என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மஹா படத்தின் வெளியீட்டு தேதியை சரியான நேரத்தில் அறிவிப்போம் என்று தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    நடிகை ஹன்சிகாவின் 50-வது படம் ‘மஹா’. யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மதியழகன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

    இந்நிலையில், இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் பரவி வந்தது. அது குறித்து தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளதாவது: ‘‘சிம்பு, ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘மஹா’ படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன. படம் வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. 

    ஹன்சிகா, சிம்பு
    ஹன்சிகா, சிம்பு

    மஹா படத்தின் மீது எந்த ஒரு தடையையும் சென்னை ஐகோர்ட்டு விதிக்கவில்லை. படத்தின் வெளியீட்டு தேதியை சரியான நேரத்தில் அறிவிப்போம். இன்னும் சில காலம் அவகாசம் அளிக்கும்படி, ரசிகர்களை கேட்டுக்கொள்கிறோம்.’’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா அடுத்ததாக ரொமான்டிக் படத்தில் இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.
    தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளுள் முக்கியமானவர் அனுஷ்கா. அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி, பாகுபலி போன்ற படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அனுஷ்கா. 

    கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சைலன்ஸ் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இதனால் அடுத்து நடிக்கும் படங்களின் கதை தேர்வில் கவனமாக இருக்கிறாராம் அனுஷ்கா. 

    அனுஷ்கா, நவீன் பாலிஷெட்டி
    அனுஷ்கா, நவீன் பாலிஷெட்டி

    அந்த வகையில், இவர் அடுத்ததாக காதலை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை மகேஷ் என்பவர் இயக்க உள்ளார். மேலும் இப்படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக இளம் நடிகர் நவீன் பாலிஷெட்டி நடிக்கிறார். 

    இந்தப்படத்திற்கு 'மிஸ் ஷெட்டி -மிஸ்டர் பாலிஷெட்டி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    இயக்குனர் லிங்குசாமி அடுத்ததாக இயக்க உள்ள தெலுங்கு படத்தில், நடிகர் மாதவனை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
    தமிழில் ஆனந்தம், ரன், பையா, சண்டக்கோழி என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த லிங்குசாமி, தற்போது தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை அவர் இயக்க உள்ளார். 

    இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக உள்ளது. இப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். 

    மாதவன்
    மாதவன்

    இந்நிலையில், அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக உள்ள இப்படத்தில், வலுவான வில்லன் கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கி உள்ளாராம் லிங்குசாமி. அந்த கதாபாத்திரத்தில் மாதவனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகர் மாதவன், லிங்குசாமி இயக்கத்தில் ரன், வேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வரும் யோகிபாபு அடுத்ததாக நடிக்கும் பேய் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
    ராகவா லாரன்ஸிடம் உதவி இயக்குனராக இருந்து, நட்ராஜ், யோகிபாபு நடித்த 'சண்டிமுனி' எனும் பேய் படத்தை இயக்கியதன் மூலம் கவனம் ஈர்த்தவர் மில்கா செல்வகுமார். இவர் அடுத்ததாக இயக்கும் புதிய படத்துக்கு 'கங்காதேவி' என பெயரிடப்பட்டுள்ளது.

    இப்படத்திலும் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், முன்னணி நடிகை ஒருவர் ஹீரோயினாகவும், வில்லனாக 'சூப்பர்' சுப்புராயனும் நடிக்கவிருக்கிறார்கள். இவர்களோடு சாம்ஸ், ஆர்த்தி கணேஷ் என நகைச்சுவை நடிகர்கள் பலரும் இணைகிறார்கள். 

    கங்கா தேவி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
    கங்கா தேவி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. யோகிபாபுவின் தோற்றத்துடன் கூடிய இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    நடிகர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும், இயக்குனருமான கிருத்திகா அடுத்ததாக இயக்க உள்ள திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா கடந்த 2013ம் ஆண்டு வெளியான ‛வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை அடுத்து அவர் விஜய் ஆண்டனி நடித்த ’காளி’ என்ற திரைப்படத்தை இயக்கினார். தற்போது அவர் தனது மூன்றாவது படத்தை இயக்க தயாராகி வருகிறார். 

    இந்நிலையில், இப்படத்தில் நடிகர் காளிதாஸ் ஹீரோவாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் அவருக்கு ஜோடியாக நடிகை தன்யா நடிக்க உள்ளார். இவர் விஜய்சேதுபதியின் கருப்பன் படத்தில் நடித்து பிரபலமானவர்.  

