என் மலர்
சினிமா செய்திகள்
லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் முன்னோட்டம்.
பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ள இத்திரைப்படத்திற்கு "நாய் சேகர் ரிட்டன்ஸ்" என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். மேலும் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவற்றை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.

நகைச்சுவை நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர். டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிசாசு 2 படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர் மிஷ்கின், ஆங்கில படத்தை தியேட்டரில் பார்த்து புகழ்ந்து பதிவு செய்திருக்கிறார்.
எ கொயட் பிளேஸ் 2 என்ற ஆங்கில திரைப்படம் தற்போது தியேட்டரில் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தை பார்த்த இயக்குனர் மிஷ்கின் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். அதில், நேற்று இரவு ஆங்கிலத் திரைப்படம் எ கொயட் பிளேஸ் 2 வை எனது பிசாசு - 2 குழுவினருடன் பார்த்து வியந்தேன். இரண்டு வருடத்திற்கு முன்பு இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தைப் பார்த்து வியந்திருந்தேன். இரண்டாவது பாகம் வருகிறது என்று அறிவித்த பொழுது முதல் பாகம் அளவிற்குச் சுவராசியமாய் இருக்காது என நினைத்தேன்.
ஆனால் இன்று பார்த்தவுடன் எனது கணிப்பு தவறானதென உணர்ந்தேன். எ கொயட் பிளேஸ் 2 நூறு சதவீதம் சுவராசியமாய் இருந்தது. என்னோடு படம் பார்த்த அனைவரும் இருக்கையின் நுனியிலிருந்து பதட்டத்துடன் பார்த்து ரசித்தனர். திரைப்படத்தின் இயக்குநரும், எழுத்தாளருமான ஜான் கிரஸ்ன்ஸ்கி இந்த பத்து வருடத்தில் ஹாலிவுட் சினிமா கண்டு பிடித்த திறமையான படைப்பாளி.

எ கொயட் பிளேஸ் 2
வேற்றுக்கிரக வாசிகள் மனித சமூகத்தை வேட்டையாடுவது தான் கதை. இந்த மெலிதான கருவை எடுத்துக் கொண்டு, திரைக்கதையில் மாயம் செய்திருக்கிறார். தாயும் மூன்று குழந்தைகளும் கொண்ட ஒரு குடும்பம், அதிலும் ஒரு கைக்குழந்தையை வைத்துக் கொண்டு எப்படி வேற்றுக்கிரக வாசிகளைப் போராடி வெல்கிறார்கள் என்பதை ஓர் அறுவை சிகிச்சை நிபுணரின் துல்லியத்தோடு கையாண்டிருக்கிறார் இயக்குநர்.
தாயாக நடிக்கும் எமிலி பிளெண்ட் மிக நேர்த்தியாக தன் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். இரண்டு குழந்தைகளும் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். நடிகர் கிலியன் மர்பியும் தனது பாத்திரத்தைச் செம்மையாகச் செய்திருக்கிறார். இதன் இசையமைப்பாளர் மார்கோ பெல்டிரமியின் இசை உள்ளத்தை வருடுகிறது. பயத்தைக் கூட்டுகிறது. இத் திரைப்படம் ஓர் உணர்ச்சி குவியல். இந்த திரில்லர் திரைப்படத்தைத் திரையரங்கில் வந்து பார்க்கும் பொழுதுதான் இதன் தொழில் நுட்பத்தையும், பிரமாண்டத்தையும் உணர்வீர்கள். இந்த கோவிட் காலத்தில் நமக்கு எ கொயட் பிளேஸ்-2 ஒரு திருவிழா தான்’ என்று பதிவு செய்திருக்கிறார்.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், வினய் நடிப்பில் வெளியாகி இருக்கும் டாக்டர் படத்தின் விமர்சனம்.
ராணுவத்தில் டாக்டராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். இவர் ஒரு நிகழ்ச்சியில் நாயகி பிரியங்கா மோகனை சந்தித்து காதல் வயப்படுகிறார். இவர்கள் திருமணம் செய்வதற்கு முன், சில காரணங்களால் பிரிந்து விடுகிறார்கள். இந்நிலையில், பிரியங்கா மோகனின் அண்ணன் மகள் மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார்.
இவரின் அண்ணன் மகளை தேடும் பணியில் சிவகார்த்திகேயன் ஈடுபடுகிறார். இந்த தேடுதலில் பல திடுக்கிடும் தகவல்களும், மர்மங்களும் சிவகார்த்திகேயனுக்கு தெரிய வருகிறது. இறுதியில் நாயகி பிரியங்கா மோகனின் அண்ணன் மகளை கடத்தியவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? சிவகார்த்திகேயன் கடத்தல் கும்பலை கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன், தன்னுடைய வழக்கமான நடிப்பு பாணியில் இருந்து விலகி வேறொரு கோணத்தில் நடித்து அசத்தி இருக்கிறார். கலகலப்பு காமெடி என இல்லாமல் ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இவரின் புதிய முயற்சிக்கு பாராட்டுகள்.
நாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா மோகன், நல்ல அறிமுகத்தை கொடுத்து இருக்கிறார். அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் வினய். பல இடங்களில் இவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது. ரெடின் கிங்ஸ்லியின் காமெடி படத்திற்கு பெரிய பலம். அர்ச்சனா, தீபா சங்கர், யோகிபாபு ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

