ஸ்பெயினில் ரெயில்கள் மோதிய கோர விபத்தில் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு - 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
- விபத்தில் சிக்கிய இரண்டு ரயில்களிலும் சேர்த்து மொத்தம் சுமார் 500 பயணிகள் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.
- ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டார்.
ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட் அருகே ஏற்பட்ட ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.
ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை மாலை, மலகாவிலிருந்து மாட்ரிட் நோக்கிச் சென்று கொண்டிருந்த அதிவேக ரெயில, தெற்கு அண்டலூசியாவில் உள்ள அடமுஸ் அருகே திடீரென தடம் புரண்டது.
தடம் புரண்ட அந்த ரெயில் பக்கத்து தண்டவாளத்தில் வந்த மற்றொரு ரெயிலின் மீது பயங்கரமாக மோதியது. இதில் இரண்டு ரெயில்களுமே பலத்த சேதமடைந்தன.
விபத்தில் சிக்கிய இரண்டு ரயில்களிலும் சேர்த்து மொத்தம் சுமார் 500 பயணிகள் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.
ராணுவம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டன.
இந்த விபத்தில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 72 பேர் காயமடைந்துள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டார். இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் மூன்று நாட்களுக்குத் துக்கம் அனுசரிக்கப்படும் என்று ஸ்பெயின் அரசு அறிவித்துள்ளது.