என் மலர்
சினிமா செய்திகள்
திரைப்பட இயக்குனரும் நடிகருமான ராமராஜன் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி இருக்கிறார்.
திரைப்பட இயக்குனரும் நடிகருமான ராமராஜன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

"சில நாட்களுக்கு முன்பு எனக்கு கொரோனாவின் தாக்கம் இருக்குமோ என்ற அய்யப்பாடு இருந்ததால் கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றேன்.
அங்கு மருத்துவர்களும் செவிலியர்களும் மட்டுமல்ல அங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணி புரிவதை கண்டேன். எனக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளித்தனர். உயர் தர சிகிச்சை அனைவருக்கும் அங்கு கிடைக்கிறது. இதற்காக மாண்புமிகு முதல்வர் அண்ணன் எடப்பாடி யார் அவர்களுக்கும், துணை முதல்வர் அண்ணன் ஒ.பி.எஸ் அவர்களுக்கும் . சுகாதார துறை அமைச்சர் சகோதரர் விஜயபாஸ்கர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு சிகிச்சை முடிந்து இன்று வீட்டிற்கு வந்து விட்டேன். இந்த இடைபட்ட நாட்களில் எனக்காக பிரார்த்தனை செய்து என் மீது அக்கறை கொண்டு தொலைபேசியிலும், நேரிலும் நலம் விசாரித்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சக நடிகர் நடிகைகளுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும்,நண்பர்களுக்கும் மற்றும் என் ரசிகபெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்."
இவ்வாறு அந்த அறிக்கையில் ராமராஜன் தெரிவித்துள்ளார்.
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.
பின்னர் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்பிபிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சில நாட்களில் கொரோனாவில் இருந்து மீண்டார். உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் சில தினங்களுக்கு முன்பு கூறினார்.
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கும் நாள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தொலைகாட்சிகளில் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் முடிந்துள்ளன. வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கப்படும் இந்நிகழ்ச்சி இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சற்று தாமதமாக தொடங்க உள்ளது.
கடந்த மாதம் பிக்பாஸ் 4வது சீசன் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிய போதும், இன்னும் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. அதில் கலந்துகொள்ளும் நடிகர், நடிகைகள் யார் என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி அக்டோபர் 4ஆம் தேதி தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
போதை பொருள் வழக்கு பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பிரபல நடிகரை தொடர்புபடுத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்தி, கன்னட பட உலகம் போதை பொருள் புகாரால் ஆட்டம் கண்டுள்ளது. போதை பொருள் கும்பலுடன் தொடர்பு வைத்து இருந்ததாக ஏற்கனவே இந்தி நடிகை ரியா சக்கரவர்த்தி, கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைதாகி சிறையில் உள்ளனர்.

போதை பொருள் தொடர்பாக நடந்த வாட்ஸ் அப் உரையாடலை வைத்து இந்தி நடிகை தீபிகா படுகோனேவின் மானேஜர் கரிஷ்மா பிரகாசுக்கும் அவர் பணியாற்றும் தனியார் நிறுவன அதிகாரிக்கும் போதை பொருள் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். விசாரணை வளையத்துக்குள் இருக்கும் இந்த தனியார் நிறுவனத்தில் சல்மான்கானும் ஒரு பங்குதாரராக இருக்கிறார் என்று வலைத்தளத்தில் தகவல் பரவியது.

இதையடுத்து சல்மான்கானுக்கு எதிராக பலரும் பதிவுகளை வெளியிட்டு கண்டித்தார்கள். இதற்கு விளக்கம் அளித்து சல்மான்கானின் வழக்கறிஞர் ஆனந்த் தேசாய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “க்வான் திறன் மேலாண்மை நிறுவனத்தில் நடிகர் சல்மான்கான் பங்குதாரராக இருக்கிறார் என்று தவறான செய்தி வெளியாகி உள்ளது. அந்த நிறுவனத்துடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ சல்மான்கானுக்கு எந்த தொடர்பும் இல்லை. சல்மான்கான் குறித்து தவறான தகவலை பரப்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
நடிகர் சங்க தேர்தல் வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை:
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சங்க உறுப்பினர்கள் பலரை நீக்கியது தொடர்பாகவும், தபால் வாக்குகள் அளிக்கப்படாதது குறித்தும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த சூழலில் வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, நடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல் நடத்துவதா? வாக்கு எண்ணிக்கை நடத்துவதா? என்பதை நடிகர்கள் விஷால், கார்த்தி மற்றும் எதிர் தரப்பினர் செப். 24-ம் தேதி பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நடிகர் சங்க தேர்தல் வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இரு தரப்பினரும் நீதிமன்ற யோசனையை ஏற்க மறுத்ததால் ஐகோர்ட்டு இந்த அதிரடி. உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் வேறு அமர்வு விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு அமர்வு பரிந்துரை செய்துள்ளது.
ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய், பாலக் லால்வாணி நடிப்பில் உருவாகி வரும் ‘சினம்’ படத்தின் முன்னோட்டம்.
அருண்விஜய்யின் 30 வது படம் சினம். தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன் இப்படத்தினை இயக்குகிறார். குற்றம் 23 எனும் மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு அருண் விஜய் மீண்டும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடிக்கிறார். இப்படம் குற்றம் 23ல் இருந்து முற்றிலும் மாறுபட்ட வேறொரு வடிவத்தில் போலீஸ் கதையை சொல்வதாக இருக்கும் என்கிறது படக்குழு.

