என் மலர்
தரவரிசை
ராசு ரஞ்சித் இயக்கத்தில் ஈசன், அபர்ணா பாலமுரளி, லிஜோமோள் ஆகியோர் நடிப்பில் வெளியாகி உள்ள ‘தீதும் நன்றும்’ படத்தின் விமர்சனம்.
ராசு ரஞ்சித்தும், ஈசனும் நெருங்கிய நண்பர்கள். இருவருமே பெற்றோர்களை இழந்தவர்கள். பகலில், மீன் மார்க்கெட்டில் வேலை செய்கிறார்கள். இரவில், முகமூடி அணிந்து கொண்டு கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். இவர்களுடன் இன்னொரு நண்பர் சந்தீப்ராஜும் கொள்ளையில் சேர்ந்து கொள்கிறார்.
ஈசனுக்கும், அபர்ணா பாலமுரளிக்கும் இடையே காதல் மலர்கிறது. அபர்ணாவின் தாயாரின் எதிர்ப்பை மீறி, இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார், ராசு ரஞ்சித். அதேபோல் இவருக்கும், லிஜோமோள் ஜோசுக்கும் காதல் துளிர்க்கிறது. காதல் ஜோடிகள் சந்தோசமாக வாழ்க்கையை எதிர்கொள்ளும் நிலையில், ராசு ரஞ்சித்தும், ஈசனும் மீண்டும் கொள்ளைக்கு புறப்படுகிறார்கள்.

ஈசனை மனைவி அபர்ணா தடுக்கிறார். தன் வயிற்றில் குழந்தை வளர்வதாக கூறி, திருட்டுக்கு போக வேண்டாம் என்று உருகுகிறார். அவர் தூங்கிய பிறகு ஈசன் நண்பர்களுடன் போய் ஒரு மதுக்கடையில் கொள்ளையடிக்கிறார். அப்போது மூன்று பேரையும் போலீஸ் சுற்றி வளைக்கிறது. சந்தீப்ராஜு தப்பி ஓடுகிறார். ராசு ரஞ்சித்தையும், ஈசனும் போலீசிடம் சிக்கிக் கொள்கிறார்கள். இதையடுத்து இவர்கள் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக் கதை.
ராசு ரஞ்சித், கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருப்பதுடன், படத்தை இயக்கியும் உள்ளார். அவரே இயக்குனர் என்பதால் அவருடைய கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், நேர்மையாக கதை சொல்லியிருக்கிறார். லிஜோமோளுடன் காதல், எதிரிகளுடன் மோதல் என சராசரி கதாநாயகனுக்கு உரிய வேலைகளை கச்சிதமாக செய்து இருக்கிறார்.

இவருடைய நண்பரான ஈசனுக்கும், அபர்ணாவுக்குமான நெருக்கமான காட்சிகள், மோகத்தீ மூட்டுகிறது. சுகத்தையும், சோகத்தையும் அபர்ணா ஆழமும், அகலமுமான கண்கள் மூலம் அழகாக வெளிப்படுத்துகிறார். இவருக்கு சரியான போட்டி, லிஜோமோள். நடை, உடை, பாவனைகளில் வசீகரிக்கிறார். வில்லன்கள் சந்திப் ராஜ், ராஜேந்திரன் ஆகிய இருவரும் மிரட்டலான தேர்வு.
இயக்குனர் ராசு ரஞ்சித்திற்கு இது முதல் படம். படம் முழுக்க அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார். படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் இருப்பினும், கதை சொன்ன விதத்திலும், படத்தை காட்சிப்படுத்திய விதத்திலும், கைத்தட்டல்களை பெறுகிறார் இயக்குனர் ராசு ரஞ்சித். படத்தொகுப்பும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. அதையும் ராசு ரஞ்சித் தான் செய்துள்ளார்.

