என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்ற சின்னிஜெயந்தின் மகனுக்கு நடிகர்கள் ரஜினி, கமல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    ரஜினியின்  ‘கை கொடுக்கும் கை’ படத்தின் மூலம் அறிமுகமாகி பல்வேறு முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமானவர் சின்னி ஜெயந்த். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவரது மகன் ஸ்ருஜன் ஜெய் சமீபத்தில் நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்தியாவிலேயே 75வது இடம் பிடித்தது மட்டுமின்றி முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றுள்ளார். இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

    அந்த வகையில் தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினியும், கமலும் தொலைபேசி வாயிலாக சின்னிஜெயந்தின் மகன் ஸ்ருஜன் ஜெய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    சின்னிஜெயந்த், ஸ்ருஜன் ஜெய்

    சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருஜன், தனது பெற்றோரை பெருமைப்படுத்தியதற்காக தானும் பெருமைப்படுவதாக கூறியுள்ள ரஜினி, கொரோனா ஊரடங்கு இல்லாமல் இருந்தால் நேரடியாக வீட்டுக்கே வந்து வாழ்த்தியிருப்பேன் என்று தெரிவித்தாராம்.
    ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்த படம் தாமதமாவதால், அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
    விஜய்யை வைத்து, ‘மாஸ்டர்’ படத்தை இயக்கியுள்ளா இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இதற்கு முன்பு ‘மாநகரம்’, கைதி’ ஆகிய படங்களை இயக்கியவர். இரண்டுமே வெற்றி படங்கள். அந்த படங்களின் வெற்றிதான் அவருக்கு ‘மாஸ்டர்’ படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்குவதாக இருந்தார்.

    லோகேஷ் கனகராஜ்

    ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருந்த ‘அண்ணாத்த’ படம், இன்னும் முடிவடையவில்லை. அந்த படம் முடிவதற்கு இன்னும் 2 மாதங்கள் ஆகும் என்பதால், இரண்டு மாதங்களில் குறைந்த பட்ஜெட்டில் ஒரு தெலுங்கு படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் முடிவு செய்து இருக்கிறார். தெலுங்கு படத்தை முடித்துக் கொடுத்து விட்டு, அவர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்குவார் என்று பேசப்படுகிறது. 
    ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த அருவா படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
    சூர்யா-ஹரி கூட்டணி, தமிழ் சினிமாவில் பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். இவர்களது கூட்டணியில் வெளியான ஆறு, வேல், சிங்கம் பட வரிசைகள் என அனைத்தும் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்தன. இதனிடையே ஹரியும் சூர்யாவும் ‘அருவா’ படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. கே.இ.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஒரே கட்டமாக ஷூட்டிங்கை முடித்து படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு இருந்தனர்.

    சூர்யா, ஹரி

    தற்போது நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பை திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை. இந்நிலையில், அருவா படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந்த பின் சூர்யா, வெற்றி மாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். இதையடுத்து பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளாராம். இதனால் அருவா படம் கைவிடப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் படக்குழுவினர் தரப்பில் இதுகுறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.
    சமீபத்தில் நடைபெற்ற பிரபல நடிகரின் திருமணத்தில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதாம்.
    கொரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகம் ஆகிக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக வழக்கமாக உற்றார் உறவினர்களுடன் சிறப்பாக நடைபெறும் திருமணங்கள் உள்ளிட்ட சடங்குகள் எளிமையாக நடைபெற்று வருகின்றன. பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சிகளும் அவ்வாறு நடைபெற்று வருகிறது. 

    அந்த வகையில் தெலுங்கு நடிகர் நிதினின் திருமணம் ஐதராபாத்தில் கடந்த ஜூலை 26-ந் தேதி நடைபெற்றது. இந்த திருமண விழாவில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 

    நிதின், ஷாலினி

    இந்நிலையில், நிதினின் திருமணத்தில் கலந்துகொண்ட சிலருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதாம். இதனால் நிதின்-ஷாலினி தம்பதியினர் உள்பட அந்த திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்களாம். 
    நடிகர் சஞ்சய் தத் உடல் நலக்குறைவால் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    மும்பை:

    பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உடல் நலக்குறைவால் மும்பையில் உள்ள பிரபல நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

    இதுதொடர்பாக, நானாவதி மருத்துவமனை தரப்பில் கூறுகையில், சஞ்சய் தத்திற்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா பரிசோதனை சஞ்சய் தத்திற்கு  மேற்கொள்ளப்பட்டது.

    பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என்றே வந்துள்ளன. எனினும், மருத்துவ கண்காணிப்பில் சில நாட்கள் இருப்பார். அவரது உடல் நிலை தற்போது நல்ல நிலையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகராக இருக்கும் ராணா, தொழிலதிபர் மிஹீகா பஜாஜை இன்று திருமணம் செய்துக் கொண்டார்.
    நடிகர் ராணா லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். பாகுபலி படம் தான் இவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு நிறுத்தியது. இவர் தமிழில் ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ராணாவுக்கும் ஐதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்ற பெண் தொழில் அதிபருக்கும் திருமணம் ஆகஸ்ட் 8-ந் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக திருமணத்துக்கு வரும் விருந்தினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரும் கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதை உறுதி செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. 

    ராணா திருமணம்

    இதையடுத்து நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துக் கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை திருமண கோலத்தில் ராணா இருக்கும் புகைப்படங்களும், மணப்பெண் மிஹீகா புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியானது.

    பின்னர் மிஹீகாவை திருமணம் செய்து கொண்டார் ராணா. இவர்களுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
    ஜா.ரகுபதி இயக்கத்தில் பாலாஜி, நிகிலா, அப்புக்குட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் ஒன்பது குழி சம்பத் படத்தின் முன்னோட்டம்.
    அப்புக்குட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஒன்பது குழி சம்பத்’. இப்படம் வரும் ஆகஸ்ட் 15-ல் ஆன்லைன் தளத்தில் வெளியாக இருக்கிறது. ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படம், 80-20 பிக்சர்ஸின் திருநாவுக்கரசு தயாரிப்பில், ஜா.ரகுபதி இயக்கத்தில், பாலாஜி, நிகிலா, அப்புக்குட்டி, இந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

    இத்திரைப்படம் கிராமத்தில் போக்கிரியாகத் திரிந்துகொண்டு, கோலி குண்டு விளையாடிக்கொண்டு திரியும் இளைஞனின் கதை. அவனுடைய வாழ்வில் ஒரு பெண் நுழைகிறாள். அதனால் அவனுடைய வாழ்வில் ஏற்படும் மாற்றம் என்ன? அப்பெண்ணின் வாழ்வில் ஏற்படும் மாற்றம் என்ன? என்பதை சொல்லும்படம் இது. சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லரோடு இப்படத்தின் கிளைமாக்ஸை முடித்திருக்கிறார் இயக்குநர் ஜா.ரகுபதி. 

    இசை - சார்லி, ஒளிப்பதிவு - கொளஞ்சி குமார், படத்தொகுப்பு - தீனா ஆகியோர் இப்படத்தில் பணியாற்றி இருக்கிறார்கள்.
    நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாசுக்கு கொரோனா எப்படி வந்தது என்று அவரது மகன் கென் கருணாஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
    நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாசுக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. முன்னதாக அவரது பாதுகாவலருக்கு தொற்று பாதிப்பு இருந்ததை அடுத்து கருணாசுக்கும் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு திண்டுக்கல்லில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் தனது தந்தைக்கு கொரோனா தொற்று எப்படி பரவியது என்பது குறித்து அவரது மகன் கென் கருணாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    கருணாஸ் - கென் கருணாஸ்

    அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, “என் தந்தை அரசியல்வாதியாக இருப்பதால் கடந்த சில நாட்களாக அவரது தொகுதியில் பல்வேறு இடங்களுக்குச் சென்றதால் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை சீராக உள்ளது. நாங்களும் பாதுகாப்பாக இருக்கிறோம். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை எடுத்துக் கொள்ளுங்கள். தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். தயவு செய்து தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    தமிழில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் ஸ்ருதிஹாசன், தன்னுடைய மற்றொரு பக்கத்தை எட்ஜ் மூலம் காண்பிக்க இருக்கிறார்.
    நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில் செலவழித்துள்ளார். அவரது ஒரிஜினல் பாடலான ‘எட்ஜ்’ இன்று வெளியானது. அடுத்த வருட தொடக்கத்தில் வெளியாகவுள்ள அவரது ஆல்பத்தின் ஒரு அங்கம் இந்த பாடல்.

