உலகம்

காங்கோவில் சுரங்கம் இடிந்து விபத்து - 200 பேர் உயிரிழப்பு

Published On 2026-01-31 14:24 IST   |   Update On 2026-01-31 14:24:00 IST
  • விபத்து நடந்த ருபாயா பகுதி உலகின் 15 சதவீத Coltan உலோக தாதுவை உற்பத்தி செய்யும் இடமாகும்.
  • இறந்தவர்களில் சுரங்கத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, அங்கிருந்த சிறுவர்கள் மற்றும் பெண்களும் அடங்குவர்

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டின் கிழக்கு கிழக்கு பகுதியில் 'ருபாயா' எனும் இடத்தில் Coltan என்ற உலோக தாது சுரங்கம் அமைந்துள்ளது.

கடந்த புதன்கிழமை (ஜனவரி 28) அன்று பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால், சுரங்கத்தின் பல பகுதிகள் திடீரென இடிந்து விழுந்தன.

இதில் அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் பகுதியின் செய்தித் தொடர்பாளர் லுகும்பே முயிசா கூறுகையில், "தற்போது வரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் சுரங்கத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, அங்கிருந்த சிறுவர்கள் மற்றும் பெண்களும் அடங்குவர்" எனத் தெரிவித்துள்ளார்.

நிலச்சரிவில் சிக்கிய பல உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை. சுமார் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்து நடந்த ருபாயா பகுதி உலகின் 15 சதவீத Coltan உலோக தாதுவை உற்பத்தி செய்யும் இடமாகும். இது செல்போன், மடிக்கணினி பயன்பாட்டிற்கு தேவைப்படும் Tantalum உலோகத்தின் முக்கிய ஆதாரமாகும்.

2024-ஆம் ஆண்டு முதல் இந்தப் பகுதி 'M23' எனும் கிளர்ச்சி குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்குள்ள மக்கள் மிகக் குறைந்த ஊதியத்திற்காக ஆபத்தான முறையில் கைகளால் இந்தத் தாதுக்களை வெட்டி எடுக்கின்றனர்.

மழைக்காலம் என்பதால் அங்குள்ள மண் மிகவும் பலவீனமாக இருந்ததே இந்த விபத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

சுரங்கப் பணிகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அப்பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.  

Tags:    

Similar News