என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 65 படத்தின் தலைப்பு குறித்து சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
    விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் ஊரடங்கு காரணமாக இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இதனிடையே விஜய்யின் 65-வது படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. முருகதாஸ் அப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார். 

    விஜய்

    இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்து சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அது என்னவெனில், மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்து சூப்பர்ஹிட்டான ‘தளபதி’ படத்தின் தலைப்பை இந்த படத்துக்கு வைக்க படக்குழு திட்டமிட்டு உள்ளதாகவும், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இப்படம் குறித்து இன்னும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
    நயன்தாரா நடிக்கும் 'நெற்றிக்கண்' படத்தை இயக்கும் மிலிந்த் ராவ் அடுத்ததாக ராணா நடிக்கும் திரில்லர் படத்தை இயக்க உள்ளாராம்.
    சித்தார்த் நடித்த 'அவள்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிலிந்த் ராவ். இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது நயன்தாரா நடிக்கும் 'நெற்றிக்கண்' படத்தை மிலிந்த் ராவ் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடை பட்டுள்ளது. இது பிளைண்டு எனும் கொரியன் படத்தின் ரீமேக்காகும். இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரித்து வருகிறார். 

    ராணா, மிலிந்த் ராவ்

    இந்தப் படத்தை தொடர்ந்து ராணா நடிக்கவுள்ள படத்தை மிலிந்த் ராவ் இயக்க உள்ளார். பெயரிடப்படாத இப்படத்தை சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அச்சன்டா கோபிநாத் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது. திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாக உள்ளது. அனைத்து மொழி ரசிகர்களையும் கவரும் வகையில் இப்படத்தை எடுக்க இருக்கிறாராம் மிலிந்த் ராவ்.
    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் சுந்தர் சி, சூப்பர்ஹிட் கன்னட படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளாராம்.
    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் சுந்தர் சி. குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவரான சுந்தர் சி, தற்போது ‘அரண்மனை’ படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார். இதில் ஆர்யா, ராஷி கண்ணா, சாக்‌ஷி அகர்வால் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், கன்னட மொழியில் சூப்பர் ஹிட்டான ‘மாயாபஜார்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை சுந்தர் சி கைப்பற்றி உள்ளதாக தெரிகிறது. இந்த படத்தை அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பத்ரி என்பவர் இயக்க உள்ளதாகவும், இதில் பிரசன்னா, ஷியாம், யோகி பாபு, அஸ்வின் உள்பட பலர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    சுந்தர் சி

    இந்த படத்தை தன்னுடைய அவ்னி சினி மூவிஸ் நிறுவனம் மூலம் சுந்தர் சி தயாரிக்க உள்ளாராம். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ஓம் ராவத் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக பிரபல நடிகர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
    பாகுபலியில் பிரபலமான பிரபாஸ் அடுத்து ஆதிபுருஷ் என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்து உள்ளனர். இது அவருக்கு 21-வது படம். இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்த படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் டப் செய்து வெளியிடுகின்றனர். படத்தின் போஸ்டர் மூலம் ராமாயணத்தின் ஒருபகுதியை படமாக்குவது உறுதியானது. 

    ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார். சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை ஓம் ராவத் இயக்க உள்ளார். இப்படத்தில் மற்றொரு முக்கியமான வேடம் என்றால், அது ராவணன் வேடம் தான். இந்த கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் நடிப்பார் என கூறப்பட்டது. 

    சையிப் அலிகான்

    இந்நிலையில், ராவணனாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளனர். அதன்படி, பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் ஆதிபுருஷ் படத்தில் ராவணனாக நடிக்க உள்ளார். 
    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களான ஜெய் மற்றும் ஆதி இணையும் படத்தை பிரபல இயக்குனர் இயக்குகிறார்.
    சென்னை-28, சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் ஜெய். இவரது நடிப்பில் தற்போது பிரேக்கிங் நியூஸ் என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. அதுபோல், ஈரம், மிருகம் படங்களில் நடித்து பிரபலமானவர் ஆதி. வளர்ந்து வரும் நடிகர்களான ஜெய் மற்றும் ஆதி இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சுசீந்திரன்

    ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தை பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்குகிறார். இயக்குனர் சுசீந்திரன் தமிழில் வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா, பாயும் புலி, ஜீனியஸ், கென்னடி கிளப் உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். 

