என் மலர்
சினிமா செய்திகள்
அருவி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அதிதிபாலன், அந்த காட்சிகளில் நடிக்கும் போது அழுதுவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.
அருவி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அதிதி பாலன், விஜய் சேதுபதியுடன் குட்டி ஸ்டோரி படத்தில் நடித்திருந்தார். இதுபற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, அருவி படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி விட்டு இந்த படத்தில் நடித்துள்ளேன். காரணம் நல்ல கதைக்காக காத்திருந்தேன். அதேநேரம் எனக்கு வந்த கதைகள் சில பிடிக்கவில்லை. தொடர்ந்து வந்த கதைகளும் பெண்களை மையப்படுத்தியே வந்தது.
அருவி போன்று இல்லாமல் வித்தியாசமான கதையம்சம் உள்ள படத்தில் நடிக்க ஆசையாக இருந்தேன். இந்நிலையில்தான் நலன் குமாரசாமி சொன்ன கதை பிடித்திருந்தது. இந்த கூட்டணியில் விஜய் சேதுபதியும் இணைந்ததால் உடனே ஓகே சொல்லிவிட்டேன். எனக்கு விஜய் சேதுபதியை மிகவும் பிடிக்கும். விஜய் சேதுபதி என்னிடம் இயல்பாக பழகியதோடு, நிறைய அவரிடம் கற்றுக்கொண்டேன். காதல் காட்சிகளில் இதுவரை நான் நடித்ததில்லை.

முதல்முறையாக விஜய் சேதுபதியுடன் நடிக்கும்போது கொஞ்சம் சிரமமாக இருந்தது. அப்போது நான் அழுதுவிட்டேன். விஜய் சேதுபதி அனுபவம் மிக்கவர் என்பதால் அவரால் இயல்பாக நடித்துவிட முடிகிறது’ என்றார்.
சசிகலா புரடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சாய் தன்ஷிகா, திரைக்கு பின் பலர் உழைக்கின்றனர் என்று கூறியுள்ளார்.
சசிகலா புரடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தில் தொடக்க நிகழ்ச்சி ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதனை இயக்குனர் கே.பாக்யராஜ், நடிகை சாய் தன்ஷிகா, நடிகர் இசையமைப்பாளர் அம்ரிஷ் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

தன்ஷிகா பேசும்போது ’நாம் படங்களின் விமர்சனங்களை ஒரு நொடியில் விவரித்து விடுகின்றோம். ஆனால் திரைக்கு பின் பல கலைஞர்கள் உழைக்கின்றனர். அந்தகு கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்நிறுவனம் அமைந்திருப்பது சிறப்பு. தமிழ் சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பை தரும் தளமாக உருவாகியுள்ளது சசிகலா தயாரிப்பு நிறுவனம்.

இளம் இயக்குனர்கள், புதிய தயாரிப்பாளர்கள், வெப் சீரிஸ், குறும்பட இயக்குனர்கள் ஆகியோருக்கு உதவும் நோக்கத்தில் பட தயாரிப்பு சார்ந்த அனைத்து வகையான வசதிகளையும் கொண்டுள்ளது. சினிமா துறை சார்ந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் விரைவில் இதன் பணிகள் துவங்கவுள்ளன’. இவ்வாறு அவர் பேசினார்.
பொள்ளாச்சியில் உள்ள சாதாரண ஹோட்டலுக்கு கணவருடன் வருகை தந்த நடிகை காஜல் அகர்வால்.
இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் சமீபத்தில் கொரோனா காலக்கட்டத்தின் போது, கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். நண்பர்கள் மற்றும் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே திருமணத்துக்கு அழைக்கப்பட்டார்கள்.

இந்நிலையில் காஜல் அகர்வால் மற்றும் அவருடைய கணவர் கவுதம் கிச்சலுவுடன் பொள்ளாச்சியில் உள்ள சாந்தி மெஸ் எனும் ஒரு சிறிய உணவகத்துக்கு வருகைத்தந்திருந்தார்.

இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், சாந்தி உணவகம் எனக்கு மிகவும் பிடித்த உணவகம். சாந்தி அக்கா மற்றும் பாலகுமார் அண்ணா எனக்கு மிகவும் பாசத்தோடு உணவை பரிமாறுவார்கள். கடந்த 27 வருடங்களாக சுவை மாறாமல் அதே அருமையான சுவையுடன் இந்த உணவகத்தை நடத்தி வருகிறார்கள். நான் இந்த உணவகத்திற்கு கடந்த 9 ஆண்டுகளாக வந்து செல்கிறேன்” என்று பதிவு செய்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், ரசிகர்களின் செயலால் வருத்தமடைந்து இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக படக்குழு எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்து வந்தனர். ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக படக்குழுவிடம் அடிக்கடி அப்டேட் கேட்டு வந்தனர். விரைவில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் அறிவித்தார். இந்நிலையில் ரசிகர்களின் செயலால் அதிருப்தி அடைந்து இருப்பதாக அஜித் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், என் மீதும் என் படங்களின் மீதும் அபரிதமான அன்புக் கொண்டு இருக்கும் எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான ரசிகர்களுக்கும் மக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம்.
கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்து இருக்கும் "வலிமை" சம்பந்தப்பட்ட updates கேட்டு அரசு, அரசியல் விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுறை செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுது போக்கு மட்டுமே, எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும், சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும்.

இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படம் குறித்த புதிய அப்டேட்டை தயாரிப்பாளர் போனி கபூர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக படக்குழு எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்து வந்தனர். ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக படக்குழுவிடம் அடிக்கடி அப்டேட் கேட்டு வந்தனர்.
சமீபத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படம் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அப்போது “வலிமை படத்தின் ஒரு சண்டை காட்சியை வெளிநாட்டில் படமாக்க வேண்டி உள்ளது. அதை தவிர்த்து முழு படப்பிடிப்பும் பிப்ரவரி 15க்குள் முடிவடையும். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை” என கூறியிருந்தார்.

இந்நிலையில், வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தயாராகிக் கொண்டிருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். மேலும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் விரைவில் வலிமை பர்ஸ்ட் லுக்கை வெளியிடுவோம் எனவும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ரவி சீனிவாசன் இயக்கத்தில் முருகானந்தம், மேக்னா ஹெலன், பாக்யராஜ், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் கபாலி டாக்கீஸ் படத்தின் முன்னோட்டம்.
இயக்குனர் பாலாவின் தம்பி சந்திரமௌலி தனது மெளலி பிக்சர்ஸ் சார்பில் உருவாக்கி உள்ள படம் கபாலி டாக்கீஸ். இதில் கதையின் நாயகனாக முருகானந்தம் நடித்துள்ளார். இவர், கதாநாயகன் படத்தின் இயக்குனராவார். ஏற்கனவே இவர் "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா", "மரகத நாணயம்" படங்களில் காமெடியில் நடித்து கலக்கியவர்.
மேலும் இதில் கதாநாயகியாக மேக்னா ஹெலன் மற்றும் கே.பாக்யராஜ், ஜி.எம்.குமார், இமான் அண்ணாச்சி, சார்லி, மதன் பாப், டான்சர் டியாங்கனா, பி.எல்.தேனப்பன். வேலு பிரபாகரன், வர்ஷன், நவீன், ராஜ்குமார், சக்ரி, ஷீலா, சாய்பிரியா இன்னும் பலர் நடித்துள்ளனர்.

ஜெயசீலன் - முனிகிருஷ்ணன் இருவரும் கலையையும், ராதிகா - சங்கர் இருவரும் நடன பயிற்சியையும், தவசி ராஜ் சண்டை பயிற்சியையும், சினேகன், மதுரகவி, தமிழ் இயலன், விஜயசாகர் நால்வரும் பாடல்களையும் எழுத, ராஜேஷ் கண்ணா படத்தொகுப்பையும் சபேஷ் - முரளி இரட்டையர் இசையையும் கவனிக்க, ஆர்.சுரேஷ்குமார் இணை தயாரிப்பில் மெளலி பிக்சர்ஸ் சார்பில் பி.சந்திரமெளலி தயாரித்துள்ளார். கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து ரவி சீனிவாசன் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் ஜிவி பிரகாஷ், அடுத்ததாக பிரபல இயக்குனரின் படத்துக்கு இசையமைக்க உள்ளாராம்.
இயக்குனர் ஷங்கருடன் துணை, இணை இயக்குனராக பணியாற்றி ஆல்பம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வசந்தபாலன். இப்படத்தை தொடர்ந்து வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார். தற்போது ஜி.வி.பிரகாஷ் நடித்து, இசையமைக்கும் ஜெயில் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
இதனிடையே தான் இயக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டார் வசந்தபாலன். அப்படத்தை அவர் தனது பள்ளிப்பருவ நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கவும் உள்ளார். அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் அப்படத்தில் அவருக்கு ஜோடியாக துஷாரா நடிக்க உள்ளார்.

