மோதலுக்கு அமெரிக்கா-ஈரான் தயாராகி வருகின்றன: மத்திய கிழக்கில் பதற்றம் நீடிப்பு
- ஈரான் மீது ஒரு பெரிய புதிய தாக்குதலை நடத்த டிரம்ப் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
- அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக உள்ளது.
ஈரானில் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. இதில் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது.
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினால் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஈரான் அரசை அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார்.
மேலும் ஈரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படை செல்வதாக அறிவித்தார். அதன்படி யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் விமா னம் தாங்கி கப்பல் படைப்பிரிவு ஈரானை நெருங்கி உள்ளது. இதற்கிடையே டிரம்ப் அணு ஆயுதங்கள் இல்லாத ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும்.
ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை மூலம் எட்டுவதற்கு காலம் கடந்து கொண்டிருக்கிறது. இல்லையென்றால் முன்பை விட ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்றார். ஆனால் டிரம்பின் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி கொடுத்தது.
அந்நாட்டு வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி கூறும் போது,"எங்கள் துணிச்சலான ஆயுதப் படைகள், எங்களது நிலம், வான் மற்றும் கடலுக்கு எதிரான எந்த வொரு ஆக்கிரமிப்புக்கும் உடனடியாகவும் சக்திவாய்ந்ததாகவும் பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளன" என்றார்.
இந்த நிலையில் ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்த ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை. இதனால் ஈரான் மீது ஒரு பெரிய புதிய தாக்குதலை நடத்த டிரம்ப் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஈரானின் பாதுகாப்பு அதிகாரிகளை இலக்காகக் கொண்ட அமெரிக்க ராணுவ வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஈரான் அணுசக்தி தளங்கள், அரசாங்க நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் கூறும்போது, அணு ஆயுதங்கள் குறித்த ஒப்பந்தத்தை எட்டுவதில் பேச்சுவார்த்தைகள் உண்மையானவையாக இருந்தால் மட்டுமே அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக உள்ளது.
அதேநேரத்தில் ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்க வீரர்களுக்குத் தீங்கு விளை விக்கப்படும் என்றார். அமெரிக்கா-ஈரான் இடையேயான எந்த நேரத்தி லும் மோதல் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் நீடித்து வருகிறது.