    காளிதாஸ் ஜெயராம், தன்யா
    காளிதாஸ் ஜெயராம், தன்யா

    இப்படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இப்படத்தை ரைஸ் ஈஸ்ட் கிரியேசன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்த திரிஷ்யம் 2 திரைப்படம் அடுத்ததாக சீன மொழியில் ரீமேக் ஆக உள்ளதாம்.
    மலையாளத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான படம் திரிஷ்யம். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்த இந்தப் படத்தை இந்திய திரையுலகே வியந்து பாராட்டியது. மலையாளத்தில் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்த திரிஷ்யம் படம், தமிழிலும் கமல்ஹாசன், நடிக்க பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆகி வரவேற்பை பெற்றது.  

    பின்னர் தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற இந்திய மொழிகளிலும், கடந்த 2019ம் ஆண்டு சீன மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. குறிப்பாக சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட போது, சீன அரசின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப கிளைமாக்ஸ் காட்சியை நாயகன் போலீசில் சரணடைவது போல் மாற்றி இருந்தனர். இதற்கும் வரவேற்பு கிடைத்தது. 

    திரிஷ்யம் 2 படத்தில் மோகன்லால்
    திரிஷ்யம் 2 படத்தில் மோகன்லால்

    சமீபத்தில் மோகன்லால் மீனா நடிப்பில் திரிஷ்யம் 2-ம் பாகமும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளதால், இந்த படத்தையும் சீன மொழியில் ரீமேக் செய்ய உள்ளனர். 

    திரிஷ்யம் முதல் பாக ரீமேக்கைப் போல் தற்போது 2-ம் பாகத்தின் திரைக்கதையிலும் லேசான மாற்றம் செய்ய உள்ளனர். திரிஷ்யம் 2 சீன ரீமேக்கை சாம்குவாவே இயக்க உள்ளார்.
    ‛தி பேமிலி மேன் 2’ வெப் தொடரில் சர்ச்சைக்குரிய வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்பது குறித்து நடிகை சமந்தா விளக்கம் அளித்துள்ளார்.
    நடிகை சமந்தா நடித்துள்ள ‘தி பேமிலி மேன்-2’ என்ற வெப் தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. சர்ச்சைக்குரிய வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்பது குறித்து நடிகை சமந்தா விளக்கம் அளித்துள்ளார்.

    அவர் கூறியதாவது: ‘தி பேமிலி மேன்-2’ வெப் தொடரில் நடிப்பதற்காக என்னிடம் இயக்குனர் கதை சொல்ல வந்தார். அப்போது இலங்கை தமிழர்கள் பற்றிய ஆவணப்படங்களை திரையிட்டு காண்பித்தனர். அதை பார்த்துவிட்டு என் கண்கள் கலங்கிவிட்டன. என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. அப்போதே ‘தி பேமிலி மேன்-2’ வெப் தொடரில் நடிக்க முடிவு செய்தேன். கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்தேன். கதை சம்பவங்கள் முழுவதும் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் நடப்பது போல காட்டியிருந்தார்கள்.

    தி பேமிலி மேன் 2 போஸ்டர்
    தி பேமிலி மேன் 2 போஸ்டர்

    ராஜி, மிக கவனமாக கையாளப்பட வேண்டிய கதாபாத்திரம். நான் அதை புரிந்துகொண்டு நடித்தேன். ஈழ தமிழர்களின் துன்பங்களையும், துயரங்களையும் ராஜி கதாபாத்திரத்தின் மூலம் சித்தரித்திருந்தார்கள். இலங்கை தமிழர்கள் லட்சக்கணக்கில் வீடு வாசல்களை இழந்து வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். அதுபோன்ற காட்சிகளும் உள்ளன. 

    யாரையும் புண்படுத்துவது என் நோக்கம் அல்ல. கதையும், காட்சிகளும் கற்பனையாக சொல்லப்பட்டு இருந்தன. இலங்கை போரில் மரணம் அடைந்த தமிழர்களுக்கு வீர வணக்கம் செலுத்த வேண்டும். அதை இந்த தொடர் நிறைவு செய்யும். இவ்வாறு சமந்தா கூறியிருக்கிறார்.
    பள்ளிக்கூடத்தில் படிப்பதற்கு பணம் திரட்டுவதற்காக இளையராஜா வேலைக்குச் சென்றார். ஒரு நாளைக்கு சம்பளம் ஒரு ரூபாய்!
    பள்ளிக்கூடத்தில் படிப்பதற்கு பணம் திரட்டுவதற்காக இளையராஜா வேலைக்குச் சென்றார். ஒரு நாளைக்கு சம்பளம் ஒரு ரூபாய்!

