என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யாவின் சிங்கம் திரைப்படம் வெளியாகி பல வருடங்கள் ஆன நிலையில், ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.
    சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் சிங்கம். ஹரி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் அனுஷ்கா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

    இப்படம் வெளியாகி 11 ஆன நிலையில், சமூக வலைத்தளத்தில் சூர்யா ரசிகர்கள் #11YearsOfSingam என்ற ஹாஸ் டேக்கில் இதை கொண்டாடி வருகிறார்கள்.

    சூர்யா

    கடைக்கோடி மக்கள் வரை சென்று சேர்ந்த திரைப்படம், இன்றும் மக்களிடம் பெரிதும் பேசப்படும் திரைப்படம், 11ஆண்டுகள் முன்பே 90+Cr மேல் வசூல் செய்த திரைப்படம், பலமொழியில் ரீமேக் செய்து பல சாதனை படைத்த திரைப்படம் என்றும் ரசிகர்கள் பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.
    சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    சென்னை 28, மங்காத்தா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் வெங்கட்பிரபு.

    சிலம்பரசன் டி.ஆர் நடிக்கும் ‘மாநாடு’ இயக்கி வரும் இயக்குனர் வெங்கட்பிரபு அதனை தொடர்ந்து தயாரிப்பாளர் டி.முருகானந்தத்தின் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். இவர் இயக்கத்தில் உருவாகும் 10வது திரைப்படம் இது.

    வெங்கட் பிரபு
    இயக்குனர் வெங்கட் பிரபு - தயாரிப்பாளர் முருகானந்தம்

    படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
    தமிழில் அதர்வா, நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமான நடிகர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
    பாலிவுட் சினிமாவில் மிக முக்கியமான இயக்குர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் அதர்வா, நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகி வரும் காலகட்டத்தில் பல பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    ஆனால் அனுராக் காஷ்யப்புக்கு கொரோனாவால் எந்த பாதிப்பும் இல்லையென்றாலும், திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    அனுராக் காஷ்யப்

    கடந்த சில நாட்களுக்கு முன் நெஞ்சு வலி காரணமாக அவதிப்பட்ட அனுராக் காஷ்யப் மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டபோது, இதயத்திற்கு செல்லும் குழாய்களில் சில அடைப்புகள் இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செயப்பட்டு அந்த அடைப்புகள் நீக்கப்பட்டன. 
    பள்ளியில் தனக்கு பாலியல் கொடுமை நடக்கவில்லை என்றும், தனது நண்பர்களுக்கு நடந்த விஷயங்களை தான் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததாகவும் நடிகை கவுரி கிஷன் விளக்கமளித்துள்ளார்.
    சென்னை பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் ஆன்லைன் வகுப்பின் போது பாலியல் தொடர்பான அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் ராஜகோபாலன் மீது புகாரளித்துள்ளனர். தற்போது இந்த விவகாரம் குறித்து திரையுலக பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    96, மாஸ்டர், கர்ணன் பட நடிகை கவுரி கிஷன் தான் அடையாறு பள்ளியில் படித்தபோது ஆசிரியர்கள் சிலர், மாணவ - மாணவிகளை அசிங்கமாக பேசுவது, சாதியை வைத்து பேசுவது, மிரட்டுவது, உடல் அமைப்பை கிண்டல் செய்வது, கேரக்டரை கேவலப்படுத்துவது, ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளை போன்ற கொடுமைகளை அவர்கள் அனுபவித்ததாக தெரிவித்திருந்தார்.

    கவுரி கிஷன்

    நண்பர்களின் கசப்பான அனுபவங்களை பகிர்ந்த இடத்தில், தான் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக ஊடகங்களில் தவறாகக் குறிப்பிட்டிருப்பதாக, அதனை தற்போது தெளிவுப்படுத்தியிருக்கிறார் கவுரி. இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர், ”நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனக்கு பாலியல் ரீதியான எந்த துன்புறுத்தலும் நடக்கவில்லை. ஊடகங்கள் பிஎஸ்பிபி பள்ளியுடன் என்னை தவறாக இணைக்கிறார்கள். இதனை இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
    விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் நெற்றிக்கண் படத்தின் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார்.

