நியூயார்க் நகர 'கம்யூனிஸ்ட்' மேயர் மம்தானியை நாளை சந்திக்கிறேன் - டிரம்ப் பதிவு
- நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கடுமையாக விமர்சித்து வருகிறார்
- அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் மம்தானியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மேயர் என்ற பெருமையை இதன்மூலம் பெற்றார்.
நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கொள்கைகளையும், டிரம்பையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதே போல் மம்தானியை டிரம்ப்பும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
குறிப்பாக மம்தானியை கம்யூனிஸ்டு என்று விமர்சித்து வந்த டிரம்ப் அவர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றால் நியூயார்க் நகரம் மோசமாகிவிடும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நியூயார்க் மேயர் மம்தானி நாளை வெள்ளை மாளிகையில் என்னை சந்திக்க உள்ளார் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "நியூயார்க் நகர கம்யூனிஸ்ட் மேயர் ஜோஹ்ரான் மம்தானி என்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். இந்த சந்திப்பு நாளை (நவம்பர் 21) ஓவல் அலுவலகத்தில் நடைபெறும் என்று நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்" என்று பதிவிட்டுள்ளார்.