரும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். ஆட்டோ ஓட்டுநராகவும், நண்பனுக்காக பேசும்போதும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் மகேந்திரன். நண்பனுக்காக காதலை மறுக்கும் அன்பு மயில்சாமியின் நடிப்பில் ஏதோ குறைவது போல் உள்ளது. கல்லூரி மாணவியாக வரும் நீரஜா, மகேந்திரனின் காதலியாக வரும் காயத்ரி ஆகியோரின் நடிப்பு செயற்கை தனமாக இருக்கிறது. வில்லனாக நடித்திருக்கும் சுப்பர் சுப்புராயன் நடிப்பில் மிரட்டி இருக்கிறார்.

    உயிருக்கு உயிரான இரண்டு நண்பர்கள், இவர்களுக்குள் ஏற்படும் பகை, காதல் ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் சிவபாலன். ஆனால், சுவாரஸ்யம் இல்லாமல் திரைக்கதை தடுமாறி இருக்கிறது. தேவையில்லாத காட்சிகள், மற்ற படங்களில் வரும் வழக்கமான காட்சிகள் ஆகியவை படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. கதாபாத்திரங்களிடையே வேலை வாங்காமல் விட்டிருக்கிறார் இயக்குனர்.

    விமர்சனம்

    கார்த்திக் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் படத்திற்கு பலம். குறிப்பாக இளையராஜா பாடிய பாடலும், காதல் இனிக்குதையா பாடலும் மீண்டும் கேட்கும் ரகம். ஆர்.வேலுவின் ஒளிப்பதிவை ரசிக்க முடிகிறது. பல இடங்களில் இவரது ஒளிப்பதிவு பளிச்சிடுகிறது.

    மொத்தத்தில் ‘சிதம்பரம் ரயில்வேகேட்’ சுவாரஸ்யம் இல்லை.
    ×