எச்.1பி விசா முறைகேடு புகார்: டெக்சாஸில் அதிரடித் தடை விதித்த கவர்னர்
- புதிய எச்-1பி விசா மனுக்களை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிடுகிறேன்.
- இதுதொடர்பாக அவர் மாகாண முகமை தலைவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அமெரிக்காவில் குடியேற்றம் தொடர்பான கட்டுப்பாடுகளை அதிபர் டிரம்ப் நிர்வாகம் கடுமையாக்கி வருகிறது. இதில் விசாக்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் எச் 1-பி விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக அதிபர் டிரம்ப் உயர்த்தினார். எச்-1பி விசாவால் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புக்கு பாதிப்பு ஏற்படுவதாக டிரம்ப் தெரிவித்தார்.
இந்தநிலையில் எச்-1பி விசாகளின் புதிய விண்ணப்பங்களுக்கு தடை விதிக்குமாறு டெக்சாஸ் மாகாண கவர்னர் கிரெக் அபோட், அம்மாகாணத்தில் உள்ள அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மாகாண முகமை தலைவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
எச்-1பி விசா திட்டத்தில் நடக்கும் துஷ்பிரயோகங்கள் குறித்து தகவல்கள் வெளியாகின. எச்-1பி அமைப்பு தவறாக பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்க வேலைகள் அமெரிக்க தொழிலாளர்களுக்குச் செல்வதை உறுதி செய்வதற்காக கூட்டாட்சி அரசாங்கம் அந்தத் திட்டத்தை மறுஆய்வு செய்து வரும் நிலையில் அனைத்து மாகாண முகமைகளும் புதிய எச்-1பி விசா மனுக்களை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிடுகிறேன்.
டெக்சாஸ் பணியாளர் ஆணையத்திடம் இருந்து எழுத்துப்பூர்வ அனுமதி தேவைப்படும் சில விதிவிலக்குகளுடன், இந்த முடக்கம் அடுத்த ஆண்டு மே 31-ந்தேதி வரை நடைமுறையில் இருக்கும்.
அமெரிக்க வேலைகள் அமெரிக்கர்களுக்கு மட்டுமே கிடைப்பதை உறுதி செய்ய பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், வருகிற மார்ச் 27-ந்தேதிக்குள் விரிவான அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறும் அனைத்து முகமைகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் கவர்னர் அறிவுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக கவர்னர் கிரெக் அபோட் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
டெக்சாஸ் வரி செலுத்துவோர் எங்கள் பணியாளர்களைப் பயிற்றுவிக்க பில்லியன் கணக்கில் முதலீடு செய்கிறார்கள். அந்த வேலைகள் டெக்சாஸ் மக்களுக்குத்தான் செல்ல வேண்டும் என்றார்.
எச்-1பி விசாவுக்கு தடை விதித்த முதல் மாகாணம் டெக்சாஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.