வழிபாடு

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு தஞ்சை மூலை அனுமாருக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகம் - பக்தர்கள் தரிசனம்

Published On 2026-03-06 13:09 IST   |   Update On 2026-03-06 13:09:00 IST
  • தஞ்சையில் அனுமனுக்கு என கட்டப்பட்ட தனிப்பெரும் கோவிலாக மூலை அனுமார் கோவில் விளங்குகிறது.
  • தனக்கோ தன் பக்தர்களுக்கோ யாதொரு தீங்கும் செய்யமாட்டேன் என நவகிரகங்களிடம் சத்திய பிரமாணம் பெற்றவர் மூலை அனுமார்.

தஞ்சாவூர் மேலவீதியில் புகழ்பெற்ற சனி தோஷம் போக்கும் மூலை அனுமார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் பிரதாப சிம்மானால் கட்டப்பட்டது. தஞ்சையில் அனுமனுக்கு என கட்டப்பட்ட தனிப்பெரும் கோவிலாக மூலை அனுமார் கோவில் விளங்குகிறது.

மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் மூலை அனுமாரின் வாலில் சனீஸ்வர பகவான் உட்பட நவகிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். ராவணனால் சிறைபிடிக்கப்பட்ட நவகிரகங்களை தன் பலத்தால் விடுதலை ஆக்கியவர் அனுமார். இதன் பலனாக தனக்கோ தன் பக்தர்களுக்கோ யாதொரு தீங்கும் செய்யமாட்டேன் என நவகிரகங்களிடம் சத்திய பிரமாணம் பெற்றவர் மூலை அனுமார். இவரை வழிபடுபவர்களுக்கு சனிபகவானால் ஏற்படும் தோஷங்கள் யாவும் நீங்கி ஆற்றலும் மேன்மையும் பெற்று செல்லும் இடங்களில் எல்லாம் வெற்றியை தரக்கூடியவர் என்பது வரலாறு.

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த மூலை அனுமார் கோவிலில் ஒவ்வொரு சனிப்பெயர்ச்சி அன்றும் மூலை அனுமாருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெறுவது வழக்கமாகும். சனிதோஷம் நீங்க மூலை அனுமாரை வழிபாடு செய்வது சிறப்பாகும்.

அதன்படி இன்று சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு காலையில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மூலை அனுமாருக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் பரிகார அர்ச்சனையும் தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மூலை அனுமாரை தரிசனம் செய்தார்கள்.

Tags:    

Similar News