நிதிக்காக நண்பர்கள், உலக நாடுகளிடம் கை ஏந்துவதை அவமானமாக கருதுகிறோம்: பாகிஸ்தான் பிரதமர்
- ஒருவர் கடன் பெற செல்லும்போது, மற்றவரிடம் தலை குனிந்து நிற்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும்.
- நானும் ஆசிம் முனீரும் நிதி பெறுவதற்காக உலக நாடுகளுக்கு செல்வதை நாங்கள் அவமானமாக கருதுகிறோம்.
பாகிஸ்தான் நிதி நெருக்கடியால் கடும் சிக்கலை சந்தித்து வருகிறது. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து நிதி கேட்கின்றனர். மற்ற நாடுகளிடம் நிதி கேட்டு நிற்பதை அவமானமாக கருதுகிறொம் என ஷெபாஷ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் இஸ்லாமாபாத்தில் ஏற்றுமதியாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசியதாவது:-
தற்போதைய நிலையில் அந்நியச் செலாவணி கையிருப்பு கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. எனினும், நமது நண்பர்கள் மற்றும் உலக நாடுகளிடம் இருந்து பெறப்பட்ட கடன்களும் இதில் அடங்கும். ஆனால், ஒருவர் கடன் பெற செல்லும்போது, மற்றவரிடம் தலை குனிந்து நிற்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும்.
நானும் ஆசிம் முனீரும் நிதி பெறுவதற்காக உலக நாடுகளுக்கு செல்வதை நாங்கள் அவமானமாக கருதுகிறொம். கடன் வாங்குவது நமது சுயமரியாதைக்கு ஒரு பெரும் சுமையாகும். வெட்கத்தால் எங்கள் தலைகள் குனிகின்றன. அவர்கள் செய்யச் சொல்லும் பல விஷயங்களுக்கு எங்களால் மறுப்புத் தெரிவிக்க முடிவதில்லை.
இவ்வாறு ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.