என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    காந்தியம் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட சினேகன், பெரிய படங்கள் ஓடுவதில்லை என்று கூறியிருக்கிறார்.
    ஜெய் ஸ்ரீ ராம் கிரியேஷன்ஸ் சார்பில் லிங்கா தயாரித்து இயக்கி ஹீரோவாக நடிக்கும் படம் ‘காந்தியம்’. இப்படத்தில் ஹீரோயினாக அக்‌ஷதா நடிக்க, மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தனசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஸ்ரீசாய் தேவ் இசையமைத்திருக்கிறார். கவிஞர் செ.காளிமுத்து, சரண்யா, ஜோகி பி.சரண், மறைந்த அண்ணாமலை ஆகியோர் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள்.

    இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட சினேகன் பேசுகையில், “இந்த நிகழ்ச்சிக்கு நான் வர முக்கிய காரணம் பாடலாசிரியர் காளிமுத்து. நான் பல காவல்துறை அதிகாரிகளை பார்த்திருக்கிறேன், அவர்கள் தமிழ் பற்று அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள், எப்படி தான் அவர்களால் அப்படி இருக்க முடிகிறது என்று கூட நான் யோசித்திருக்கிறேன். ஒரு பக்கம் காவல் பணி, மறுபக்கம் தமிழை காக்கும் பணி என்று பேலன்ஸ் செய்வார்கள். அவர்களைப்போன்ற ஒரு காவல்துறை அதிகாரி தான் காளிமுத்து. அவர் எழுதிய கவிதை புத்தகங்களை நான் வெளியிட்டிருக்கிறேன். தற்போது அவர் பாடலாசிரியாக அறிமுகமாகியிருக்கும் படத்தின் இசை வெளியீட்டில் பங்கேற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    காந்தியம் பட விழா

    ‘காந்தியம்’ என்ற தலைப்பே ஈர்க்கிறது. அகிம்சை என்ற ஒன்றை உலகிற்கு கற்றுக்கொடுத்த காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ல் இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு நடைபெறுவது சிறப்பானதாகும். இந்த படம் ஆக்‌ஷன் படம் என்று சொன்னார்கள். காந்தியம் என்ற தலைப்பு வைத்துவிட்டு ஆக்‌ஷன் இருக்கிறது என்றால், அதற்கு நிச்சயம் பெரிய காரணம் இருக்கும், அது சுவாரஸ்யமானதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.

    இப்போதெல்லாம் சிறிய படங்கள் தான் வெற்றி பெறுகிறது. பெரிய படங்கள் ஓடுவதில்லை. அதனால் சிறிய படங்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். அந்த வகையில் இந்த ‘காந்தியம்’ நிச்சயம் வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
    தண்டாயுதபாணி, நாயகன் படத்தை இயக்கியவரும் குட்டிப்புலி படத்தில் நடித்தவருமான சரவண சக்தி, முன்னணி நடிகரை வைத்து இயக்க தயாராகி வருகிறார்.
    தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்பு நடிகராக ஜொலித்தவர்கள் மணிவண்ணன், மனோபாலா, சிங்கம்புலி என நிறையபேர் இருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது இயக்குனர் மற்றும் நடிகர் குட்டிப்புலி புகழ் சரவண சக்தியும் இணைந்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் தண்டாயுதபாணி படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்தவர் சரவண சக்தி. அதன் பின்பு ரித்தீஷ் உடன் இணைந்து இவர் இயக்கிய 'நாயகன்' படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வசூலையும் வாரிக் குவித்தது.

    ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு சசிகுமாரின் நடிப்பில் வெளிவந்த குட்டிபுலி படத்தில் இயக்குனர் முத்தையா இவரை நடிகனாக அறிமுகம் செய்தார். அந்த கதாபாத்திரம் ரசிகர்களை கவர, அதைத் தொடர்ந்து மருது, சண்டக்கோழி 2, கொடிவீரன், தர்மதுரை போன்ற படங்களில் நடித்தார். தற்போது மாமனிதன், ரண சிங்கம், அடுத்த சாட்டை, வால்ட்டர் என 25 படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார்.