தாதா, ரவுடி கும்பல், முகமூடி கொள்ளையை திரைக்கதையாக கொண்ட படம் என்பதால் இரவு நேர காட்சிகள் ஏராளம். அதற்காக கடுமையாக உழைத்து இருக்கிறார், ஒளிப்பதிவாளர் கெவின்ராஜ். இசையமைப்பாளர் சத்யா, பின்னணி இசை மூலம் படத்திற்கு விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார்.
மொத்தத்தில் ‘தீதும் நன்றும்’ விறுவிறுப்பு.
ராப் வேன் டேம் (ஆர்விடி) நடிப்பில் டேவிட் டிஃபல்கோ இயக்கத்தில் வெளியாகி இருக்கும் கேங்ஸ்டர்ஸ் படத்தின் விமர்சனம்.
முன்னாள் கடற்படை அதிகாரியான நாயகன் ராப் வேன் டேம் (ஆர்விடி) மனைவி மகளுடன் வாழ்ந்து வருகிறார். இவர் வீட்டுக்கு அருகில் ஒரு குடும்பம் குடி வருகிறார்கள். அந்த குடும்பத்தினர் ஆர்விடி மற்றும் மனைவியை ஒரு பார்ட்டிக்கு அழைத்து செல்கிறார்கள்.
அங்கு கிளப் ஓனரின் தம்பி ஒருவர் குடிபோதையில் ஆர்விடி-யின் மனைவிடம் தகராறு செய்கிறார். இதில் எதிர்பாராதவிதமாக கிளப் ஓனரின் தம்பி இறந்து விடுகிறார். இதனால் கோபமடையும் கிளப் ஓனர், ஆர்விடி தலையை கொண்டு வருபவர்களுக்கு பணம் தருவதாக அறிவிக்கிறார்.

இதனால் ஊரில் இருக்கும் கேங்ஸ்டர்ஸ் அனைவரும் ஆர்விடியை கொல்ல முயற்சி செய்கிறார்கள். இதை ஆர்விடி எப்படி சமாளித்தார்? எப்படி தப்பித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
டபிள்யூ டபிள்யூ ஈ-யில் வரும் ஆர்விடி இதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். மெதுவாக ஆரம்பிக்கும் திரைக்கதை போக போக வேகமெடுக்கிறது. ஆனால், தலைப்புக்கு ஏற்றார் போல் கேங்ஸ்டர்ஸ்கள் அதிக பேர் இருந்தாலும் காட்சிகளிலும் சண்டைக் காட்சிகளிலும் சுவாரஸ்யத்தை சேர்க்காமல் விட்டிருக்கிறார் இயக்குனர் டேவிட் டிஃபல்கோ.

ஜிம் காஃப்மேனின் பின்னணி இசையும், தாமஸ் லெம்ப்கேவின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘கேங்ஸ்டர்ஸ்’ ரவுடிசம் குறைவு.
ஶ்ரீமன் நாராயண வைகுண்டர் நிகழ்த்திய அற்புதங்களை ‘ஒரு குடைக்குள்’ என்ற படம் மூலம் உருவாக்கி இருக்கிறார்கள்.
படம் ஆரம்பத்தில் ஒரு கிளி, தான் என்று தெரிந்துக் கொள்ள கடவுளிடம் கேட்கிறது. அதன்பின் பிளாஸ்பேக்கில் கதை நகர்கிறது. நாயகி மேக்னாராஜ் மிகவும் கடவுள் பக்தியுடன் இருந்து வருகிறார். அப்போது நாடோடி சிறுவன் சிவ தினேஷ் கோவிலில் தூங்குவதை பார்த்து தன்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.
சிவ தினேஷும் அவர்கள் வீட்டிலேயே தங்கி, கோவில் அருகே இருக்கும் ஒரு இடத்தில் தூங்கி வருகிறான். ஒருநாள் கோவிலுக்கு வருபவர்களுக்கு பிரசாதம் கொடுக்கிறாள் மேக்னா. அப்போது பிரசாதம் தீர்ந்து போக, சிவ தினேஷ் வைத்திருக்கும் பழங்களை மற்றவர்களுக்கு கொடுக்கிறான். அந்த பழங்களை சாப்பிட்டவர்களுக்கு இருக்கும் குறைகள் நீங்குகிறது.

இதே சமயம் அரக்கர்கள் ஓலைச்சுவடிக்காக நாயகி மேக்னாவின் அத்தை மகனை தேடி வருகிறார்கள். இதையறிந்த சிறுவன் சிவ தினேஷ், அரக்கர்களிடம் இருந்து மேக்னாவின் அத்தை மகனை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.
பூவண்டன் தோப்பு என்னும் சாமி தோப்பில் ஶ்ரீமன் நாராயண வைகுண்டர் நிகழ்த்திய அற்புதங்களை வரலாறாக எடுத்துச் சொல்லும் விதமாக ‘ஒரு குடைக்குள்’ படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் கே.எல்.உதயகுமார். கடவுளின் அற்புதங்களை பேசும் படமாக இருப்பதால் பார்ப்பதற்கு ஆவண படம் போல் இருக்கிறது. திரைக்கதைக்காக கொஞ்சம் சுவாரஸ்யம் சேர்த்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

