என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் வில்லனாக நடித்து பிரபலமான சோனு சூட், தனக்கு அரசியல் அழைப்புகள் வருவதாக கூறியுள்ளார்.
தமிழில் சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட பல படங்களில் வில்லகான நடித்தவர் சோனு சூட். இவர் கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு செய்த உதவிகளால் இந்தியா முழுவதும் கவனம் பெற்றுள்ளார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுத்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். மருத்துவர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்கள் தங்க இடம் கொடுத்தார். வெளிநாட்டில் தவித்த மாணவர்களை தனி விமானத்தில் அழைத்து வந்தார். இதனால் சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

சோனு சூட் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும் அழைப்புகள் வருகின்றன. இதற்கு பதில் அளித்து சோனுசூட் கூறும்போது, “அரசியலில் ஈடுபடும்படி பல வருடங்களாகவே எனக்கு அழைப்புகள் வருகின்றன. ஒரு நல்ல தலைவனாக என்னால் மாற முடியும் என்றும் கூறுகிறார்கள். ஆனால் இப்போது நான் நடிகனாக இருப்பதால் அரசியலுக்கு வர சிந்திக்கவில்லை. ஒரே நேரத்தில் இரண்டு படகில் சவாரி செய்ய விருப்பம் இல்லை. நான் ஒரு வேளை அரசியலில் ஈடுபடுவதாக இருந்தால் 100 சதவீதம் உழைப்பை கொடுப்பேன். எல்லோரும் பிரச்சினை இல்லாமல் வாழ்கிறார்கள் என்பதையும் உறுதி செய்வேன்.” என்றார்.
இந்தி தெரியாத காரணத்தால் தான் டெல்லி விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்டதாக வெற்றிமாறன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுப்பவர் என்றால் அது வெற்றிமாறன் தான். தனுஷின் பொல்லாதவன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தி தெரியாத காரணத்தால் தான் டெல்லி விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்டதாக வெற்றிமாறன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கனடாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் ஆடுகளம் படத்தை ஸ்கிரீன் செய்துவிட்டு இந்தியாவுக்கு திரும்பினோம்.
டெல்லி விமான நிலையத்தில் இமிகிரேஷன் பிரிவில் இருந்தவர் என்னிடம் இந்தியில் பேசினார். எனக்கு இந்தி தெரியாது என்று ஆங்கிலத்தில் நான் அவரிடம் கூறினேன். ஆனால் அதற்கு அவரோ, இந்த நாட்டின் தாய்மொழி உங்களுக்கு தெரியாதா எனக் கேட்டார். என் தாய் பேசும் மொழி தமிழ். அதனால் அது தான் என் தாய்மொழி என கூறினேன். பிறரிடம் பேச எனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதையும் அவரிடம் கூறினேன்.

நான் சொன்னதை கேட்டு அந்த நபருக்கு கோபம் வந்துவிட்டது. நீங்கெல்லாம் இப்படித் தான். தமிழர்களும், காஷ்மீர் மக்களும் தான் இந்த தேசத்தை பிரிக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் தீவிரவாதிங்கன்னு என்னவெல்லாமோ பேசி என்னை தனியாக நிற்க வைத்துவிட்டார்.
நாங்க கல்ச்சுரல் எக்ஸ்சேஞ்சுக்காக கனடாவுக்கு போயிட்டு வந்துள்ளோம். இவர் இந்த வருடம் தேசிய விருது வாங்கிய இயக்குனர் என்று என்னுடன் வந்திருந்த தயாரிப்பாளர் கதிரேசனும், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷும் அந்த நபரிடம் எடுத்து சொல்லியும் அவர் கேட்கல. 45 நிமிடம் என்னை தனியாக நிற்க வச்சிட்டார். அதன் பிறகு வேறு ஒரு அதிகாரி வந்துதான் என்னை போகச் சொன்னார்.
என் தாய்மொழியில் நான் பேசுவது எப்படி இந்த நாட்டோட ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும்?. என் தாய்மொழியில் நான் படிப்பது எப்படி இந்த நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் என்று வெற்றிமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய விருது வென்ற இயக்குனருக்கே இந்த கதி என்றால், சாதாரண மக்களின் நிலை என்னவாகும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக தமிழ் பட நடிகை ராகிணி திவேதி பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெயம் ரவியின் ‘நிமிர்ந்து நில்’ படத்தில் 2-வது கதாநாயகியாக நடித்தவர் ராகிணி திவேதி. ஆர்யன் என்ற படத்திலும் நடித்துள்ளார். அர்ஜுன் ஜோடியாக மெய்காண் படத்தில் நடித்தார். இந்த படம் வெளியாகவில்லை. கன்னடத்தில் சங்கர் ஐ.பி.எஸ், கெம்பே கவுடா, வில்லன் பங்காரி, சிவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
ராகிணி தற்போது போதை பொருள் சர்ச்சையில் சிக்கி உள்ளார். சமீபத்தில் பெங்களூருவில் தடை செய்யப்பட்ட போதை பொருளை விற்ற டி.வி. நடிகை அனிகா உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்ததில் கன்னட திரையுலகினர் நடத்தும் விருந்து நிகழ்ச்சிகளில் போதை பொருட்களை அவர் விற்று வந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.
கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷும் கன்னட சினிமாவில் போதை பொருள் பழக்கம் இருப்பது உண்மைதான் என்றார். போதை பொருள் பயன்படுத்தும் 16 பேரின் பட்டியலையும் போலீசில் ஒப்படைத்தார்.