    சரவண சக்தி

    எனினும் தன்னுள் உள்ள இயக்குனர் என்ற படைப்பாளன் இவரை விடாது துரத்தவே ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் பில்லா பாண்டி படத்தை இயக்கினார். தமிழில் தற்போது முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வரும் இவர் விரைவில் தனது அடுத்த படத்தை இயக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இதற்காக ஒரு முன்னணி கதாநாயகருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருக்கிறார்கள்.
    ஈட்டி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு, அடுத்ததாக கன்னட சூப்பர் ஸ்டாரை இயக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
    ஈட்டி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரவி அரசு. அதர்வா கதாநாயகனாக நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் குமாரை வைத்து ‘ஐங்கரன்’ படத்தை இயக்கினார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

    இந்நிலையில், அடுத்த படத்தை இயக்க தயாராகி விட்டார் இயக்குனர் ரவி அரசு. இவர் அடுத்ததாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரை வைத்து படம் இயக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். 

    சிவராஜ்குமார் - ரவி அரசு

    இந்த புதிய படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இதில் சிவராஜ் குமார் போலீஸ் வேடத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கிறது.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டியில் அவருடன் நடனம் ஆடுவது ரொம்ப கஷ்டம் என்று கூறியிருக்கிறார்.
    நாகசைதன்யாவை திருமணம் செய்த பிறகும் சமந்தா தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கிறார். ஆனால் காதல் கதைகளில் நடிப்பதை தவிர்த்துவிட்டு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் நடிக்கிறார். 

    சமந்தா சமீபத்தில் பேட்டியில், தான் நடிகையாக அடுத்த கட்டத்திற்கு செல்ல விரும்புவதாக கூறியுள்ளார். அதனால் தான் இப்படி காதல் கதைகளை நிராகரிப்பதாக கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் உடன் தான் நடனம் ஆடுவது மிக சிரமம் என கூறியுள்ளார். 

    ஜூனியர் என்.டி.ஆர். - சமந்தா

    ’அவர் சாதாரணமாக ஆகிவிடுகிறார். நான் தான் பலமுறை ரிகர்சல் செய்வேன். அவருடன் ஆடினால் என் மேக்கப், தலைமுடி களைந்து வியர்வையில் நனைந்து வருவேன்’ என சமந்தா கூறியுள்ளார்.
    புகழ்மணி இயக்கத்தில் யோகி பாபு, ராம் சுந்தர், பிரியங்கா நடிப்பில் உருவாகும் ’காவி ஆவி நடுவுல தேவி’ படத்தின் முன்னோட்டம்.
    பதினொரு கெட்டப்புகளில் யோகி பாபு நடிக்கும் வி.சி.குகநாதன் கதையில் புகழ்மணி இயக்கத்தில் "காவி ஆவி நடுவுல தேவி" படம் உருவாகிறது. யோகி பாபு, தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி நால்வரும் இணைந்து கலக்கும் படம் தான் "காவி ஆவி நடுவுல தேவி". மனோன்ஸ் சினி கம்பைன் சார்பில் ஆருரான் தயாரிக்கும் இதன் கிராபிக்ஸ் காட்சிகள் பரமிப்பூட்டும் வகையில் தயாராகி உள்ளது. 

    இப்படத்தின் மூலம் ராம் சுந்தர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார். "காதலை சேர்த்து வைக்கும் கேரக்டரில் வரும் யோகிபாபு அதற்காக பதினொரு விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சியை கவனிக்கிறார். 