வைகுண்டராக ஆனந்த் நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு ஓரளவிற்கு பொருந்தி இருக்கிறார். பக்தையாக வரும் மேக்னா அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். அவதார சிறுவனாக சிவ தினேஷ் அறிமுகமாகிறார். இவரது நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. நிரோஷா, கருத்தம்மா ராஜஶ்ரீ, இளவரசு, இராஜேந்திரநாத், ரவிராகுல், சூசன் ஜார்ஜ் ஆகியோர் கொடுத்த வேலைகளை செய்திருக்கிறார்கள்.
தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். இவர் பாடிய பாடல் ரசிக்க வைக்கிறது. வி.இராஜேந்திரன் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
மொத்தத்தில் ‘ஒரு குடைக்குள்’ கடவுளின் அற்புதம்.
ஜே.பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி நடிப்பில் வெளியாகி இருக்கும் மிருகா படத்தின் விமர்சனம்.
நாயகன் ஸ்ரீகாந்த், கணவரை இழந்த வசதியான பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களிடம் இருந்து பணத்தை பறித்து வருகிறார். இதை ஒரு பெண் கண்டுபிடித்து ஸ்ரீகாந்த்தை மிரட்டுகிறார். இதற்கு பயப்படும் ஸ்ரீகாந்த்திடம் என் அக்கா ராய் லட்சுமியை காதலித்து ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் படி கேட்கிறார்.
ஸ்ரீகாந்த்தும் இதை ஏற்று, ராய் லட்சுமி இருக்கும் இடத்தை தேடி போகிறார். ராய் லட்சுமியின் அழகில் மயங்கும் ஸ்ரீகாந்த், இறுதியில் அவரை ஏமாற்றி பணம் பறித்தாரா? ராய் லட்சுமியை உண்மையாக காதலித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீகாந்த், துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். கொள்ளையடிப்பது, ஏமாற்றுவது என்று கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் இருந்து மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார்.
நாயகியாக வரும் ராய் லட்சுமி, அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். புலிக்கு பயப்படும் காட்சியில் கவனிக்க வைத்திருக்கிறார். தேவ் கில், நைரா, வைஷ்ணவி சந்திர மேனன், த்விதா, பிளேக் பாண்டி ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

பாலாவின் உதவி இயக்குனர் ஜே பார்த்திபன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். அடுத்தடுத்து நடக்கும் காட்சிகளை யூகிக்கும் திரைக்கதை. தேவையில்லாத புலி காட்சிகள் ஆகியவை படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது. வித்தியாசமான கதை என்றாலும் திரைக்கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம்.
எம்.வீ.பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவு கவனிக்க வைக்கிறது. அருள் தேவ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘மிருகா’ சுவாரஸ்யம் குறைவு.
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ விமர்சனம்.
கிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள ஆசிரமத்தில் வளர்ந்தவர் ரெஜினா. இதனால் தான் சம்பாதிக்கும் பணத்தை முழுவதுமாக அந்த ஆசிரமத்திற்காக செலவு செய்கிறார். மறுபுறம் சபல குணம் படைத்த நாயகன் எஸ்.ஜே.சூர்யா, பணக்கார பெண்ணான நந்திதாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிறார். இவர்களுக்கு 4 வயதில் ஆண்குழந்தை இருக்கிறது.
அந்தக் குழந்தையை பார்த்துக் கொள்ள ரெஜினாவை அணுகுகிறார்கள். அதற்காக பெருந்தொகையை சம்பளமாக கொடுக்கிறேன் என சொல்கிறார்கள். அந்தப் பணம் ஆசிரமத்திற்கு உதவியாக இருக்கும் என்பதால், அதற்கு சம்மதிக்கிறார் ரெஜினா. நாளடைவில் நாயகன் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ரெஜினா மீது ஆசை வருகிறது. அவரை அடைய முயல்கிறார். இதன்பின் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் எஸ்.ஜே.சூர்யா, நடிப்பில் மிரட்டி இருக்கிறார். ஹீரோயிசம், வில்லத்தனம், காமெடி என அனைத்திலும் ஸ்கோர் செய்து ஆல்ரவுண்டராக வலம் வருகிறார். அவரது முழு நடிப்பு திறமையும் இப்படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக நடித்துள்ள நந்திதா, முதல் பாதியில் பெரிதாக ஸ்கோர் செய்யாவிட்டாலும், இரண்டாம் பாதியில் அசத்தி இருக்கிறார். அவர் பேசும் வசனங்கள் கைதட்டல்களை பெறுகின்றன. மறுபுறம் ரெஜினா நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி கவனிக்க வைக்கிறார்.

