உலகம்

இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா அதிருப்தி

Published On 2026-01-29 23:39 IST   |   Update On 2026-01-29 23:39:00 IST
  • இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கடந்த 27-ம் தேதி கையெழுத்தானது.
  • வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஒப்பந்தம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

வாஷிங்டன்:

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கடந்த 27-ம் தேதி டெல்லியில் கையெழுத்தானது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஒப்பந்தம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் இந்தியா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

இந்தியாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. ஒவ்வொரு நாடும் தங்களுக்கு எது சிறந்ததோ அதைச் செய்யவேண்டும். ஆனால் ஐரோப்பியர்களின் நடவடிக்கைகளால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன்.

உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷியா மீது அமெரிக்கா தடைகளை விதித்தது. ஆனால் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க தொடங்கியது.

இந்தியாவால் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை ஐரோப்பியர்கள் வாங்குகிறார்கள். எனவே ஐரோப்பியர்கள் தங்களுக்கு எதிரான போருக்கு மறைமுகமாக நிதியளித்து வருகின்றனர். இது நீங்கள் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத ஒன்று.

ஏனென்றால் உக்ரைன்-ரஷியா போரின் முன் வரிசையில் ஐரோப்பியர்கள் உள்ளனர். ஐரோப்பிய தலைவர்கள் பொருளாதார நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் உக்ரைன் போரில் தங்கள் சொந்த நிலைப்பாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறார்கள்.

ரஷிய எண்ணெயை வாங்குவதற்கு இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. இந்த நடவடிக்கையில் எங்களுடன் ஐரோப்பியர்கள் இணைய விரும்பவில்லை. இதற்கு அவர்கள் இந்த வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்ய விரும்பியதுதான் காரணம் என்பது இப்போது தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு முறையும் ஒரு ஐரோப்பியர் உக்ரைனிய மக்களின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசும்போது, அவர்கள் உக்ரைன் மக்களை விட வர்த்தகத்திற்கு முன்னுரிமை அளித்தார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை விட வர்த்தகத்திற்கு ஐரோப்பியா முக்கியத்துவம் அளித்துவிட்டது என தெரிவித்தார்.

Tags:    

Similar News