    யோகி பாபு

    வி.சி.குகநாதன் கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு கணேசன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். படத்தொகுப்பை ராஜ் கீர்த்தியும் | பாடல்களை டாக்டர் ஹிருதயா, ஜீவன் மயில் இருவரும் எழுத நடன பயிற்சியை சிவசங்கரும், சிவராக் சங்கரும் கவனித்துள்ளனர். தயாரிப்பு நிர்வாகத்தை கே.தமிழ்செல்வன், எம்.சரவணனும், மேற்பார்வையை ஜெ.துரையும் கவனித்துள்ளனர். விரைவில் திரைக்கு வர உள்ளது." காவி ஆவி நடுவுல தேவி". படத்தின் வசனம் எழுதி புகழ்மணி இயக்கி உள்ளார்.
    புகழ்மணி இயக்கத்தில் உருவாகும் ‘காவி ஆவி நடுவுல தேவி’ படத்தில் யோகி பாபு 11 தோற்றங்களில் நடிக்கிறார்.
    பல படங்களுக்கு வசனம் எழுதிய புகழ்மணி, ‘காவி ஆவி நடுவுல தேவி’ என்ற புதிய படத்தை டைரக்டு செய்து இருக்கிறார். இதில், யோகி பாபு 11 தோற்றங்களில் வந்து காதலர்களை சேர்த்து வைக்க துடிப்பது போல் நடித்துள்ளார். இந்த படத்தில், கதாநாயகனாக ராம்சுந்தர் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடித்து இருக்கிறார். இவர்களுடன் தம்பிராமய்யா, டைரக்டர் புகழ்மணி ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருக்கிறார்.

    யோகி பாபு

    படத்தின் கதாசிரியர் வி.சி.குகநாதன் கூறிய தாவது:- “இது, முழுக்க முழுக்க நகைச்சுவை படம். காதலர்களை சேர்த்து வைக்கும் குழலூதும் கண்ணனாக யோகி பாபுவும், அவருக்கு எதிராக காதலர்களை பிரித்து வைப்பவராக மொட்டை ராஜேந்திரனும், மலையாள மந்திரவாதியாக இமான் அண்ணாச்சியும் நடித்துள்ளனர். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.” என தெரிவித்தார்.
    சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, சுதீப், நயன்தாரா, தமன்னா நடிப்பில் வெளியாகி இருக்கும் சைரா நரசிம்மா ரெட்டி படத்தின் விமர்சனம்.
    ஆந்திராவின் கர்னூல் பகுதியில் உய்யலவாடா நரசிம்மா ரெட்டி (சிரஞ்சீவி) ஒரு சிற்றரசராக ஆட்சி செய்து வருகிறார். ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் வளங்களைக் கண்டு அடிமைப்படுத்தி இருந்த காலநிலையில் சிற்றரசருக்கான அதிகாரம் அவருக்கு இல்லாவிட்டாலும் அவரை அரசராகவே பாவித்து மக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். வறட்சி, பசி, பட்டினியில் தவிக்கும் மக்களிடம் ஆங்கிலேயர்கள் வரிகட்ட சொல்லி வற்புறுத்த, அதை எதிர்த்து ஆங்கிலேயர்களின் பகையை சம்பாதிக்கிறார் நரசிம்மா ரெட்டி. 

    இதனால் அவரை ஆங்கிலேயப் படைகள் குறி வைக்கின்றன. ஆங்கிலேயர்கள் சைரா மீதுள்ள மதிப்பை குலைப்பதற்காக முயல்கிறார்கள். ஆனால் சைராவுடன் மக்கள் துணை நிற்கின்றனர். ஆங்கிலேயர்களுடன் போரிட்டு வெல்லும் நோக்கில் தன்னுடன் இருக்கும்  மானியக்காரர்கள் என்னும் சிற்றரசர்களை இணைக்கும் முயற்சியில் நரசிம்மா ரெட்டி ஈடுபடுகிறார். முதலில் மறுக்கும் சிற்றரசர்கள் பின்னர் சைராவுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை பார்த்து நரசிம்மா ரெட்டியுடன் இணைந்து ஆங்கிலேய படைகளுக்கு எதிராகப் போராடுகின்றனர். 

