என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் ஆர்யா, பிரபல இயக்குனருடன் சண்டை போடும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். இவர் தற்போது ஆர்யாவை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். சல்பேட்டா என்று பெயர் வைத்திருக்கும் இப்படத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார்.

இந்நிலையில் ஆர்யாவுடன் இயக்குனர் பா.ரஞ்சித் குத்து சண்டை போடுவது போல புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. குத்துச்சண்டை வீரர்களை பற்றிய படம் என்பதால் அதற்காக தீவிர உடற்பயிற்சி செய்து உடல் அமைப்பை மாற்றி இருக்கிறார் ஆர்யா.

இப்படத்தில் வில்லனாக டைரக்டர் மகிழ்திருமேனி நடிக்கிறார். மேலும் சந்தோஷ் பிரதாப், கலையரசன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
அறிமுக இயக்குனர் விக்னராஜன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் அந்தகாரம் படத்தின் முன்னோட்டம்.
பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து அட்லீ தயாரித்துள்ள படம் ‘அந்தகாரம்’. அறிமுக இயக்குனர் விக்னராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்துள்ளார். மேலும் வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரதீப் குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் குறித்து இயக்குனர் விக்னராஜன் கூறியதாவது: அந்தகாரம் என்றால் புதையல்கள் நிறைந்த ஒரு இடம். அந்த இடத்தை சாத்தான்களும், பிசாசுகளும் பாதுகாக்கிறது என்று குறிப்பிடுகிறது பைபிள். இது முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம். இப்படம் முழுக்க சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மூன்று கதைகள் அவை ஒன்றோடொன்று தொடர்பு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மீ டூ இயக்கம் பற்றி சர்ச்சை கருத்தை வெளியிட்ட சக்திமான் நடிகர் முகேஷ் கன்னாவுக்கு பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். நடிகைகள் மீ டூவில் பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீதத்தா பாலியல் புகார் சொன்ன பிறகு இந்தியாவில் மீ டூ இயக்கம் பிரபலமானது.
இந்த நிலையில் சக்திமான் தொடரில் நடித்து பிரபலமான முகேஷ் கன்னா மீ டூ இயக்கம் பற்றி சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார். வீட்டை பார்த்துக்கொள்வதுதான் பெண்களின் வேலை. அவர்கள் வேலைக்கு போக ஆரம்பித்த பிறகுதான் மீ டூ பிரச்சினை உருவானது. ஆண்களுக்கு நிகராக நடக்க வேண்டும் என்று பெண்கள் நினைக்கிறார்கள் என்றெல்லாம் பேசி உள்ளார்.