இந்த நிலையில் நடிகை ராகிணியின் நெருக்கமான நண்பர் ரவி என்பவரை போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் நேற்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நடிகை ராகிணி திவேதிக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.
ஆனால் நேற்று காலையில் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியானது. இதற்கிடையே நடிகை ராகிணி தரப்பில் ஆஜரான வக்கீல், சொந்த பிரச்சினை, உடல் நலக்குறைவு காரணமாக வருகிற 7-ந் தேதி நடிகை ராகிணி திவேதி விசாரணைக்கு ஆஜராக காலஅவகாசம் வழங்கும்படி போலீசாரிடம் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக கன்னட நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக தமிழ்ப் பட நடிகை ராகிணி திவேதியிடம் விசாரணை நடைபெறுகிறது. வீட்டில் சோதனை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ராகினியை கைது செய்துள்ளனர். இது கன்னட பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தயாரிப்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாக வினியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டம் ஜூம் செயலி மூலம் நடந்தது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர், செயலாளர் மன்னன் மற்றும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இன்றைக்கு வந்திருக்கலாம் ஓ.டி.டி. தளம், ஆனால் இத்தனை காலமாக பல நட்சத்திர நடிகர்களுக்கு படத்தை வாங்கி வெளியிட்ட வினியோகஸ்தர்கள் மட்டுமே சேர்த்தோம் பலம். கொரோனா காலத்திலே திரையரங்குகள் மூடப்பட்டு கிடக்கிறது. திரையுலகம் மூச்சுமுட்டி கிடக்கின்றது. ஓ.டி.டி. தளத்திலே நட்சத்திர அந்தஸ்துள்ள படத்தை வாங்குவார்கள்.

ஆனால் சின்ன தயாரிப்பாளர்களின் படங்களை வாங்குவார்களா? தயாரிப்பாளர்களே சிந்திக்க வேண்டும், ஆனால் சின்ன படங்களை வாங்கி வெளியிடும் வினியோகஸ்தர்களும் இருக்கிறார்கள். ஓ.டி.டி. என்ற இந்த புதிய தளம் எங்களுடைய திரைப்பட வினியோகஸ்தர் என்ற இனத்தையே அழித்துவிட கூடாது. காலம் நினைத்தால் விரைவிலேயே திரையரங்குகள் திறக்கப்படும். 8 சதவிகிதம் உள்ளாட்சி வரியினை முற்றிலும் ரத்து செய்ய கோரி தமிழக அரசுக்கு மீண்டும் கோரிக்கை வைக்கப்படும்.
இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படத்தின் வினியோக உரிமை சம்பந்தமாக வினியோகஸ்தர்களிடம் பணத்தினை பெற்றுக்கொண்டு, அவர் தயாரித்த அந்த படத்தினை திரையரங்குகளில் வெளியிடாமலும், வினியோகஸ்தர்கள் செலுத்திய தொகையை திரும்ப அளிக்காமலும், அப்படத்தினை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தும் விதமாக அப்படத்தினை ஓ.டி.டி. யில் திரையிடும் தயாரிப்பாளர்களிடமிருந்து வினியோகஸ்தர்கள் செலுத்திய பணத்தினை திரும்ப பெற்று சம்பந்தப்பட்ட வினியோகஸ்தர்களுக்கு அளிப்பதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.”
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் விஜய் ஆண்டனி திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் ‘தமிழரசன்’, ‘அக்னிச் சிறகுகள்’, ‘காக்கி’, உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.

