என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சமந்தா, டாப்ஸி, திரிஷா மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் இணைந்து வெளியிட்ட கீர்த்தி சுரேஷ் பட டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    இந்திய திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகிகள் சமந்தா, டாப்ஸி, திரிஷா மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் இணைந்து கீர்த்தி சுரேஷின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமான 'பெண்குயின்' டீசரை வெளியிட்டனர்.

    அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 19 அன்று பிரத்யேக உலக பிரீமியருக்காக திட்டமிடபட்டுள்ள இந்த உளவியல் திரில்லர் தனது குழந்தையை காப்பாற்ற ஒரு தாயின் உடல் மற்றும் உணர்ச்சி பயணத்தை பற்றியதாகும்.

    கார்த்திக் சுப்பராஜ், ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் போஸ்டர் ஏற்கனவே பார்வையாளர்களை கவர்ந்ததுள்ளது.

    இந்த படத்தில் ஒரு குழந்தையின் தாய் என்ற கதா பாத்திரத்திற்கு ஏற்ப உடல் ரீதியாக தன்னை மாற்றிக்கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 19 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் மற்றும் டப்பிங்களுடன் மலையாளத்திலும் வெளியாகிறது.
    செல்வேந்திரன் இயக்கத்தில் நீலிமா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கருப்பங்காட்டு வலசு’ படத்தின் முன்னோட்டம்.
    செல்வேந்திரன் இயக்கத்தில் நீலிமா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘கருப்பங்காட்டு வலசு’. இப்படத்தில் எபிநேசர் தேவராஜ் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பதுடன், நிர்வாக தயாரிப்பாளராகவும் இருக்கிறார். ஆதித்யா-சூர்யா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஷ்ரவன் சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். crew 21 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    படம் குறித்து நடிகை நீலிமா கூறியதாவது: இது, குற்றப்பின்னணி உள்ள திகிலான கதையம்சம் கொண்ட படம். பழைய பழக்க வழக்கங்களையும், மூட நம்பிக்கைகளையும் கொண்ட ஒரு கிராமத்தை ‘மாடர்ன்’ ஆக மாற்ற முயற்சிக்கிறாள், ஒரு பெண். அப்போது அந்த ஊரில், ஒரு குற்றம் நடக்கிறது. அதன் விளைவுகள்தான் திரைக்கதை" என தெரிவித்துள்ளார்.
    தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நீலிமா, ஜோதிடர் ஒருவரின் அறிவுரையை ஏற்று தனது பெயரை மாற்றியிருக்கிறார்.
    ‘தேவர் மகன்’ படத்தில் நாசர் மகளாக குழந்தை நட்சத்திரமாக கால் பதித்தவர் நீலிமா. அதை தொடர்ந்து ‘நான் மகான் அல்ல’, ‘முரண்’, ‘திமிரு’, ‘சந்தோஷ் சுப்ரமண்யம்’, ‘மொழி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘மன்னர் வகையறா’ உட்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் பல்வேறு மொழிகளில் 80க்கும் மேற்பட்ட தொலைகாட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார் நீலிமா.

    நீலிமா

    திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துவந்த இவர், ‘கருப்பங்காட்டு வலசு’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் இவர் ஜோதிடர் ஒருவரின் அறிவுரையை ஏற்று தனது பெயரை மாற்றியிருக்கிறார். அதன்படி நீலிமா ராணி என்ற தனது பெயரை, ‘நீலிமா இசை’ என்று மாற்றியுள்ளார். 
    நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் அடுத்ததாக இயக்கும் படத்திற்காக நடிகை அஞ்சலி வீட்டில் இருந்தபடியே டப்பிங் பேசியுள்ளார்.
    திரை உலகில் தற்போது அந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் வெளியான சில்லுக்கருப்பட்டி படம்  வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இயக்குனர்கள் வெற்றிமாறன், சுதா கொங்கரா, கவுதம் மேனன், விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து ஒரு அந்தாலஜி படத்தை உருவாக்கி வருகின்றனர். 

    இதில் விக்னேஷ் சிவன் இயக்கும் குறும்படத்தில் அஞ்சலி, கல்கி கோச்சலின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த குறும்படத்திற்காக நடிகை அஞ்சலி வீட்டில் இருந்தபடியே டப்பிங் பேசியுள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவன் வீடியோ கால் மூலம் அதன் பணிகளை கவனித்து வந்தார். இதுதொடர்பான வீடியோவை நடிகை அஞ்சலி டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். 
    தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குனர் என பன்முகத் திறமை கொண்ட தனுஷ், கிடப்பில் போடப்பட்ட படத்தை மீண்டும் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    தனுஷ் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டிருக்கிறார். ‘பவர் பாண்டி’ என்ற திரைப்படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். இந்த படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, பிரம்மாண்ட சரித்திர படத்தை தனுசே இயக்கி, நடித்து வந்தார்.

