உலகம்

ஈரான்- அமெரிக்கா பேச்சுவார்த்தையில் இணைய தங்களுக்கு அழைப்பு: பாகிஸ்தான்

Published On 2026-02-03 18:58 IST   |   Update On 2026-02-03 18:58:00 IST
  • துருக்கியில் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளது.
  • நியாயமான மற்றும் சமமான பேச்சுவார்த்தை முன்னெடுக்க ஈரான் அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

ஈரானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு போராட்டம் வெடித்துள்ளது. போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்யப்பட்டால், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். இதற்கு ஏற்றவகையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் ஈரான் நோக்கி நகரத்தொடங்கின. இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.

இதற்கிடையில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் துருக்கி சென்றுள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றத்தை தணிக்க துருக்கி முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும், மத்தியஸ்தரராக செயல்படவும் விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்கா உடன் நியாயமான மற்றும் சமமான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வெளியுறவுத்துறை அமைச்சரிடம் ஈரான் அதிபர் பெசாஸ்கியன் வலியுறுத்தியுள்ளார்.

இதனால் துருக்கியில் அமெரிக்கா- ஈரான் இடையிலான பதற்றத்தை குறைக்க பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் ஈரானின் அணுசக்தி திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் எனத் தெரிகிறது. ஒருவேளை அணுசக்தி திட்டம் விகாரத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டால், தடைகளை நீக்க வேண்டும் என ஈரான் வலியுறுத்துகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் சவுதி அரேபியா, எகிப்து, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பேச்சுவார்த்தையில் இணைய தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தை வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்தில் நடைபெற்ற இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறுவத்துறை அமைச்சருமான இஷாக் தார் பாகிஸ்தான் பிரதிநிதியாக கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று அமெரிக்கா இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

Tags:    

Similar News