    'அவள்' படத்தின் இயக்குநரான மிலந்த் ராவ் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

    நயன்தாரா

    இந்நிலையில் இப்படத்தில் இடம் பெறும் இதுவும் கடந்து போகும் என்ற பாடலை இன்னும் சில தினங்களில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியாவின் முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
    தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இதுவரை ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். பன்முக திறமைக்கொண்ட இவர் நடிப்பிலும் கலக்கி வருகிறார். மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, வடசென்னை, தரமணி, மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

    நடிப்பை தாண்டி சமூக நலனிலும் அக்கறை கொண்டவர். பல்வேறு சமுதாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சமூக பிரச்சினைகளுக்காக பலமுறை கேள்வி எழுப்பியுள்ளார். கொரானா பாதிக்கப்பட்ட இவர், வீட்டு தனிமையில் இருந்து சமீபத்தில்தான் குணமடைந்தார். தற்போது அரசு சார்பில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் வீட்டில் பயனுள்ள பணிகளை செய்து வருகிறார்.

    ஆண்ட்ரியா

    அந்த வகையில்தான் தனது வீட்டு மொட்டை மாடியில் ஒரு அழகிய தோட்டம் ஒன்றை அமைத்துள்ளார். அதில் ஏராளமான செடி, கொடிகளை நட்டு தினந்தோறும் பராமரித்து வருகிறார். இயற்கை மீது தீராத அன்பு கொண்ட ஆண்ட்ரியா, மற்றவர்களும் இதுபோன்ற பணிகளில் ஈடுபடவேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
    தமிழில் தனுஷ், சிம்பு படங்களில் நடித்து பிரபலமான ரிச்சா கங்கோபாத்யாய் திருமணமானதும் உடல் எடை கூடி காணப்படும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
    செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'மயக்கம் என்ன' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். இப்படத்தை தொடர்ந்து சிம்புவுடன் இவர் நடித்த 'ஒஸ்தி' படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. 

    சினிமாவில் பிரபலமாக இருக்கும் போதே ஜியோ என்பவரை திருமணம் செய்துகொண்டார் அவர். தற்போது வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

    ரிச்சா

    அதில் அடுத்த மாதம் குழந்தை பிறந்துவிடும் என்று பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும் ரிச்சா மிகவும் உடல் எடை கூடி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டதாக கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
    திரைப்படங்கள் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் மாறி உள்ளது என்று முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா கூறியுள்ளார்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா தற்போது வெப் தொடர்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் தமன்னா நடித்த நவம்பர் ஸ்டோரி வெப் தொடர் வெளியானது. இந்த நிலையில் தமன்னா அளித்துள்ள பேட்டியில், “தற்போது சினிமாவுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. திரைப்படங்கள் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் மாறி உள்ளது. சினிமா பற்றிய அவர்களின் பார்வையும் இனிமேல் மாறும். இந்த மாற்றங்கள் காரணமாக நட்சத்திர அந்தஸ்தும் மாற தொடங்கி உள்ளது.

    தனி நடிகருக்காக ரசிகர் யாரும் படங்களை பார்க்க மாட்டார்கள். படத்தின் கதை வலுவாக உள்ளதா என்பதை வைத்தே படம் பார்க்கிறார்கள். 10 வருடங்களுக்கு முன்னால் ஒரு நடிகருக்கு கிடைத்த ரசிகர்கள் கூட்டம் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு கிடைப்பது கஷ்டமான விஷயம். 

    தமன்னா

    இந்த நிலையில் எனக்கும் ரசிகர் கூட்டம் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நான் கிரைம், திரில்லர் கதைகளில் நடிக்காத குறையை நவம்பர் ஸ்டோரி வெப் தொடர் போக்கியது. அதில் நான் நடித்த கதாபாத்திரம் பெரிய சவாலாக இருந்தது’’ என்றார்.
    கவிஞர் வைரமுத்துவுக்கு விருது வழங்குவதற்கு கடும் எதிர்ப்புகள் வந்த நிலையில் ஓ.என்.வி கலாச்சார அகாடமி அறிக்கை வெளியிட்டுள்ளது.
    மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர் பெயரால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது ஓ.என்.வி. இலக்கிய விருது. இதுவரை மூத்த மலையாளப் படைப்பாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்து, இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

    முதல் முறையாக மலையாளி அல்லாத ஒரு இலக்கியவாதிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதற்கு மலையாள நடிகை பார்வதி, பாலியல் புகார்கள் பல சுமத்தப்பட்டிருக்கும் ஒருவருக்கு ஓ.என்.வி பெயரில் விருது வழங்குவது பெரும் அவமரியாதை என்று கூறினார். மேலும் மலையாளம் சினிமா உலகில் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது.