    நரசிம்மா ரெட்டி விமர்சனம்

    இதற்கிடையே நடக்கும் துரோகத்தால் நரசிம்மா ரெட்டியை ஆங்கிலேயப் படை கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துகிறது. அதன் பிறகு நரசிம்மா ரெட்டி என்ன ஆகிறார், அவரின் வீர உணர்வும் சுதந்திர போராட்டமும் என்ன ஆனது, நரசிம்மா ரெட்டிக்கு யாரால் துரோகம் நிகழ்ந்தது? போன்ற கேள்விகளுக்கு படம் விடை தருகிறது. 'பாகுபலி'க்கு பிறகு தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் 'சைரா நரசிம்மா ரெட்டி'. சுதந்திர போராட்டத்தை மையமாக கொண்டு உண்மையில் வாழ்ந்த ஒரு வீரனின் வாழ்க்கையை இயக்குனர் சுரேந்தர் ரெட்டி படமாக்கி இருக்கிறார். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டம் தெரிகிறது. 

    நரசிம்மா ரெட்டியாக சிரஞ்சீவி வாழ்ந்து இருக்கிறார். தண்ணீருக்குள் தவம் இருக்கும் அவரது அறிமுக காட்சியிலேயே அசத்துகிறார். வீரம், காதல், இரக்கம், விட்டு கொடுத்தல், மக்களை ஒருங்கிணைப்பது என்று கதாபாத்திரத்துக்கு வலு கூட்டி இருக்கிறார். இனி சைரா என்றாலே சிரஞ்சீவி முகம் தான் நினைவுக்கு வரும். அதிலும் கடைசி 20 நிமிட காட்சிகள் சிரஞ்சீவி ரசிகர்களுக்கே உரியது. அரவிந்த்சாமியின் குரல் மட்டும் சற்று பொருந்தாதது போல் தெரிகிறது.

    நரசிம்மா ரெட்டி விமர்சனம்

    நயன் தாரா, தமன்னா என 2 கதாநாயகிகள். இருவருக்குமே சிரஞ்சீவிக்கு உதவியாக இருக்கும் வேடங்கள். சரியாக செய்து இருக்கிறார்கள். அவர்களது நடிப்புக்கு தீனி போட ஆளுக்கு ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளது. சிரஞ்சீவியின் குருவாக அமிதாப் பாந்தமான நடிப்பால் கவர்கிறார். சிரஞ்சீவியின் எதிரியாக அறிமுகமாகி உற்ற நண்பனாக மாறும் சுதீப்பும், சிரஞ்சீவியின் உயிர்த்தோழனாக விஜய் சேதுபதியும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக வழங்கி உள்ளார்கள். 

    ஜெகபதி பாபு, நாசர், ரவி கிஷன், ரோகிணி ஆகியோருக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. தமிழில் வசனங்கள் எழுதிய விஜய் பாலாஜிக்கு பாராட்டுகள். கமல்ஹாசனின் குரலும் அனுஷ்காவின் சிறப்பு தோற்றமும் சிறப்பு. 1700களின் காலகட்டத்தை ஒளிப்பதிவாளர் ரத்னவேலு நம் கண் முன்னே நிறுத்தி இருக்கிறார். போர்க்கள காட்சிகள் பாகுபலியை நினைவுபடுத்தும் அளவுக்கு பிரம்மாண்டம். அமித் திரிவேதியின் இசையில் டைட்டில் பாடல் உத்வேகம் அளிக்கிறது. ஜூலியஸ் பாக்கியத்தின் பின்னணி இசை படத்தின் ஆகச்சிறந்த பலம். ஸ்ரீகர் பிரசாத் காதல் காட்சிகளுக்குக் கத்தரி போட்டிருக்கலாம்.

    நரசிம்மா ரெட்டி விமர்சனம்

    கலை இயக்கம், உடைகள், மேக்கப், ஒலி வடிவமைப்பு, கிராபிக்ஸ், சண்டைக் காட்சிகள் என்று அனைத்திலும் நேர்த்தி பளிச்சிடுகிறது. திரைக்கதையில் ஆங்காங்கே ஏற்படும் தொய்வுகள் மட்டுமே படத்தின் பலவீனம். சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை என்றாலே இப்படி தொடங்கி இப்படி முடியும் என்ற நேர்க்கோட்டிலேயே திரைக்கதை பயணிப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. வலுவான திரைக்கதை அமைத்து இருந்தால் இன்னொரு பாகுபலியாக அமைந்து இருக்கும். 