கோலமாவு கோகிலா படத்தின் வெற்றிக்குப் பிறகு டாக்டர் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் நெல்சன். வழக்கமான கடத்தல் கதை போல் இல்லாமல், வித்தியாசமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர். மெதுவாக நகரும் திரைக்கதை முதல்பாதியிலேயே அதிக விறுவிறுப்பை கொடுத்திருக்கிறது. ஆனால், பிற்பாதியில் அந்த விறுவிறுப்பு சற்று குறைந்து காணப்படுகிறது. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.
அனிருத்தின் இசை படத்திற்கு பெரிய பலம். இவரது பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் ‘டாக்டர்’ சிறப்பானவர்.
தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன் படங்களில் நடித்து பிரபலமான நடிகை ராஷி கன்னா, வருங்கால கணவர் குறித்து பேசியிருக்கிறார்.
தமிழில் நயன்தாராவுடன் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து அறிமுகமானவர் ராஷிகன்னா, அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அரண்மனை 3, சர்தார், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
ராஷிகன்னா இணையதளத்தில் ரசிகர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து கூறும்போது, ‘‘எனக்கு ஆண் நண்பர் இல்லை. இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. எனது வாழ்க்கை துணைவரை கண்டுபிடிக்கும்போது எல்லோருக்கும் சொல்வேன். எனக்கு வரப்போகிற கணவர் அழகாக இருக்கிறாரோ இல்லையோ ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவராக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன்.

எனக்கு எல்லா கதாநாயகர்களையும் பிடிக்கும். தமிழில் விஜய் எனக்கு பிடித்த நடிகர், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு ஆகியோரை பிடிக்கும். அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து நடனம் ஆட விருப்பம் உள்ளது. கதாநாயகிகளில் நயன்தாரா, சமந்தா, அனுஷ்கா ஆகியோர் மிகவும் பிடித்தவர்கள். இப்போது தெலுங்கை விட அதிக தமிழ் படங்கள் கைவசம் வைத்து நடிக்கிறேன்” என்றார்.
கார்த்திக் சுவாமி நாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரெஜினா நடிப்பில் வெளியாகி இருக்கும் முகிழ் படத்தின் விமர்சனம்.
விஜய் சேதுபதி தனது மனைவி ரெஜினா மற்றும் மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவர்கள் செல்லமாக நாய் குட்டி ஒன்றை வளர்க்கிறார்கள். இந்த நாயுமும் குடும்பத்துடன் பாசமாக இருக்கிறது. ஒரு நாள் விபத்தில் மகள் கண்முன் அந்த நாய் இறக்கிறது.


