"விஜய்க்கு மக்கள் மீது அக்கறை இல்லை"- கருணாஸ் விமர்சனம்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
- தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.
சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 21 கட்சிகள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.
இந்நிலையில், SIR-க்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விஜய் பங்கேற்காதது குறித்து முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் SIR பற்றியும், அதன் விபரீதத்தை பற்றியும் அனைத்துக் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தார்கள்.
தேர்தல் வரும் நிலையில், தேர்தல் ஆணையம் செய்யக்கூடிய SIR நடவடிக்கை முழுக்க முழுக்க தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் விரோதமானது.
குறுக்கு வழியில் வாக்குரிமைகளை பரிப்பதன் மூலம் குடியுரிமையற்றவர்களாக சிறுபான்மையினர்களையும் மற்றவர்களையும் உருவாக்கனும் என்பதுதான் அவர்களுடைய தொலைநோக்கு திட்டம்.
அதற்கு நாம் எந்த விதத்திலம் இடம் கொடுத்துவிடக்கூடாது. சட்டரீதியாக அனைவரும் உச்சநீதிமன்றம் சென்று அவரவர்கள் தனிதனியாக வழக்கு போட வேண்டும்.
அந்த மாதிரி நேரங்களில் திமுக சார்பிலான வழக்கறிஞர்கள் உதவி செய்வார்கள் என்கிற உத்தரவாதத்தை கொடுத்திருக்கிறார்கள். SIR நடவடிக்கையால் ஏற்படும் விபரீதம் தொடர்பாக மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள்.
இதுபோன்ற மக்களின் முக்கியமான பிரச்சனைகள், மாநிலத்தில் மக்களுடைய வாக்குகள் பறிப்போகும் நிலை நம் கண் எதிரே தெரிகிறது.
இதுபோன்ற கூட்டத்தில் விஜய் கலந்துக்காமல், பிரதிநிதிகளை அனுப்பாமல் இருப்பது அவருக்கு மக்கள் மீது அக்கறை இல்லாததை காட்டுகிறது.
பாஜக எந்தவிதமான திட்டத்தை கொண்டு வந்தாலும் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொள்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.