பாலக் லால்வாணி இப்படத்தின் நாயகியாக நடிக்க, நடிகர் காளிவெங்கட் மிக முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, சகா படப்புகழ் சபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது எடிட்டிங் செய்கிறார். மைக்கேல் கலைஇயக்கம் செய்ய, ஸ்டண்ட் சில்வா சண்டைப்பயிற்சிகளை செய்கிறார். மதன் கார்கி, பிரியா ஏக்நாத் பாடல்களை எழுதுகிறார்கள்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையைச் சேர்ந்த சமந்தா, 2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், அவரை தெலுங்கு திரையுலகம்தான் முன்னணியில் கொண்டு வந்தது. தொடர்ந்து அங்கு பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.
பின்னர் தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். திருமணமான பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சமந்தா, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்.

இந்நிலையில், இவர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்தபடி நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரின் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகின்றன.
நடிகை சமந்தா, அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் இணைந்து நடிக்க உள்ளார். அதேபோல் கேம் ஓவர் படத்தை இயக்கி பிரபலமான அஸ்வின் சரவணன் இயக்கும் புதிய படத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணாக நடிக்க உள்ளார்.
ஸ்மார்ட் போன் வசதி இல்லாததால் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் கற்க முடியாமல் தவித்த 200 மாணவர்களுக்கு நடிகர் சோனு சூட் உதவி உள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் ரியல் ஹீரோவாக மாறியிருப்பவர் பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக தனது சொந்த செலவில் நூற்றுக்கணக்கான பஸ்களை ஏற்பாடு செய்து அவர்களது ஊருக்கு அனுப்பி வைத்தார். இதேபோல் மருத்துவ உதவி, மாணவர்களுக்கு கல்வி உதவி என பல்வேறு உதவிகளை செய்து அசத்தினார்.