    எட்டாவது வகுப்புக்கு மேல் படிக்க முடியாது என்று ஊரின் பிரபல ஜோதிடர்கள் சொன்னதும், நொந்து போனார் இளையராஜா. ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் ஜோதிடர்களிடம் `வார்த்தைப்போர்' செய்தார்.

    அதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    நான் எட்டாவதை தாண்டமாட்டேன் என்று என் ஜாதகத்தை கணித்து ஜோதிடர்கள் சொன்னதும், அவர்கள் சொன்னதில் நம்பிக்கை ஏற்படாமல் "சரியாக பாருங்கள். என் ஜாதகத்தில் அப்படியா இருக்கிறது?'' என்று தாஜா செய்து கேட்டேன்.

    ஆனால் ஜோதிடர்களோ என்னைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், "உனக்கு எட்டாம் வகுப்புக்கு மேல் படிப்பே இல்லை'' என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்கள்.

    எனக்கு கோபம் வந்துவிட்டது. அவர்களிடம் வாதம் செய்யத் தொடங்கினேன். "உங்களுக்கு சிலப்பதிகாரத்தில் வரும் இளங்கோவடிகளைத் தெரியுமா? அவர் சேரன் செங்குட்டுவனுக்கு இளையவர். `மூத்தவன் இருக்க இளையவனுக்குத்தான் பட்டம் சூட்டப்படும்' என்று ஜோதிடம் சொன்னவர்களிடம் "உங்கள் ஜோதிடத்தை இப்போதே பொய்யாக்கிக் காட்டுகிறேன்'' என்றவர், அந்த நிமிடத்திலேயே துறவி ஆகிவிட்டார். அவர் துறவி ஆனதால், சேரன் செங்குட்டுவனுக்கே பட்டம் சூட்டப்பட்டது. அதேபோல் உங்கள் ஜோதிடத்தை நானும் பொய்யாக்கிக் காட்டுகிறேன்'' என்று சவால் விடுகிற தொனியில் பேசினேன்.

    எட்டாம் வகுப்பில் முழுப் பரீட்சை எழுதுவதற்கு முன்னதாக ஒரு சின்ன சோதனை. பரீட்சையை உத்தமபாளையத்தில் எழுதவேண்டும் என்றார்கள். அங்கே ஒரு ஆஸ்டலில் தங்கி மூன்று நாட்கள் பரீட்சை எழுதவேண்டும். உணவிற்காக ஒரு குறிப்பிட்ட தொகை கட்டவேண்டியிருந்தது. பணம் கட்ட வேண்டிய கடைசி நாளும் வந்தது. ஆனால் அம்மாவால் பணம் புரட்ட முடியவில்லை.

    இந்த இக்கட்டான நேரத்தில், அக்கா கமலம்தான் அவரது தாலியை விற்று பணம் கொடுத்தார்; அதுவும் அத்தானுக்கு (அக்காவின் கணவர்) தெரியாமல்.

    அக்கா தாலியை விற்றது கூட எனக்கு அந்த நேரத்தில் பெரிதாகத் தெரியவில்லை. ஜோதிடத்தை பொய்யாக்கப் போகிறோம் என்பதுதான் பெரிதாகத் தெரிந்தது.

    இப்போது நினைத்தால் அக்காவின் அன்பும், உயர்ந்த பண்பும் எனக்கு பிரமிப்பாக இருக்கிறது. உயர்ந்த பண்புகள் கல்வியால் மட்டுமே வருவதில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அக்காவின் அன்றைய தியாகத்துக்கு எதை ஈடாகக் கொடுக்க முடியும்? எதைக் கொடுத்தாலும் ஈடாக முடியாத அந்த அன்பை வெறும் வார்த்தைகளில் விவரித்து விடமுடியாதுதான்.''

    - இப்படியாக எட்டாம் வகுப்பு தேர்வை எழுதி முடித்த இளையராஜாவுக்கு ஒன்பதாவது வகுப்பில் சேர முடியாத சோதனை ஏற்பட்டது.