    எட்ஜ் பாடல் எப்போதும் மறைத்து வைக்கப்பட்ட உங்கள் உணர்வுகளின் ஓரம் வரை செல்லும். வாழ்க்கையையும் காதலையும் பற்றிய கனவும், கோபமும் பயப்படவோ, சங்கடப்படவோ கூடாது என்பதே இப்பாடல். இதற்கு முன் பார்வையாளர்கள் பார்த்திராத ஸ்ருதியின் இன்னொரு பக்கம் இது. இந்த பாடலை உருவாக்க அவருக்கு சில காலம் தேவைப்பட்டது. 



    ஸ்ருதிஹாசன்

    இது குறித்து ஸ்ருதி கூறும்போது, “இசைதான் எனது இயல்பு, இசை என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகும், அதைப் பகிர்ந்து கொள்ள முடிந்ததற்கு நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். எட்ஜ் உங்களுக்கு இருக்கும் குழப்பத்தையும், சீரற்ற உங்கள் அன்பான பகுதிகளையும் வெளிக்கொண்டு வரும் ஒரு முயற்சி. மற்றவர்களிடம் நீங்கள் சிறந்ததை எதிர்பார்ப்பதை நிறுத்தும்போது, உங்களை நீங்கள் உண்மையாக புரிந்துகொண்டு மற்றும் ஏற்றுக்கொள்வதற்கான பயணம் தொடங்குகிறது.

    இவ்வாறு ஸ்ருதிஹாசன் கூறினார்.

    கரண் பாரிக் இணைந்து தயாரித்துள்ள ‘எட்ஜ்’-ல் ஸ்ருதி பல்வேறு பொறுப்புக்களை ஏற்றுள்ளார். பாடலை எழுதி பாடியது மட்டுமின்றி, இப்பாடலை பதிவு செய்து, இயக்குநரும் எடிட்டருமான சித்தி படேல் உடன் இணைந்து இப்பாடலுக்கான வீடியோவை ஊரடங்கு காலத்தில் படமாக்கியுள்ளார்.
    கொரோனா ஊரடங்கில் பலரும் அவதிப்பட்டு வரும் நிலையில், நடிகர் சரண் செல்வம் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு முதலில் உதவுவோம் என்று கூறியிருக்கிறார்.
    கொரோனா ஊரடங்கில் பலதரப்பட்ட மக்களும் வேலைவாய்ப்பின்றி பொருளாதார சிக்கலில் இருந்துவரும் வேளையில், சினிமா தொழிலாளர்கள் நிலைமையும் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தொழில் நுட்பக்கலைஞர்கள், துணை நடிகர்கர்கள் என்று பலரும் வேலையின்றி இருக்கின்றனர். பலரும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உதவி வருகிறார்கள்.

    அந்த வகையில் நடிகர் சரண் செல்வம் இந்த ஊரடங்கு நேரத்தில் பலருக்கும் உதவி வருகிறார். உணவுப்பொருட்கள், உள்ளிட்டவைகள் தொடர்ந்து உதவிவரும் நிலையில் சினிமா நடிகர் நடிகைகள் ஒருங்கிணைப்பாளர் சங்கத்தை சார்ந்தவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கினார். ஊரடங்கு தொடரும் பட்சத்தில் சினிமா தொழிலாளர்கள் பெரும் சிக்கலுக்கு உள்ளாவார்கள். நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வது அவசியமாகிறது. 

    சரண் செல்வம்

    அடிப்படை உணவு பொருட்களுக்குக்கூட சிரமப்படும் தொழிலாளர்கள் பலர் இருந்தாலும் எவரிடமும் சென்று உதவி கேட்பதில் தயக்கம் இருக்கும். அப்படி தயக்கத்திலிருப்பவர்களுக்கு நானாக சென்று உதவிவருகிறேன். நாம் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு முதலில் உதவுவோம் என்கிறார் சரண் செல்வம்.

