ஜெருசலேமில் உள்ள ஐ.நா. தலைமையகத்தை புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கும் இஸ்ரேல்!
- 2025 தொடக்கத்தில் UNRWA-வின் செயல்பாடுகள் இஸ்ரேலிய நிலப்பரப்பில் தடை செய்யப்பட்டன.
- 37 உதவி அமைப்புகளின் செயல்பாட்டு உரிமங்களை (Operating Licences) இஸ்ரேல் ரத்து செய்துள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் முகமையின் தலைமையகத்தை இஸ்ரேல் இடிக்கத் தொடங்கியுள்ளது. காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவி வழங்கும் குழுக்கள் மீது அந்நாட்டு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜெருசலேமில் உள்ள ஐக்கிய நாடுகளின் நிவாரண முகமை (UNRWA), தனது ஊழியர்களின் செல்போன்கள் மற்றும் கணினி போன்ற சாதனங்களை இஸ்ரேலிய ராணுவம் பிடுங்கிக் கொண்டதாகவும், அலுவலகத்தை விட்டு அவர்களை வெளியேற்றியதாகவும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் மீதானது மட்டுமல்லாமல், சர்வதேச விதிகளை மீறும் செயல் என்றும், ஐநா சபையின் சலுகைகள் மற்றும் அதன் பாதுகாப்பிற்கு எதிரான ஒரு தீவிரமான விதிமீறல் எனவும் முகமை தெரிவித்துள்ளது. புல்டோசர்களுடன் வந்த இஸ்ரேலிய இராணுவக் குழு ஒன்று, அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள தெருக்களை மூடிவிட்டு, இராணுவப் பாதுகாப்பை பலப்படுத்திய பிறகு ஐநா முகமையின் வளாகத்திற்குள் புகுந்ததாகவும், அங்குள்ள கட்டடங்களை இடிக்கத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி UNRWA அமைப்பை இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி வருகிறது. ஆதாரங்கள் எதையும் வழங்காமலேயே, அந்த அமைப்புக்கு ஹமாஸுடன் தொடர்பு இருப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதனை அந்த ஐநா முகமை வன்மையாக மறுத்துள்ளது.
இதனிடையே அந்த அமைப்பிற்குத் தடை விதிக்கும் புதிய சட்டத்தைப் பின்பற்றியே இந்த இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2024 அக்டோபரில் இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, 2025 தொடக்கத்தில் UNRWA-வின் செயல்பாடுகள் இஸ்ரேலிய நிலப்பரப்பில் தடை செய்யப்பட்டன.
இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-கிவீர், தான் அந்தப் பணிக் குழுக்களுடன் தலைமையகத்திற்குச் சென்றதாக ஒரு அறிக்கையில் தெரிவித்தார். மேலும் இதனை ஒரு 'வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்' என்றும் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் அனைத்து மனிதாபிமான உதவிகளையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தியுள்ளது. இதனை தாண்டியும் உதவிசெய்த 37 உதவி அமைப்புகளின் செயல்பாட்டு உரிமங்களை (Operating Licences) இஸ்ரேல் ரத்து செய்துள்ளது.