உலகம்

அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வரும் - வெள்ளை மாளிகை தகவல்

Published On 2025-04-02 11:44 IST   |   Update On 2025-04-02 11:44:00 IST
  • அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
  • அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரிகள் விதிக்கப் படுவதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக மற்ற நாடுகள் மீது வரி விதிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளார்.

அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரிகள் விதிக்கப்படுவதாக குற்றம் சாட்டிய டிரம்ப், அதே அளவுக்கு அந்தந்த நாடுகள் மீது ஏப்ரல் 2-ம் தேதி முதல் பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார்.

இந்தியாவின் விவசாய பொருட்கள் மீது 100 சத வீதம் வரை வரி விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக டிரம்ப் இன்று அறிவிப்பை வெளியிடுகிறார்.

இந்த நிலையில் பரஸ்பர வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வரும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியதாவது:-

அதிபர் டிரம்ப் வர்த்தக குழுவுடன் ஆலோசனை நடத்தினார். வரி விதிப்பு தொடர்பாக அவர் ரோஸ் கார்டனில் நடைபெறும் விடுதலை தின நிகழ்ச்சியில் அறிவிப்பை வெளியிட்டதும் வரிவிதிப்புகள் உடனடியாக அமலுக்கு வரும்.

அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியா 100 சதவீத வரியினை விதிக்கிறது. பால் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 50 சதவீதம், ஜப்பான் 700 சதவீதம் வரிகளை விதிக்கிறது. வெண்ணெய் மற்றும் சீஸ் மீது கனடா சுமார் 300 சதவீதம் வரியை விதிக்கிறது.

இதுபோன்ற நாடுகளால், அமெரிக்கா நீண்ட காலமாக கடும் சுரண்டலுக்கு ஆளாகியுள்ளது. அதிபர் டிரம்ப் எடுத்த துணிச்சலான முடிவுகள் அமெரிக்காவுக்கு ஒரு வரலாற்று சிறப்பு மிக்க மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது.

நமது ஏற்றுமதிக்கு அந்த நாடுகள் விதிக்கும் அளவுக்கு பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தும் நேரம் வந்து விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்கா விதிக்க உள்ள பரஸ்பர வரிகளால் இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தோனேசியா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து, தைவான், தாய்லாந்து, துருக்கி, இங்கிலாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News