அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தியில் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் இடையே கடும் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி
- ஆப்கானிஸ்தான்- பாக்., சண்டையை முடிவுக்கு கொண்டு வர பலகட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
- ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுவை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 206 பேர் பலியானார்கள்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அண்டை நாடான பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
பாகிஸ்தானுக்கு எதிராக செயல்பட்டு வரும் தெக்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுத்து வருவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.
கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுவை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 206 பேர் பலியானார்கள். இதற்கு பதிலடியாக தலிபான் நடத்திய தாக்குதலில் 23 வீரர்கள் உயிர் இழந்தனர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.
இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர பலகட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கு இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக இறுதிகட்ட பேச்சுவார்த்தை இஸ்தான்புல்லில் நடந்தது.
இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் தெற்கு கந்தஹார் மாகாணத்தில் உள்ள ஸ்பின் போல்டாக் என்ற இடத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையில் 4 பெண்கள் உள்பட 5 பேர் உயிர் இழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஆப்கானிஸ்தான் முதலில் துப்பாக்கி சூடு நடத்தியது என்றும் இதனால் பதிலடி கொடுக்க வேண்டியது இருந்தது என்றும் பாகிஸ்தான் கூறி இருக்கிறது.