என் மலர்
சினிமா செய்திகள்
மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா நடிப்பில் உருவாகி இருக்கும் கண்ணை நம்பாதே முன்னோட்டம்.
`இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை இயக்கிய மு.மாறன் இயக்கும் அடுத்த படத்திற்கு `கண்ணை நம்பாதே' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.
மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி.என்.ரஞ்சித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
தமிழில் உதயன், சகுனி, மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரணிதா அந்த மாதிரி கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆசை என தெரிவித்துள்ளார்.
தமிழில் உதயன், சகுனி, மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரணிதா தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு: எனது அப்பா, அம்மா இருவரும் டாக்டர்கள். என்னையும் டாக்டராக்க விரும்பினர். ஆனால் எனக்கு நடிகையாக ஆர்வம். சினிமா வாய்ப்பு வந்ததும் எதிர்த்தனர். ஆனால் தொடர்ந்து படங்கள் வந்ததால் எனது போக்கில் விட்டுவிட்டனர்.

டாக்டராகாமல் நடிகையானதற்காக பெருமைப்படுகிறேன். பலவிதமான கதாபாத்திரங்களில் வாழ்கிற வாய்ப்பு நடிகைகளுக்குத்தான் கிடைக்கும். ஒரு சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் நடிக்க ஆசை இருக்கிறது. சரித்திர காலத்து ஆடை அணிகலன்கள் அணிந்து நடிக்க விருப்பம் உள்ளது. இவ்வாறு பிரணிதா கூறினார்.
தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஆர்யாவும், சசிகுமாரும் ரீமேக் படம் ஒன்றில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
“கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட தேசம்” என்று கூறப்படும் கேரள மண்ணில் தயாரான சில படங்கள் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி, அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்க்கும். அந்த வகையில், ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற புதிய மலையாள படம், சமீபத்தில் திரைக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தில் பிருத்விராஜ், பிஜுமேனன் ஆகிய இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
எளிமையான கதையை புதிய வடிவில் சொல்லியிருக்கிறார்கள். இப்படி ஒரு படம் இனிமேல் வருமா? என்ற எதிர்பார்ப்பை அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் ஏற்படுத்தி இருக்கிறது. அதைத்தொடர்ந்து ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை 5 ஸ்டார் கதிரேசன் வாங்கியிருக்கிறார். இப்படத்தில் முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், இப்படத்தில் சசிகுமார், ஆர்யா ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பிருத்விராஜ் வேடத்தில் ஆர்யாவும், பிஜூமேனன் வேடத்தில் சசிகுமாரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ், சஞ்சய் தத் நடிப்பில் உருவாகி வரும் கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான கன்னடப் படம் 'கே.ஜி.எப்' . யஷ் நாயகனாக நடித்திருந்த இந்தப் படம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு, வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரஷாந்த் நீல் இயக்கிய இந்த படத்தின் 2-ம் பாகம் தயாரிப்பில் இருக்கிறது. 2-ம் பாகத்தில் சஞ்சய் தத், ரவீனா டண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் யாஷுடன் நடித்துள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 23-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதே தேதியில் வெளியீடு சாத்தியமா என்பது விரைவில் தெரியவரும். இதற்கிடையே இன்னும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடையவில்லை. இன்னும் எவ்வளவு நாட்கள் படப்பிடிப்பு என்று விசாரித்தபோது, 25 நாட்கள் படப்பிடிப்பு இன்னும் இருக்கிறது.

அதில் 2 சண்டைக் காட்சிகளைப் படமாக்கவுள்ளது படக்குழு. அதில் சஞ்சய் தத் இடம்பெறும் சண்டைக்காட்சியும் ஒன்று. இந்த சண்டைக் காட்சிகள் தவிர்த்து, மீதமுள்ள அனைத்துக் காட்சிகளும் பின்னணி இசைக் கோர்ப்பு உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 23-ம் தேதி வெளியிட்டுவிட வேண்டும் என்று படக்குழு தீவிரமாக இருக்கிறது.
பிரபல பாலிவுட் நடிகர் கிரண்குமாருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தி திரையுலகின் மூத்த நடிகரான கிரண்குமாருக்கு (வயது 72) கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இவர் சில தினங்களுக்கு முன்பு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருந்தார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். மீண்டும் அவருக்கு பரிசோதனை செய்ய உள்ளனர்.
