தேர்தல் சின்னத்தை அறிமுகப்படுத்த விஜய் புதிய திட்டம்
- த.வெ.க. தலைமையில் கூட்டணி அமைக்கவும் முழு வீச்சில் பணிகள் நடந்து வருகிறது.
- கூட்டணி கட்சி தலைவர்களுடன் மேடையேறும் பிரமாண்டமான ஒரு கூட்டத்தை கூட்டவும் விஜய் முடிவு செய்துள்ளார்.
சென்னை:
சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. தீவிரமாக களம் இறங்கியுள்ளது. விரைவில் அடுத்தக்கட்ட பிரசாரத்தை விஜய் முன்னெடுக்க இருக்கிறார். சேலம் அல்லது தர்மபுரியில் அவர் மக்கள் சந்திப்பு நிகழ்வை நடத்தலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அந்த மக்கள் சந்திப்பை பிரமாண்டமாக நடத்தவும், தேர்தல் கமிஷன் கடந்த டிசம்பர் மாதம் தங்களுக்கு ஒதுக்கீடு செய்து, அனுப்பிய தேர்தல் சின்னத்தை அறிமுகப்படுத்தவும் விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.
இதற்கிடையே, த.வெ.க. தலைமையில் கூட்டணி அமைக்கவும் முழு வீச்சில் பணிகள் நடந்து வருகிறது. தே.மு.தி.க., அ.ம.மு.க., புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் மறைமுக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. கூட்டணி உருவாகும் பட்சத்தில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் மேடையேறும் பிரமாண்டமான ஒரு கூட்டத்தை கூட்டவும் விஜய் முடிவு செய்துள்ளார்.
அதேவேளையில் தேர்தல் அறிக்கை தயார் செய்ய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும், மாநிலத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியையும் நோக்கமாக கொண்டு, நடைபெற உள்ள சட்டசபை தேர்தலையொட்டி த.வெ.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.
இதற்காக அமைக்கப்பட்ட குழு, தமிழகம் முழுவதும் பொது மக்கள், சிறு, குறு, தொழில் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், பொருளாதார மற்றும் தொழில் வல்லுனர்கள், வர்த்தக சபைகள், பல்வேறு ஊழியர் சங்கங்கள், விவசாய சங்கங்கள், கல்வியாளர்கள், டாக்டர்கள், நர்சுகள், மகளிர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும், தேவைகளையும் அறிந்து, தரவுகளை பெற உள்ளது.
அவர்களிடம் இருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களையும், ஒட்டு மொத்த மாநிலத்தையும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் வகையில் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது.
இந்த குழுவினருக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அந்தந்த பகுதிகளில் சம்பந்தப்பட்ட அமைப்புகளை சந்திக்கும்போது தேவையான உதவிகளை செய்ய வேண்டும்' என கூறி உள்ளார்.
தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய விஷயங்கள் குறித்த சூசக அறிவிப்பை கடந்த நவம்பர் மாதம் 23-ந்தேதி காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்வில் விஜய் கோடிட்டு காட்டினார்.
அந்த நிகழ்வில் 12 அம்ச வாக்குறுதிகளை கொடுத்திருந்தார். எல்லோருக்கும் நிரந்தர வீடு, வீட்டுக்கு ஒரு மோட்டார் சைக்கிள், ஒவ்வொரு வீட்டிலும் கார் இருக்கும் வகையில் பொருளாதார மேம்பாடு, வீட்டில் ஒருவர் பட்டப்படிப்பு படிக்க ஏற்பாடு, நிரந்தர வருமானம், வேலைவாய்ப்பை உருவாக்குதல், கல்வியில் சீர்திருத்தம், அரசு ஆஸ்பத்திரியை மேம்படுத்துதல், வெள்ள பாதிப்பை தடுக்க ஏற்பாடு.
மீனவர்கள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள் அனைவரின் பாதுகாப்பு வளர்ச்சிக்கான திட்டங்கள், தொழில் வளர்ச்சி, சட்டம்-ஒழுங்கு சீர்படுத்துதல் என தேர்தல் முன்னோட்ட மினி அறிவிப்புகளை விஜய் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.