உலகம்

ஆன்லைன் மோசடி சாம்ராஜ்யம்.. மியான்மரின் Mafia குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்கு சீனாவில் தூக்கு

Published On 2026-01-30 13:15 IST   |   Update On 2026-01-30 13:15:00 IST
  • மியான்மரில் ஆதிக்கம் செலுத்தி வந்த நான்கு பெரிய குற்றக் குடும்பங்களில் 'மிங்' குடும்பமும் ஒன்று.
  • இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களையும் ஐடி வேலை என்று ஆசை காட்டி கடத்திச் சென்று இவர்கள் சித்திரவதை செய்து வந்தனர்.

மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் பல சைபர் மோசடி கும்பல்கள் இயங்கி வருகின்றன.

இவர்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இளைஞர்களை வேலைவாய்ப்பு ஆசை காட்டி அழைத்துச் சென்று அவர்களை இதுபோன்ற சைபர் மோசடிகளை செய்ய வற்புறுத்தி வருகின்றனர்.

இவர்கள் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு போலி அழைப்புகளை செய்தும் ஆன்லைன் மூலமாகவும் மோசடியில் ஈடுபடுகின்றனர்.

அந்த வகையில் மியான்மரை மையமாகக் கொண்டு சர்வதேச அளவில் பல ஆயிரம் கோடி ரூபாய் சைபர் மோசடிகளில் ஈடுபட்டு வந்தவர்கள் 'மிங்' குடும்பத்தினர்.

மியான்மரின் கோகாங் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வந்த நான்கு பெரிய குற்றக் குடும்பங்களில் 'மிங்' குடும்பமும் ஒன்று.

இவர்கள் ரகசிய இடங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்களைச் சிறைபிடித்து, அவர்களைக் கொண்டு ஆன்லைன் மோசடிகளைச் செய்து வந்தனர்.

இந்தக் கும்பல் ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சுமார் ரூ. 3.5 லட்சம் கோடி மோசடி செய்து வந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Romance Scam மூலம் முதலீடு செய்ய வைத்துப் பணத்தைப் பறிப்பது இவர்களது முக்கிய உத்தியாகும்.

இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களையும் ஐடி வேலை என்று ஆசை காட்டி கடத்திச் சென்று இவர்கள் சித்திரவதை செய்து வந்தனர்.

இவர்களிடம் சிறைப்பட்டிருந்தவர்கள் தப்பிக்க முயன்றபோது, 14 சீனக் குடிமக்களை இந்தக் கும்பல் கொடூரமாகக் கொலை செய்தது. இது சீன அரசாங்கத்தைப் பெரும் கோபத்திற்கு உள்ளாக்கியது.

இந்தக் கும்பலின் தலைவர் மிங் ஜுய்சாங் -ஐ கைது செய்ய 2023 நவம்பர் மாதம் சீனா பிடிவாரண்ட் பிறப்பித்தது.

மியான்மர் அதிகாரிகள் இவரைக் கைது செய்ய முயன்றபோது, அவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக மியான்மர் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேநேரம் இவருடைய மகன் மிங் குவோபிங் மற்றும் பேத்தி மிங் சென்சென் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு சீனா அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில் விசாரணைக்கு பின் சீனாவின் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, நேற்று இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது

எல்லையோரங்களில் நடக்கும் சூதாட்டம், போதைப்பொருள் மாபியா மற்றும் ஆன்லைன் மோசடிகளை முற்றிலும் ஒழிக்கும் வரை தங்களது வேட்டை தொடரும் என்று சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.  

Tags:    

Similar News