இதுகுறித்து கிரண்குமார் கூறும்போது, “எனக்கு நோய் அறிகுறி எதுவும் இல்லை. கடந்த 14-ந் தேதி வழக்கமான மருத்துவ சோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றேன். அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற கொரோனா சோதனை கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. எனவே எனக்கும் அந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது எனக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. ஆனால் காய்ச்சல், சளி எதுவும் இல்லை. தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறேன். எனது குடும்பத்தினர் 2-வது மாடியிலும் நான் மூன்றாவது மாடியிலும் இருக்கிறோம்” என்றார்.

இவர் தேஷாப், சல்லுகி சாதி, பியர் கியா டு தர்னா கியா, பாபி ஜாசூஸ், பிரதர்ஸ், மோத், சாண்ட்விச், ஜூலி உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஏற்கனவே இந்தி பாடகி கனிகா கபூருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமானார். ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ், ரா ஒன் ஆகிய படங்களை தயாரித்த கரீம் மோரானிக்கும் அவரது மகள்கள் ஷசா, ஜோயா ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த இளம் நடிகர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட்டில் சல்மான்கான், அசின் நடித்த ரெடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மோகித் பஹேல். சோர் ஹே, காலி காலி, ஜபாரியா ஜோடி, உவா, மிலன் காக்கீஸ் உள்ளிட்ட மேலும் பல படங்களில் நடித்துள்ளார். ராணி முகர்ஜி, சயீப் அலிகான் நடிப்பில் தயாராகி வரும் பண்டீ அவுர் பப்ளி 2 படத்துக்கும் ஒப்பந்தம் செய்து இருந்தனர்.
இதன் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி கொரோனா லாக்டவுனால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மோகித் பஹேலுக்கு சில மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்றார். தற்போது ஊரடங்கு காரணமாக சொந்த ஊரான உ.பி. மாநிலம் மதுராவுக்கு சென்றிருந்தார். அங்கு திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வயது 26.

மோகித் பஹேலுடன் ஜபாரியா ஜோடி படத்தில் நடித்துள்ள நடிகை பிரனீதி சோபரா தனது டுவிட்டர் பக்கத்தில், "மிகவும் திறமையான நடிகர். பழக இனிமையானவர். எப்போதும் உற்சாகமாக நேர்மறை எண்ணங்களுடன் இருப்பார். அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது என கூறியுள்ளார்.
தனது இசைக்குழுவில் பணியாற்றிய டிரம்மர் புருஷோத்தமன் மறைவுக்கு இசையமைப்பாளா் இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளாா்.
இசையமைப்பாளா் இளையராஜாவின் நெருங்கிய நண்பரும், அவரிடம் நீண்ட காலமாக பணியாற்றியவருமான, புருஷோத்தமன் கடந்த சில தினங்களுக்கு முன் மரணமடைந்தார்.
புருஷோத்தமனின் மறைவு தொடர்பாக, இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: என்னுடைய வாழ்நாளிலேயே என்னுடைய அருகிலேயே அதிக நாள், அதிக நேரம் இருந்தவா் புருஷோத்தமன். எங்களுடைய குடும்பத்தாரிடம் நாங்கள் இருந்ததைவிட, நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்த நேரம்தான் அதிகம். ஒவ்வொரு நாளும் எங்களுக்கு இசையிலேயே கழியும்.
என்னுடைய வாழ்நாளில் எனது குடும்பத்தாருடன் கூட நான் அவ்வளவு நேரம் இருந்தது கிடையாது. வீட்டில் ஒரு முறை மனைவியை அழைப்பதற்கு பதிலாக புரு என்று அழைத்துவிட்டேன். அவ்வளவு தூரம் எனக்கு நெருக்கமானவர் புருஷோத்தமன், அவர் காலமானது மிகவும் வருத்தத்தை அளித்துள்ளது. அவா் இன்று நம்மிடையே இல்லை.
இந்த நிகழ்வை இவ்வளவு விரைவாக நான் எதிர்பார்க்கவில்லை. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என அந்த வீடியோ பதிவில் இளையராஜா தெரிவித்துள்ளாா்.