இதனால் விஜய் சேதுபதியின் குடும்பம் சோகத்தில் ஆழ்கிறது. குறிப்பாக மகள், நாய் இறப்புக்கு தான்தான் காரணம் என்று வருத்தத்தில் இருக்கிறார். இறுதியில் சோகத்தில் இருந்து விஜய் சேதுபதி குடும்பம் மீண்டதா? மகளின் குற்ற உணர்ச்சியை விஜய் சேதுபதி போக்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் விஜய் சேதுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மனைவி மகள் மீது காட்டும் பாசத்தில் கவர்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ரெஜினா, மகளை திட்டுவது, பாசம் காட்டுவது, விஜய் சேதுபதியுடன் கோபப்படுவது என நடிப்பில் பளிச்சிடுகிறார். நடிப்பதற்கான அதிக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை சிறப்பாகவே செய்திருக்கிறார் ரெஜினா.
மகளாக வரும் ஶ்ரீஜா விஜய் சேதுபதி, அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சந்தோஷம், துக்கம், நாயுடன் விளையாடுவது என்று நடிப்பில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார்.

சிறிய கதையை சிறப்பாக இயக்கி இருக்கிறார் கார்த்திக் சுவாமி நாதன். தந்தை, மனைவி, மகள், நாய் பாசத்தை அழகாக சொல்லி இருக்கிறார். கதாபாத்திரங்களை நடிக்க வைக்காமல் வாழ வைத்திருக்கிறார்.
சத்யா பொன்மார் ஒளிப்பதிவும், ரெவாவின் இசையும் படத்திற்கு பெரிய பலம்.
மொத்தத்தில் 'முகிழ்' மகிழ்ச்சி.
2000க்கும் அதிகமான பாடல்களை எழுதி ரசிகர்களை மகிழ்வித்த பிறைசூடன், 1991, 1996 ஆகிய ஆண்டுகளில் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது பெற்றவர்.
சென்னை:
பிரபல திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 65.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி பிறந்தவர் பிறைசூடன். 1985-ல் வெளியான ‘சிறை’ படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த ‘ராசாத்தி ரோசாப்பூ’ என்னும் பாடலை எழுதியதன் மூலமாக தமிழ்த்திரையுலகில் பாடலாசிரியராக தனது பயணத்தை தொடங்கினார்.
பணக்காரன் திரைப்படத்தில் இவர் எழுதிய ‘நூறு வருஷம் இந்த மாப்பிளையும் பொண்ணுந்தான்’, செம்பருத்தி திரைப்படத்தில் ‘நடந்தால் இரண்டடி’ உள்ளிட்ட பாடல்கள் மிகவும் பிரபலமானவை.
திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாது தனிப்பாடல்கள், கவிதைகள் உள்ளிட்டவற்றையும் எழுதியுள்ளார்.

2000க்கும் அதிகமான பாடல்களை எழுதி ரசிகர்களை மகிழ்வித்தவர் பிறைசூடன். 5000-க்கும் அதிகமான பக்தி பாடல்களையும் எழுதி உள்ளார். திரைப்பட எழுத்தாளர் சங்க செயலாளராக பதவி வகித்துள்ளார். 1991, 1996 ஆகிய ஆண்டுகளில் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது, தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம் விருது, 2015ல் தமிழக அரசின் கபிலர் விருது பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில் இன்று மாலை நெசப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பிறைசூடன் காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவு செய்தி வெளியானதையடுத்து திரையுலகத்தினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சுராஜ் இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
நகைச்சுவை நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை.
தற்போது தடை நீக்கப்பட்டு உள்ளதால், மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். அதன்படி அவர் நடிக்க உள்ள புதிய படத்தை சுராஜ் இயக்க, லைகா நிறுவனம் தயாரிக்கிறது என்ற அறிவிப்பு கடந்த மாதமே வெளியானது.

