பாஸ்கரேஸ்வரர் - மங்களநாயகி
சிவனுக்கு எதிரே காட்சி தரும் சூரியன்
- சூரியன் தன் தோஷம் போக்க பல சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டார்.
- சிவனின் பின்புற கோஷ்டத்தில் மகாவிஷ்ணுவும், ஆஞ்ச நேயரும் அருகருகே காட்சி தருவது சிறப்பாகும்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்த பகுதியில் அமைந்துள்ளது, பாஸ்கரேஸ்வரர் திருக்கோவில். இது, சூரிய பகவான் வழிபட்ட தலம் என்பதால், சிவபெருமான் எதிரில் சிவ தரிசனம் செய்யும் நிலையில் சூரிய பகவான் சிலை உள்ளது. இது மிகவும் அரிய அமைப்பாகும். இத்தல இறைவன், பரிதியப்பர், பரிதீசர், பாஸ்கரேஸ்வரர் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். இறைவி, மங்களநாயகி, மங்களாம்பிகை என்று போற்றப்படுகிறார்.
ஒரு சமயம் தட்சன் யாகம் நடத்தியபோது, சிவபெருமானின் அனுமதியின்றி சூரிய பகவான் அந்த யாகத்தில் கலந்து கொண்டான். இதனால், சூரிய பகவானுக்கு தோஷம் ஏற்பட்டது. இதையடுத்து, சூரியன் தன் தோஷம் போக்க பல சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டார். அந்த சிவாலயங்களில் ஒன்றாக இக்கோவில் உள்ளது.
இக்கோவில் இரண்டு கோபுரங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடனும், இரண்டாம் கோபுரம் மூன்று நிலைகளுடனும் உள்ளது. முதல் கோபுரம் வழியே உள்ளே நுழைந்ததும், கொடிமரம், விநாயகர், நந்தி, பலி பீடம் ஆகியவற்றை தரிசிக் கலாம். வெளிப்பிரகாரத்தில் அம்பாள் சன்னிதி தெற்கு நோக்கி உள்ளது.
இரண்டாம் கோபுர வாசலை கடந்து உள்ளே சென்றால் உள் பிரகாரத்தில் விநாயகர், முருகன், கஜலட்சுமி சன்னிதிகள் உள்ளன. நடராஜ சபை அருகில் பைரவர், சூரியன், சந்திரன், நவக்கிரகங்கள் காணப்படுகின்றனர். கருவறையில் மூலவர் சதுர வடிவ ஆவுடையுடன் உயர்ந்த பாணத்துடன் லிங்க வடிவில் காட்சி தருகிறார். இவர் எதிரே நந்தி, பலிபீடத்தை அடுத்து சிவனை வழிபடும் நிலையில் சூரியன் காணப்படுகிறார். பிரகாரத்தில் 3 சண்டிகேஸ்வரர் அருள்பாலிக்கிறார்கள். சிவனின் பின்புற கோஷ்டத்தில் மகாவிஷ்ணுவும், ஆஞ்ச நேயரும் அருகருகே காட்சி தருவது சிறப்பாகும்.
பங்குனி மாதம் 18, 19, 20 ஆகிய தேதிகளில் சூரியக் கதிர்கள், இத்தல இறைவன் மீது விழும் என்பது அற்புத நிகழ்வாகும். தஞ்சாவூரில் இருந்து ஒரத்தநாடு செல்லும் வழியில் 15 கி.மீ. தொலைவில் மேல உளூர் என்ற இடம் உள்ளது. அங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.