இந்தியாவுக்கு தான் அதிக லாபம்.. ஐரோப்பிய யூனியன் உடனான ஒப்பந்தம் பற்றி அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கருத்து
- ஐரோப்பிய சந்தைகளில் இந்தியாவிற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
- ஐரோப்பிய யூனியன் உலகமயமாக்கலை மீண்டும் இரட்டிப்பாக்க முயல்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே கையெழுத்தாகியுள்ள புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் அளித்த பேட்டியில், இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா மிகப்பெரிய அளவில் பலனடையும் என்றும், ஐரோப்பிய சந்தைகளில் இந்தியாவிற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் இந்தியத் தொழிலாளர்களின் குடியேற்ற உரிமைகளை எளிதாக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க உள்நாட்டு உற்பத்தியைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தி வருவதால், மற்ற நாடுகள் மாற்று சந்தைகளைத் தேடிச் செல்வதாகவும், அதன் விளைவாகவே ஐரோப்பிய யூனியன் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளதாகவும் கிரீர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா உலகமயமாக்கலின் சிக்கல்களைச் சரிசெய்ய முயலும் போது, ஐரோப்பிய யூனியன் உலகமயமாக்கலை மீண்டும் இரட்டிப்பாக்க முயல்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் இன்னும் இழுபறியிலேயே நீடிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.