    நடிகரும் அரசியல் பிரமுகருமான பவன் கல்யாணின் பிறந்தநாளுக்காக பேனர் வைத்த போது அவரது ரசிகர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
    சித்தூர் மாவட்டம் குப்பம் அடுத்த சாந்திபுரம் கடப்பல்லியை சேர்ந்தவர்கள் ராஜேந்திரா (வயது32). சோமசேகர் (30). அருணாசலம் (25) ஹரி, சுப்ரமணியம், அருண்குமார், 6 பேரும் நடிகர் பவன் கல்யாணின் தீவிர ரசிகர்கள். ராஜேந்திரா பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை செய்து வந்தார். அருணாசலம் பேக்கரி நடத்தி வந்தார்.

    ஜனசேனா கட்சி ஆரம்பித்துள்ள நடிகருமான பவன் கல்யாணுக்கு இன்று பிறந்தநாள். அவரது பிறந்த நாளையொட்டி ரசிகர்கள் 6 பேரும் நேற்று இரவு குப்பம் பலமநேர் சாலையில் 30 அடி உயர பிறந்த நாள் வாழ்த்து பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது உயர் மின் அழுத்த கம்பியில் பேனர் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி 6 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    இதில் ராஜேந்திரா, சோமசேகர், அருணாச்சலம் 3 பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அங்கிருந்தவர்கள் காயமடைந்த ஹரி, சுப்பிரமணியம், அருண்குமார் ஆகிய 3 பேரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவன் கல்யாண்

    இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குப்பம் ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்தனர். இது குறித்து நடிகர் பவன் கல்யாண் கூறியிருப்பதாவது: என்னுடைய பிறந்தநாள் வாழ்த்து பேனர் கட்டியதில் 3 பேர் பலியான சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. அவர்களின் பெற்றோர்களுக்கு நான் மூத்த பிள்ளையாக இருந்து அவர்கள் துயரைத் துடைக்க பாடுபடுவேன். இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் என கூறியுள்ளார். இறந்தவர்களில் ராஜேந்திராவும், சோமசேகரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    நடிகை பூர்ணிமா பாக்யராஜின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் நடிகர், டைரக்டர், திரைக்கதை ஆசிரியர், வசன கர்த்தா என புகழ்பெற்றவர் பாக்யராஜ். கடந்த 1984 -ம் ஆண்டு பிரபல நடிகையான பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார். பூர்ணிமாவின் தாயார் சுப்புலட்சுமி ஜெயராம். இவருக்கு வயது 85. 

    பூர்ணிமாவின் தாயார்


    கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். சுப்புலட்சுமி ஜெயராமின் இறுதி சடங்கு இன்று நடைபெற்றது. இவரது மறைவுக்கு திரைத் துறையினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    புரட்சித் தலைவர் என்று போற்றப்படும் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறை நடிகரும், அரசியல் பிரமுகருமான ஜெ.எம்.பஷீர் வீடியோக்களாக மாற்றியுள்ளார்.
    தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் ஜெ.எம்.பஷீர். அதிமுகவை சேர்ந்த இவர் பொதுவாகவே சமூக அக்கறையுடன் பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பாடல் ஒன்றை வீடியோவாக உருவாக்கி கடந்த மார்ச் மாதம் வெளியிட்டார் பஷீர்.

    இந்தநிலையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் அருமை பெருமைகளை இந்த இளைய தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் விதமாக தற்போது, ‘ஹிஸ்ட்ரி ஆப் லெஜன்ட் எம்.ஜி.ஆர்’ (History of Legent MGR) என்கிற தலைப்பில் கிட்டத்தட்ட 25 பாகங்களை கொண்ட வீடியோக்களாக உருவாக்கி, யூடியூப்பில் பதிவேற்றியுள்ளார். 

