உக்ரைன் டிரோன் தாக்குதலில் புதின் இல்லம் குறி வைக்கப்படவில்லை - டிரம்ப்
- உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அமெரிக்கா புறப்பட்டு சென்ற மறுநாள் ரஷியா இந்த குற்றச்சாட்டை தெரிவித்தது.
- ரஷியா வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜா லாவ்ரோவ் குற்றம்சாட்டி இருந்தார்.
கடந்த வாரம் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் இல்லம் மீது ஆளில்லா டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. நோவ்கோ பிராட் பிராதியத்தில் உள்ள புதினின் அரசு இல்லத்தின் மீது உக்ரைன் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், அதை பாதுகாப்பு படைகள் முறியடித்ததாகவும் ரஷியா வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜா லாவ்ரோவ் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்தநிலையில் உக்ரைன் டிரோன் தாக்குதலில் புதினின் இல்லத்தை குறி வைக்கவில்லை என்று ரஷியாவின் குற்றச்சாட்டை அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுத்துள்ளார்.
அமெரிக்க அதிபருக்கான ஏர்போர்ஸ் விமானத்தில் அவர் அளித்த பேட்டியில் இது தொடர்பாக கூறியதாவது:-
ரஷிய அதிபர் புதினின் இல்லத்தை குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதலை நடத்தவில்லை என்பதை அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அங்கு தாக்குதல் நடந்ததாக நான் நம்பவில்லை. அன்றைய தினம் ரஷிய அதிபருடன் தொலைபேசியில் பேசினேன். புதினும் இந்த விஷயத்தை எழுப்பினார். இந்த குற்றச்சாட்டால் நான் மிகவும் கோபம் அடைந்தேன்.
இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.
20 அம்ச திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அமெரிக்கா புறப்பட்டு சென்ற மறுநாள் ரஷியா இந்த குற்றச்சாட்டை தெரிவித்தது.
இது சமாதான முயற்சிகளை பலவீனப்படுத்தும் மாஸ்கோவின் முயற்சி தவிர வேறொன்றுமில்லை என்று ஐரோப்பிய அதிகாரிகள் வாதிட்ட பிறகு அமெரிக்காவின் இந்த முடிவை டிரம்ப் தெரிவித்து உள்ளார்.