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
இந்நிலையில், அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அப்படத்திற்கு ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ என தலைப்பு வைத்துள்ளனர். வடிவேலு கோர்ட் சூட் அணிந்தபடி கெத்தான தோற்றத்துடன் இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
நடிகை சமந்தா தன்னை பற்றி பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்து உள்ளனர். இவர்கள் விவாகரத்துக்கு பல காரணங்கள் இருப்பதாக டோலிவுட் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் பரவி வந்தன.
இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “என் சொந்த பிரச்சினையில் நீங்கள் காட்டிய உணர்வுகள் என்னை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. என் மீது வைக்கப்பட்ட பொய்யான வதந்தி மற்றும் கதைகளுக்கு எதிராக நீங்கள் காட்டிய அனுதாபத்திற்கு நன்றி.

சமந்தா வெளியிட்ட அறிக்கை
முதலில் வேறு ஒருவருடன் தொடர்பு இருக்கிறது என்றார்கள், பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை, நான் ஒரு சந்தர்ப்பவாதி என்றார்கள். தற்போது நான் கருக்கலைப்பு செய்ததாக கூறுகின்றனர்.
விவாகரத்து என்பது பெரிய வலி நிறைந்த ஒன்று. இந்த கடினமான நேரத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறேன். என் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து வருகிறது. சத்தியமா சொல்றேன், இவையெல்லாம் எந்த வகையிலும் என்னை உடைக்காது” என பதிவிட்டுள்ளார்.
தமிழில் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம், விரைவில் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் படங்களுக்கு பாலிவுட்டில் அதிக மவுசு உருவாகி உள்ளது. ஏற்கனவே பார்த்திபனின் ஒத்த செருப்பு, விஷ்ணு விஷாலின் ராட்சசன், சூர்யா நடித்த சூரரைப்போற்று, லோகேஷ் கனகராஜின் மாநகரம், கார்த்தி நடித்த கைதி ஆகிய படங்கள் பாலிவுட்டில் ரீமேக் ஆகி வருகின்றன.
இந்நிலையில், மேலும் ஒரு தமிழ் படம் அந்த பட்டியலில் இணைந்துள்ளது. அதன்படி பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘மெட்ராஸ்’ திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மெட்ராஸ் படத்தின் போஸ்டர்
பா.இரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருந்தார். ஒரு சுவரை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது. கடந்த 2014-ம் ஆண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது.
12 வருடங்களாக படங்களை இயக்காமல் இருந்த நடிகை ரேவதி, தற்போது பாலிவுட்டில் இயக்குனராக ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.
80-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரேவதி. இவர் நடிப்பில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது படங்களை இயக்குவதிலும் கவனமாக இருந்தார். முதல் படமாக 2002-ல் ‘மித்ர மை ப்ரெண்ட்’ என்ற ஆங்கிலப் படத்தை எடுத்தார். இந்தப்படம் இரண்டு விருதுகளைப் பெற்றது. இதையடுத்து 2004-ம் ஆண்டு ‘பிர் மிலேங்கே’ என்ற இந்தி படத்தை இயக்கினார்.
பின்னர் 2009-ல் மலையாளத்தில் வெளியான ‘கேரளா கபே’ என்ற படத்தை பத்து பிரபலமான இயக்குனர்கள் எடுத்தனர். அதில் ரேவதியும் ஒருவர். இதையடுத்து படங்களை இயக்காமல் இருந்து வந்த ரேவதி, தற்போது 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குனராக ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

