என் மலர்
சினிமா செய்திகள்
தர்பார் படம் தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தொடர்ந்த வழக்கு காரணத்திற்கு ஐகோர்ட் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ‘தர்பார்’. இப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வருவாய் தரவில்லை என்றும் தங்களுக்கு நஷ்டத்தை கொடுத்துள்ளது என்று வினியோகஸ்தர்கள் போர் கொடி தூக்கினர். தர்பார் திரைப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டையும், அலுவலகத்தையும் வினியோகஸ்தர்கள் சிலர் முற்றுகையிட்டனர்.
இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு கேட்டு ஏ.ஆர்.முருகதாஸ், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.ராஜமாணிக்கம், பதில் அளிக்கும்படி போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல், ‘போலீசார் பதிவு செய்த வழக்கை மேற்கொண்டு நடத்த முருகதாஸ் விரும்பவில்லை’ என்று கூறினார். இதையடுத்து நீதிபதி, ‘பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடர்வார்கள். பதில் அளிக்க போலீசுக்கு ஐகோர்ட்டும் உத்தரவிடும். போலீசாரும் வழக்குப்பதிவு செய்வார்கள். அதன்பின்னர் நடவடிக்கை வேண்டாம். பாதுகாப்பு கேட்ட மனுவை முடித்துவைக்க வேண்டும் என்று கூறினால், இந்த ஐகோர்ட்டு மனுதாரர் (முருகதாஸ்) விருப்பப்படி செயல்பட வேண்டுமா?’ என்று கண்டன கருத்து தெரிவித்தார்.
பின்னர், இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
பையனூரில் திரைப்படத்துறையினருக்கு 6 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேட்டியளித்துள்ளார்.
திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி, சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு சென்னை பையனூரில் திரைப்பட தொழிலாளர்களுக்கு 15 ஏக்கர் நிலத்தில் ஸ்டுடியோ மற்றும் படப்பிடிப்பு தளங்கள் கட்டவும் 50 ஏக்கர் நிலத்தில் 6 ஆயிரம் குடியிருப்புகள் கட்டவும் இடம் வழங்கி உள்ளது. அதில் ஏற்கனவே எம்.ஜி.ஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் கட்டி முடிக்கப்பட்டது. தற்போது அம்மா படப்பிடிப்பு தளம் கட்டப்பட்டு வருகிறது.

அடுத்து 6 ஆயிரம் குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்படும். 500, 800, 1,500, 2 ஆயிரம் சதுர அடி என்று 4 வகை குடியிருப்பு பகுதிகளாக இவை கட்டப்படும். இதில் குடியிருப்புகள் வேண்டி இயக்குனர்கள், நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என 3 ஆயிரத்து 750 பேர் விண்ணப்பித்துள்ளனர். அடுத்த 2 ஆண்டுகளில் ஒட்டுமொத்த சினிமாவும் பையனூருக்கு மாறி விடும்.
இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறினார்.
நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு அயலான் படக்குழுவினர் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்கள்.
ஹீரோ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார். கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
அறிவியல் சார்ந்த படமாக உருவாகி வரும் இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். பெயரிடப்படாமல் எஸ்.கே.14 என்று அழைக்கப்பட்டு வந்த இப்படத்திற்கு ‘அயலான்’ என்று பெயர் வைத்து சமீபத்தில் மோஷன் போஸ்டரை வெளியிட்டார்கள்.

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பொம்மை’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பொம்மை’. மான்ஸ்டர் படத்தை தொடர்ந்து பிரியா பவானி சங்கர் இதில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவுபெற்றுள்ளது.
சரியாக திட்டமிட்டதினால் இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்பார்த்த நேரத்தில் வேகமாகவும் சிறப்பாகவும் நிறைவு பெற்றுள்ளது என்று படக்குழுவினர் கூறியுள்ளனர். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது.