அவரது கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. முகேஷ் கன்னாவுக்கு அறிவு இல்லை. இதுபோன்ற ஆணாதிக்க கருத்தை கேட்டதே இல்லை. உங்களை போன்றவர்களால்தான் மீ டூ இயக்கம் உருவானது. பெண் கடவுளை வழிபட இவருக்கு உரிமை கிடையாது என்றெல்லாம் பலரும் கண்டித்து வருகிறார்கள்.
பாடகி சின்மயி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “பெண்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்த பிறகுதான் மீ டூ பிரச்சினை வந்ததாக முகேஷ் கன்னா கூறியிருக்கிறார். ஆண்கள் தங்கள் கைகளை கட்டுப்படுத்தாமல் இருப்பதால் வரவில்லையாம். இவரை போன்ற மனநிலை உடையவர்களால் எனக்கு சோர்வு வருகிறது. இவர்கள் மாறப்போவது இல்லை. நச்சுக்கருத்தை தங்களுக்குள் வைத்துக்கொள்ளப்போவதும் இல்லை” என்று கண்டித்துள்ளார்.
கவுதம் கிச்சலுவுடன் காதல் கைகூடியது எப்படி என்பது குறித்து நடிகை காஜல் அகர்வால் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கும் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவுக்கும் கடந்த மாதம் 30-ம் தேதி திருமணம் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே அவர்களது திருமணத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், திருமணத்திற்கு பின் காஜல் அளித்த பேட்டியில், தனது காதல் கைகூடியது எப்படி என்பது குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது: எனக்கு கவுதமை 10 வருடங்களாக தெரியும், 7 வருடம் நண்பர்களாக இருந்தோம், கடந்த 3 ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்தோம். இந்தாண்டு தொடக்கத்தில் கவுதம் என்னிடம் காதலை சொன்னார். அது ஒரு எமோஷனலான தருணம். பின்னர் ஏப்ரல் மாதம் என் பெற்றோரை சந்தித்து கவுதம் பேசினார். அவர்கள் சம்மதித்ததால் எங்கள் திருமணம் நிச்சயமானது” என அவர் தெரிவித்துள்ளார்.
வி.பி.எப் கட்டணத்தை செலுத்தாவிட்டால் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியிடப்படாது என்று பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தன. கொரோனா பரவல் குறைந்து வருவதையொட்டி ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் அறிவித்தார். அதில் வருகிற நவம்பர் 10-ந் தேதி முதல் உரிய கட்டுப்பாடுகளுடன் சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தியேட்டர் உரிமையாளர்கள் வி.பி.எப் என்ற திரைப்பட ஒளிபரப்பு கட்டணத்தை செலுத்தாவிட்டால் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியிடப்படாது என்று திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். மேலும் டிஜிட்டல் நிறுவனங்கள் மாஸ்டரிங், குளோனிங், டெலிவரி மற்றும் சேவைக்கான ஒருமுறை கட்டணத்தை மட்டுமே செலுத்த முடியும். ஒரே ஒரு முறை வி.பி.எப் கட்டணத்தை செலுத்தும் முறைக்கு தியேட்டர் உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே படங்களை வெளியிடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்
ரஜினி, விஜய், அஜித் பட இயக்குனர்கள் இணைந்து விக்டிம் என்கிற ஆந்தாலஜி படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திரையுலகில் தற்போது ஆந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது. அந்தவகையில், ஏற்கனவே சில்லுக்கருப்பட்டி, புத்தம் புது காலை போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. அடுத்ததாக மணிரத்னம் தயாரிப்பில் 9 இயக்குனர்கள் இணைந்து நவரசா என்கிற ஆந்தாலஜி படத்தை எடுக்கின்றனர்.
இந்நிலையில், புதிய ஆந்தாலஜி படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. விக்டிம் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆந்தாலஜி படத்தை வெங்கட் பிரபு, பா.ரஞ்சித், ராஜேஷ், சிம்புதேவன் ஆகிய நான்கு இயக்குனர்கள் இயக்க உள்ளனர். இப்படத்தை வெங்கட் பிரபு தனது பிளாக் டிக்கெட் கம்பெனி மூலம் தயாரிக்கிறார்.

