செய்திகள்

பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் கட்சி ஆட்சியைப் பிடித்தால் பிரதமர் யார்? - முன்னாள் பிரதமர் அப்பாசி தகவல்

Published On 2018-07-18 19:21 GMT   |   Update On 2018-07-18 19:21 GMT
பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் கட்சி வெற்றி பெற்றால் அடுத்த பிரதமர் யார்?” என்ற கேள்விக்கு முன்னாள் பிரதமர் அப்பாசி நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷாபாஸ் ஷெரீப் என பதில் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:

342 இடங்களை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு வரும் 25-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு தேர்தலுக்கு முந்தைய வன்முறை சம்பவங்கள் அங்கு நடந்து வருகின்றன. 172 இடங்களில் வெற்றி பெறுகிற கட்சி, தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வரும்.

தற்போது நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப், பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய 3 கட்சிகள் இடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது.



கருத்துக்கணிப்புகளில் நவாஸ் ஷெரீப் கட்சி முந்துகிறது.

இந்த நிலையில் நவாஸ் ஷெரீப், ‘பனாமா கேட்’ ஊழலில் பதவி இழந்தபோது பிரதமர் பதவிக்கு வந்த அப்பாசியிடம், ‘தி டான்’ நாளேடு தரப்பில் சிறப்பு பேட்டி கண்டனர். அப்போது “பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி வெற்றி பெற்றால் பிரதமர் யார்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “ஷாபாஸ் ஷெரீப் தான் (இவர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி) அடுத்த பிரதமர். இருப்பினும் தேர்தல் முடிவுக்கு பின்னர் பிரதமர் யார் என்கிற விஷயத்தில் ஒருமித்த கருத்து ஏற்படுத்தி இறுதி முடிவு எடுப்போம்” என பதில் அளித்தார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, “நவாஸ் ஷெரீப், மரியம், கேப்டன் சப்தார் ஆகியோருக்கு எதிரான வழக்கில் இதுவரை இல்லாத வகையில் ஒருதலைப்பட்சமாக வழக்கு விசாரணை நடைபெற்றது” என்றும் அவர் சாடினார்.

முன்னாள் உள்துறை மந்திரி சவுத்ரி நிசாருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்காதது பற்றிய கேள்விக்கு அப்பாசி பதில் அளிக்கையில், “அவர் டிக்கெட் கேட்டு விண்ணப்பிக்கவில்லை. ஒவ்வொருவரும், ஏன் நவாஸ் ஷெரீப், ஷாபாஸ் ஷெரீப், மரியம் நவாஸ் உள்ளிட்டவர்களே டிக்கெட் கேட்டு விண்ணப்பித்தனர்” என்று கூறினார்.  #tamilnews 
Tags:    

Similar News