உலகம்

புலம்பெயர் தொழிலாளர்கள், H1B விசாதாரர்களுக்கு அமெரிக்க அரசு அதிரடி உத்தரவு

Published On 2025-04-13 12:15 IST   |   Update On 2025-04-13 12:15:00 IST
  • அமெரிக்காவில் தங்கியிருக்கும் குடிமக்கள் அல்லாத அனைவரும் அரசாங்கத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.
  • தங்கள் முகவரியை மாற்றுபவர்கள் 10 நாட்களுக்குள் புகாரளிக்க வேண்டும்.

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் நாடு கடத்தப் பட்டனர். மேலும் அமெரிக்காவில் பல்வேறு விசாக்கள் மூலம் வசிக்கும் வெளிநாட்டினருக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அனைத்து அமெரிக்க குடியேறிகள், எச்-1பி விசாவில் பணியாற்றுபவர்கள், கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் தங்கள் சட்டப்பூர்வ அந்தஸ்துக்கான ஆதாரத்தை எப்போதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

படையெடுப்பிலிருந்து அமெரிக்க மக்களைப் பாதுகாத்தல் என்ற டிரம்பின் நிர்வாக உத்தரவின் ஒரு பகுதியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து குடிமக்கள் அல்லாதவர்களும் அவர்களின் அடையாள ஆவணத்தை எல்லா நேரங்களிலும் எடுத்துச் செல்ல வேண்டும்.

இதற்கு இணங்கவில்லையென்றால் எந்த அடைக்கலமும் இருக்காது. அமெரிக்காவில் 30 நாட்கள் அல்லது அதற்கு மேல் தங்கியிருக்கும் 14 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் அல்லாத அனைவரும் படிவத்தை நிரப்பி அரசாங்கத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.

குடியேறிகளின் குழந்தைகளும் 14 வயது ஆன 30 நாட்களுக்குள் மீண்டும் பதிவு செய்து கைரேகைகளை சமர்ப்பிக்க வேண்டும். ஏப்ரல் 11-ந்தேதி அல்லது அதற்குப் பிறகு நாட்டிற்கு வருபவர்கள் 30 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். தங்கள் முகவரியை மாற்றுபவர்களும் 10 நாட்களுக்குள் புகாரளிக்க வேண்டும், தவறினால் அவர்களுக்கு 5 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்-1பி உள்ளிட்ட செல்லுபடியாகும் விசா அல்லது கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். எனவே அவர்கள் மீண்டும் படிவத்தை நிரப்ப வேண்டியதில்லை.

ஆனாலும், அவர்கள் எல்லா நேரங்களிலும் தங்களுடன் ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். அதிகாரிகள் கேட்கும்போது அடையாள ஆவணத்தை காண்பிக்க வேண்டும்.

அமெரிக்காவில் சுமார் 54 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News