    ஜெ.எம்.பஷீர்

    கடந்த ஏப்ரல் மாதம் இந்த வீடியோக்கள் உருவாக்கும் பணியை துவங்கிய இவர், இதற்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார்.. இத்தனைக்கும் காரணம் எம்.ஜி.ஆர் என்கிற மாமனிதர் மீது கொண்ட தீராத காதல் என்கிறார் ஜெ.எம்.பஷீர்.

    நடிகர் ஜெ.எம்.பஷீர், குற்றாலம் என்ற படத்தை அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக தனது டிரென்ட்ஸ் சினிமா தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கி வருகிறார். மேலும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு 'தேசிய தலைவர்' என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. இதில் பசும்பொன் தேவர் வேடத்தில் பஷீர் நடித்து வருகிறார்.
    தமிழ் சினிமாவில் முன்னணியாக இருக்கும் நான்கு பிரபல இயக்குனர்கள் குட்டி லவ் ஸ்டோரி என்னும் படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்.
    எல்.கே.ஜி, கோமாளி, பப்பி, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய வெற்றி படங்களை தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், தற்போது கோஷ்வா இமைபோல் காக்க, மூக்குத்தி அம்மன், சுமோ போன்ற படங்களை தயாரித்து வருகிறது. இப்படங்கள் எல்லாம் விரைவில் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில், வேல்ஸ் நிறுவனம், ‘குட்டி லவ் ஸ்டோரி’ என்ற படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். ஆந்தாலஜி வகையாக உருவாக்கப்பட இருக்கும் இப்படத்தை கௌதம் மேனன், வெங்கட் பிரபு, விஜய் மற்றும் நலன் குமாரசாமி ஆகிய நான்கு இயக்குனர்கள் இயக்குகிறார்கள்.

    நான்கு இயக்குனர்கள்

    இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் மற்றும் புரோமோ வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நான்கு முன்னணி இயக்குனர்கள் இணைந்திருப்பது இப்படத்திற்கான எதிர்ப்பார்ப்பை இப்பொழுதே அதிகப்படுத்தி இருக்கிறது.
    பாலா இயக்கி கைவிடப்பட்ட ‘வர்மா’ படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக தகவல் பரவிய நிலையில், அதன் தயாரிப்பாளர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெற்றிகரமாக ஓடிய ‘அர்ஜுன் ரெட்டி’ படம், ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் படமானது. அதில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்க, பாலா இயக்கி இருந்தார். படம் முடிவடைந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் ‘வர்மா’ படத்தை கைவிடுவதாக அறிவித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ‘வர்மா’ படம் எதிர்பார்த்த அளவுக்கு விறுவிறுப்பாக இல்லை என்றும், ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் இருந்த உயிரோட்டம், ‘வர்மா’ படத்தில் இல்லை என்றும் கூறியதுடன், ‘வர்மா’ படத்தை வேறு ஒரு இயக்குனரை வைத்து திரும்ப எடுக்கப் போவதாகவும் கூறியிருந்தார். சொன்னபடியே ‘ஆதித்ய வர்மா’ என்ற படத்தை எடுத்து வெளியிட்டனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதனிடையே, வர்மா படத்தின் தயாரிப்பாளர் முகேஷ் ரடிலால் அப்படத்தை ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறி சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில், இந்த தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அது வெறும் வதந்தி எனவும் அவர் கூறியுள்ளார். 
    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பி. எழுதி காட்டிய 3 வார்த்தைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் கடந்த 5-ந் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மிதமான அறிகுறிகளே இருந்த நிலையில், ஆகஸ்ட் 13-ம் தேதியன்று இரவு அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

    இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிர் காக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    தனது தந்தையின் உடல் நிலை தொடர்பாக எஸ்.பி. சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. உடல்நிலை தேறிவருவதற்கான அறிகுறிகள் தெரிகிறது. நானும் எனது சகோதரியும் அப்பாவை இன்று சந்தித்தோம். மகளைக் கண்டதில் மகிழ்ச்சி அடைந்தார்” என்று கூறியுள்ளார்.

