எப்ஸ்டீன் கோப்புகள்: பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது!
- இன்று தனது 66-வது பிறந்தநாளில் கைது செய்யப்பட்டுள்ளார்.
- "சட்டத்திற்கு மேலானவர் எவருமில்லை" எனப் பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் கருத்து
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில், பிரிட்டன் அரசர் சார்ல்ஸின் சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ, பிரிட்டனின் வர்த்தகத் தூதராகப் பணியாற்றியபோது, பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு ரகசிய அரசு ஆவணங்களைப் பகிர்ந்ததாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர் தற்போது வசித்து வரும் நார்ஃபோக்கில் உள்ள சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் வைத்து 'தேம்ஸ் வேலி' காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே எப்ஸ்டீன் உடனான தொடர்புகளால் சர்ச்சையில் சிக்கியிருந்த ஆண்ட்ரூவின் 'இளவரசர்' மற்றும் 'டியூக் ஆஃப் யார்க்' போன்ற அரசப் பட்டங்களை மன்னர் சார்லஸ் கடந்த 2025-ஆம் ஆண்டே பறித்துவிட்டார்.
இன்று தனது 66-வது பிறந்தநாளில் கைது செய்யப்பட்டுள்ளார். "சட்டத்திற்கு மேலானவர் எவருமில்லை" எனப் பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தேம்ஸ் வேலி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
"விசாரணையின் ஒரு பகுதியாக, பொது அலுவலகத்தில் தவறான நடத்தை புரிந்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில், நார்போக் பகுதியைச் சேர்ந்த 60-களில் இருக்கும் ஒருவரை இன்று கைது செய்துள்ளோம். மேலும், பெர்க்ஷயர் மற்றும் நார்போக்கில் உள்ள முகவரிகளில் சோதனைகளை மேற்கொண்டு வருகிறோம். அந்த நபர் தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.
தேசிய வழிகாட்டுதல்களின்படி, கைது செய்யப்பட்ட நபரின் பெயரை நாங்கள் வெளியிட மாட்டோம். இந்த வழக்கு தற்போது விசாரணையில் இருப்பதால், நீதிமன்ற அவமதிப்பைத் தவிர்க்கும் வகையில் செய்திகளை வெளியிடும்போது கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உதவி தலைமை காவல்துறை அதிகாரி ஆலிவர் ரைட் கூறியதாவது:
"முறையான மதிப்பீட்டிற்குப் பிறகு, அரசு பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்படும் இந்தக் குற்றச்சாட்டு குறித்து தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளோம். இந்தக் குற்றச்சாட்டினை விசாரிப்பதற்காக எங்கள் கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படும்போது, எங்களது விசாரணையின் நேர்மையையும், நடுநிலைமையையும் நாங்கள் பாதுகாக்க வேண்டும். இந்த வழக்கின் மீது பொதுமக்களுக்கு இருக்கும் மிகுந்த ஆர்வத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம்; இது குறித்த புதிய தகவல்களை தகுந்த நேரத்தில் வழங்குவோம்" என தெரிவித்தார்.