கொரோனா பிரச்னையால் பொருளாதார ரீதியாக இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தனது சம்பளத்தில் இருந்து 25 சதவிகிதத்தை குறைத்துக் கொள்வதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

தற்போது தமிழக அரசு படப்பிடிப்பிற்கு அனுமதி அளித்துள்ளதால் நடிகர் விஜய் ஆண்டனி திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார். என்னை நம்பி, என்னை வைத்து படம் தயாரித்துக் கொண்டிருக்கும் என் தயாரிப்பாளர்களுக்காகவும், என் இயக்குனர்களுக்காகவும் மற்றும் பெப்சி தொழிலாளிகளுக்காகவும் நாளை முதல் சரியான பாதுகாப்புடன், நான் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளேன். நம்பிக்கையுடன் நான்” என்று கூறியுள்ளார்.
விஜய் ஆண்டனியின் இந்தப் பதிவுக்கு ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வரவேற்று வருகிறார்கள்.
நடிகர் கமல் தொகுத்து வழங்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி எப்போது தொடங்க இருக்கிறது என்பது பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கொரோனா அச்சுறுத்தலால் இந்த வருடம் தள்ளி போகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் புரமோ வீடியோ வெளியானது. இது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. யாரெல்லாம் போட்டியாளர்களாக வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் எழுந்தது.
ரம்யா பாண்டியன், குக்வித் கோமாளி புகழ், நடிகை கிரண், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட ஹீரோயின் ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் பெயர்கள் அடிப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழ் பிக்பாஸ் சீசன் 4 ஒளிபரப்பாகும் தேதி குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அக்டோபர் - 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று போட்டியாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும், திங்கள் கிழமை முதல் பிக்பாஸ் வீட்டின் நிகழ்வுகள் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது. அடுத்தடுத்து வெளியாகும் புரமோக்களில் தேதிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர், தன்னுடைய வீட்டுக்குள் வந்த பாம்பை துணிச்சலாக பிடித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் அருண் பாண்டியன். இவரின் மகள் கீர்த்தி பாண்டியன் தற்போது சினிமாவில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ’தும்பா’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான கீர்த்தி, தற்போது ஹெலன் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
கொரோனா ஊரடங்கால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்ட நிலையில் சொந்த ஊருக்குச் சென்ற கீர்த்தி பாண்டியன் விவசாய பணிகளை செய்து அதை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலானது. தற்போது தனது வீட்டுக்குள் வந்த பாம்பை தனி ஒரு ஆளாக துணிச்சலாக பிடித்த கீர்த்தி பாண்டியன், அதை அடிக்காமல் பக்கெட்டில் போட்டு வெளியே கொண்டு விட்டுள்ளார்.

அதை வீடியோ பதிவாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள், கீர்த்தி பாண்டியனின் தைரியத்தை பாராட்டி வருகிறார்கள். இந்த இளம் நடிகையின் வீர செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஜய்யின் அழைப்புக்காக காத்திருப்பதாக பிரபல இயக்குனர் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
தனுஷ் நடித்த ’பொல்லாதவன்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் வெற்றிமாறன். அதன் பின்னர் ஆடுகளம், விசாரணை, வட சென்னை மற்றும் அசுரன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில் நான்கு திரைப்படங்களில் தனுஷ் நடித்துள்ளார்.
இந்த நிலையில் முழுக்க முழுக்க தனுஷுடன் மட்டுமே பயணம் செய்து கொண்டிருந்த இயக்குனர் வெற்றிமாறன் முதல் முறையாக மற்ற நடிகர்களின் படங்களையும் இயக்கி வருகிறார். தற்போது சூரி நடிக்கும் படம் ஒன்றையும், சூர்யா நடிக்கும் ’வாடிவாசல்’ என்ற திரைப்படத்தையும் வெற்றிமாறன் இயக்க உள்ளார்.

இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியலில் வெற்றிமாறன் இணைந்துள்ளார். சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இயக்குனர் வெற்றிமாறன், ’முதலில் சூரி படத்தை முடித்துவிட்டு அதன்பின் சூர்யாவின் ’வாடிவாசல்’ படத்தின் பணியை தொடங்க போவதாகவும் அதற்கு அடுத்தபடியாக விஜய்க்காக கதையை தயார் செய்ய ஆரம்பித்து விட்டேன் என்றும் விஜய்யின் அழைப்பிற்காக காத்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகரும் மல்யுத்த வீரருமான ராக் என்கிற டிவைன் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவரே கூறியிருக்கிறார்.
பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்’, ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’, ’ஹெர்குலஸ்’ உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் டிவைன் ஜான்சன். இவர் பல ஆண்டுகளாக உலகப்புகழ் பெற்ற (WWE) மல்யுத்த வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரை பெரும்பாலானோர் ராக் என்றே அழைப்பார்கள்.
இந்த நிலையில் நடிகர் டிவைன் ஜான்சன் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தனது மனைவி மற்றும் மகள்களுக்கும் கொரோனா பாதிப்பு என்றும், தற்போது குடும்பத்துடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது ‘நோய் எதிர்ப்பு சக்தியை அனைவரும் அதிகரித்து கொள்ளுங்கள். கண்டிப்பாக மாஸ் அணியுங்கள். உங்கள் குடும்பத்தை பாதுகாப்புடன் பார்த்து கொள்ளுங்கள். எங்கள் குடும்பத்திற்கு இதுவொரு சோதனையான காலம். இருப்பினும் இதிலிருந்து மீண்டு வருவோம்’ என்று தெரிவித்துள்ளார்.
வரும் திங்கட் கிழமை பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை குறித்து நல்ல செய்தி வரும் என்று அவரது மகன் கூறியிருக்கிறார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இவரது உடல் நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் வீடியோ மூலமாகவும், மருத்துவமனை அறிக்கை மூலமாகவும் வெளியிட்டு வருகிறார்கள்.
தற்போது எஸ்.பி.பி.க்கு முழுமையாக நினைவு திரும்பியிருக்கிறது. பிறா் பேசுவதை உணர்ந்து பதிலளிக்கிறார். பிசியோதரபி சிகிச்சைகளுக்கு நல்ல ஒத்துழைப்பு அளிக்கிறார் என்று அண்மையில் தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை நல்ல செய்தி வரும்... எஸ் பி பி சரண்#SPBalasubrahmanyam#SPBpic.twitter.com/DhJKETVYhp
— Maalai Malar News (@maalaimalar) September 3, 2020
இந்நிலையில் எஸ்.பி.பி.சரண் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், அப்பாவின் உடல்நிலை 4-வது நாளாக சீராக உள்ளது. அவரது உடல்நிலை குறித்து திங்கட்கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம். தொடர்ந்து மருத்துவர்கள் அவரை கண்காணித்து வருகிறார்கள். உங்களுடைய ஆசிர்வாதத்தால் விரைவில் குணமடைந்து விடுவார் என்று கூறியிருக்கிறார்.
கொரோனா பரவல் காரணமாக தடைபட்டிருந்த பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு மீண்டும் வெளிநாட்டில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
மணிரத்னம், பொன்னியின் செல்வன் பட வேலைகளை கடந்த வருடம் தொடங்கினார். இந்த படத்தில் நடிக்க விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம் ரவி, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யாராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டனர். தாய்லாந்து காடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. சென்னையில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை மீண்டும் தொடங்க இருந்த நேரத்தில் கொரோனாவால் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், படப்பிடிப்புக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பை இலங்கையில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக படக்குழுவினர் வருகிற செப்டம்பர் 20-ந் தேதி இலங்கை செல்ல உள்ளதாகவும், அங்கு ஒரு மாதம் படப்பிடிப்பை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரைசா வில்சன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள தி சேஸ் படத்தின் முன்னோட்டம்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா வில்சன் அடுத்ததாக நடிக்கும் திகில் படத்துக்கு ‘தி சேஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை கார்த்திக் ராஜு இயக்குகிறார். ஹரீஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட், மோனிகா ஆகியோரும் நடித்துள்ளனர்.
குறைந்த நடிகர்களை வைத்து தி சேஸ் படத்தை உருவாக்கி உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை கிராமத்தில் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஒரு தாய், மகள் மற்றும் ஒரு இளைஞர் ஆகியோரை சுற்றி ஒரே நாள் இரவில் நடக்கும் கதையாக உருவாக்கி உள்ளனர்.

ஊரடங்கில் படக்குழுவினருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்து எடுக்கப்பட்ட இந்த படத்தை தியேட்டரில் வெளியிட முடிவு செய்துள்ளனர். ராஜ்சேகர் வர்மா தயாரித்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.