இயக்குனர் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா இவர்கள் மூவரையும் திறம்பட கையாண்டுள்ளார். குறிப்பாக எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரத்தை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார். அதேபோல் வசனங்களும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளன. முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும், இரண்டாம் பாதியில் சற்று தொய்வு தெரிகிறது. திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம்.

படத்தின் மற்றொரு ஹீரோ என்றால் அது யுவன் தான், அசத்தலான பின்னணி இசையின் மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். பாடல்களும் காட்சிகளோடு ஒன்றி பயணிக்கின்றன. அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சிகளும் கண்களுக்கு விருந்தாக அமைக்கின்றன.
மொத்தத்தில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ மனதில் நிற்கிறது.
கோகுல் இயக்கத்தில் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அன்பிற்கினியாள்’ படத்தின் விமர்சனம்.
எல்.ஐ.சி. ஏஜெண்டாகப் பணிபுரிந்து வருகிறார் அருண் பாண்டியன். இவரது ஒரே மகள் கீர்த்தி பாண்டியன் நர்ஸ் கோர்ஸ் முடித்து, அப்பாவின் கடனை அடைக்க கனடா சென்று வேலை பார்க்க முயற்சி செய்து வருகிறார். அதே சமயம் ஒரு சிக்கன் ஹப்பில் பார்ட் டைம் வேலை பார்க்கிறார் கீர்த்தி பாண்டியன்.
இதற்கிடையில் பிரவீன் ராஜை தந்தைக்கு தெரியாமல் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் இவர்களின் காதல் அருண் பாண்டியனுக்கு தெரியவர மன உளைச்சலுக்கு ஆளாகிறார். தந்தையின் வருத்தத்தை உணர்ந்து இரவு நேரம் ஆகியும் கவலைப்பட்டுக் கொண்டு சிக்கன் ஹப்பில் இருக்கிறார்.
அப்போது எதிர்பாராத விதமாக குளிரூட்டும் அறைக்குள் மாட்டிக் கொள்கிறார். இறுதியில் குளிரூட்டும் அறையில் இருந்து கீர்த்தி பாண்டியன் எப்படி வெளியே வந்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அருண் பாண்டியன் சொந்த மகள் கீர்த்தி பாண்டியனுக்காக ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். தன்னுடைய அனுபவ நடிப்பையும், உடல் மொழியையும் வெளிப்படுத்தி இருக்கிறார். மகள் மீதான பாசத்தையும், காணாமல் போன பிறகு ஏற்படும் தவிப்பையும் உணர வைக்கிறார். காவல் நிலையத்தில் போலீஸாரை அணுகும் விதத்தில் கைத்தட்டல் வாங்குகிறார்.
தும்பா படத்துக்குப் பிறகு இரண்டாவது படத்திலேயே நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படம் கீர்த்தி பாண்டியனுக்கு கிடைத்து இருக்கிறது. அன்பு கதாபாத்திரத்தை உணர்ந்து முழுமையான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார். துறுதுறு நடிப்பாலும், குளிரூட்டும் அறைக்குள் சிக்கிக் கொண்டு கஷ்டப்படும் காட்சிகளிலும் அசர வைக்கிறார்.