மாஸ்டர் படத்தில் விஜய் பாடியுள்ள குட்டி ஸ்டோரி பாடலுக்கு நடிகை வேதிகா டிக்டாக் செய்து அசத்தியுள்ளார்.
லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான முனி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான வேதிகா, அடுத்தடுத்து காளை, பரதேசி, காவியத்தலைவன், காஞ்சனா 3 என வித்யாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே இருக்கும் வேதிகா, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது வீடியோ வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அந்தவகையில், மாஸ்டர் படத்தில் விஜய் பாடியுள்ள குட்டி ஸ்டோரி பாடலுக்கு டிக்டாக் செய்து அசத்தியுள்ளார் வேதிகா. இந்த டிக்டாக் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#KuttyStory#AlwaysBeHappy 🥰 @actorvijay#TikTokpic.twitter.com/LK1XJ6BG99
— Vedhika (@Vedhika4u) May 24, 2020
நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இருக்கும் நரகாசூரன் படத்தின் ரிலீஸ் குறித்து முக்கிய தகவலை இயக்குனர் கார்த்திக் நரேன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
துருவங்கள் 16 படத்தின் மூலம் பிரபலமானவர் கார்த்திக் நரேன். இவர் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் நரகாசூரன் . இதில் அரவிந்தசாமி, ஸ்ரேயா ஜோடியாக நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு 2 வருடங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. ஆனாலும் படத்தின் தயாரிப்பாளர் கவுதம் மேனனுக்கு ஏற்பட்ட பண பிரச்சினையால் படம் திரைக்கு வரவில்லை.
இதனால் கவுதம் மேனனும், கார்த்திக் நரேனும் டுவிட்டரில் மோதிக் கொண்டனர். அதன்பிறகு பல தடவை படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தும் ரிலீசாகாமல் தள்ளி வைத்தனர். இதனிடையே இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் நரேன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நரகாசூரன் ரிலீசாகும் ஆனால்... என குறிப்பிட்டு ஹாலிவுட் படத்தின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்துள்ளார். அதன் சப்-டைட்டிலில் "அது கொஞ்சம் வியத்தகு பகுதி" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்முலம் நரகாசூரன் படம் விரைவில் வெளியாகும் என்பதையே கார்த்திக் இவ்வாறு சுட்டிக்காட்டியதாகத் கூறப்படுகிறது.
கமலின் தலைவன் இருக்கின்றான் படத்தில் பூஜா குமார் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
கமல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தை அறிவித்திருந்தார். தற்போது அந்த படத்தை மீண்டும் தொடங்க இருக்கிறார். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் வடிவேலு இப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இப்படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, தேவர் மகன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த ரேவதி இப்படத்திலும் நடிப்பார் என்றும், ஆண்ட்ரியா மற்றும் பூஜா குமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் விளக்கம் அளித்துள்ள நடிகை பூஜா குமார், "தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க இதுவரை யாரும் என்னை அணுகவில்லை. யாருக்கு தெரியும், நடிக்க அழைப்பு வந்தாலும் வரலாம் என கூறியுள்ளார்.
பூஜா குமார் ஏற்கனவே விஸ்வரூபம், உத்தம வில்லன் போன்ற படங்களில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பின்மை என்பதன் பொருள் 'மனிதனாக இருப்பது' என நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ராஷ்மிகா, தமிழ் ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருக்கும் அவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார். இந்த நிலையில் சினிமா துறையில் தான் சந்தித்த பாதுகாப்பற்ற நிலை குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், "பாதுகாப்பின்மை இந்த வார்த்தையை கூகுளில் தேடினால் ஒரு விஷயம் குறித்து நிச்சயமற்ற தன்மையில் அல்லது அதிக ஏக்கத்துடன் இருப்பது என்று காட்டுகிறது.