ஏஞ்சல் ஸ்டுடியோஸ் எம்எச். எல்எல்பி வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன் டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ் டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். விரைவில் இப்படத்தின் இசை வெளியீடும் தேதியை படக்குழுவினர் அறிவிக்க இருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியாக இருக்கும் நடிகை சமந்தா, காற்று வெளியிடை, சைக்கோ படங்களில் நடித்த அதிதி ராவ் மீது கோபத்தில் இருக்கிறார்.
தெலுங்கில் பிசியான நடிகையாகி விட்ட சமந்தா, டைரக்டர் அஜய் பூபதி இயக்கத்தில் சர்வானந்திற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இப்படத்திற்கு மகா சமுத்திரம் என பெயரிடப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் கூறி இருந்தனர்.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் சமந்தாவை நீக்கி விட்டு, அவருக்கு பதில் அதிதி ராவை ஒப்பந்தம் செய்துள்ளார்கள். ஏற்கனவே இந்த படத்திற்காக அதிதி ராவிடம் பேசப்பட்டுள்ளது. ஆனால் அவர் சமீபத்தில் தான் சம்மதம் சொன்னாராம். அதனால் கடைசி நிமிடத்தில் சமந்தாவை மாற்றி விட்டு, அதிதி ராவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஏற்கனவே ஜானு படத்தில் சர்வானந்துடன் நடித்துள்ளதாலும், மகா சமுத்திரம் படத்தின் கதை மிகவும் பிடித்திருந்ததாலும் இதில் நடிக்க சமந்தா மிகுந்த ஆர்வமாக இருந்ததாகவும் அதிதிராவ் குறுக்கே புகுந்து படத்தை கைப்பற்றியதால் அவர் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
தாலாட்டு கேட்குதம்மா, அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜ் கபூர் அவர்களின் மகன் இன்று மரணமடைந்துள்ளார்.
தாலாட்டு கேட்குதம்மா, அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ராஜ் கபூர். தொடர்ந்து தமிழ் படங்களிலும் சீரியலிலும் நடித்து வருகிறார். இவருக்கு ஷஜீலா கபூர் என்ற மனைவியும் ஷாருக் கபூர் என்ற மகனும் ஷமீமா, ஷானியா என இரண்டு மகள்களும் உள்ளனர்.

ஷாருக் கபூர் சில மாதங்களுக்கு புட் பாய்சன் காரணமாக உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை எடுத்துக்கொண்டார். அவருக்கு உடல்நலம் சரியானால் மெக்காவுக்கு வருவதாக குடும்பத்தினர் வேண்டி இருந்தனர். அதன்படி மெக்காவுக்கு சென்றனர். ஆனால் அங்கு நிலவும் சீதோஷ்ண நிலை காரணமாக ஷாருக்குக்கு மீண்டும் உடல் நிலை மோசமாகி இன்று காலை மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 23.
போஸ் வெங்கட் இயக்கத்தில் புதுமுகங்கள் ஸ்ரீ ராம், காயத்ரி நடிப்பில் உருவாகி இருக்கும் கன்னி மாடம் படத்தின் முன்னோட்டம்.
தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனித்த இடத்தை பிடித்திருப்பவர் போஸ் வெங்கட். தற்போது முதல் முறையாக வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் நடிப்பில் “கன்னி மாடம்” எனும் படத்தை இயக்கியுள்ளார்.

