தமிழ்நாடு செய்திகள்

வைகோவுக்கு ராஜ்யசபா சீட் இல்லை... திமுக கூட்டணியில் தொடர்வோம் - துரை வைகோ

Published On 2025-05-28 11:45 IST   |   Update On 2025-05-28 11:45:00 IST
  • மாநிலங்களவை உறுப்பினராக உள்ள வைகோவுக்கு மீண்டும் போட்டியிட திமுக வாய்ப்பு வழங்கவில்லை.
  • நாடாளுமன்றத்திற்கு உள்ளே மட்டுமல்ல எப்போதும் மக்களின் குரலாக வைகோ ஒலிப்பார்

பாராளுமன்ற மேல்சபையில் எம்.பி.க்களாக இருக்கும் எம்.பி.க்களில் தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க.வின் வைகோ, அ.தி.மு. க.வை சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

இதையடுத்து புதிய 6 மேல்சபை எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் நேற்று தேர்தல் அட்டவணையை வெளியிட்டது. அதன்படி அடுத்த மாதம் (ஜூன்) 19-ந்தேதி மேல்சபை எம்.பி. தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2-ந்தேதி தொடங்க உள்ளது. இதையொட்டி தி.மு.க., அ.தி.மு.க.வில் மேல்சபை எம்.பி. பதவிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது.

இந்தநிலையில் தி.மு.க. ராஜ்யசபா வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. வழக்கறிஞர் வில்சன், ரொக்கையா மாலிக் (என்கிற) கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் ஒரு ராஜ்யசபா சீட் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க. சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மீண்டும் போட்டியிட திமுக வாய்ப்பு வழங்கவில்லை.

இது தொடர்பாக பேசிய மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, "2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்வோம். பாராளுமன்றத்திற்கு உள்ளே மட்டுமல்ல, எப்போதும் மக்களின் குரலாக வைகோ ஒலிப்பார்" என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News