தொழில்நுட்பம்

டிக்டாக் தடை உண்மையில் பலன் தருமா - சுவாரஸ்ய பதில் கூறும் வல்லுநர்கள்

Published On 2019-04-18 09:54 GMT   |   Update On 2019-04-18 09:54 GMT
இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது உண்மையில் பலன் தருமா என்ற கேள்விக்கு வல்லுநர்கள் பதில் அளித்துள்ளனர். #TikTok



இந்தியாவில் டிக்டாக் செயலியை ஏற்கனவே பல கோடி பேர் பயன்படுத்தி வரும் நிலையில், திடீரென இந்த செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. தடையை தொடர்ந்து டிக்டாக் செயலி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டு விட்டது.

எனினும், செயலி நீக்கப்பட்டுவிட்டதால் மட்டும் எதிர்பார்த்த பலன் கிடைக்காது என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இளைஞர்கள் மத்தியில் பிரபல வீடியோ தளமாக அறியப்படும் டிக்டாக் செயலியில் ஆபாசம் பரவுவதாக பலதரப்பினரும் குற்றஞ்சாட்டினர்.

இதன் காரணமாகவே அரசு கோரிக்கையை ஏற்று செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. செயலி தடை செய்யப்பட்டு விட்டதால் அது பலனளிக்கும் என கூறிவிட முடியாது. 



ஏற்கனவே டிக்டாக் செயலியை பயன்படுத்துவோர் அதனை ஷேர் இட் போன்ற செயலியை கொண்டு மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். இதனை தரவிறக்கம் செய்து மற்றவரும் புதிய பயனராக பயன்படுத்தலாம்.

டிஜிட்டல் பிரச்சனையை எதிர்கொள்ள தெளிவான அணுகுமுறை அவசியமாகும், இதனை தொழில்நுட்பத்தாலோ அல்லது மற்ற சட்டங்களை கொண்டு சரி செய்து விட முடியாது என டெக் ஆர்க் எனும் சைபர் நிறுவன நிறுவனர் ஃபைசல் கவூசா தெரிவித்தார். 

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடம் டிக்டாக் செயலியை நீக்க உத்தரவிட்டது. டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 3 ஆம் தேதி பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News