ஸ்ரீ ராம் மற்றும் காயத்ரி இப்படத்தின் மூலம் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். மேலும் இப்படத்தில் ஆடுகளம் நரேன், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இப்படத்தை உருவாக்கியுள்ளார். ஹரிஷ் சாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹரிஷ் ஜெ இனியன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
திரைப்பட பின்னணி குரல் கலைஞர்கள் சங்க தேர்தலில் ராதாரவியின் அணியை சேர்ந்த அனைவரும் வெற்றி பெற்றனர்.
திரைப்பட பின்னணி குரல் கலைஞர்கள் சங்க தேர்தல் பிப்.,15 ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெற்றது. மொத்தம் உள்ள 1360 உறுப்பினர்களில் 931 பேர் மட்டுமே ஓட்டளித்தனர். அதனை தொடர்ந்து மாலை 7.00 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஓட்டு எண்ணிக்கை முடிந்து நேற்று வெற்றி பெற்றவர்கள் விபரம் அறிவிக்கப்பட்டது. இதில் ராதாரவியின் அணியை சேர்ந்த அனைவரும் வெற்றி பெற்றனர்.
முன்னதாக தலைவர் பதவிக்கு ராதா ரவியும் பின்னணி பாடகி சின்மயியும் போட்டியிட்டனர். ஆனால், சின்மயியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதால் ராதா ரவி போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் ராதாரவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: ’டப்பிங் யூனியன் தலைவராக போட்டியின்றி நான் தேர்வு செய்யப்பட்டு உள்ளேன். யூனியன் நலனுக்காக, பல நலத்திட்ட உதவிகளை செய்ய திட்டமிட்டுள்ளேன். பாடகரும், டப்பிங் யூனியன் கலைஞருமான பாடகி சின்மயி, மன்னிப்பு கேட்டால் மீண்டும் சங்கத்தில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
எங்கள் மீது தவறான குற்றச்சாட்டைத் தெரிவித்ததால், சின்மயி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளோம். சின்மயி விளம்பரப் பிரியராக இருக்கும் காரணத்தால், தொடர்ந்து அவதூறு பேசி வருகிறார்’. இவ்வாறு அவர் கூறினார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் கடந்த ஆண்டு, ஜூன் 23-ந்தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், தபால் ஓட்டுக்களை போட அனுமதிக்கவில்லை என்பதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலம் முடிந்த பின்பு எடுத்த எந்த முடிவுகளும் செல்லாது எனவும் அவர் அறிவித்தார்.
நடிகர் சங்கத்திற்கான மறு தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமித்து, மூன்று மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட வேண்டும். அதுவரை நடிகர் சங்க நிர்வாகத்தை தனி அதிகாரி கவனிப்பார் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் விசாரித்தனர். அப்போது தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
நடிகர் சங்கத் தேர்தலுக்கு மீண்டும் தேர்தல் நடத்தும் நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதி அளித்தும், இந்த தேர்தல் தொடர்பான அறிவிப்பை ஐகோர்ட்டு அனுமதியின்றி வெளியிடக்கூடாது. இந்த தேர்தலை நடத்தும் சிறப்பு அதிகாரியாக ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமனத்தை உறுதி செய்கிறாம் என்றும் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
மோகன் ராஜா இயக்கத்தில் உருவாக உள்ள அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அந்தாதூன்'. 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதினையும் வென்றது.
இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் இதன் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இறுதியில், தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார். மோகன் ராஜா இயக்கவுள்ள இப்படத்தில், ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக பிரசாந்த் 20 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. கடைசியாக பிரசாந்தின் பொன்னர் சங்கர் படத்திற்கு இசையமைத்திருந்த இளையராஜா, இந்த படம் மூலம் 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைய உள்ளனர். படத்தின் கதைப்படி நாயகன் பியானோ இசை கலைஞர் என்பதால், இதற்காக நடிகர் பிரசாந்த் 6 மாதம் பியானோ பயிற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ஹீரோ, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் தற்போது ரவிகுமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘அயலான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து, கோலமாவு கோகிலா பட புகழ், நெல்சன் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு டாக்டர் என பெயரிடப்பட்டுள்ளது.
Here’s #DoctorFirstLook@Siva_Kartikeyan@KalaiArasu_@SKProdOffl@kjr_studios@Nelson_director@priyankaamohan#Vinay@iYogiBabu@KVijayKartik@anirudhofficial
— Maalai Malar News (@maalaimalar) February 17, 2020
@DoneChannel1@DoctorTheMovie#Doctorpic.twitter.com/3H9tRw22kH
இப்படத்தில் நாயகியாக பிரியங்கா நடிக்கிறார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர், முக்கிய வேடத்தில் தோன்றுகின்றனர். கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான இன்று டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ், இந்தி, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் சன்னி லியோன், தனது சம்பளத்தை ஆதரவற்றோர் இல்லத்திற்கு நன்கொடையாக கொடுத்துள்ளார்.
ஆபாச படங்களில் நடித்து கொண்டிருந்த சன்னி லியோன் ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்க வந்து கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். பல்வேறு இந்தி படங்களில் நடித்துள்ள அவர், தற்போது ‘வீரமாதேவி’ என்ற படத்தின் மூலம் தமிழிலும், ‘ரங்கீலா’ எனும் படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமாக இருக்கிறார்.

இந்நிலையில், இவர் இந்தியில் உருவாகும் வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளார். இது முழுக்க முழுக்க காமெடி தொடர் என கூறப்படுகிறது. மேலும் இந்த வெப் தொடரில் நடித்ததன் மூலம் தனக்கு கிடைத்த சம்பளத்தை மும்பையில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்கு சன்னி லியோன் நன்கொடையாக கொடுத்துள்ளார்.