கீர்த்தி பாண்டியனின் காதலனாக வரும் பிரவீன் ராஜ் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். எஸ்.ஐ.யாக நடித்த ரவீந்திர விஜய், சிக்கன் கடை மேலாளராக நடித்த பூபதி ராஜா, மால் செக்யூரிட்டியாக நடித்த ஜெயராஜ், ஏட்டாக நடித்த அடிநாட் சசி என அனைவரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார்கள். ஒரு காட்சியில் வந்தாலும், நடிப்பில் அசத்தி இருக்கிறார் இயக்குனர் கோகுல்.
மலையாளத்தில் வெற்றி பெற்ற 'ஹெலன்' படத்தைத் தமிழில் ரீமேக் செய்துள்ளார் இயக்குநர் கோகுல். 'ரௌத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா', 'ஜுங்கா' படங்களுக்குப் பிறகு அவர் இயக்கிய ஐந்தாவது படம். ரீமேக் படத்தை இயக்க தனி திறமை வேண்டும். கதையின் தன்மை மாறாமல் விறுவிறுப்பாக திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஸ்கோர் செய்ய வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜாவித் ரியாஸின் இசையும், பின்னணியும் படத்திற்கு பெரிய பலம். இவரது இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி குளிரூட்டும் அறையை வெவ்வேறு கோணங்களில் காட்டி கவனிக்க வைக்கிறார்.
மொத்தத்தில் ‘அன்பிற்கினியாள்’ பேரன்பு.
சகாயநாதன் இயக்கத்தில் டிட்டோ, ஸ்ரீ மகேஷ், தீபா உமாபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் செந்தா படத்தின் விமர்சனம்.
பள்ளியில் படித்து வரும் நாயகி செந்தாமரை, தன்னுடன் படிக்கும் சிவாவை காதலித்து வருகிறார். சிவாவிற்கு நண்பராகவும், செந்தாமரையின் குடும்ப நண்பராகவும் சூர்யா இருக்கிறார். சிவாவை காதலிக்கும் விஷயம் செந்தாமரையின் பெற்றோர்களுக்கு தெரிந்து எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
பெற்றோர்களின் எதிர்ப்பால் சிவாவுடன் பழகுவதை நிறுத்திக் கொள்கிறார் செந்தாமரை. பின்னர் செந்தாமரையை சூர்யாவிற்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் ஏற்பாடு செய்கிறார்கள். இதற்கு சூர்யா மறுக்க, வேறொருவருக்கு செந்தாமரையை திருமணம் செய்து வைக்கிறார்கள்.
திருமணத்திற்குப் பிறகு செந்தாமரையின் கணவர் இறக்க, அவரது வாழ்க்கை கேள்வி குறியாகிறது. இறுதியில் செந்தாமரையின் நிலைமை என்ன? மீண்டும் காதலருடன் இணைந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

சூர்யா, சிவா கதாபாத்திரத்தில் டிட்டோ, ஸ்ரீ மகேஷ் நடித்திருக்கிறார்கள். புதுமுகங்கள் என்பதால் ஓரளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நாயகியாக செந்தாமரை கதாபாத்திரத்தில் தீபா உமாபதி நடித்திருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படம் என்பதை நாயகி உணரவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
கதை எழுதி தயாரித்திருக்கும் வி.மணிபாய் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். கதையிலும் சகாயநாதனின் இயக்கத்திலும் கவனம் செலுத்தி இருக்கலாம். ஒவ்வொரு காட்சிக்கும் சம்மந்தம் இல்லாதது போல் இருக்கிறது. நிறைய தேவையில்லாத காட்சிகளை புகுத்தி இருக்கிறார்கள்.
பால் லிவிங்ஸ்டனின் ஒளிப்பதிவும், டி.எஸ்.முரளிதரனின் இசையும் படத்திற்கு பெரியதாக கைக்கொடுக்கவில்லை.
மொத்தத்தில் ‘செந்தா’ ஓவர் பந்தா.
ராபர்ட் லோரென்ஸ் இயக்கத்தில் லியாம் நீசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் தி மார்க்ஸ் மேன் படத்தின் விமர்சனம்.
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான லியாம் நீசன் தனியாக வசித்து வருகிறார். இவரது மகள் எல்லை பாதுகாப்பு பிரிவில் வேலை பார்க்கிறார். பக்கத்து ஊரில் இருக்கும் ஒரு தாய் தன்னுடைய மகனுடன் லியாம் நீசன் இருக்கும் ஊருக்கு தஞ்சம் அடைகிறார். இவர்களை ஒரு கும்பல் துரத்துகிறது.
ஒரு கட்டத்தில் அந்த கும்பல் தாயை கொல்ல, சிறுவனை லியாம் நீசன் காப்பாற்றுகிறார். மேலும் இந்த சிறுவனை வேறொரு ஊரில் இருக்கும் மாமாவிடம் சேர்க்கும்படி அவரது தாய் சொல்லிவிட்டு இறக்கிறார்.