    படத்துக்கு நான் ருத்ரன் என்று பெயரிடப்பட்டிருந்தனர். இந்தப் படத்தில் தனுசுடன் நாகாஜுனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ், அனு இமானுவேல் உள்ளிட்ட பலரும் நடிக்க ஒப்பந்தமாகினர். பைனான்ஸ் பிரச்சனை காரணமாக இப்படம் கிடப்பில் போடப்பட்டது.

    படக்குழுவினருடன் தனுஷ்

    இந்நிலையில், தற்போது லாக்டவுன் சமயத்தில் தனுஷ் அப்படத்தை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கை மையமாக வைத்து உருவாகும் திரைப்படத்தை நடிகை கங்கனா ரனாவத் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் கங்கனா ரனாவத். தமிழில் தாம்தூம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான 'தலைவி' படத்தில் நடித்து வருகிறார். தற்போது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். 

    முதல் படத்துக்கு ’அபாரஜிதா அயோத்யா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. நீண்ட காலமாக நடைபெற்று வந்த அயோத்தியா ராமர் கோயில் வழக்கு பற்றிய படம் இது. இந்தப் படத்தின் திரைக்கதையை பாகுபலி இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜேயந்திர பிரசாத் எழுதி உள்ளார்.

    கங்கனா ரனாவத்

    இப்படத்தை கங்கனா தான் இயக்க உள்ளாராம். மேலும் இந்த படத்தில் அவர் நடிக்க மாட்டார் என கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே `மணிகர்ணிகா - ஜான்சியின் ராணி' படத்தை ராதாகிருஷ்ணா ஜாகர்லமுடியுடன் இணைந்து இயக்கியதோடு, அப்படத்தில் நாயகியாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    இனவெறிக்கு எதிராக நடிகைகள் குரல் கொடுப்பது வெட்கக்கேடான செயல் என நடிகை கங்கனா ரனாவத் கடுமையாக சாடியுள்ளார்.
    அமெரிக்காவில் மின்னியாபொலிஸ் நகரில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவர் வெள்ளை இன போலீஸ் அதிகாரிகள் பிடியில் கடந்த மாதம் 25-ம் தேதி கொல்லப்பட்ட சம்பவம் அங்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இனவெறியால் நடந்த இந்த படுகொலையை பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, தமன்னா, திஷா பதானி, சோனம் கபூர் உள்ளிட்ட பலர் கண்டித்தனர். இவர்கள் சிவப்பழகை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், முன்னணி பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் அவர்களை கடுமையாக சாடி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்திய நடிகர்-நடிகைகள் பலர் சிவப்பழகை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடிக்கின்றனர். ஆனால் இப்போது வெட்கம் இல்லாமல் கறுப்பினத்தவர்களுக்கு எதிராக நடக்கும் இனவெறியை கண்டித்து குரல் கொடுக்கிறார்கள். இவர்களுக்கு என்ன துணிச்சல் பாருங்கள். 

    கங்கனா ரனாவத்

    சிவப்பழகு விளம்பர நிறுவனங்களுடன் கோடிக்கணக்கில் பேசி ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்கள். இதை பற்றி யாரும் ஏன் கேட்பது இல்லை. இங்கு இனவெறி வேரூன்றி உள்ளது. சாதாரண ஒரு கதாபாத்திரத்துக்கு கூட கறுப்பான தோற்றம் கொண்டவரை நடிக்க வைக்க மறுத்து விடுகின்றனர். நான் எந்த முக அழகு விளம்பரத்திலும் ஒப்பந்தமாகவில்லை. எனது சகோதரி மாநிறம். முகஅழகு விளம்பரத்தில் நடித்தால் அவரை அவமானப்படுத்துவது போல் ஆகிவிடும். இவ்வாறு கங்கனா கூறினார். 
    முகத்தில் கரி பூசியவாறு இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த நடிகை தமன்னாவை நெட்டிசன்கள் கடுமையாக சாடி உள்ளனர்.
    நடிகை தமன்னா, தனது முகத்தில் கரியை பூசிக்கொண்ட புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார். கர்ப்பிணி யானை, கறுப்பின இளைஞர் கொலைகளை கண்டிக்கும் வகையில் இந்த புகைப்படத்தை அவர் பதிவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

    மேலும் அந்த புகைப்படத்தோடு, “உங்களுடையை மவுனம் உங்களை காப்பாற்றாது. மனிதனாக இருந்தாலும் விலங்காக இருந்தாலும் உயிர்கள் முக்கியம். எந்தவிதமான படைப்பையும் முடக்குவது உலகளாவிய விதிமுறைக்கு எதிரானது. நாம் மீண்டும் மனிதனாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். இரக்கத்தையும் அன்பையும் வெளிப்படுத்த வேண்டும்“ என்று குறிப்பிட்டிருந்தார்.

