உலகம்

டிரம்ப் வரி விதிப்பு: அமெரிக்க பங்குச் சந்தைகளில் மிகப் பெரிய சரிவு

Published On 2025-04-04 10:40 IST   |   Update On 2025-04-04 10:40:00 IST
  • டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
  • அமெரிக்கா மீது கூடுதல் வரிகளை விதிக்க தயாராகி வருகின்றன.

அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரி விதிப்பை அறிவித்தார்.

அமெரிக்கா மீது மற்ற நாடுகள் அதிக வரி விதிப்பதாக கூறி இந்த நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார். இதில் இந்தியா மீது 27 சதவீத வரியை விதித்து உள்ளார்.

டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமெரிக்கா மீது கூடுதல் வரிகளை விதிக்க தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் டிரம்பின் வரி விதிப்பு அறிவிப்புக்கு பிறகு அமெரிக்க பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது. சா்வதேச பொருளாதாரச் சூழல் அடியோடு மாறி வருவதால் அமெரிக்க முதலீட்டாளா்கள் அச்சத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் செயல்பட்டனா்.

இதனால் அந்த நாட்டுப் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியடைந்தது. பங்குச் சந்தையின் அனைத்து குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டும் பல லட்சம் கோடியை இழந்தன.

அமெரிக்காவுக்கு சீனாவும், ஐரோப்பிய ஒன்றியமும் பதிலடி கொடுக்க உள்ளதாக கூறியதையடுத்து 2020-ம் ஆண்டுக்குப் பிறகு (கொரோனா காலம்) அமெரிக்க பங்குச் சந்தைகளில் மிகப் பெரிய சரிவை ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல் உலக பங்குச்சந்தைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆசிய- பசிபிக் பிராந்தியத்தில் பங்குச் சந்தைகள் 2-வது நாளாக சரிந்தன.

இந்த நிலையில் டிரம்ப் நிருபர்களிடம் அளித்த பேட்டியின் போது பங்குச்சந்தை வீழ்ச்சி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்தபோது, விரைவில் சந்தைகள் ஏற்றம் பெறப்போகின்றன. பங்குகள் ஏற்றம் பெறப்போகின்றன. நாடு ஏற்றம் பெறப்போகிறது.

இந்த வரி விதிப்பு அறிவிப்பு உலகளவில் சந்தைகளை உலுக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்வது போன்ற ஒரு அறுவை சிகிச்சையை செய்து கொண்டிருக்கிறோம். அது மிகவும் நன்றாக நடக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

வரிகளைத் தவிர்க்க அமெரிக்காவில் தங்கள் தயாரிப்புகளை தயாரிக்க விரும்பும் நிறுவனங்களிடமிருந்து டிரில்லியன் கணக்கான டாலர்கள் முதலீடு நமது நாட்டிற்கு வரும். ஒரு ஒப்பந்தத்தை முடிக்க ஏதேனும் வழி இருக்கிறதா என்று பல நாடுகள் பார்க்க விரும்புகின்றன.

யாராவது அற்புதமான சலுகையை கொடுக்கத் தயாராக இருந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். அமெரிக்காவை மற்ற நாடுகள் நீண்ட கால மாக பயன்படுத்தி வருகின்றன. அதை நிறுத்த விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News