இவர்களில் பா.ரஞ்சித் ரஜினியை வைத்து காலா, கபாலி என்ற இரண்டு படங்களை இயக்கியுள்ளார். அதேபோல் வெங்கட் பிரபு அஜித்தின் மங்காத்தா படத்தை இயக்கி உள்ளார். சிம்புதேவன் விஜய்யின் புலி படத்தை இயக்கியவர். இவர்கள் அனைவரும் ஒரே படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளதால் இந்த ஆந்தாலஜி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இளம் இசையமைப்பாளரான நவீன் சங்கர் உடல்நலக்குறைவால் திடீரென மரணமடைந்தது தமிழ் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வெற்றி மகாலிங்கம் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான விசிறி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் நவீன் சங்கர். தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இசையமைப்பாளராக திகழும் நவீன் சங்கருக்கு, கடந்த வாரம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் கூறப்படுகிறது.
இவர் ஸ்ரீகாந்த், சந்திரிகா ரவி நடித்துள்ள ‘உன் காதல் இருந்தால்’ படத்திற்கும் பின்னணி இசை அமைத்துள்ளார். இப்படம் இன்னும் ரிலீசாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் முன்னோட்டம்.
நேமிசந்த் ஜபக் பிலிம்ஸ் சார்பில் ஹித்தேஷ் ஜபக் தயாரிள்ள திரைப்படம் பொன் மாணிக்கவேல். பிரபுதேவா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை ஏ.சி.முகில் இயக்கி உள்ளார். பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இயக்குனர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை சிவா நந்தீஸ்வரன் கவனித்துள்ளார். இப்படத்தில் பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பிரபுதேவா போலீஸ் வேடத்தில் நடிக்கும் முதல் படம் இதுவாகும். ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படமாக இது உருவாகி உள்ளது.
சூரரைப் போற்றுக்கு பின் 3 படங்களில் நடிக்க உள்ளதாகவும், அது என்னென்ன படங்கள் என்பதையும் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சூரரைப் போற்று. கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசாக வேண்டிய இப்படம், கொரோனா லாக்டவுன் காரணமாக தள்ளிப்போனது. இப்படத்தை வருகிற தீபாவளி பண்டிகையையொட்டி ஓடிடி தளத்தில் வெளியிடுகின்றனர். சுதா கொங்கரா இயக்கி உள்ள இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் சமீபத்திய பேட்டியில் தான் அடுத்ததாக நடிக்க உள்ள மூன்று படங்கள் என்னென்ன என்பது குறித்த தகவலை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். அதன்படி முதலாவதாக மணிரத்னம் தயாரிப்பில் உருவாகும் நவரசா என்கிற ஆந்தாலஜி படத்தில் நடிக்க உள்ள சூர்யா, இதையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளாராம். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.
இதன்பின்னர், வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார். இப்படத்தை வி கிரியேசன்ஸ் எஸ்.தாணு தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.
Exclusive : @Suriya_offl himself Confirmed his Lineups after #SooraraiPottru !!
— Suriya Fans Trends ™ (@Suriya_Trends) November 1, 2020
Immediate Next - Netflix anthology (Navarasa)
Then - #Suriya40 with @pandiraj_dir
Next - #Vaadivaasal with @VetriMaaran. pic.twitter.com/ZlHJ0fGNNR
மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தின் ரீமேக்கில் நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளாராம்.
மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வெளியான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. சாஷி இயக்கிய இந்தப் படத்தில் அய்யப்பனாக பிஜூமேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர். இரண்டு அதிகாரிகளின் இடையில் ஏற்படும் ஈகோ மோதலை யதார்த்தமாக எடுத்துக் காட்டியது இந்தத் திரைப்படம். இதனால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இந்தப் படத்திற்கு கிடைத்தது. படம் மிகப்பெரிய வெற்றியையும் அடைந்தது.
இந்தப் படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்ய முயற்சி செய்யப்பட்டு வருகிறது. தமிழில் இந்தப் படத்தை ரீமேக் செய்ய, தயாரிப்பாளர் ஆடுகளம் கதிரேசன் உரிமையை வாங்கி வைத்திருக்கிறார். அதே போல் தெலுங்கு ரீமேக்கிற்கான உரிமையை, தயாரிப்பாளர் சூர்யதேவர நாகவம்சி வாங்கியுள்ளார்.

இந்த படத்தில் பிஜூமேனன் நடித்த அய்யப்பன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்க உள்ளார். பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் நிதின் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் மற்றுமொரு முக்கிய கதாபாத்திரம் என்றால் அது அய்யப்பன் மனைவி கண்ணம்மா கதாபாத்திரம் தான், தெலுங்கு ரீமேக்கில் அந்த கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்க உள்ளார். அதாவது அவர் இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதால், இயக்குனர் ஷங்கர் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறாராம்.
ஷங்கர் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்துள்ளது. இதனால், இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் ஷங்கர்.
இவர் இயக்கி வந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை தற்போது மீண்டும் தொடங்க முடியாத சூழல் நிலவி வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக நீங்கிய பின்னர் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஷங்கர் அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. லாக்டவுனில் இதற்கான ஸ்கிரிப்ட் பணிகளை ஷங்கர் முடித்துவிட்டாராம். இப்படத்தில் கன்னட நடிகர் யஷ் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாம். மேலும் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இதுதவிர தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர்களையும் நடிக்க வைக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளாராம். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா, இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.
இயக்குனர் பாரதிராஜாவின் மகனான மனோஜ், கடந்த 1999-ம் ஆண்டு வெளியான தாஜ்மகால் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து சமுத்திரம், மகாநடிகன், அல்லி அர்ஜுனா என சில படங்களில் நடித்து பிரபலமான மனோஜ், தற்போது இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்க உள்ள படம் மூலம் மனோஜ் இயக்குனராக அறிமுகமாகிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் அதே ஆண்டில் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். மனோஜ் எந்திரன் படத்தில் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தின் இரண்டாம் பாகத்தை மனோஜ் இயக்க உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இருப்பினும் தற்போது மனோஜ் இயக்க உள்ளது இந்த படத்தையா அல்லது வேறு கதையா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.