இறுதியில் அந்த மர்ம கும்பலிடம் இருந்து சிறுவனை காப்பாற்றி அவரது மாமாவிடம் லியாம் நீசன் சேர்த்தாரா? மர்ம கும்பல் சிறுவனை துரத்த காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் சிறுவனை காப்பாற்ற போராடும் லியாம் நீசன் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். அதே போல் சிறுவனும் அவருக்கு இணையாக நடித்து அசத்தி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் அவர்களது பங்களிப்பை சிறப்பாகவே கொடுத்திருக்கிறார்கள்.
மெதுவாக தொடங்கி வேகமெடுக்கும் திரைக்கதை பின்னர் மீண்டும் மெதுவாக செல்வதால் படத்தின் விறுவிறுப்பு குறைகிறது. ஆங்கிலப் படத்திற்கு உண்டான அதே திரைக்கதை டெம்ளேட் இந்த படத்திலும் அமைந்திருக்கிறார் இயக்குனர் ராபர்ட் லோரென்ஸ். தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் இப்படம் ஆக்சன், செண்டிமெண்ட் என தமிழ் ரசிகர்கள் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்கள்.

சீன் காலரியின் பின்னணி இசை படத்தின் வேகத்திற்கு உதவி இருக்கிறது. மார்க் பாட்டனின் ஒளிப்பதிவை ஆங்காங்கே ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘தி மார்க்ஸ்மேன்’ விறுவிறுப்பு குறைவு.
விக்கி ரனாவத் இயக்கத்தில் அர்பித் சோனி, இனாயத் சர்மா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘திருட்டு அழகி’ படத்தின் விமர்சனம்.
கல்லூரியில் பயின்று வரும் 3 நண்பர்கள் பார்ட்டி கொண்டாடுவதற்காக கோவா செல்கிறார்கள். அங்கு ஜாலியாக சுற்றிவிட்டு ஊர் திரும்புகிறார்கள். அப்போது அர்பித் சோனி தனது வீட்டில் இரண்டு நண்பர்களுடன் இருக்கும் போது, ஒரு பெண் வீட்டுக்கு வருகிறாள். அவளை பார்த்ததும் அழகில் மயங்கும் இவர்கள் மூவரும் அப்பெண்ணை தங்களது வீட்டில் தங்க வைக்கின்றனர்.
அவர்களின் பலவீனத்தை பயன்படுத்திக் கொள்ளும் அந்தப் பெண், சென்ற இடத்தில், தனது கைவரிசையை காட்டுகிறாள். அங்கிருக்கும் நகை பணத்தை கொள்ளையடித்துவிட்டு செல்கிறாள். இதையடுத்து அந்த நண்பர்கள் மூவரும் அந்த பெண்ணை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதை.

நண்பர்களாக நடித்திருக்கும் அர்பித் சோனி, அன்கூர் வர்மா, மோகித் அரோரா ஆகிய மூவரும் ஓவர் ஆக்டிங் செய்து புதுமுகங்கள் என்பதை நிரூபித்துள்ளார்கள். நாயகி இனாயத் சர்மா கவர்ச்சியில் தாராளம் காட்டி உள்ளார். மற்றபடி நடிப்பில் பெரிதாக சோபிக்கவில்லை.
முழுக்க முழுக்க அடல்ட் காமெடி படமாக இப்படத்தை எடுத்துள்ளனர். பிகினி காட்சிகள் தான் படத்தில் ஏராளமாக உள்ளன. டப்பிங் சரிவர எடுபடவில்லை. டப்பிங்கில் காமெடி காட்சிகள் ஒர்க் அவுட் ஆகாதது படத்திற்கு மிகப்பெரிய மைனஸ்.

கிளாமரையும் அடல்ட் காமெடியை மட்டும் நம்பியே இப்படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் விக்கி ரனாவத். கதை, திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார்.
நேர்த்தியான ஒளிப்பதிவால் கோவாவின் அழகை திரையில் கொண்டுவந்து கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் ககரின் மிஷ்ரா. ஹர்மோனியின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான்.
மொத்தத்தில் ‘திருட்டு அழகி’ கவர்ச்சி.
சபரீஸ் எம் இயக்கத்தில், மறைந்த நடிகை விஜே சித்ராவின் நடிப்பில் வெளியாகி இருக்கும் கால்ஸ் படத்தின் விமர்சனம்.
சென்னையில் இருக்கும் கால் சென்டர் ஒன்றில் வேலை செய்கிறார் விஜே சித்ரா. டார்கெட்டை அடைய முடியாததால் வேலையை இழக்கும் அபாயத்தில் இருக்கிறார். இவர் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு பிரச்சனையில் இருக்கிறார்கள்.