    சரண் செல்வம் தமிழில் அகம்புறம், திருட்டு ரயில், அதித்யாயம், காசேதான் கடவுளடா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
    நடிகர் அஜித்துடன் என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்த அனிகா, தற்போது வாழையிலை மட்டும் அணிந்து புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார்.
    தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. அவர் இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார். இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக பொருந்திவிட்டது. இதை அடுத்து அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார்.

    இந்த படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் பார்ப்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் ரசிகர்கள் அனைவரையும் தங்களது தந்தையையும், மகளையும் நினைக்க வைத்தது. 

    அனிகா

    15 வயதாகும் அனிகா, ஹீரோயின்களுக்கு இணையாக விதவிதமாக போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். முதலில் கவர்ச்சியான புகைப்படத்திற்கு அஜித் ரசிகர்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் புடவையில் போட்டோஷூட் நடத்தினார். இந்நிலையில், தற்போது வாழையிலை மட்டும் அணிந்து கொண்டு போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதற்கு எதிர்மறையான கமெண்ட்டுகள் வந்து கொண்டு இருக்கிறது.
    பொன்மகள் வந்தாள், பெண்குயின், காக்டெயில் பட வரிசையில் அப்புக்குட்டியின் திரைப்படம் ஒன்று ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
    கொரோனா ஊரடங்கில் திரையரங்குகள் மூடப்பட்டியிருப்பதால் பல படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது. ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின், யோகிபாபுவின் காக்டெயில், வரலட்சுயின் டேனி ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது. தற்போது அந்த வரிசையில் அப்புக்குட்டி நடித்துள்ள ஒன்பது குழி சம்பத் திரைப்படமும் வெளியாக இருக்கிறது.

    இதுகுறித்து அப்புக்குட்டி கூறும்போது, ‘நான் நடித்துள்ள ‘ஒன்பது குழி சம்பத்’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ல் வெளிவருகிறது. அதுவும் ஆன்லைன் தளத்தில் வெளிவர இருக்கிறது. ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படம், 80-20 பிக்சர்ஸின் திருநாவுக்கரசு தயாரிப்பில், யதார்த்த சினிமாக்களால் திரைக்குள் ஈர்க்கப்பட்டு, சரவண சுப்பையாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஜா.ரகுபதி இயக்கத்தில், நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இத்திரைப்படத்தில் நாயகனாக பாலாஜி அறிமுகமாகிறார். சசிகுமாரின் ‘கிடாரி’, கார்த்தியின் ‘தம்பி’ படத்தின் நாயகியான நிகிலா இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சூர்யா நடித்த ‘காதலே நிம்மதி’ படத்தின் இயக்குநர் இந்திரன், இதுவரை யாரும் பார்த்திராத வேடத்தில் வருகிறார்.

    ஒன்பது குழி சம்பத்

    புதுப்படம் வெளியாகிறது என்றால் அது திரையரங்கில்தானே, கொரோனா காலத்தில் இது எப்படி சாத்தியம் என்று கேட்டால், தயாரிப்பாளர் சி.வி.குமார் அவர்கள் ரீகல் டாக்கீஸ் என்ற ஆப்ஸினை உருவாக்கி, அதை ஒரு ஆன்லைன் தியேட்டராக மாற்றி இருக்கிறார்.

    இந்த ஆன்லைன் தியேட்டரில் வாரம் ஒரு புதுப்படம் வெளியாகும். அப்படம் வெளிவரும் சமயத்தில், ஆன்லைனில் டிக்கெட் வாங்கி, உங்கள் வீட்டிலேயே அமர்ந்து, ஒரு டிக்கெட்டில் குடும்பத்தினர் அனைவரும் கண்டு மகிழலாம். இதுதான் ஆன்லைன் தியேட்டர்.

    ஆகஸ்ட் 15-அன்று காலை 9 மணிக்கு ரீகல் டாக்கிஸ் ஆன்லைன் தியேட்டரில் எங்களின் ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படம் வெளியாகிறது. ஆன்லைனில் டிக்கெட் வாங்கி படத்தைப் பாருங்க… நீங்கள் தரும் ஆதரவால், எங்களைப் போன்ற திரைக்கலைஞர்கள் வாழ்வு வளம் பெறும். தமிழ் சினிமா வளரும்’ என்றார்.
    ×