நடிகர் விஜய் குறித்த கேள்வியை தவிர்த்த கவர்னர் தமிழிசை
- கவர்னர் தமிழிசை கிராமப்புற பகுதியான கூனிச்சம்பட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
- மாணவர்களுக்கு வகுப்பறை போல கழிவறையும் சுத்தமாக மேம்படுத்தப்பட்ட வகையில் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
புதுச்சேரி:
கவர்னர் தமிழிசை கிராமப்புற பகுதியான கூனிச்சம்பட்டில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது 'நான் யார்' என மாணவர்களிடம் கேட்டபோது கவர்னர் என்று சில மாணவர்கள் கூறினர். வேறு சிலர் "தமிழிசை" என்றும் இன்னும் சிலர் "தமிழிசை சவுந்தரராஜன்" என்றும் கூறினார்கள். இதற்காக மாணவர்களை தட்டிக் கொடுத்து அவர் வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் கவர்னர் தமிழிசை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாணவர்களுக்கு வகுப்பறை போல கழிவறையும் சுத்தமாக மேம்படுத்தப்பட்ட வகையில் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். இதற்காக சமூக பொறுப்புணர்வு திட்டத்திற்கு தனியார் மூலம் கழிவறைகளை புதுப்பித்து தரவும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
நடிகர் விஜய் மாணவர்களை சந்திப்பது குறித்தும் தேச தலைவர்களின் வாழ்க்கை வரலாறை அவர் படிக்க சொன்னது குறித்தும் கேட்டதற்கு கவர்னர் தமிழிசை பதில் அளிக்காமல் தவிர்த்து புறப்பட்டு சென்றார்.
ஏற்கனவே, கவர்னர் தமிழிசை நகர பகுதியில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்ய சென்றபோது நிருபர்கள் விஜய் குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளிக்காமல் புறப்பட்டார். 2-வது முறையாக நடிகர் விஜய் குறித்த கேள்விக்கும் அவர் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.