SIR-க்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் நாளை தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம்
- சென்னையில் கட்சி ரீதியாக தமிழக வெற்றிக் கழகத்துக்கு 13 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர்.
- சென்னை சிவானந்தா சாலையில் நாளை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த பணிகளை கண்டித்து த.வெ.க. தலைவர் விஜய் உத்தரவின் பேரில், பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வழிகாட்டுதலின் பேரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்கிறார்கள். இந்த போராட்டத்துக்கு அனுமதி கேட்டு த.வெ.க.வில் கட்சி ரீதியாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் போலீசாரிடம் முறைப்படி கடிதம் கொடுத்து உள்ளனர்.
சென்னையில் கட்சி ரீதியாக தமிழக வெற்றிக் கழகத்துக்கு 13 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். அவர்கள் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
ஆனால் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த இடவசதி போதாது. எனவே அங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம், சிவானந்தா சாலை ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்யுமாறு கூறினார்கள்.
அதன்படி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீசாரிடம் மனு கொடுத்தனர். ஆனால் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதிக்கவில்லை. அதற்கு பதிலாக சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர்.
இதையடுத்து சென்னை சிவானந்தா சாலையில் நாளை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, மாவட்ட செயலாளர்கள் தி.நகர் க.அப்புனு, அம்பத்தூர் பால முருகன், இ.சி.ஆர்.சரவணன், பூக்கடை குமார், பழனி, கட்பீஸ் விஜய், சபரிநாதன், தாமு உள்ளிட்ட 13 மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரள்கிறார்கள்.
பின்னர் அவர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதே போல் தமிழகம் முழுவதும் த.வெ.க.வினர் நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.