தற்போது பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு இலவசமாக ஸ்மார்ட் போன் வழங்கி அசத்தியுள்ளார் சோனு சூட். கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல், ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
அந்தவகையில், சண்டிகரில் உள்ள அரசு பள்ளியில் 9 முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தங்களிடம் ஸ்மார்ட் போன் வசதி இல்லாததால் பாடங்களை கற்க முடியாமல் தவித்து வந்துள்ளனர். இதனை அறிந்த சோனு சூட், சுமார் 200 மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்து உதவி உள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட போட்டியாளர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் லீக் ஆகி உள்ளன.
தமிழ் தொலைகாட்சிகளில் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் முடிந்துள்ளன. வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கப்படும் இந்நிகழ்ச்சி இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சற்று தாமதமாக தொடங்க உள்ளது.
கடந்த மாதம் பிக்பாஸ் 4வது சீசன் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிய போதும், இன்னும் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. அதில் கலந்துகொள்ளும் நடிகர், நடிகைகள் யார் என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளனர்.
பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் போட்டியாளர்கள் நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பின்னர் அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஓட்டலில் இருந்தபடி நடிகை சிவானியும், நடிகர் ரியோவும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இதன்மூலம் அவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
மேலும் வேல்முருகன், ஆஜித், கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ், அனுமோகன், சனம் ஷெட்டி, ஷாலு ஷம்மு உள்ளிட்ட சிலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் தொடங்கி உள்ளது.
நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். அதிரடி ஆக்ஷன் படமாக இது தயாராகி வருகிறது. 60 சதவீத படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு கடந்த 6 மாதமாக தடைபட்டது.
படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் தொடங்கி உள்ளது. ஆனால் இந்த படப்பிடிப்பில் அஜித் பங்கேற்க வில்லை. இதர நடிகர்கள் நடிக்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக வில்லன் நடிகர் கார்த்திகேயா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. வலிமை படப்பிடிப்பிற்காக பெங்களூருவில் இருந்து கார்த்திகேயா சென்னை வந்துள்ளார். அவர் சென்னை விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படங்களும், வலிமை ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் க/பெ ரணசிங்கம் திரைப்படம் டிரைவ்-இன் தியேட்டரில் ரிலீசாக உள்ளதாம்.
கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் க/பெ.ரணசிங்கம். ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள, இப்படடத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு வைரமுத்து பாடல் வரிகளை எழுதி உள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை வருகிற அக்டோபர் 2-ந் தேதி ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். இந்த படத்தை ஓடிடியில் ஒரு முறை பார்ப்பதற்காக 199 ரூபாய் கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இப்படம் அதே நாளில் திரையரங்கிலும் வெளியாக உள்ளதாம். சமீபத்தில் மத்திய அரசு டிரைவ்-இன் தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்தது. அந்த வகையில் பெங்களூரில் டிரைவ்-இன் தியேட்டர்கள் வரும் 2ம் தேதி திறக்கப்பட இருப்பதாகவும் இதனை அடுத்து ‘க/பெ ரணசிங்கம்’ படம் பெங்களூரில் உள்ள டிரைவ்-இன் தியேட்டர்களிலும் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் உள்ள டிரைவ்-இன் தியேட்டர்களிலும் இந்த படம் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, வேல.ராமமூர்த்தி, ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் பி.விருமாண்டி இப்படத்தை இயக்கி உள்ளார். பல்வேறு படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்த பெரிய கருப்பத்தேவரின் மகன் தான் விருமாண்டி என்பது குறிப்பிடத்தக்கது.
சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் ரஜினி தன்னுடைய ஸ்டைலில் பன்ச் வசனங்கள் எழுதியிருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் `அண்ணாத்த'. இந்தப் படத்தின் இரண்டு கட்டப் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கி இந்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடைந்தது. இதில் ரஜினி நடித்தக் காட்சிகள்தான் பெரும்பாலும் படமாக்கப்பட்டன. இந்நிலையில் மார்ச் மாத இறுதியில் கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட படப்பிடிப்பு மொத்தமாக நிறுத்தப்பட்டது. நவம்பரில் இருந்து இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
ரஜினி இல்லாத காட்சிகள்தான் முதலில் படமாக்கப்பட இருக்கிறார்கள். ஜனவரியில் ரஜினி கலந்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணன் தங்கை சென்ட்டிமென்ட் படமான 'அண்ணாத்த' படத்தில் ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாராவும், ரஜினியின் முறைப்பெண்களாக குஷ்பு, மீனாவும் நடிக்கிறார்கள். முக்கியமான கதாபாத்திரத்தில் லிவிங்ஸ்டன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். காமெடி கேரக்டரில் சூரியும், சதீஷூம் நடிக்கிறார்கள்.

இதற்கு முன், தான் நடித்த சில படங்களில், தனக்கான, 'பன்ச்' வசனங்களை எழுதி நடித்துள்ள ரஜினி, தற்போது, அண்ணாத்த படத்திற்காகவும், ஓரிரு, 'பன்ச்' வசனங்களை எழுதியுள்ளார். அதை, போனிலேயே, இயக்குனர் சிவாவிடம், தன் ஸ்டைலில் ரஜினி பேசிக் காட்டியுள்ளார். அவற்றை மிகவும் ரசித்த சிவா, 'இந்த, 'பன்ச்' வசனங்களும், உங்களது ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும்...' என்று கூறியுள்ளார்.
மசாலா கதைகளாகவே அதிகமாக நடித்து வந்துள்ள ரஜினி, அண்ணாத்த படத்தில் மசாலாவை குறைத்து, 'சென்டிமென்ட்' அதிகமாக கலந்த கதையில் நடித்து வருகிறார். அதனால், இந்த படத்தில், ஆரம்ப கால ரஜினியை மீண்டும் பார்க்கலாம் என்று சொல்லும் அப்படக்குழுவினர், 'தியேட்டர்களில் எப்போதுமே, ரஜினியைப் பார்த்து, கை தட்டி ஆரவாரம் செய்யும் ரசிகர்கள், இந்த படத்தின், 'கிளைமாக்சை' பார்த்து, கண்கலங்கியபடி வெளியேறுவார்கள்...' என்று சொல்கின்றனர்.






