அறிந்து கொள்ளுங்கள்

ஆப்பிள் நிறுவனத்திற்கு பெரும் தொகையை அபராதமாக விதித்த பிரேசில்

Published On 2022-10-16 04:15 GMT   |   Update On 2022-10-16 04:15 GMT
  • ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களுடன் சார்ஜர் வழங்குவதை நிறுத்தி சில ஆண்டுகள் கழிந்து விட்டது.
  • பிரேசில் நாட்டில் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிரான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஐபோன்களுடன் சார்ஜர் வழங்காமல் விற்பனை செய்த விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனத்திற்கு பிரேசில் நாட்டு நித்ததுறை சார்பில் 2.34 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த மாதம் இந்த சம்பவம் அரங்கேறிய நிலையில், சார்ஜர்கள் இன்றி ஐபோன் விற்பனையை நடத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்திற்கு மற்றொரு பெரும் தொகை அபராதமாக விதிக்கப்பட்டு இருக்கிறது.

இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி பிரேசில் நாட்டின் சௌ பௌலோ நீதிமன்றம் ஆப்பிள் நிறுவனத்திற்கு 100 மில்லியன் ரியாக்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,56,59,47,700 அபராதம் விதித்துள்ளது. மேலும் பிரேசில் நாட்டில் விற்பனை செய்யப்படும் ஐபோன்களுடன் கட்டாயம் சார்ஜர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறது.

பிரேசில் நாட்டில் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 வாங்கிய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சார்ஜர் வழங்கப்பட வேண்டும் என ஆப்பிள் நிறுவனத்திற்கு நீதிபதி கரமுரு அபோன்சோ பிரான்சிஸ்கோ உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பு இறுதியானது இல்லை என்பதால், இதில் மேல்முறையீடு செய்ய முடியும்.

2020 ஆண்டு வாக்கில் ஐபோன் 12 வெளியீட்டில் இருந்து ஐபோன்களுடன் சார்ஜர் வழங்குவதை ஆப்பிள் நிறுத்திவிட்டது. ஆப்பிள் நடவடிக்கையை தொடர்ந்து சாம்சங் மற்றும் கூகுள் நிறுவனங்களும் இதே போன்று பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடல்களுடன் சார்ஜர் வழங்குவதை நிறுத்தி உள்ளன.

Tags:    

Similar News