    மொத்தத்தில் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ வரலாறு மறந்த ஒரு வீரனை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
    சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது இயக்குனர் கெளதம் மேனன் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தார்.
    கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இதில், தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். தர்புகா சிவா இசையமைத்திருக்கும் இந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார். இந்த படம் பண நெருக்கடி, கோர்ட்டு வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் திட்டமிட்டபடி வெளியாகாமால் தள்ளிப்போனது.

    தனுஷ், மேகா ஆகாஷ்

    இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவரிடம் எனை நோக்கி பாயும் தோட்டா படம் ரிலீஸ் குறித்து மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கெளதம் மேனன், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் நவம்பர் 15ம் தேதி கட்டாயம் வெளியாகும். நானும் அதற்காகத்தான் காத்திருக்கிறேன் என கூறினார்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகும் தளபதி 64 படம் பூஜையுடன் தொடங்கியது.
    ’பிகில்' படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். தற்போது இதில் விஜய்யுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. 'தளபதி 64' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் வில்லனாக விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீசும் நடிக்க உள்ளார். 

    அடுத்து விஜய்யுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சாந்தனு நடிக்க உள்ளதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதனை தொடர்ந்து இந்த படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதையும் அறிவித்துள்ளது. தமிழில் ரஜினி நடித்த 'பேட்ட' படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்தவர்தான் மாளவிகா மோகனன். விஜய் படத்தின் மூலம் தமிழில் நாயகியாக வலம் வரவுள்ளார். 

    போஸ்டர்

    இந்நிலையில், இப்படம் பூஜையுடன் இன்று தொடங்கப்பட்டது. இதில் விஜய், விஜய் சேதுபதி, அனிருத், மாளவிகா மோகனன், சாந்தனு, ஸ்டண்ட் சில்வா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். 

    தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான சைரா நரசிம்மா ரெட்டி படத்தை பார்த்த 7 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
    கர்னூல்:

    தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் நேற்று வெளியான படம் சைரா நரசிம்மா ரெட்டி. 1700-களில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரரான உய்யலவாடா ரெட்டியின் வாழ்க்கையை கருவாக கொண்டு அமைந்த இந்த படம் சிரஞ்சீவியின் சிலகால இடைவெளிக்கு பின் நடிக்கும் படம் என்பதால் ஆந்திரா, தெலுங்கானாவில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் படம் அமைந்ததால் அவர்கள் உற்சாகம் அடைந்தனர். ஆனால் சைரா நரசிம்மா ரெட்டி படம் 7 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களின் வேலைக்கே உலை வைத்து விட்டது. பொதுவாக அபிமான நடிகர்களின் படங்கள் ரிலீசானால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கட் அடித்துவிட்டு சினிமாவுக்கு செல்வார்கள்.

    அதேபோல் இவர்களும் பணி நேரத்தில் தியேட்டருக்கு சென்று சைரா படத்தை பார்த்ததுடன் ஆட்டம் போட்டு மகிழ்ந்துள்ளனர். அப்போது எடுத்த படம் வெளியில் கசிந்ததால் இப்போது சஸ்பெண்டு ஆகியிருக்கிறார்கள். அந்த 7 சப் இன்ஸ்பெக்டர்களும் கர்னூல் மாவட்ட காவல்துறையை சேர்ந்தவர்கள்.

    நேற்றைய தினம் காந்தி ஜெயந்தி என்பதால் நாடு முழுவதும் கிராமசபை கூட்டங்கள் நடந்தன. ஆந்திர மாநிலத்தில் சமூக நலத்துறை சார்பாக பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டன. எனவே போலீஸ் பணியில் இருக்க வேண்டும் என்றும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் கோலிமிகுண்டா பகுதியை சேர்ந்த பந்தி ஆத்மகுர், மற்றும் கர்னூல் பகுதியை சேர்ந்த ரச்சர்லா, கோஸ்படு உள்ளிட்ட 7 போலீசார் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை விட்டுவிட்டு முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் ஆவலில் தியேட்டருக்கு சென்றுவிட்டனர்.