அதே சமயம் மர்ம நபர் ஒருவர் போனில் சித்ராவுக்கு தொல்லை கொடுத்து வருகிறார். இதற்கிடையில் ஊரில் மர்மமான முறையில் கொலைகள் நடக்கிறது. சென்னை ஆந்திரா எல்லையில் ஒரு பெண்ணின் சடலமும் கிடைக்கிறது.
இறுதியில் சித்ரா டார்கெட்டை அச்சீவ் செய்து வேலையை காப்பாற்றிக் கொண்டாரா? சித்ராவிற்கு போனில் தொந்தரவு கொடுத்தது யார்? மர்மக் கொலைகள் நடக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகியாக நடித்திருக்கும் விஜே சித்ரா தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். கோபம், பயம், சிரிப்பு என தனக்கு கொடுத்த வாய்ப்பை சிறப்பாகவே செய்து இருக்கிறார். மற்ற நிறைய கதாபாத்திரங்கள் படத்தில் இருக்கிறார்கள். ஆனால் யாருமே மனதில் நிற்கவில்லை.
இந்த படம் பெண்களுக்கான படம், இளைஞர்களுக்கான படம், வெற்றியடைய போராடுபவர்களுக்கான படம், என சொல்லிக்கொண்டே போகலாம். இவை அதிகப்படியாக இருப்பதால் படம் சுவாரஸ்யத்தை இழக்கிறது.

தேவையற்ற கதாபாத்திரங்கள், அவர்கள் அனைவரும் தத்துவம் பேசுவது என காட்சிகளை திணித்து இருக்கிறார் இயக்குனர் சபரீஸ் எம். சொல்ல வந்த விஷயத்தை தெளிவில்லாமல் திரைக்கதையில் சொதப்பி இருக்கிறார். படத்தில் மெடிக்கல் கிரைம், பெண்கள் பாதுகாப்பு சொல்லியும் பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. இவரின் ஒளிப்பதிவும் கதைக்கு கை கொடுக்கவில்லை. தமீன் அன்சாரியின் இசை பக்கபலமாக இருக்கிறது.
மொத்தத்தில் 'கால்ஸ்' ராங் கால்.
ஜெய்சங்கர் இயக்கத்தில் ஆர்கே.சுரேஷ், சுபிக்ஷா, ராம்கி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வேட்டை நாய்’ படத்தின் விமர்சனம்.
கொடைக்கானல் பகுதியில் மாமா, அத்தையுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் ஆர்.கே.சுரேஷ். அதே பகுதியில் தாதாவாக இருக்கும் ராம்கியிடம் அடியாளாக வேலை பார்க்கும் ஆர்.கே.சுரேஷ், அவர் சொல்லும் குற்ற செயல்களை செய்து வருகிறார். இந்நிலையில் சுபிக்ஷாவை பார்த்ததும் காதல் வயப்படுகிறார் ஆர்கே.சுரேஷ். துரத்தி துரத்தி காதலித்து ஒரு கட்டத்தில் அவரையே திருமணமும் செய்துகொள்கிறார்.


திருமணத்திற்குப் பிறகு, ராம்கியிடம் ஆர்.கே.சுரேஷ் வேலைக்கு செல்வதை தடுக்கிறார். அதே சமயம், ஆர்.கே.சுரேஷால் பாதிக்கப்பட்ட ஒரு கும்பலும், ராம்கியிடம் அடியாளாக இருப்பவரும் அவரை கொல்ல முயற்சி செய்கிறார்கள். இறுதியில் ஆர்.கே.சுரேஷ் மனைவி சுபிக்ஷாவின் பேச்சைக் கேட்டு திருந்தினாரா? எதிரிகளிடம் இருந்து ஆர்.கே.சுரேஷ் தப்பித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக ஆர்கே.சுரேஷ். முதல் பாதியில் குற்ற செயல்களில் ஈடுபடுவது, சுபிக்ஷாவை துரத்தி துரத்தி காதலிப்பது என்பது எதிர்மறையாக தெரிந்தாலும் இரண்டாம் பாதியில் தன் தவறுகளை உணர்ந்து திருந்தும்போது தேர்ந்த நடிகராக பரிணாமிக்கிறார். இறுதிக்காட்சிகளில் உருக்கமாக நடித்து கவர்கிறார். சுயநலத்துக்காக ஆர்கே.சுரேஷை பயன்படுத்திக்கொள்ளும் கதாபாத்திரத்தில் ராம்கி. தோற்றத்திலும் நடிப்பிலும் ஸ்டைலாக கலக்கி என்றும் நாயகன் என்று நிரூபித்திருக்கிறார்.
நாயகி சுபிக்ஷாவுக்கு கதையை தாங்கும் வேடம். இடைவேளை வரை அழகு பதுமையாக வருபவர் ஆர்கே.சுரேஷை திருமணம் செய்துகொண்ட பிறகு பொறுப்பான பெண்ணாக மாறி சிறப்பாக நடித்துள்ளார். கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆர்.கே.சுரேஷிடம் கோபப்படுவது, கணவர் சந்தேகப்படுவதாக நினைப்பது, பள்ளி பருவத்தில் வெகுளியான நடிப்பு என நடிப்பில் பளிச்சிடுகிறார். மற்ற கதாபாத்திரங்களான ஜோதிமணி, விஜய் கார்த்திக், நமோ நாராயணன் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

தாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை, பெண்கள் பேச்சை கேட்காத ஆண்களின் நிலைமையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜெய்சங்கர். கமர்ஷியல் படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொடுத்திருக்கிறார். ஆனால், இரண்டாம் பாதியில் உள்ள நீளத்தை குறைத்திருக்கலாம். இன்னும் கூட கதாபாத்திரங்களிடையே வேலை வாங்கி இருக்கலாம்.
கணேஷ் சந்திரசேகரனின் இசை படத்துக்கு ஓரளவிற்கு பலம் சேர்த்திருக்கிறது. பின்னணியிலும் கவனிக்க வைத்திருக்கிறார். முனீஸ் ஈஸ்வரனின் ஒளிப்பதிவில் கொடைக்கானலின் மலையழகு ரம்மியம்.
மொத்தத்தில் ‘வேட்டை நாய்’ குடும்ப பிணைப்பு.
வெற்றிமாறன் தயாரிப்பில் மணிமாறன் இயக்கத்தில் சமுத்திரகனி, கருணாஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் சங்கத்தலைவன் படத்தின் விமர்சனம்.
மாரிமுத்து நடத்தி வரும் தறி நெய்யும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார் கருணாஸ். இங்கு வேலை செய்து வரும் ஒரு பெண்ணுக்கு விபத்து ஏற்பட்டு கை துண்டாகிறது. இந்த பெண்ணுக்கு நஷ்ட ஈடு வழங்காமல் ஏமாற்ற நினைக்கிறார் மாரிமுத்து.
இந்நிலையில் ஊரில் நெசவுத் தொழிலாளர்களுக்காக சங்கம் வைத்து போராடும் சமுத்திரக்கனியிடம் இந்த பிரச்சனையை மறைமுகமாக எடுத்து செல்கிறார் கருணாஸ். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நஷ்ட ஈடை சமுத்திரக்கனி, முறையாக பெற்றுக் கொடுக்கிறார்.

ஒருகட்டத்தில், சமுத்திரக்கனியிடம் பிரச்சனையை கொண்டு சென்றது கருணாஸ் தான் என மாரிமுத்துவிற்கு தெரிய வருகிறது. இதனால் கோபமடையும் மாரிமுத்து, கருணாசை கொல்ல நினைக்கிறார். இதிலிருந்து கருணாஸ் தப்பித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
காமெடி கதாபாத்திரங்களில் அதிகமாக பார்க்கப்பட்ட கருணாஸ், இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார். காமெடி, காதல், துணிச்சல் என இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சங்கத்தலைவனாக வரும் சமுத்திரக்கனி, ஏன் போராட வேண்டும், யாருக்காக போராட வேண்டும் என்று பேசி கதாபாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறார்.

சமுத்திரகனியின் மனைவியாக வரும் ரம்யா, பேச்சு மற்றும் உடல் மொழியில் கிராமத்து பெண்ணாக மாறி இருக்கிறார். குறிப்பாக கருநாசை ஊக்கப்படுத்த இவர் பேசும்போது நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். கருணாஸை காதலிப்பவராக வரும் சுனு லட்சுமி சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். மாரிமுத்துவின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.
தறியுடன் என்ற நாவலை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் மணிமாறன். முதலாளித்துவம், தொழிலாளர்கள், போராட்டம் என திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் கொஞ்சம் குறைவு. படத்தின் வசனங்கள் பிளஸ்.

ராபர்ட் சற்குணத்தின் இசையில் பாடல்கள் படத்தோடு ஒன்றியிருக்கிறது. பின்னனி இசையில் ஸ்கோர் செய்திருக்கிறார். ஸ்ரீநிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் ‘சங்கத் தலைவன்’ சிறந்தவன்.