இந்நிலையில், அப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வசந்தபாலனின் வெயில், அங்காடித் தெரு, ஜெயில் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ள ஜிவி தற்போது நான்காவது முறையாக இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள ‘சூர்யா 40’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது, இதில் நடிகர் சூர்யா பங்கேற்கவில்லை.
சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார். இமான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
இந்நிலையில், சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. கொரோனா சிகிச்சைக்குப் பின் ஓய்வெடுத்து வருவதால் நடிகர் சூர்யா இதில் கலந்து கொள்ளவில்லை.

இருப்பினும் இயக்குனர் பாண்டிராஜ், இசையமைப்பாளர் இமான், நடிகர்கள் சத்யராஜ், இளவரசு, சுப்பு பஞ்சு, தங்கதுரை ஆகியோரும், நடிகைகள் பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, திவ்யா துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய உள்ளார். கடைசியாக சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் படத்தில் பணியாற்றிய ரத்னவேலு, தற்போது 13 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்துள்ளார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள சூர்யா 40 படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் சூர்யா அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகி உள்ளார். டி.இமான் இசையமைக்க உள்ள இப்படத்தில் நடிகர் சத்யராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், நகைச்சுவை நடிகர் வடிவேலு இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் வடிவேலு ஏற்கனவே சூர்யாவுடன், வேல், ஆறு, ஆதவன், சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் வளர்ந்துவரும் நடிகையான நிதி அகர்வாலுக்கு, தமிழகத்தில் ரசிகர்கள் கோவில் கட்டி பாலாபிஷேகம் செய்து உள்ளனர்.
தெலுங்கு நடிகையான நிதி அகர்வால், ஜெயம் ரவியின் பூமி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து, தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். அவர் தமிழில் நடித்த இரண்டு படங்களும் பொங்கலுக்கு ரிலீசானது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக தமிழில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்நிலையில், நடிகை நிதி அகர்வாலுக்காக தமிழ்நாட்டில் ரசிகர்கள் கோவில் கட்டி உள்ளனர். காதலர் தினமான நேற்று அவரது சிலைக்கு பால் அபிஷேகம் செய்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து நடிகை நிதி அகர்வால் கூறியதாவது: இது எனக்கு மிகவும் அதிர்ச்சி அளித்தது. நான் இதை எதிர்பார்க்கவில்லை. நான் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன். இதைவிட சிறந்த காதலர் தின பரிசு இருக்க முடியாது. என் மீது இவ்வளவு அன்பு காட்டும் ரசிகர்களுக்கு மிக்க நன்றி என தெரிவித்துள்ளார்.
திரெளபதி பட இயக்குனர் மோகன் ஜி அடுத்ததாக இயக்கும் படத்தில், இயக்குனர் கெளதம் மேனன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
மோகன் ஜி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் ‘திரெளபதி’. ரிச்சர்டு ரிஷி நாயகனாக நடித்திருந்த இப்படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்தது.
இயக்குனர் மோகன் ஜி அடுத்ததாக இயக்கும் படம் ‘ருத்ர தாண்டவம்’. ‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ரிஷி தான் இந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

இந்நிலையில், இப்படத்தில் இயக்குனர் கெளதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள இயக்குனர் மோகன் ஜி, கெளதம் வாசுதேவ் மேனன், ருத்ரதாண்டவம் படத்தில் வாதாபிராஜனாக நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வரும் மீரா மிதுன், தனக்கு தற்கொலை எண்ணம் வருவதாக தெரிவித்துள்ளார்.
தமிழில், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள நடிகை மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். டுவிட்டரில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிடுகிறார். தனது கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், மன அழுத்தத்தினால் தற்கொலை எண்ணம் வருவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள மீரா மிதுன், அதில் பிரதமர் மோடியையும் டேக் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “எனக்கு மன அழுத்தம் உள்ளது. தற்கொலை எண்ணமும் வருகிறது. மன அழுத்தம் இருப்பதை சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஆனாலும் என்னை தொந்தரவு செய்வது நிறுத்தப்படவில்லை. எனக்கு மனநிம்மதி இல்லை. நான் இறந்தால் அதற்கு காரணமான அனைவரையும் தூக்கில் போடவேண்டும்.

3 வருடங்களுக்கும் மேலாக என்னை அவதூறு செய்கிறார்கள். அதனால்தான் சமூக வலைத்தளம் பக்கம் நான் வரவில்லை. வலைத்தளம் மூலம்தான் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க முடியும். முழுமையாக மன அழுத்தத்தில் இருக்கிறேன். இந்த வலியை நிறுத்த விரும்புகிறேன். சாக விரும்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.