ஆனால் என்னைக் கேட்டால் 'மனிதனாக இருப்பது' என்று பொருள் கூறுவேன். நாம் பல விஷயங்கள் குறித்தும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறோம். நம்மை குறித்தோ, பிறரை குறித்தோ அல்லது ஏதேனும் ஒரு மோசமான விஷயம் குறித்தோ நாம் பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்கிறோம். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு அவை அர்த்தமற்றதாகத் தெரிகிறது. நாம் நமது நண்பர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

'ப்ரோ.. நான் அதிகம் எடை போட்டு விட்டேனா? ஒல்லி ஆகிவிட்டேனா? எனது ஸ்கின் வறண்டு போய் விட்டதா? அதிக எண்ணெய் தன்மையுடன் இருக்கிறதா? என்று கேட்கிறோம். யாரேனும் 'உன் முகத்திற்கு என்ன ஆச்சு?' என்று கேட்டால் அவ்வளவு தான். 10 நாட்களுக்கு முக்காடு போட்டுக் கொண்டு இருப்போம். இத்தகைய சின்ன சின்ன விஷயங்களைப் பற்றி யோசித்து பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக நாம் உணர்வது தேவையானதா என்று நான் யோசிக்கிறேன்.
உண்மையைக் கூறப்போனால் இந்தக் கொரோனா காலத்தில் நான் அதிகம் பாதுகாப்பற்ற தன்மையை உணர்கிறேன். எனது வேலை, என் இதயம், என் புறத்தோற்றம், என் மன ஆரோக்கியம் என அனைத்தையும் பற்றி கவலைப்படுகிறேன். ஆனால் இவை எதுவும் நம் கையில் இல்லை என்பதையும் உணர்ந்தேன். எனவே நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்களைப் பற்றி மட்டும் கவலைப் படுவோம். நமக்கு இருக்கும் பாதுகாப்பற்ற தன்மையை நமது பலமாக மாற்றிக் கொள்வோம்.
நீங்கள் கறுப்பாக இருக்கிறீர்கள். ஒல்லியாக இருக்கிறீர்கள். உங்கள் கண்கள் பெரிதாக இருக்கின்றன. என யாராவது கூறினால் அதை சரி என்று எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் இறுதிவரை போராடுங்கள் "என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னம்பிக்கை இழந்து கவலையில் இருக்கும் பலருக்கும் ராஷ்மிகாவின் பதிவு நம்பிக்கையூட்டி இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் நெற்றிக்கண் படத்தின் முன்னோட்டம்.
‘அவள்’ படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் அடுத்ததாக நயன்தாராவை வைத்து ’நெற்றிக்கண்’ என்கிற திரில்லர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். அவர் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார். கமலநாதன் கலை இயக்கத்தில் நவீன் சுந்தரமூர்த்தி வசனத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் நயன்தாராவுடன் ஒரு நாய்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் உள்ள வகையில் திரைக்கதை அமைத்துள்ளதாக இயக்குனர் மிலிந்த் ராவ் தெரிவித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா கண் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். அஜ்மல் வில்லனாக நடிக்கிறார். மேலும் இப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ’பிளைண்டு’ என்ற கொரியன் படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது.

'பிளைண்டு' படத்தின் கதை என்ன என்றால், இரண்டு வெவ்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர் ஒரே நபராக இருக்கிறார். காவல்துறை இந்த வழக்குகளுக்கு சாட்சி இருக்கிறதா என்று தேடுகிறது. தேசிய காவல்துறை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி சூ-ஹா என்பவர் சாட்சி சொல்ல வருகிறார். ஆனால் அவர் ஒரு விபத்தில் தன் கண்பார்வையை இழந்தவர். ஒரு கார் விபத்து வழக்கு பற்றிய முக்கியமான ஆதாரத்தை அவர் தருகிறார்.
சூ ஹா வின் மற்ற புலன்கள் அவருக்குக் கை கொடுக்கின்றன. திடீரென இன்னொரு சாட்சி, கி-சியாப் காவல்நிலையத்துக்கு வருகிறார். இவர் சம்பவத்தை நேரில் பார்த்தவர். இவர் சொல்வதும், சூ ஹா சொல்வது முற்றிலும் வெவ்வேறு விதமான சாட்சியாக இருக்கிறது. இதனால் வழக்கு விசாரணை திசை திரும்புகிறது. ஒரு வழக்கு, இரண்டு சாட்சிகள், இரண்டு விதமான வாக்குமூலங்கள். உண்மை எப்படி வெளியே வந்தது என்பதே கதை.