ரேவதி, கஜோல்
அதன்படி இந்தியில் தயாராகும் ‘தி லாஸ்ட் ஹரா’ என்ற படத்தை அவர் இயக்க உள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கஜோல் நடிக்க இருக்கிறார். இதைத் தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் உறுதிப்படுத்து இருக்கிறார் கஜோல்.
கோலிவுட்டில் பிசியான இசையமைப்பாளராக வலம்வரும் அனிருத், விரைவில் பாலிவுட் படத்துக்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்திற்காக அவர் இசையமைத்த முதல் பாடலான கொலவெறி அவரை உலகளவில் பிரபலமாக்கியது.
பின்னர் அடுத்ததடுத்த ஆல்பங்களின் மூலம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த அனிருத், குறுகிய காலத்திலேயே அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோரது படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். இவர் கைவசம் இந்தியன் 2, காத்துவாக்குல ரெண்டு காதல், டாக்டர், டான், பீஸ்ட் போன்ற படங்கள் உள்ளன.

இப்படி கோலிவுட்டில் பிசியான இசையமைப்பாளராக வலம்வரும் அனிருத், விரைவில் பாலிவுட் படத்துக்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தெலுங்கில் கடந்த 2019-ம் ஆண்டு நானி நடிப்பில் வெளியான ‘ஜெர்ஸி’ படத்தின் இந்தி ரீமேக்கிற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜெர்ஸி படத்துக்கும் அனிருத் தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாம் மெக்ராத் இயக்கத்தில் 2017ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘தி பாஸ் பேபி’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
முதல் பாகத்தில் குழந்தைகளாக இருந்த டிம்மும், அவரது பாஸ் பேபி சகோதரரான டெட்டும் இரண்டாம் பாகத்தில் இளசுகளாக இருக்கின்றனர். இதில் டிம்முக்கு திருமணமாகி குழந்தை இருக்கிறது. டெட் ஒரு கம்பெனியில் உயர்ந்த பதவியில் இருக்கிறார். டிம்முடைய குழந்தை டீனா, ஒரு சீக்ரெட் மிஷன் செய்வதற்காக டெட்டை அழைக்கிறார்.
இது ஒருபுறம் நடக்க மறுபுறம், டாக்டர் எட்வின் ஆம்ஸ்ட்ராங், தான் நடத்தி வரும் பள்ளியில் உள்ள குழந்தைகளை வைத்து சில விநோதமான விஷயங்களை செய்து வருகிறார். அதன்மூலமாக உலகத்தை தன் வசப்படுத்த முயற்சி செய்து வருகிறார். அவர் செய்யும் விஷயங்களை கண்டுபிடித்து, உலகத்தை அழிவில் இருந்து காப்பாற்றுவதற்காகவே சீக்ரெட் மிஷனை நடத்துகிறார் டீனா.

எட்வின் ஆம்ஸ்ட்ராங்
இதற்காக டிம், டெட் இருவரையும் குழந்தை உருவத்துல ஆம்ஸ்ட்ராங்கோட பள்ளிக்கு டீனா அனுப்புகிறார். டிம், டெட் இருவரும் இணைந்து ஆம்ஸ்ட்ராங்கோட பிளான் என்ன என்பதை கண்டுபிடித்து அதை தடுத்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
இது ஒரு அனிமேஷன் படம், இந்த படத்தின் மிகப்பெரிய பலமே அனிமேஷன் தான். முதல் பாகத்தைப் போலவே இதிலும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். குழந்தைகளை கவரும் வகையில் கதாபாத்திரங்களை வடிவமைத்துள்ளார் இயக்குனர் டாம் மெக்ராத்.

டிம், டீனா, டெட்
குறிப்பாக டிம், டெட் இருவரும் குழந்தைகளாக மாறும் காட்சி வேற லெவல். தொழிநுட்ப ரீதியாக பலமாக இருந்தாலும், திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார் இயக்குனர். முதல் பாகத்தை போன்று இந்தப் படம் விறுவிறுப்பாக இல்லாதது பின்னடைவு.
ஹேன்ஸ் சிம்மர் மற்றும் ஸ்டீவ் மசாரோவின் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் ‘தி பாஸ் பேபி 2’ விறுவிறுப்பில்லை.