    அதுபற்றி அவரே கூறுகிறார்:

    "ஒன்பதாம் வகுப்பில் சேர, தேவாரத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு போனேன். பள்ளியில் சேரவேண்டுமானால் `ஸ்பெஷல் பீஸ்' 25 ரூபாய் கட்டவேண்டும் என்றார்கள். அம்மாவிடம் சொன்னேன். அம்மாவும் யார் யாரிடமோ கேட்டுப் பார்த்தும் அந்த நேரத்தில் எதுவும்

    நடக்கவில்லை.பள்ளிக்கூடம் தொடங்கிவிட்டது. ஒரு மாதம் ஆனது. பணம் கிடைக்கவில்லை. இரண்டு மாதமானது. பணம் புரட்ட முடியாத அம்மாவின் முகம் எனக்குள்ளும் கவலை ஏற்படுத்தியது. இதே நிலை மூன்றாவது மாதமும் நீடித்தபோது, "சரி! இந்த வருடம் நாம் ஸ்கூலுக்குப் போக, அந்த ஸ்கூல் விரும்பவில்லை போலும்'' என்று நினைத்துக் கொண்டேன். அப்படி நினைத்தபோதே, ஜோதிடர்கள் சொன்னதும் நினைவுக்கு வர, "இனி அந்த ஜோதிடர்கள் முகத்தில் எப்படி விழிப்பேன்?'' என்றும் வருத்தப்படத் தொடங்கினேன்.

    இந்த நேரத்தில் அத்தானும் அக்காளும் வைகை அணையில் இருந்தார்கள். மிலிட்டரியில் இருந்த அத்தான் அங்கிருந்து வந்து வைகை அணைப் பகுதியில் டிரைவராக இருந்தார்.

    அக்கா நினைப்பு வந்ததும் ஐடியா வந்து விட்டது. வைகை அணையில் மட்டும் எனக்கொரு வேலை கிடைத்தால் ஒரு வருடம் வேலை பார்த்து, ஒரு வருட சம்பளத்தை வைத்துக்கொண்டு அடுத்த வருடமாவது படிப்பைத் தொடரலாம் என்று நினைத்தேன்.

    அம்மாவிடம் ஓடிவந்தேன். விஷயத்தை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லி, "நான் வைகை அணை போய் அத்தானைப் பார்க்கட்டுமா?'' என்று கேட்டேன்.

    அம்மாவுக்கும் என் ஆர்வம் புரிந்தது. படிக்க ஆசைப்படும் பிள்ளையை அதற்கொரு புதிய வழி கிடைக்கும்போது எந்தத் தாய்தான் தடுப்பார்? "போய்வா மகனே'' என்றார், அம்மா.

    என் வாழ்வைத்தேடி முதல் பயணம். வைகை அணை எப்படி இருக்குமோ என்ற கற்பனையுடன் புறப்பட்டேன். அத்தான் மூலமாக வேலை கிடைப்பதில் சிரமம் எதுவும் இல்லை.

    வைகை அணையின் கரையிலும், கீழே பூங்காவிற்கு மேலுள்ள புல்வெளிகளிலும் தண்ணீர்க் குழாயை பிடித்தபடி தண்ணீர் ஊற்ற வேண்டும். நாளொன்றுக்கு ஒரு ரூபாய் சம்பளம்! வாரா வாரம் சம்பளமாக ஏழு ரூபாய் கொடுத்து விடுவார்கள் என்றார்கள்.

    அரை டிராயர், அரைக்கை சட்டை, குள்ளமான கறுப்பு உருவம். தண்ணீர் பாய்ச்சும்போது சும்மா இருக்க முடியாது. யாரைப் பற்றியும் கவலைப்படாமல் பாட்டுப்பாடியபடியே தண்ணீர் பாய்ச்சுவேன்.

    பொதுவாகவே சத்தம் போட்டுப் பாடுவது எனக்கும் பாஸ்கருக்கும் பழக்கம். அக்கம் பக்கம் போவோர், வருவோர் என்னை வேடிக்கை பார்த்தார்கள். நானோ விடாப்பிடியாக பாடியபடியே வேலையைத் தொடர்ந்தேன்.

    ஒரு வாரம் முடிந்து ஞாயிற்றுக்கிழமை மாலை ஆபீசுக்குப் போய் சம்பளம் வாங்கினேன்.

    ஏழு புத்தம் புதிய ஒரு ரூபாய் நோட்டுக்கள். மணக்க, மணக்க! அடேயப்பா, வான மண்டலத்தில் சஞ்சரித்தேன். பறந்தேன் என்று கூட சொல்லலாம்.