    சைரா நரசிம்மா ரெட்டி படம் பார்த்த 7 போலீசார்


    அவர்கள் சிரஞ்சீவியின் தீவிர ரசிகர்கள் என்பதால் திரையில் சிரஞ்சீவி வரும்போது உற்சாக மிகுதியால் ஆட்டம் போட்னர். அதை படமாகவும் வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இது உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றுவிட்டது. விடுப்போ அனுமதியோ பெறாமல் இவர்கள் தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்றது எப்படி என்ற கேள்வியால் போலீஸ் துறையே பரபரப்பாகிவிட்டது.

    கர்னூல் எஸ்.பி. பகீரப்பா கவனத்துக்கு சென்ற உடன் தவறு செய்த 7 பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க சொல்லி டிஎஸ்.பிக்கு உத்தரவு போய் இருக்கிறது. படம் முடித்து வெளியே வந்த 7 பேருக்கும் உயர் அதிகாரியிடம் இருந்து சஸ்பெண்டு உத்தரவு வந்துள்ளது. பணி நேரத்தில் அபிமான நடிகரின் படத்துக்கு சென்றதால் அந்த 7 பேரின் வேலையும் கேள்விக்குறிக்குள்ளாகி உள்ளது.
    அஜித்துக்கு மகளாக நடித்து பிரபலமான அனிகாவின் கவர்ச்சி போட்டோஷூட்டுக்கு அஜித் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. அவர் இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்துள்ளார். இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக பொருந்திவிட்டது. இதை அடுத்து அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார்.

    இந்த படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் பார்ப்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் ரசிகர்கள் அனைவரையும் தங்களது தந்தையையும், மகளையும் நினைக்க வைத்தது. அஜித்தின் 60 வது படத்திலும் அனிகா நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

    அனிகா

    இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி, எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அனிகா மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அந்த படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதை பார்த்த அஜித் ரசிகர்கள் தயவு செய்து இதெல்லாம் வேண்டாம். நாங்கள் உன்னை அஜித்தின் மகளாக பார்க்கிறோம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
    நடிகர் பார்த்திபனின் ஒத்த செருப்பு படம் ஆஸ்கர் விருதுக்கு தகுதியுள்ள படம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டியுள்ளார்.
    நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, தனி ஒருவனாக நடித்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்த படம் மெல்ல மெல்ல ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஓடத் தொடங்கிய நிலையில் புதிய படங்களுக்காக அந்த படத்தை தங்களது திரையரங்குகளில் இருந்து உரிமையாளர்கள் எடுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வேதனையடைந்த பார்த்திபன் திரையுலக நண்பர்களுடன் இணைந்து சென்னை திரைப்பட வர்த்தக சபையில் செய்தியாளர்களை சந்தித்தார். 

    நடிகர் பார்த்திபன் நடித்து வெளிவந்துள்ள ஒத்த செருப்பு திரைப்படத்தினை தொடர்ந்து திரையிட வேண்டும் என திரையரங்க உரிமையாளர்களுக்கு அப்போது நடிகர் ராதா ரவி வேண்டுகோள் விடுத்தார். தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

    ஒத்த செருப்பு திரைப்படத்தினை தொடர்ந்து திரையிட்டு ஆதரவு அளிக்க வேண்டும் என நடிகர் பார்த்திபன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிய படங்கள் வருகையால் திரையிடுவதை நிறுத்துவது கருணைக் கொலையைவிடவும் கொடூரமானது என்றும் கூறினார். 

    பார்த்திபன்

    இந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் இருந்து பார்த்திபனுக்கு செய்தி ஒன்று வந்தது. தம்மை வீட்டில் வந்து சந்திக்குமாறு அவர் அதில் குறிப்பிட்டிருந்தார், அதனைதொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூவை அவரது இல்லத்தில் நடிகர் பார்த்திபன் சந்தித்து பேசினார். ஒத்த செருப்பு திரைப்படத்தினை தேசிய விருதுக்கு பரிந்துரைக்க உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ அப்போது கூறினார். ஒத்த செருப்பு ஆஸ்கர் விருதுக்கு தகுதியுள்ள படம் என்றும் அவர் பாராட்டினார்.
    ×