நோபல் பரிசை நாங்கள் வழங்கவில்லை: அதிபர் டிரம்புக்கு நார்வே பிரதமர் பதில்
- 2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சி தலைவருக்கு அளிக்கப்பட்டது.
- நார்வே நாட்டின் பிரதமர் ஜோனஸ்கர் ஸ்டோருக்கு அதிபர் டிரம்ப் கடிதம் ஒன்றை எழுதினார்.
ஓஸ்லோ:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தான் 8 போர்களை நிறுத்தி உள்ளதால் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என தொடர்ந்து கூறி வந்தார்.
ஆனால், 2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு அளிக்கப்பட்டது. இதனால் டிரம்ப் ஏமாற்றம் அடைந்தார்.
இதற்கிடையே, நோபல் பரிசு வழங்கும் நார்வே நாட்டின் பிரதமர் ஜோனஸ்கர் ஸ்டோருக்கு அதிபர் டிரம்ப் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், 8 போர்களை நிறுத்திய எனக்கு நோபல் பரிசு வழங்கவில்லை. எனவே இனி அமைதி பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அதிபர் டிரம்புக்கு நார்வே பிரதமர் ஜோனஸ்கர் ஸ்டோர் பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் கூறுகையில், நோபல் அமைதிப் பரிசைப் பொறுத்தவரை அதிபர் டிரம்ப் உள்பட அனைவருக்கும் தெளிவாக விளக்கியுள்ளேன். அந்தப் பரிசு நார்வே அரசாங்கத்தால் வழங்கப்படுவது அல்ல. ஒரு சுதந்திரமான நோபல் குழுவால் வழங்கப்படுகிறது. நார்வே, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு டிரம்ப் அறிவித்த வரி உயர்வுக்கு எங்கள் எதிர்ப்பை அவரிடம் தெரிவித்துள்ளோம் என்றார்.