    தமன்னாவின் இந்த பதிவுக்கு கடுமையான விமர்சனங்களும் கிளம்பியுள்ளன. சிவப்பழகை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு நிறவெறிக்கு எதிராக குரல் கொடுங்கள் என்று பலர் தமன்னாவை சாடி வருகிறார்கள்.
    ஊரடங்கால் வேலையின்றி தவிக்கும் உதவி இயக்குனர்களுக்கு நடிகர் ஆதி வீடுதேடி சென்று உணவுப்பொருட்களை வழங்கி உதவியுள்ளார்.
    மிருகம் படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து ஈரம், அரவான், மரகத நாணயம் என வெற்றி படங்களை தொடர்ந்து வழங்கிய ஆதி, சமீப காலமாக தெலுங்கு திரை உலகில் தொடர் வெற்றி மூலமாக ஒரு முக்கிய அந்தஸ்தை அடைந்து இருக்கிறார். 

    தற்போது கொரோனா ஊரடங்கால் சினிமா தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனை நம்பியுள்ள ஏராளமான தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் ஆதி, லெட்ஸ் பிரிட்ஜ் என்ற அமைப்பின் மூலம் வறுமையில் வாடும் உதவி இயக்குனர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வீடுதேடி சென்று வழங்கி உள்ளார். முகக்கவசம், கையுறை  என முறையான பாதுகாப்பு உபகரணங்களை அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும்  அவர்களுக்கு இந்த உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டதாக ஆதி கூறியுள்ளார்.

    முன்னணி நடிகைகளான திரிஷா, மஞ்சு வாரியர், சமந்தா, டாப்சி ஆகியோர் கீர்த்தி சுரேஷுக்காக இணைந்துள்ளனர்.
    கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் 'பெண்குயின்'. ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண் வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 19-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. இதையொட்டி இப்படத்தின் டீசர் இன்று பிற்பகல் 12 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. 

    டீசரை யார் யார் வெளியிடப்போகிறார்கள் என்பது குறித்த அறிவிப்பை நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார். இது பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால், பல்வேறு திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகைகளை கொண்டு டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதன்படி நடிகைகள் திரிஷா, மஞ்சு வாரியர், சமந்தா, டாப்சி ஆகியோர் பெண்குயின் பட டீசரை வெளியிட உள்ளனர். 

    நடிகை மேக்னாராஜின் கணவரும், நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் திடீரென மரணமடைந்தது திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ‘கிருஷ்ண லீலை’, ‘உயர்திரு 420’, ‘காதல் சொல்ல வந்தேன்’, ‘நந்தா நந்திதா’ ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர், மேக்னா ராஜ். இவருடைய தாயார் பிரமிளா ஜோசி, ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடித்தவர். தந்தை சுந்தர்ராஜன், கே.பாலசந்தர் இயக்கிய ‘தப்புத்தாளங்கள்’ படத்தில் நடித்தவர். மேக்னா ராஜுக்கும், கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவுக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் பெங்களூருவில் வசித்து வந்தார்கள்.

    சிரஞ்சீவி சார்ஜா

    சிரஞ்சீவி சார்ஜா, நடிகர் அர்ஜுனின் உறவினர் ஆவார். கன்னட பட உலகில் முன்னணி நடிகராக இருந்தார். அவர், நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 39. அவருடைய உடலுக்கு கன்னட பட உலகை சேர்ந்த நடிகர், நடிகைகள், பட அதிபர்கள், டைரக்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
    விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 65 படத்தில் பிரேமம் பட நடிகை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ஊரடங்கு காரணமாக இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இதனிடையே விஜய்யின் 65-வது படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. முருகதாஸ் அப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விஜய்யின் 65-வது படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார். 

    மடோனா செபாஸ்டியன்

    இந்நிலையில், இப்படத்தில் நடிகை மடோனா செபாஸ்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான பிரேமம் படம் மூலம் நடிகையாக அறிமுகமான மடோனா, தமிழில் காதலும் கடந்து போகும், ஜூங்கா, வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தளபதி 65 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு லாக்டவுனுக்கு பின் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×