விஜயாபதியில் மாந்தி தோஷ நிவர்த்தி வழிபாடு
- ஸ்ரீ விஸ்வாமித்ர மகாலிங்க சுவாமி சன்னதிக்குப் பின்புறம் இந்த சித்தரின் ஜீவ சமாதி அமைந்திருக்கிறது.
- நவகலச யாகம் செய்பவர்களுக்கு 64 வகையான தோஷங்கள் நிவர்த்தி ஆகின்றன.
நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் அருகில் இருக்கும் விஜயாபதி என்னும் கடலோர கிராமத்தில் ஸ்ரீவிஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவில் உள்ளது. விஸ்வாமித்ர மகரிஷியால் நிர்மாணிக்கப்பட்ட சிவாலயம் இது. சில நூறாண்டுகளுக்கு முன்பு, விஜயாபதி ஒரு மாபெரும் துறைமுக நகரமாக இருந்திருக்கிறது. இந்த விஸ்வாமித்ர மகாலிங்க சுவாமி திருக்கோவிலில் மூலவராகிய ஸ்ரீ விஸ்வாமித்ர மகாலிங்க சுவாமி சன்னதிக்குப் பின்புறம் இந்த சித்தரின் ஜீவ சமாதி அமைந்திருக்கிறது.
எத்தனையோ பரிகாரங்கள் செய்தும், கடும் தோஷத்தால் அவதிப்படும் ஆத்மாக்களுக்கு ஒரு மாபெரும் வரப்பிரசாதம் விஜயாபதி. இங்கு வந்து நவகலச யாகம் செய்த பலருக்கு, பூர்வ ஜென்ம ஞாபகங்கள் வருகிறதாம்.
நவகலச யாகம் செய்பவர்களுக்கு 64 வகையான தோஷங்கள் நிவர்த்தி ஆகின்றன. 9 கலசங்களில் 9 விதமான திரவப் பொருட்களை நிரப்பி, நவக்கிரகங்களை ஆவாகனம் செய்து, மந்திரங்களை ஓதி, இங்கிருக்கும் வில்வ மரத்தடியில் இந்த 9 கலச நீர்களும் உரிய ஜாதகரின் தலையில் ஊற்றுவார்கள். அதன் பிறகு, அந்த ஈர ஆடையோடு, ஒரு பர்லாங்கு தூரத்தில் இருக்கும் கடலுக்குச் சென்று கடலில் நீராட வேண்டும். நீராடிய பின்னர், கடற்கரை மணலில் நெற்றி கடற்கரையில் படுமாறு இடது பக்கம் 3 முறையும், வலது பக்கம் 3 முறையும் (மனதுக்குள் ஓம்சிவசிவஓம் என ஜபித்தவாறே) உருள வேண்டும்.
அதன் பிறகு, மீண்டும் கடலில் சென்று நீராட வேண்டும். இப்படி 3 முறை செய்ய வேண்டும். இப்படிச் செய்த பின்னர், கோவில் பூசாரி ஒரு எலுமிச்சை பழத்தினால் நம்மை திருஷ்டி சுற்றிவிட்டு, அந்த எலுமிச்சையை கடலுக்குள் எறிந்துவிடுவார். நாம் அணிந்திருந்த ஆடையை கழற்றி, (வேறு ஆடை அணிந்து விட்டு) அதை கடலில் எறிந்துவிடவேண்டும்.
உடனே, கடற்கரையிலிருந்து அரை பர்லாங்கு தூரத்தில் இருக்கும் தில்லைவனக் காளியம்மன் கோவில் வரை திரும்பிப் பார்க்காமல் வந்தடையவேண்டும். தில்லை வனகாளிக்கு பூஜை செய்து இனிப்புகள், எள் பதார்த்தம், பழங்களை அங்கிருப்பவர்களிடம் விநியோகிக்க வேண்டும். பின்பு வேறு எந்த கோவிலுக்கும், யாருடைய வீட்டுக்கும் செல்லாமல் நேராக நம்முடைய வீட்டுக்குச் செல்ல வேண்டும். இப்படிச் செய்வதால் பிரேத சாபம், நவக்கிரக சாபம், குரு சாபம், குல தெய்வ சாபம் உள்ளிட்ட 64 விதமான தோஷங்கள் நீங்கிவிடும் என்கின்றனர் பக்தர்கள். இதில் மாந்தி தோஷமும் அடங்கும்.