    சரண், எஸ்.பி. பாலசுப்ரமணியம்

    எஸ்.பி.பி உடல்நிலை முன்னேறிய நிலையில் அவருக்கு சுயநினைவு திரும்பி உள்ளது. 95 சதவீத சுயநினைவுடன் அவர் தற்போது சீரான உடல்நிலையுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தற் போது சுயநினைவுடன் இருக்கும் எஸ்.பி.பி பேனா மூலம் சில வி‌ஷயங்களை சொல்ல வருகிறார். இதற்காக அவரிடம் பேனா, பேப்பர் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ‘லவ் யூ ஆல்’ என்று எஸ்.பி.பி எழுதி இருக்கிறார்.

    லேசான கிறுக்கலுடன், தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மருத்துவர்கள், நர்சுகள், தனக்காக பிரார்த்தனை செய்யும் மக்கள் என்று எல்லோருக்காகவும் இந்த மூன்று வார்த்தைகளை தனது கைப்பட எழுதி உள்ளார். இவரின் இந்த எழுத்து குறிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    டாக்டர் மாறனின் ‘பச்சை விளக்கு’ திரைப்படம் சர்வதேச அளவில் நடைபெற்ற உலக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளை வென்றுள்ளது.
    டாக்டர் மாறன் இயக்கி, நடித்துள்ள ‘பச்சை விளக்கு’ திரைப்படம் சிறந்த சமூக விழிப்புணர்வுக்கான படம் என்று பாராட்டுகளை பெற்றிருந்தது.  இந்நிலையில் இந்த படம் சர்வதேச அளவில் நடைபெற்ற உலக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பாராட்டுகளைப் பெற்றுள்ளது. 

    பூடான் நாட்டிலுள்ள பரோ என்ற இடத்தில் நடைபெற்ற ட்ராக் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு சிறந்த சமூக விழிப்புணர்வுக்கான படம் என்ற விருதைப் பெற்றுள்ளது, ‘பச்சை விளக்கு’ திரைப்படம். இந்தியாவில் நடைபெற்ற ட்ரிப்ள் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதினை வென்றுள்ளது. 

    நியூயார்க் மூவி அவார்ட்ஸ் மற்றும் அப்ரோனடட் திரைப்பட விழாவிலும் இறுதித் தேர்விலும், மேலும் லண்டனில் சி.கே.எப். சர்வதேச திரைப்பட விழா, இத்தாலியில் நடைபெறும் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழாவான ப்ளாரன்ஸ் திரைப்பட விழா, அமெரிக்காவில் கோல்டன் பிக்சர்ஸ் திரைப்பட விழா, சவுத் பிலிம் அண்ட் அர்ட்ஸ் அகடமி விழா மற்றும் பர்ஸ்ட் டைம் பிலிம் மேக்கர்ஸ் விழாவிலும் அதிகாரப்பூர்வ தேர்வாக கலந்துகொண்டு பெருமை சேர்த்துள்ளது, ‘பச்சை விளக்கு’ திரைப்படம்.

    டாக்டர் மாறன்

    பெண்களை ஏமாற்றி காதலிப்பது போல நடித்து ஆபாச படம் எடுத்து அதை வைத்து பெற்றோர்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை தோலுரித்து காட்டும் விழிப்புணர்வு படமாக பச்சை விளக்கும் படம் உருவாகி இருந்தது. 

    எந்தவித பிரம்மாண்ட பின்னணியும் இல்லாமல், சாதாரணமாக எடுக்கப்பட்ட ‘பச்சை விளக்கு’ படத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ள இயக்குநர் டாக்டர் மாறன், முதல் முயற்சிக்கு கிடைத்திருக்கும் இந்தப் பாராட்டு இன்னும் நல்ல படங்களை தருவதற்கு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.
    ×