    ஏழு ரூபாய் கையில் கிடைத்த அந்த நொடியில் ஏற்பட்ட ஆனந்தத்தை இன்றுவரை வேறு எந்தப் பணமும் எனக்குத் தரவில்லை.

    இப்படி 25 நாட்கள் வேலை செய்தால் 25 ரூபாய் வந்துவிடும். அப்புறமாய் போய் ஸ்கூலில் சேர்ந்து விடலாமா என்று கூட யோசித்தேன்.

    ஆனால் 4 மாத பாடம் நடந்திருக்குமே, என்ன செய்வது?

    சரி! ஒரேயடியாக அடுத்த வருடம் படிப்பை தொடரலாம். எனக்குள் ஒரு முடிவுக்கு வந்து வேலையைத் தொடர்ந்தேன்.

    இப்படிச் சொன்ன இளையராஜா, ஒருநாள் தண்ணீர் பாய்ச்சும் நேரத்தில் பாடிக்கொண்டே பணியைத் தொடர அப்போது அந்த வழியாக வந்த வைகை அணையின் சீப் என்ஜினீயர் காதுக்கும் அந்தப் பாட்டு எட்டியது.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாக இருக்கும் விக்ரம் படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    நடிகர் கமலின் 232 வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். 

    நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். கொரோனா பரவல் குறைந்த பின்னர் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    அர்ஜுன் தாஸ்
    அர்ஜுன் தாஸ்

    இந்நிலையில் தற்போது விக்ரம் படம் குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதில், கைதி மற்றும் விஜய்யின் மாஸ்டர் ஆகிய படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
    தமிழ் திரை உலகில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் போன்ற அவதாரங்களில் ஜொலித்து வரும் பிரபலமானவரின் இளமைக்கால புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
    ரஜினிகாந்த் நடித்த ’ஊர்காவலன்’, விஜயகாந்த் நடித்த சிறைப்பறவை, என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், கருப்பு நிலா உள்பட சுமார் 20க்கும் மேலான திரைப்படங்களை இயக்கியவர் மனோபாலா. 

    மேலும் இவர் நூற்றுக்கும் மேலான திரைப்படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். ’சதுரங்க வேட்டை’ ’பாம்பு சட்டை’ உள்ளிட்ட படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

    மனோ பாலா
    மனோ பாலா

    இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மனோபாலா சற்று முன்னர் தனது இளமைக்கால புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படத்தில் அவர் நீண்ட தலைமுடியுடன் இப்போது உள்ளது போன்றே ஒல்லியான உடலமைப்புடன், கண்ணாடியுடன் காணப்படுகிறார். கருப்பு வெள்ளையில் உள்ள இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
    தமிழில் மங்காத்தா படத்தில் அஜித்துடன் நடித்த ராய் லட்சுமி, பைக் ஓட்டும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
    தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. அதன் பின், தாம் தூம், அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தார். மேலும், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார்.

    ராய் லட்சுமி
    ராய் லட்சுமி

    தற்போது ராய் லட்சுமி நடிப்பில் சிண்ட்ரெல்லா திரைப்படம் உருவாகி உள்ளது. இந்நிலையில் தற்போது கருப்பு நிற உடையில் தூம் பாடலுக்கு பைக் ஓட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.

    தமிழில் தனக்கென ஒரு பாதை வைத்து படங்களை இயக்கி வரும் பார்த்திபன், தன்னுடைய படத்திற்கு ஏற்ற தலைப்பை ரசிகர்களிடம் கேட்டு இருக்கிறார்.
    நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, தனி ஒருவனாக நடித்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்தினார் பார்த்திபன். இதில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் குரல்கள் மட்டுமே திரையில் கேட்கும். பார்த்திபன் மட்டுமே எல்லோரிடமும் கலந்துரையாடுவார். இந்த படத்தை திரையுலகினர் பலரும் வியந்து பாராட்டினர். மேலும் இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன. 

    சமீபத்தில் ஒத்த செருப்பு படம் இந்தி, மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக பார்த்திபன் அறிவித்தார். இந்நிலையில் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ ஹிந்திக்கு என்ன பெயர் வைக்கலாம்? அம்மொழி அறிந்தவர்களுக்கு மட்டும்...' என்று நடிகர் பார்த்திபன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பல கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.


    ×