    வைரமுத்து
    ஓ.என்.வி அறிக்கை

    இந்நிலையில் ஓ.என்.வி கலாச்சார அகாடமி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், விருதுகள் குழுவின் பரிந்துரையின்படி இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டிருக்கும் ஓ.என்.வி இலக்கிய விருது குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளோம் என ஓ.என்.வி கலாச்சார அகாடமி தெரிவித்துள்ளது.
    ஷரவணன் சுப்பையா இயக்கத்தில் அனேகா, கதிரவன் நடிப்பில் உருவாகி உள்ள ‘மீண்டும்’ படத்தின் முன்னோட்டம்.
    அஜித்குமார் நடித்த ‘சிட்டிசன்’ படத்தை இயக்கியவர், ஷரவணன் சுப்பையா. இவர் நீண்ட இடைவெளிக்குப்பின் இயக்கியுள்ள படம், ‘மீண்டும்.’ நடிகர் மணிகண்டனை, `கதிரவன்' என்று பெயர் மாற்றி கதாநாயகனாக நடிக்க வைத்து இருக்கிறார், ஷரவணன் சுப்பையா. கதாநாயகியாக நட்பே துணை பட நடிகை அனேகா நடித்துள்ளார். இதில் இயக்குனர் ஷரவணன் சுப்பையாவும் நடித்து இருக்கிறார். 

    படத்தை பற்றி அவர் கூறியதாவது: ‘‘தாய்நாட்டுக்கு எதிரான ஒரு முக்கிய பிரச்சினையை விசாரிக்கும்படி, கதாநாயகன் கதிரவனிடம் ஒப்படைக்கிறார்கள். இதை ஓரு சவாலாக ஏற்று களம் இறங்குகிறார், கதிரவன். அவரை எதிரிகள் பிடித்து சித்ரவதை செய்கிறார்கள். அந்த கொடூரம் அதிர்ச்சியின் உச்சம்.

    அனேகா, கதிரவன்
    அனேகா, கதிரவன்

    படத்தின் உச்சக்கட்ட காட்சி, இதுவரை இந்திய திரையுலகில் யாரும் படமாக்கியிராதது. எஸ்.எஸ்.ஸ்டான்லி, யார் கண்ணன், கேபிள் சங்கர், சுப்பிரமணியசிவா, துரை சுதாகர், இந்துமதி, மோனிஷா, அனுராதா ஆகியோரும் நடித்துள்ளனர். ஹீரோ சினிமாஸ் சார்பில் சி.மணிகண்டன் தயாரித்துள்ளார்.’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கூலிப்படையை வைத்து தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை சாந்தினி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
    சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் படத்தில் நடித்தவர் நடிகை சாந்தினி. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சர் மணிகண்டன் தன்னை காதலிப்பதாக கூறி 5 வருடங்கள் குடும்பம் நடத்தியதாகவும், கருவுற்ற தன்னை கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் கூறியுள்ளார். 

    சாந்தினி

    இதனிடையே தன்னை திருமணம் செய்ய மறுப்பதோடு, கூலிப்படையை வைத்து தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுப்பதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் சாந்தினி. மேலும் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  
    இளைஞர்கள் சிலர் இளையராஜா பாடல்கள் பாடி நண்பனின் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
    மலேசியாவில் வசித்து வந்த இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகர் ஒருவர், தான் உயிரிழந்த பின், தன்னை இளையராஜா பாடலோடு வழியனுப்பி வைக்கும் படி தனது நெருங்கிய நண்பர்களிடம் முன் கூட்டியே கூறி இருந்தாராம். சில தினங்களுக்கு முன் அந்த இளையராஜா ரசிகர் மறைந்து விட, அவரது இறுதி ஆசையை அவரின் நண்பர்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவதோடு, காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

    சவப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ள அந்த இளையராஜா ரசிகரின் உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தும் காட்சிகளும், அவரது நண்பர்கள் மாஸ்க் அணிந்தவாறு கூடி நின்று, ‘இளமை எனும் பூங்காற்று’ உள்ளிட்ட இளையராஜாவின் சில பாடல்களை பாடி கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. அந்த இளையராஜா ரசிகரின் வயது என்ன, அவர் எதனால் உயிரிழந்தார் உள்ளிட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


    ×