உலகம்

இந்தியா, சீனா மீது 500 சதவீத வரி- புதிய மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல்

Published On 2026-01-09 07:47 IST   |   Update On 2026-01-09 07:47:00 IST
  • ரஷியாவிடம் சில நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும்படி வலியுறுத்த வேண்டும்.
  • புதினின் போர் எந்திரத்துக்கு தீனி போடும் நாடுகளை தண்டிக்க இம்மசோதாவை கொண்டுவருவது காலத்தின் அவசியம்.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.

இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதாக உறுதியளித்து இருந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பதவிக்கு வந்தவுடனே அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இதற்காக ஒரு அமைதி திட்டத்தை உருவாக்கி உள்ள டிரம்ப், அதுகுறித்து ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடன் பேச ஸ்டீவ் விட்காப், தனது மருமகன் ஜேர்டு குஸ்னர் ஆகியோரை சிறப்பு தூதர்களாக நியமித்து உள்ளார்.

ஒருபுறம் அமைதி திட்டத்தை முன்வைத்து வரும் டிரம்ப், மறுபுறம் போரை நிறுத்த மறுக்கும் ரஷியாவை வழிக்கு கொண்டு வர மறைமுக அழுத்தமும் கொடுத்து வருகிறார்.

இதில் முக்கியமாக, உக்ரைனுடன் போரிட ரஷியாவிடம் பணம் இல்லாவிட்டால் போர் நின்றுவிடும் என்று அவர் கருதுகிறார். எனவே ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளை தண்டிக்க அவர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அதன்படி ரஷியாவிடம் இருந்து இந்தியா மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை தடுப்பதற்காக இந்திய பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதித்தார்.

இதன் தொடர்ச்சியாக, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் கைவிடுவதற்காக, அந்நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக புதிய மசோதா ஒன்றை அமெரிக்க செனட் உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம் மற்றொரு உறுப்பினர் புளுமெந்தாருடன் இணைந்து உருவாக்கி இருக்கிறார்.

ரஷியா பொருளாதார தடை மசோதா எனப்படும் இந்த மசோதாவுக்கு டிரம்ப் தற்போது ஒப்புதல் அளித்து உள்ளார். இது விரைவில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து லிண்ட்சே கிரஹாம் தனது 'எக்ஸ்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

7-ந் தேதி, ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசினேன். பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசித்தோம். அதைத்தொடர்ந்து, ரஷிய பொருளாதார தடை மசோதாவுக்கு டிரம்ப் பச்சைக்கொடி காட்டினார்.

அந்த மசோதா மீது மற்றொரு செனட் உறுப்பினர் புளுமெந்தார் உள்ளிட்டோருடன் நான் பல மாதங்களாக பணியாற்றினேன்.

ரஷியாவிடம் சில நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும்படி வலியுறுத்த வேண்டும். அதற்கு ஜனாதிபதி டிரம்ப் சம்மட்டி அடியாக அந்த நாடுகள் மீது அதிக வரி விதிக்க திட்டமிட்டுள்ளார்.

இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க டிரம்புக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.

இந்த நாடுகள் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால்தான் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷியாவுக்கு பணம் கிடைக்கிறது. எனவே, போரை நிறுத்துவதற்காக இம்மசோதா கொண்டுவரப்படுகிறது.

அடுத்த வார தொடக்கத்தில் மசோதா மீது வாக்கெடுப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

அமைதியை ஏற்படுத்த உக்ரைன் சலுகை அளிக்கிறது. ஆனால், ரஷிய அதிபர் புதின் நிறைய பேசுகிறார். அப்பாவிகளை கொன்று வருகிறார். எனவே, புதினின் போர் எந்திரத்துக்கு தீனி போடும் நாடுகளை தண்டிக்க இம்மசோதாவை கொண்டுவருவது காலத்தின் அவசியம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்து விட்டதாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் குவாத்ரா தன்னிடம் தெரிவித்ததாக கடந்த வாரம் லிண்ட்சே கிரஹாம் கூறியிருந்தார். அதனால், வரியை குறைக்கும்படி டிரம்பிடம் கூறுமாறு கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக இந்திய பொருட்கள் மீது ஏற்கனவே டிரம்ப் விதித்த 25 சதவீத வரியால் இந்திய ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

தற்போது 500 சதவீத வரி விதிப்புக்கு டிரம்ப் ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News